வெளியிடப்பட்ட நேரம்: 21:28 (25/05/2017)

கடைசி தொடர்பு:21:33 (25/05/2017)

சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் 'பண்ணைக்காடுகள்'..!

பண்ணைக்காடுகள்

காடுகளில் இயற்கையாக வளரும் மரங்கள் அந்தந்த இடங்களைப் பொருத்து ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகின்றன. இதில் மனிதன் நாகரிகமும், சமூக மாற்றங்களும் உருவான பின்னர் காடுகள் மெல்ல மெல்ல அழிவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தன. அடுத்ததாக வந்த தொழிற்சாலைகள் மீதமுள்ள காடுகளையும் அழிக்கும் வேலையைச் செய்யத் துவங்கின. இது ஒருபக்கம் இருந்தாலும் மனிதன் இயற்கை வேளாண்மையை ஆரம்பித்த பின்னர் வேளாண் காடுகளை உருவாக்கத் தொடங்கினான். அதில் முக்கியமானது பண்ணைக்காடுகள், விவசாயம் செய்யும்போது மற்ற பயிர்களுடன் மரப்பயிர்களையும் சேர்த்து சாகுபடி செய்யும் முறைக்குப் பெயர்தான் 'பண்ணைக்காடுகள் வளர்ப்பு'. இந்தப் பண்ணைக்காடுகள் வளர்ப்பு என்பது தண்ணீர் உள்ள தோட்டங்களில் சாத்தியம்தான். இந்த வகைக் காடுகள் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், கால்நடைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீர்வாக அமைகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இந்த வகைப் பண்ணைக்காடுகளின் மூலம் விவசாயிகள் நல்ல பலன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட வகை மரங்களை மட்டும் நடவு செய்தால் அதற்கு 'தோப்பு' என்று பெயர். பல்வேறு வகை மரப்பயிர்களை கலந்து நட்டால் அதற்குப் பெயர் 'காடு'. பண்ணைக்காடுகள் பெரும்பாலும் தோட்டத்தின் ஊடுபயிராகவோ, தனி பயிராகவோ அல்லது, வயல்களின் ஓரங்களிலோ நடவு செய்யலாம். இதனைத்தான் 'வயலில் நெல்லை நடு, வரப்பில் மரத்தை நடு' என்று முன்னோர்கள் சொல்வதுண்டு. பண்ணைக்காடுகள் மண்ணின் அரிப்பைத் தடுத்து நிறுத்தும் தன்மை உடையது. பண்ணையில் மரங்களை வளர்ப்பதன் மூலம் அதிலிருந்து உதிரும் இலை தழைகள் மட்கி வயலுக்கு உரமாகும். இந்த இயற்கை உரம் பயிரின் வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது. இந்த இலை தழைகள் சில நேரங்களில் மூடாக்காகவும் பயன்படுகிறது. மேலும் பண்ணையில் மரங்களை வளர்ப்பதால் பண்ணையைச் சுற்றி காற்றில் உள்ள ஈரப்பதம் அதிகமாகும். மண்ணின் வெப்பநிலையும் அதிகமாவது குறையும். அதனால் தானியப் பயிர்களின் வளர்ச்சி வளமாக இருக்கும். இதில் சில மரங்கள் களர் - உவர் நிலத்தின் தன்மையை மாற்ற உதவுகின்றன. வயல்களில் பயிரிடப்பட்டுள்ள சில பயிர்களை காக்கும் அரணாகவும் வயல்களின் ஓரத்தில் சில மரப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. நான்கு வருடங்களிலேயே பலன் தரும் மர வகைகளும் இருக்கின்றன. இதில் விவசாயம் செய்யும் தானியப் பயிர்கள் பொய்த்துப் போனாலும் மரப்பயிர்கள் கைவிடுவதில்லை. மேலும், விவசாயிகள் பண்ணைக்குத் தேவையான உபகரணங்கள் செய்யவும் மரங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

காடுகள்

பண்ணைக்காடுகளில் எல்லா வகையிலும் நமக்குப் பலன் தரும் மரங்களைத் தேர்வு செய்து நடவேண்டும். ஒரு மரமானது ஒரு தேவைக்கு பயன்படாமல் பல தேவைகளுக்குப் பயன்படுவதாக இருந்தால் இன்னும் சிறப்பு. இதனைப் பின்பற்றித்தான் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் இம்மரத்தைப் பயிர் செய்கிறார்கள். இம்மரமானது, அரக்கு தயாரிக்கவும், எரிபொருளாகவும் அங்குப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல பண்ணையில் வளர்க்கத் தேர்வு செய்யும் மரங்கள் விரைவான வளர்ச்சி செய்யும் மரங்களாக இருத்தல் கூடுதல் சிறப்பு. மேலும் நீங்கள் வளர்க்கும் பண்ணைக்காடுகள் நிலத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமலும், பூச்சிகளுக்கு அடைக்கலம் தராமலும் இருப்பது மிக முக்கியம். வேர்கள் அதிக ஆழத்தில் செல்லும் தன்மை உடையதாக இருக்கும் மரங்களையும் தேர்வு செய்யலாம். பண்ணைக் காடுகளில் உள்ள மரங்களில் பறவைகள் தங்கும் காரணத்தால் மற்ற பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருந்தாலும், பயிர்களைத் தாக்கும் பூச்சி, புழு மற்றும் வண்டுகளையும் சேர்த்தே பறவைகள் உண்ணுகின்றன. பண்ணைக்காடுகளால் ஒரு உயிர்ப்பன்மைய சூழல் உருவாகும். இதனால் வயலுக்கு வேலியாக மூங்கில் போன்ற மரங்களை நடலாம்.

காடுகள் வளர்ப்பு

வறண்டப் பகுதிகளுக்கு அயிலை, வாகை, வேம்பு, கருவேல் ஆகிய மரங்களைப் பயிரிடலாம். இதில் ஊடுபயிராக மானாவாரி பயிர்களான சோளம், எள்ளு, கொள்ளு, தட்டைப்பயறு, உளுந்து போன்ற பயிர்களைப் பயிரிடலாம். நீர்ப்பாசனம் செய்யக்கூடிய நிலங்களில் தேக்கு, சவுக்கு, ஈட்டி, குமிழ், சில்வர் ஓக் போன்ற மரங்களை நடலாம். இதில் நிலக்கடலை, மிளகாய், மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக விதைக்கலாம். மாறி வரும் காலநிலைக்கும், புவி வெப்ப உயர்வுக்கும், சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கும் விவசாயிகளுக்குப் பண்ணைக்காடுகள் கைகொடுக்கும்.


டிரெண்டிங் @ விகடன்