Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"நெல் மணக்கும் திருவாரூர் திருவிழாவில் கலந்துக்கவே நான் குணமாகனும்!"- 'நெல்' ஜெயராமன்

பாரம்பர்ய நெல் ரகங்கள்

நம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள் வழக்கொழிந்து விட்டன. பசுமைப் புரட்சியின் கை ஓங்கியிருந்த காலத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் புறப்பட்டார், நம்மாழ்வார். அவருடன் சில மாதங்கள் சில இளைஞர்கள் குழுவாகப் பயிற்சி பெறுவது வழக்கம். அப்படித்தான் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தில் நம்மாழ்வார் பின்னால் செல்லும் குழுவில் பயணித்தவர்களில் ஒருவர்தான் 'நெல்' ஜெயராமன். அப்போது நம்மாழ்வார் இவரிடம் நாட்டு ரக நெல்மணிகளைக் கொடுத்து அதன் உற்பத்தியைப் பெருக்குமாறும், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்குமாறும் சொல்லியிருக்கிறார். நம்மாழ்வார் சொன்னது போலவே திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழா 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொர் ஆண்டும் நடத்தி வருகிறார். நெல் ஜெயராமன் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கிறார். பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டதாலேயே இவர் 'நெல்' ஜெயராமன் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். ஆனால் இவர் கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர், அதே தெம்போடு குணமடைந்து வருகிறார். இப்போது அடுத்த நெல் திருவிழாவிற்கான தேதிகளையும் அறிவித்திருக்கிறார், ஜெயராமன்.

பாரம்பர்ய ரகங்கள்

இதுபற்றி 'நெல்' ஜெயராமனிடம் பேசினோம். "நீண்ட மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் பிறந்ததுபோல இருக்கிறது. விவசாயிகள் செயற்கை விவசாயத்தால் படும் கஷ்டம் அளவில்லாதது. இதுதவிர, பாரம்பர்ய நெல் ரகங்களை நம்பி பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்ய மறுக்கிறார்கள். 2006-ம் ஆண்டு நம்மாழ்வார் ஐயாவால் துவக்கி வைக்கப்பட்ட நெல் திருவிழா, இம்முறை வரும் 17, 18 ஆகிய தேதிகளில் 11-வது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த நெல் திருவிழாவை நடத்துவதற்காகவே வேகமாக குணமடைந்து வருகிறேன். திருத்துறைப்பூண்டி டி.வி.ஆர் சாலையிலுள்ள ஏ.ஆர்.வி - தனலெட்சுமி திருமண அரங்கத்தில் நடைபெறுகிறது. இத்திருவிழாவில், பாரம்பர்ய உணவு மற்றும் கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகளும் உண்டு. இந்த விழாவில் 156 வகையான பாரம்பரிய நெல் 6000 விவசாயிகளுக்குத் தலா 2-கிலோ வீதம் வழங்கப்படவுள்ளது. ஜெயராமன்இதில் விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் அதிகளவில் விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி ஐ.ஏ.எஸ், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் மதுமதி ஐ.ஏ.எஸ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் ஐ,.ஏ.எஸ், மலேசியா பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் சுப்பாராவ், நமது நெல்லைக் காப்போம் தேசிய ஒருங்கிணைப்பாளர் உஷாகுமாரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அங்கக வேளாண்மைத்துறை பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தமிழ்நாடு வேளாண்மைத்துறை முதன்மை அதிகாரிகள், நபார்டு வங்கி முதன்மை அதிகாரிகள், தஞ்சாவூர் இந்திய உணவு பதனிடும் கழக ஆராய்ச்சியாளர்கள், புதுவாழ்வுத் திட்ட அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, மேற்கு வங்களாம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்கள் பங்கேற்கிறார்கள். விழாவின் கருத்தரங்கில் பாரம்பர்ய நெல் சாகுபடி அதன் மருத்துவக் குணங்கள், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், விளை நிலங்கள், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு, உழவர்களுக்கான நபார்டு திட்டங்கள், பருவநிலை மாற்றமும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும், விற்பனை வாய்ப்பும் சந்தை நிலவரம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும்" என்றார்.

இவ்விழாவில் கடந்த முறை அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு விதை நெல்லை பெற்றுச் சென்று பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement