வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (15/05/2017)

கடைசி தொடர்பு:08:43 (16/05/2017)

10 சதுர அடி... 100 வாட்ஸ் மின்சாரம்... ஜன்னலில் அடங்கும் சோலார் தகடுகள்!

ஜன்னலில் சோலார் தகடுகள்

ன்றைய நவீன உலகின் மாற்று எரிபொருளுக்கான மந்திரச்சொல் 'சோலார்'. இன்னும் சொல்லப்போனால், உலகில் மாற்று எரிபொருளுக்கான தேடலில் இது, தீவிரமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மாற்று எரிபொருள் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால் மக்களிடையே சோலாருக்கான தேடல் துவங்கிவிட்டது. நமக்கான தேவையை நம்மிடம் இருந்தே உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப்பு. வீடு கட்டும்போதே இதன் அத்தியாவசியத்தை உணர்ந்து இதற்கான செலவையும் சேர்த்துக் கணக்கிட்டால், வரும் காலம் லாபம்தான். அது வீடு கட்டும்போது இருக்கும் பொருளாதாரத்தின் மதிப்பை விட எதிர்கால மின் தேவையை சமாளிக்கும் செலவினை கணக்கிட்டால் சோலார் ஓர் எளிதான திட்டமாகவே தோன்றும். பணத்தை மிச்சப்படுத்துவது, சுற்றுச்சூழலைக் காப்பதால் விவசாய நிலங்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் சோலார் என்ற சூரியஒளி மின்சாரமானது இடம்பிடிக்கத் துவங்கி விட்டது. அப்படி சோலார் ஒளி மூலம் மின்சாரம் கொடுக்கும் மின் தகடுகளையே பெரும்பாலான வீடுகளில் பொருத்துகின்றனர். ஆனால், கடந்தவாரம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன்மஸ்க் சூரிய ஒளி ஓடுகளை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் சூரிய ஒளித்தகடுகளைப் பயன்படுத்தாமல் வீட்டு ஓடுகளிலிருந்தே மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை அறிமுகப்படுத்தினார். இதுதவிர சந்தையில் மீண்டும் சோலார் தகடுகள் மாறுபட்ட வடிவத்தில் வெளியாகியுள்ளது. வீடுகளில் பொருத்தப்படும் ஜன்னல்களில் உள்ள சோலார் தகடுகளில் இருந்து மின்சாரம் எடுக்கும் முறை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜன்னலில் சூரியஒளித் தகடுகள்

தற்போது சந்தையில் அறிமுகமாகியிருக்கும் இந்தக் கருவியை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் 'சோலார் கேப்ஸ்'. சாதாரணமாக உள்ள ஜன்னல்களைத் தவிர, பிளிப் டைப் ஜன்னல்களில் இந்தச் சாதனத்தை பொருத்தி மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம். வீட்டின் இரண்டு புறங்களிலும் சோலார் கேப்ஸ் அமைப்பை பொருத்திக் கொள்ளலாம். இதனைப் பயன்படுத்தும்போது வழக்கமான மின்சார செலவுகள் 70 சதவிகிதம் குறையும். உக்ரைனைச் சேர்ந்த எவ்கன் எரிக் என்பவர் இந்தச் சாதனத்தை வடிவமைத்துள்ளார். மேலும், நாம் எங்கே வாழ்ந்தாலும், நமது வீடுகளிலேயே மின்சாரம் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கியதாகச் சொல்லியிருக்கிறார். இது சந்தைக்கு வரும்போது நிச்சயமாகப் புரட்சியை ஏற்படுத்தும் என நம்பலாம். சோலார் கேப்ஸ் அமைப்பிலுள்ள 10 சதுர அடிக்கு 100 வாட்ஸ் மின்சாரத்தை தயாரித்துக் கொள்ள முடியும். எலட்ரிக் சாதனங்களைப் பொறுத்த வரையில் 10 சதுர அடியில் 30 எல்.இ.டி பல்புகளை இயக்க முடியும்.

இந்நிலையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த சோலார் தகடுகளைப் பொருத்துவது மிகச் சுலபம். நாங்கள் கொடுத்துள்ள விதிமுறைகள் படி, நீங்களே எளிதாகப் பராமரிக்கவும் முடியும். இதன் மூலம் வீட்டில் உள்ள சாதனங்களை எளிதில் பயன்படுத்திக் கொள்ளுமாறு வடிவமைத்துக் கொள்ள முடியும். இந்தச் சாதனங்களுடன் ஒரு மொபைல் அப்ளிகேஷனும் வழங்கப்படும். அதன் மூலம் எவ்வளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் வீணாக்கப்படுகிறது. எப்போது மின்சாரம் அதிக அளவில் செலவிடப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. இந்த சோலார் செல்கள் 25 வருடங்கள் சூரிய ஒளியைத் தாங்கக் கூடியதாக அமைந்துள்ளது. இது மைனஸ் 40 டிகிரியிலிருந்து 176 டிகிரி பாரன்ஹீட் என பல்வேறு காலநிலைகளிலும் செயல்படும் தன்மை வாய்ந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சோலார் செல்கள் தற்போது உள்ள சோலார் பேனல்களைக் காட்டிலும் சூரிய ஒளியை அதிகமாகச் சேமிக்கும் தன்மை வாய்ந்தது. சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சோலார் தகடுகளை அமைக்கும் மானியமே இந்தியாவில் விவசாயிகளுக்குச் சென்று சேர்வதில்லை. அதிகரிக்கும் புவி வெப்ப உயர்வினை கட்டுப்படுத்தும், சோலார் மின்சாரத்தை வீட்டில் அமையுங்கள் என அரசே பரப்புரை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் பரப்புரைகள் என்ற அளவில் மட்டும் நின்று விடாமல் இருக்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்