Published:Updated:

90 ஆண்டுகாலப் பழைமை... இன்றும் நீடிக்கும் பெருமை... மணப்பாறை மாட்டுச் சந்தை!

கழுகு பார்வையில் மணப்பாறை மாட்டுச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
கழுகு பார்வையில் மணப்பாறை மாட்டுச் சந்தை

சந்தை

90 ஆண்டுகாலப் பழைமை... இன்றும் நீடிக்கும் பெருமை... மணப்பாறை மாட்டுச் சந்தை!

சந்தை

Published:Updated:
கழுகு பார்வையில் மணப்பாறை மாட்டுச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
கழுகு பார்வையில் மணப்பாறை மாட்டுச் சந்தை

‘மணப்பாறை மாடு கட்டி

மாயவரம் ஏரு பூட்டி

வயக்காட்ட உழுது போடு

சின்னக்கண்ணு...

பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு...’

65 ஆண்டுகளுக்கு முன்பு ‘மக்களைப் பெற்ற மகராசி’ திரைப்படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய பாடல் இது. மணப்பாறை மாடுகளின் புகழ் இன்றைக்கும் நீடித்து நிலை பெற்றுள்ளது. இவ்வகை மாடுகளின் விற்பனைக்காக உருவான மணப்பாறை மாட்டுச் சந்தையின் பழைமையையும் பெருமையையும் அறிய மிகுந்த ஆர்வத்தோடு மணப்பாறைக்குப் பயணம் மேற்கொண்டோம்.

விடிய விடிய விற்பனை

திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் அமைந்துள்ள ஓர் ஊர்தான் மணப்பாறை. ‘முறுக்கு’க்குப் புகழ்பெற்ற மணப்பாறையில், அதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்றது அதன் மாட்டுச் சந்தை. செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் தொடங்கி, மறுநாள் புதன்கிழமை மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. இந்தச் சந்தைக்கு திருச்சி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் வந்து செல்கிறார்கள். நியாயமான விலையில், நன்கு ஆரோக்கியமான மாடுகளை வாங்கிச் செல்லலாம் என்பதே மணப்பாறை மாட்டுச் சந்தையின் சிறப்பு என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

ஆடு விற்பனை
ஆடு விற்பனை

ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை வாங்கிச் செல்கிறார்கள். பசு மாடுகள், வண்டி இழுப்பதற்கும், உழவு ஓட்டுவதற்குமான காளை மாடுகள், ஜல்லிக்கட்டுக் காளைகள் மட்டுமல்லாது எருமை, ஆடு உள்ளிட்டவையும் மணப்பாறை மாட்டுச் சந்தையில் கிடைக்கின்றன.

சந்தை கூடியிருந்த நேரத்தில் அங்கு சென்றோம். ஊர் திருவிழாவுக்குச் சென்றது போல உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் இடை விடாது ராகம் எழுப்பியது போல் குரல் எழுப்பின.

மாடு விற்பனை
மாடு விற்பனை

கண ஜோராக நடக்கும் கயிறு, சலங்கை விற்பனை

வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், தங்களுடைய தோளில் போட்டிருந்த துண்டு களுக்குள் விரல்பிடித்துப் பேரம் பேசி, மாடுகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். விற்பனைக்காக அழைத்து வரப்பட்டிருந்த பசுக்களில் சில, சந்தையிலேயே கன்றுகளை ஈன்றன. மாடுகள் விற்பனை ஒருபுறமிருக்க, மாடுகளுக்குத் தேவையான கயிறுகள், சலங்கைகள், அலங்காரப் பொருள்கள், தீவனங்கள் விற்பனையும்... மாடுகளுக்குக் கொம்பு சீவுவது, லாடம் அடிப்பதும் இங்கு கண ஜோராக நடைபெற்றுக்கொண்டிருந்தன.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த சந்தை

94 ஆண்டுகளுக்கு முன்பு மணப்பாறையில் ஆங்காங்கே வெவ்வேறு பகுதிகளில் அவ்வப்போது மாட்டுச் சந்தை கூடியிருக்கிறது. 1928-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள், இந்த இடத்தில் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்கியிருக்கிறார்கள். சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக இந்தச் சந்தையை ஆங்கிலேயர்கள் கட்டமைத்துள்ளனர்.

கழுகு பார்வையில் மணப்பாறை மாட்டுச் சந்தை
கழுகு பார்வையில் மணப்பாறை மாட்டுச் சந்தை

பண்டிகைக் காலங்களில் 5 கோடி ரூபாயைத் தொடும்

வாரம்தோறும் குறைந்தபட்சம் 1,500 மாடுகள் வரை மணப்பாறை சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. பண்டிகைக் காலம் என்றால் இந்த எண்ணிக்கை 2,000-த்தை தாண்டும் என்கிறார்கள் மணப்பாறை பகுதி விவசாயிகள். வாரம்தோறும் நடக்கும் இந்தச் சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. தீபாவளி, பக்ரீத், ரம்ஜான் மற்றும் கோயில் திருவிழா போன்ற பண்டிகை சமயங்களில் இந்த விற்பனையானது 5 கோடி ரூபாயைத் தொடும் என்கின்றனர்.

ஒரு தூதுவரா, பாலமா இருக்கு

இங்கு வந்திருந்த கரூர் மாவட்டம், சின்னபனையூரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி சுந்தரத்திடம் பேச்சு கொடுத்தபோது, “நான் 40 வருஷமா இங்க வந்து மாடு வியாபாரம் பண்ணிகிட்டு இருக்கேன். தன்னோட மாட்டை விற்பனை செய்யணும்னு நினைக்கக்கூடிய விவசாயிக்கும், தரமான மாடு வாங்கணும்னு நினைக்கக்கூடிய விவசாயிக்கும் இந்த மணப்பாறை மாட்டுச் சந்தை ஒரு தூதுவரா, பாலமா இருக்கு. விக்கிறவங்களும் வாங்குறவங்களும் நேரடியாவே வியாபாரம் பண்ணிக்குவாங்க. எங்களை மாதிரியான வியாபாரிங்க மூலமாவும் வியாபாராம் நடக்கும். ஒரு மாட்டை 45,000 ரூபாய்க்கு வாங்கி, சந்தைக்குக் கொண்டு வந்து 48,000 ரூபாய் வரைக்கும் விப்பேன். சில சமயங்கள்ல ஒரு மாட்டுக்கு வெறும் 500, 600 ரூபாய்தான் லாபம் கிடைக்கும்.

சந்தையில் மாடுகள்
சந்தையில் மாடுகள்

சுழி பார்த்து வாங்குவாங்க

மாடு வாங்க வர்றவங்க மாட்டுக்கு நெத்தியில ஒரு சுழி, புறணியில (மாட்டின் பின்புறம்) ஒரு சுழி, முதுகுல ஒரு சுழி இருக்கான்னு பார்ப்பாங்க. அதேமாதிரி நாலு காம்பையும் புடிச்சி பால் நல்லா சுரக்குதான்னு பார்ப்பாங்க. மணப்பாறை மாட்டுச் சந்தைக்கு வந்தா நிச்சயமா கோளாறு இல்லாத மாட்டை வாங்கிட்டு போகலாம்ங்கற உத்தரவாதம் இருக்குறதுனால தான், இங்க இவ்வளவு கூட்டம் நம்பிக்கையோட கூடுது” என்றார்.

சந்தையில்
சந்தையில்

எருமையை வித்தேன்... பசுவை வாங்கினேன்...

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த விவசாயி மோகன், “நாம விருப்பப்பட்டபடி, நாம எதிர்பார்க்குற விலையில மாடு வாங்கணும்னு நினைச்சு ஒரு விவசாயி, மணப்பாறை மாட்டுச் சந்தைக்கு வந்துட்டா, நிச்சயமா அவர் வெறும் கையோட திரும்பிப் போக மாட்டாரு. காரணம், அதிக எண்ணிக்கையில விதவிதமான மாடுகள் பலதரப்பட்ட விலையிலயும் இங்க விற்பனைக்கு வருது. நான் என்னோட எருமை மாட்டைக் கொண்டு வந்து இங்க வித்துட்டு, பசு மாட்டை வாங்கிக்கிட்டு போறேன். நான் வசிக்கக்கூடிய செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகள்ல இவ்வளவு பெரிய மாட்டுச் சந்தை கிடையாது. பக்கத்து மாவட்டங்கள்லயும் எனக்குத் தோதான சந்தைங்க கிடையாது. தூரம் அதிகமா இருந்தாலும் இந்தச் சந்தை தான் எனக்கு வசதியா இருக்கு” என்றார்.

மணப்பாறை தாலுகா கே.கே.பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன், “6 மாடுகள் வச்சிருக்கேன். தீவனம் விலை ஏறிப் போச்சு. பாலுக்கு ஒரு லிட்டருக்கு 30 ரூபாய்தான் விலை கிடைக்குது. அதனால ஒரு மாட்டை வித்துட்டுப் போகலாம்னு வந்துருக்கேன். 1996-ல இருந்து இங்க வந்து போயிக்கிட்டு இருக்கேன். இந்தச் சந்தையில இருந்து நிறைய மாடுங்க வாங்கிக் கிட்டும் போயிருக்கேன். தேவைப்பட்டா எப்ப வேணும்னாலும் நாம இங்க வந்து நல்ல மாடா புடிச்சிக்கலாம்” என்றார்.

பால் சுரப்பு
பால் சுரப்பு

ஒரு கறவை மாடு வாங்கலாம்னு வந்தேன்

மணப்பாறை அருகே உள்ள மாலப் பட்டியைச் சேர்ந்த விவசாயி சுமதி, “17 வருஷத்துக்கு முன்னாடி என் வீட்டுக்காரரு இறந்துட்டாரு. எனக்கு 3 பொண்ணுங்க, ஒரு பையன். விவசாயத்துலயும், மாடுங்க வளர்த்து பால் வித்துக் கிடைச்ச பணத்துலயும் தான் என்னோட மூணு பொண்ணுங்களை யும் படிக்க வச்சு, கல்யாணமும் பண்ணிக் கொடுத்தேன்.

என்கிட்ட 3 மாடுங்க இருக்கு. இப்ப பால் கறவை குறைஞ்சிடுச்சு. அதனாலதான் கூடுதலா ஒரு கறவை மாடு வாங்கறதுக்காக வந்தேன். வெளிய தெரியாத இடத்துல போய் மாடு வாங்குனா சரியில்லாத மாட்டைக் கொடுத்துடுவாங்க. இங்கன்னா கொஞ்சம் நம்பிக்கையா இருக் கும்” எனத் தெரிவித்தவர், 45,000 ரூபாய்க்கு வாங்கிய மாட்டையும், கன்னுக்குட்டியையும் குழந்தையைப் போல அணைத்துக் கொண்டார்.

மணப்பாறை மட்டுமல்ல... மற்ற மாடுகளும் கிடைக்கும்

மணப்பாறை மாட்டுச் சந்தையைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் சின்னாக் கவுண்டர், “1986-ம் வருஷம் இந்த மணப்பாறை மாட்டுச் சந்தையைக் குத்தகைக்கு எடுத்தேன். 35 வருஷமாக இந்தச் சந்தை என்னோட நிர்வாகத்துல இருக்கு. இங்க மணப்பாறை மாடுங்க மட்டுமல்ல... காங்கேயம், புலிக்குளம், உம்பளச்சேரி, ஜெர்சி, ஹெச்.எஃப், சிந்தி, ரெட் சிந்தி, தார்பார்க்கர், சாஹிவால்னு எல்லா வகையான மாடுகளும் இந்தச் சந்தை யில கிடைக்கும்.

சந்தையில் மாடு விற்பனை
சந்தையில் மாடு விற்பனை

வாரம்தோறும் சந்தை கூடும் போது, 1500-க்கும் அதிகமான மாடுங்க இங்க விற்பனைக்கு வந்துகிட்டு இருக்கு. மாடுகளை விக்கிறதுக்காகவும் வாங்குறதுக்காகவும் விவசாயிங்க, வியாபாரிங்கனு குறைந்தபட்சம் ஆயிரம் பேர்களாவது இங்க கூடுவாங்க.

காளை மாடு ஜோடி நல்லா திடாகாத்திரமா, கம்பீரமான தோற்றத்துல இருந்தா, ஒரு ஜோடி ஒன்றரை லட்சம் வரை கூட விலை போகும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழினு இந்த அஞ்சு மாசத்துல தான் மாடுங்க விற்பனை இங்க அதிகமா இருக்கும். மத்த சந்தையைவிட இங்க நல்ல தரமான மாடுகளா கிடைக்கும்னு விவசாயிங்க இங்க நம்பிக்கையோட வர்றாங்க. தங்களோட மாடுகளை விற்பனைச் செய்யணும்னு நினைக்குறவங்க. மணப்பாறை மாட்டுச் சந்தைக்குப் போயிட்டா, நியாயமான விலை கிடைக்கும்னு உறுதியா நம்புறாங்க’’ என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.மாடு வாங்க வர்றவங்க மாட்டுக்கு நெத்தியில ஒரு சுழி, புறணியில ஒரு சுழி, முதுகுல ஒரு சுழி இருக்கான்னு பார்ப்பாங்க.

புண்ணியமூர்த்தி, சின்னாக் கவுண்டர், சுமதி, சுந்தரம், கிருஷ்ணன், மோகன்
புண்ணியமூர்த்தி, சின்னாக் கவுண்டர், சுமதி, சுந்தரம், கிருஷ்ணன், மோகன்

கன்றுக்குட்டிகளுக்கு மட்டுமே பால் கொடுக்கும்!

தஞ்சாவூரைச் சேர்ந்த கால்நடை மூலிகை மருத்துவர் முனைவர் புண்ணியமூர்த்தி. ‘‘தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய மாட்டுச் சந்தைகளில் மணப்பாறையும் ஒன்று. இது வறட்சியான மானாவாரி பூமி. நிலத்தடியில் உப்பு தண்ணீர். மழை மட்டுமே இப்பகுதி விவசாயிகளுக்கு நீர் ஆதாரம். பொதுவாக, இதுமாதிரியான மானாவாரி பகுதிகளில் கால்நடை வளர்ப்பு அதிகமாக இருக்கும். இப்பகுதியில் பாரம்பர்யமாக வளர்க்கப்பட்டு வரும் மணப்பாறை மாடுகள், உழவுக்கும் வண்டி இழுப்பதற்கும் ஏற்றது. இதன் காரணமாக டெல்டா பகுதி விவசாயிகளும், மதுரை, திண்டுக்கல் பகுதி விவசாயிகளும் இந்த மாடுகளை மிகவும் விரும்பி வாங்கிச் செல்லும் வழக்கம் தொன்று தொட்டு இருந்திருக்கிறது. இதன் காரணமகவே மணப்பாறை மாட்டுச் சந்தை உருவாகி இருக்கக்கூடும். மணப்பாறை மாடுகள் விற்பனைக்காக உருவான இந்தச் சந்தையில் காலப்போக்கில் மற்ற வகை மாடுகளும் விற்பனைக்கு வரத் தொடங்கின. மணப்பாறை மாடுகளைப் பொறுத்தவரை, சற்றுக் காங்கேயம் சாயலில் இருக்கும். ஆனால், காங்கேயம் மாடுகளைவிட உயரம் குறைவாக இருக்கும். மணப்பாறை மயிலை மாடுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். கொம்புகள் நன்கு சீராகவும் நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கும். சுறுசுறுப்பும் துடிப்பும் மணப்பாறை மாடுகளின் தனிச்சிறப்பு. மணப்பாறை பசுக்களிடம் பால் கறப்பது மிகவும் கடினம். பால் கறக்க சென்றால் விரட்டியடிக்கும். தன்னுடைய கன்றுக்குட்டிகளுக்கு மட்டுமே பால் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்’’ என்றார்.