வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (19/05/2017)

கடைசி தொடர்பு:19:57 (19/05/2017)

குறுகும் காடுகள்... மடியும் விலங்குகள்... நீலகிரியைச் சூழும் ஆபத்து!

சில நாள்களுக்கு முன் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு காட்சியைப்  பார்க்க நேர்ந்தது. இரண்டு பேர் ஒரு பைக்கில் சென்றுக் கொண்டிருக்கிறார்கள், சாலை ஓரத்தில் எதையோ எதிர்பார்த்து கைகளை நீட்டியபடி ஒரு குரங்கு நின்றுக்கொண்டிருக்கிறது; இவர்கள் பைக்கை நிறுத்துகிறார்கள், குரங்கு இவர்களை நோக்கி வருகிறது, கையில் இருக்கிற வாட்டர் பாட்டிலைத் தூக்கி வீசுகிறார்கள், குரங்கு பாட்டிலை எடுத்துக்கொண்டு போய் சாலை ஓரத்தில் அமர்ந்து பாட்டிலில் இருக்கிற நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பிக்கிறது.  இருவரும் அதைப்  பார்த்து  சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  அந்த வழியே வந்து போகிறவர்களும் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டே கடந்துப்  போகிறார்கள். 

நீலகிரி

ஐம்பெரும் பூதங்களில் நிலம், நீர் காற்று இந்த மூன்று பூதங்கள் தான் நீலகிரி மாவட்டத்தின் மிகப் பெரிய பலம். எவையெல்லாம் பலமாக இருந்ததோ அவை தான் இப்போது நீலகிரி மாவட்டத்திற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கின்றன. முன்பு இருந்த நீலகிரி இப்போது இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்வதே மிகப் பெரிய ஆபத்தின் தொடக்கம் தான். பசுமை மாறாக் காடுகள், ஈர நிலக் காடுகள் எனப் பெயரெடுத்த காடுகள் காய்ந்து போய் கிடக்கின்றன. நீர்நிலைகள் வறண்டு போய் கிடக்கின்றன. எப்போதும் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிற கோடைக்காலம் இந்த வருடம் ஜனவரி மாதமே தொடங்கி  விட்டது. பருவ மழை பொய்த்தது, கடும் வெயில் போன்ற காரணங்களால் பிப்ரவரி மாதத்திலிருந்தே காடுகள் வறட்சியை எதிர்நோக்கத் தொடங்கிவிட்டன . 

நீராதாரங்களும், காடுகளும்  வறண்டு போனதில் மிரண்டு போனது விலங்குகள் மட்டும்தான். கடந்த மூன்று மாதங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட யானைகளும்  இரண்டு புலிகளும் தண்ணீர் இல்லாமல்தான் இறந்ததாகச் சொல்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.. உடற்கூறு பரிசோதனை செய்வதால் தெரிய வந்த இறப்பு விகிதம் தான் இவை. இவற்றின்  கணக்கில்  இல்லாத மான், சிறுத்தை, கரடி, சிங்க வாழ் குரங்குகள், வரையாடு  இறப்பெல்லாம் வெளி உலகிற்குத் தெரிவதே இல்லை. 

நீலகிரி“இயற்கையை விற்க  ஆரம்பித்தால்  அதற்கான விலையாக உங்களின் வாழ்வாதாரங்களைப் பறி கொடுத்தே ஆகணும்” என்கிறார் காட்டுயிர் புகைப்படக்காரர் செந்தில்குமரன். ”நீலகிரி மாவட்டம் வணிகத்தைக் குறிவைத்து ஓடிக் கொண்டிருக்கிறது. தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன. வீடுகளைச் சுற்றி மின் வேலிகளை அமைக்கிறார்கள். தடுப்புகள் நேரடியாக விலங்குகளைத்தான் பாதிக்கின்றன.  யானைகளை பொறுத்தவரை அவை ஒரு நாளைக்கு முப்பது கிலோ மீட்டர்கள் உணவிற்காக நடந்தாக வேண்டும். சதுப்பு நிலக் காடுகளைத் தாண்ட வேண்டும், நீர் நிலைகளைக் கண்டறிய வேண்டும், மற்ற விலங்குகளுக்குப் பாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், ஆனால் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள  மின் வேலிகள் , வீடுகள் எல்லாம் யானைகளின்  சாதாரண வாழ்க்கையை மாற்றி அமைக்கின்றன. எங்கே போவதென தெரியாமல் இருக்கிற யானைகள் கடைசியில் ஊருக்குள் வருவது நிலங்களை நாசபடுத்துவது எல்லாம் மக்களின் ஆக்கிரமிப்பும் இயற்கைக்கு எதிரான நடவடிக்கையுமே” என்கிறார் செந்தில் குமரன். 

நீலகிரி

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோளக் காப்பகமாக 2012ம்  ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்திருக்கிறது. உயிர்க்கோளக் காப்பகத்தில் முக்கிய இடமான முதுமலையிலிருந்த விலங்குகள் எல்லாம் இடம் பெயர்ந்து விட்டன. விலங்குகள் இடம்பெயர்வது இயல்புதான் என்றாலும், விலங்குகளின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு காடுகளின் வளர்ச்சி இருப்பதில்லை. விலங்குகளின் எல்லை விரிவாகிற நேரங்களில் காடுகளின் எல்லை குறுகிக்கொண்டே இருப்பதும்தான் காரணம் என்கின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள். சோலைக் காடுகளை உருவாக்குவதிலும், நீர் நிலைகளைப் பாதுகாப்பதிலும்தான் அடங்கியிருக்கிறது காடுகளின் வளர்ச்சியும், விலங்குகளின் வாழ்க்கையும். 

- ஜார்ஜ்

படங்கள் - சந்திரசேகரன்


டிரெண்டிங் @ விகடன்