விவசாய நிலங்களில் இந்த மரங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்றார் நம்மாழ்வார்..! | Nammazhvar said that agriculture farm land should have these trees

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (29/05/2017)

கடைசி தொடர்பு:12:20 (29/05/2017)

விவசாய நிலங்களில் இந்த மரங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்றார் நம்மாழ்வார்..!

மாணவர்களுக்கு பாடமெடுக்கும் நம்மாழ்வார்

‘நம்மாழ்வார்’ என்கிற மாமனிதரின் மறைவுக்குப் பின்னால், அவர் உச்சரித்த 'இயற்கை விவசாயம்' என்ற வாசகம் தமிழகம் எங்கும் மந்திரச்சொல்போல ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. என்னதான் இயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும் அவருக்கு எனத் தனிக்குணங்கள் இருக்கத்தான் செய்தன. ஆம், நம்மாழ்வார் படிப்பைவிட அறிவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். காலையில் 5 மணிக்கு முன்னரே எழுந்து பண்ணையைக் கவனிக்க ஆரம்பித்துவிடுவார். "காலையில் பெரும்பாலும், வாழைப்பழமும் தேங்காயும்தான், மதியம் கம்மங்கூழ், கேழ்வரகுக் கூழ், இரவு பொட்டுக்கடலை மற்றும் வெல்லம். இவைதாம் சிறந்த உணவு" என அடிக்கடி சொல்வார். "கரடு முரடான நிலத்தில் மரம் வைத்தால்தான் நிலம் வளமாகும். அதிலும் பல மரங்களையும், பழ வகை மரங்களையும் அதிகமாக வளர்க்க வேண்டும்" இதுதான் நம்மாழ்வார், கரடு முரடான நிலங்களில் பின்பற்றுவது; மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வரிகளும் இதுதான். இதைத்தான் கொழிஞ்சிப் பண்ணையிலும், கரூர் அருகே உள்ள வானகத்திலும் செய்திருந்தார்... மானாவாரிப் பகுதியில் பருவமழை தொடங்கும்போது மரங்களை நட வேண்டும். ஒரு விவசாயி நிலத்தில் தேக்கு மரங்கள் இருக்க வேண்டும், மா இருக்க வேண்டும், மாதுளை மற்றும் எழுமிச்சை கண்டிப்பாக இருக்க வேண்டும். தோட்டத்தில் முகம் கழுவுகிற தண்ணீர் கூட செடிகளுக்குத்தான் போக வேண்டும். இதையெல்லாம் எப்போதுமே வாயால் சொல்ல மாட்டார், எல்லாமே நேரடிச் செயல் விளக்கம்தான். அதனால்தான் கரடு முரடான நிலங்களைக்கூட விவசாயத்துக்கு மாற்றினார், நம்மாழ்வார்.

நம்மாழ்வார் தங்கியிருந்த குடில்

ஒருமுறை கொழிஞ்சிப் பண்ணையில் நம்மாழ்வார் தங்கி இருந்த குடிலுக்கு தாடி குடில் என்று பெயர். அந்தக் குடில் அமைந்துள்ள இடத்தில் அதற்கு முன்பு மக்கள் நடமாட்டமே இருக்காது. காரணம், அந்தப் பகுதியில் பேய் நடமாட்டம் இருக்கும் என்று மக்கள் மத்தியில் ஓர் அச்சம் இருந்தது. தனக்கான குடிலை பேய் நடமாட்டம் இருப்பதாகச் சொல்லும் இடத்திலேயே அமைத்து, ஊர் மக்களின் அச்சத்தைத் தகர்த்தெறிந்தார், நம்மாழ்வார். அந்தக் குடிலில் எழுதப் படிக்கத் தெரியாத பிள்ளைகளுக்கு, இரவு நேரத்தில் நம்மாழ்வார் எழுதப்படிக்கவும் சொல்லித் தந்திருக்கிறார். அப்படி அவரால் படிப்பு கற்றுக்கொண்ட குழந்தைகள் தாடி குடில் என எழுதி வைத்தனர்.

அதேபோல, தன்னிடம் பாடம் கற்றுக்கொண்டவர்களிடம் “உங்கள் நிலத்திலும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும், அதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் எனக்கும் பெருமை, உங்களுக்கும் பெருமை" எனச் சொல்லி அனுப்பி விடுவார். இவர் வயல்களுக்கோ, கிராமங்களுக்கோ செல்லும்போது விவசாயப் பெருமக்கள் கொடுக்கும் கூழ், பழைய சோற்றை அமிழ்தம் போல உண்பார். இதுதவிர போகிற போக்கில் இந்த இடத்தில் இந்த மரம் வைத்தால் நல்லா வரும் என ஆலோசனை சொல்லும் பழக்கம் நம்மாழ்வாரிடம் இருந்தது. பண்ணையில் இருக்கும்போது முழங்காலுக்கு மேலாக அரைக்கால் சட்டையும், உடலுக்கு அரக்கைச் சட்டையும் மட்டுமே அணிந்திருப்பார். தன்னால் ஒரு வேலையைச் செய்ய முடியுமென்றால் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டார். ஆனால், மற்றவர்கள் ஏதேனும் வேலையில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார். அவருடன் இருக்கும் சிலர் அவரை 'லீடர்' என்று அழைப்பர்.

தோட்டத்தில் நம்மாழ்வார்

பண்ணையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது தாலாட்டுப் பாடுவது, விடுகதை போடுவது நம்மாழ்வாருக்குப் பிடித்தமான விஷயங்களுள் ஒன்று. அதேபோல மாலையாகிவிட்டால் விளையாடுவதும் நம்மாழ்வாருக்கு அதிகமாகப் பிடிக்கும். இன்று மாதம் ஒரு லட்சம் வருமானம் கொடுக்கும் சம்பளத்தை விடுத்து இயற்கை விவசாயத்துக்குத் திரும்பியுள்ள இளைஞர்களும், தெருவுக்குத் தெரு முளைத்துள்ள இயற்கை அங்காடிகளும், சிறுதானிய விழிப்பு உணர்வும் நம்மாழ்வார் விதைத்த விதையின் இன்றைய அறுவடைகள்தாம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் இயற்கை விவசாயத்துக்கும் அது சார்ந்த போராட்டங்களுக்கு மட்டுமே அர்ப்பணித்தவர், நம்மாழ்வார். இவரின் போராட்டங்களில் மிக முக்கியமானது மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம். தான் பயிற்சி கொடுக்கும் இடமெல்லாம் பசுமையாக மாற வேண்டும் என்பது நம்மாழ்வாரின் எண்ணம். அவர் விதைத்த விதை இன்று பலநூறு இயற்கை விவசாயிகளை உருவாக்கி விவசாயத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்