”விவசாயிகளோட பிரச்னைகளை பாட்டுல சொல்றேன்..!” - வித்தியாச இசைக்கலைஞர் | This independent musician has made songs about farmers issues

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (13/05/2017)

கடைசி தொடர்பு:19:50 (13/05/2017)

”விவசாயிகளோட பிரச்னைகளை பாட்டுல சொல்றேன்..!” - வித்தியாச இசைக்கலைஞர்

வறட்சியால் வாடும் விவசாயி நிலம்

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தபோது ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட 'டக்கரு டக்கரு' பாடல் ஜல்லிக்கட்டைப் பற்றிய விழிப்புஉணர்விற்கு இளைஞர்களைத் தூண்டியதில் முக்கியப்பங்கு வகித்தது. அதேபோல பின்னர் ஜல்லிக்கட்டுக்கும், விவசாயத்துக்கும், விவசாயிகளின் கஷ்டங்களை தெரிவிக்கும் வகையில் பலர் பாடல்களை இயற்றி வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ள பாடல் விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ச்சிப் பொங்க வெளிப்படுத்தியுள்ளது. "பதறுது பதறுது பதறுது நெஞ்சம், விளைச்சது முளைக்கலை நீருக்குப் பஞ்சம், நமக்கெல்லாம் சோறு போட உழைச்சவன் - வயக்காட்டில், உயிரை உரமாக்கிச் செத்தானே விவசாயி" என்ற பாடல் விவசாயிகளின் கஷ்டங்களையும், விவசாயத்தின் அவசியத்தையும் உணர்த்துகிறது. இதுதவிர, வி.எம் மாலிக் (VM Muzik) என்ற யூடியூப் பக்கத்தில் ஜல்லிக்கட்டு, சீமைக்கருவேலம் அழிப்பு, விவசாயிகள் தற்கொலை, மணல் கொள்ளை என விவசாய பாடல்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்தப் பாடல்களை இயற்றி வெளியிடும் இசையமைப்பாளர் விஸ்வா மாலிக் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

இசையமைப்பாளராக உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

"எனக்குச் சொந்த ஊர் தேனி மாவட்டம், போடி நாயக்கனூர். கடந்த 2003-ம் ஆண்டு இசையமைப்பாளராக வேண்டும் என்ற சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்புக்காக அதிகமாகக் கஷ்டப்பட்டேன். நான் இசையமைத்த 'ஹல்க்' படம் மலேசியாவில் வெளியாகியிருக்கிறது. இந்தத் துறைக்கு வந்து 14 வருடங்கள் ஆகின்றன. அதிகமான ஆல்பங்களை வெளியிட்டுள்ளேன். அதிகமான விளம்பரப்படங்கள் உருவாக்கினேன். கைவசம் 400 பாடல்கள் கம்போசிங் செய்து தயாராக வைத்திருக்கிறேன். அதனைச் சினிமா வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்திக் கொள்வேன். பின்னர், சமூக பொறுப்பு சார்ந்த பாடல்களை இயக்கும் எண்ணமும் தோன்றவே, தற்போது விவசாயம், சுற்றுச்சூழல் என்று ஆல்பம் மாறிவிட்டது. இந்த விவசாயிகளின் அவலங்கள் குறித்த பாடல்களுக்காக இசையைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தால்கூட குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பாட வாய்ப்பு கொடுத்து விடுவேன். இதுதவிர ஊனமுற்றோர் என் ஆல்பங்களில் அதிகமாகப் பாடுவதும் உண்டு. தற்போது மூன்று சினிமாக்களுக்கு இசையமைத்து வருகிறேன். சினிமாவைத் தாண்டி சமூக அவலங்களையும் எடுத்துச் சொல்வது மனதுக்கு திருப்தியளிக்கிறது"

பாடல் கம்போசிங்கில் மாலிக்

சினிமா கனவோடு வந்தவருக்கு விவசாய பாடல்கள் எண்ணம் தோன்றியது எப்படி?
"விவசாயிகள் மூலமாகத்தான் உணவு உற்பத்தி நமக்குக் கிடைக்கிறது. விவசாயிகள் வாழ்க்கை மிகவும் பின்னோக்கி தள்ளப்பட்டு விட்டது. இதற்கு முக்கியமாக ஒரு காரணம் உண்டு. நான் சென்னைக்கு வந்த காய்கறி வாங்கியபோது 50 பைசாவுக்கு விற்ற பச்சை மிளகாய், இப்போது 5 ரூபாய்க்கும் அதிகமான விலையைத் தொட்டுவிட்டது. என்ன விலை கொடுத்தாலும் சத்தான காய்கறிகளை வாங்கத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு விவசாயிகளும் கஷ்டப்படுகின்றனர். என்னால் முடிந்த அளவுக்கு விவசாயிகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் விவசாயிகள் தற்கொலை, ஜல்லிக்கட்டு, மணல் கொள்ளை என ஆல்பங்களை உருவாகினேன். முதல் விவசாயி தற்கொலை பாடலை வெளியிட்ட நாள் முதல் எனக்கு அறிவுரைகள் வர ஆரம்பித்தன. பாடல் நன்றாக இருந்தது, கம்போசிங்கில் மாற்றம் செய்யுங்கள், வரிகளில் மாற்றம் செய்யுங்கள் எனப் பிழைகளை சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர். இந்த வழிகாட்டுதல்தான் என்னை முழுமையாக விவசாயம் சார்ந்து பாடல்களை இயக்க ஆர்வமாக இருந்தது. இப்போது பெரும்பாலும் நாம் தண்ணீரை விலைக் கொடுத்துதான் வாங்குகிறோம். இப்போது சீனாவில் காற்றுப்பைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தியாவில் இப்போதுள்ள நிலைமை தொடர்ந்தால் இந்தியாவில் 15 வருடங்கள் கழித்து காற்றை நாம் விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இதற்கு அழிந்து வரும் இயற்கையும், சந்தையில் கிடைக்கும் போலிகளும், விவசாயிகளின் தற்கொலைகளும் சாட்சி. நாம் உண்ணும் உணவு போலியானது என்பதற்குக் காரணம், உணவு உற்பத்தி குறைந்ததே காரணம். நேற்று கூட மணல் கொள்ளையைப் பற்றி யூடியூபில் ஆல்பம் வெளியிட்டுள்ளேன். அதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.''

பாடல் இயற்றும் மாலிக்

விவசாயம் ஆல்பங்களைத் தவிர, சமூக பிரச்னைகளுக்காக பாடல் இயற்றிய அனுபவம்...
"விவசாயம் தவிர மற்ற ஜல்லிக்கட்டு, புயல், சீமைக்கருவேலம், மணல் கொள்ளை பற்றிய பாடல்களை இயற்றியபோது எனக்கு எல்லாத் தரவுகளும் கிடைத்தது. அதை வைத்து நன்றாகப் பாடல்களை என்னால் இயக்க முடிந்தது. ஆனால் மற்ற சமூக பிரச்னை சார்ந்த கருத்துக்களைக் கொண்ட பாடல்கள் இயக்கும்போது தெளிவான தகவல்களும், கருத்துக்களும் இருக்க வேண்டும். தகவல்கள் அதிகம் தேவைப்பட்டால் என் நண்பர்கள், எனக்குப் பழக்கமானவர்களிடம் இருந்து தகவல்களை பெற்று சமூக பிரச்னைகள் பற்றிய பாடல்களை இயக்கிய அனுபவமும் உண்டு. அதையெல்லாம் இயக்கும்போது ஒருவித மனநிறைவு கிடைக்கிறது. ஒவ்வொரு பாடலையும் முதலில் எனது பேஸ்புக், யுடியூப் வலைப்பக்கத்தில்தான் அப்டேட் செய்வேன்" என்றார்.

விஸ்வா மாலிக் இயற்றிய 'பதறுது பதறுது' பாடல்:

விஸ்வா மாலிக் பேசுவது போலவே அவரது பதறுது பாடலை கேட்கும்போது உண்மையிலேயே விவசாயிகளை நினைத்து மனம் பதறுவதை தவிர்க்க முடியவில்லை!.


டிரெண்டிங் @ விகடன்