Published:Updated:

டெல்டாவில் விவசாயம் பாதித்ததற்கும்... ஆப்ரிக்காவுக்கும் உள்ள தொடர்பு! #Analysis

மு.நியாஸ் அகமது
டெல்டாவில் விவசாயம்  பாதித்ததற்கும்... ஆப்ரிக்காவுக்கும் உள்ள தொடர்பு! #Analysis
டெல்டாவில் விவசாயம் பாதித்ததற்கும்... ஆப்ரிக்காவுக்கும் உள்ள தொடர்பு! #Analysis

த்தியப் பிரதேசத்தில் ஐந்து எளிய விவசாயிகள் அரசால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும், காவிரி டெல்டாவில் விவசாய உற்பத்திக் குறைந்ததற்கும், ஆப்ரிக்கா தேசமான எத்தியோப்பியா எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. அது, நகக்கண்ணுக்கும் சதைக்கும் உள்ள அளவுக்கு நெருக்கமானத் தொடர்பு. 

ஆம், இன்னும் விரிவாகச் சொல்லப்போனால், 2012 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், “விவசாயிகளே... விவசாயத் துறையைவிட்டு வெளியேறுங்கள். குறைந்த எண்ணிக்கையில் விவசாயிகள் விவசாயம் பார்த்தால் போதும்'' என்றார். இதற்கும் எத்தியோப்பியா சிக்கல்களுக்குமே ஒரு நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. கூர்ந்துபார்த்தால், மன்மோகன் சிங்கின் அந்த வார்த்தைகளுக்குள்ளேயே அழுக்காய்ப் புதைந்துகிடந்த பெருநிறுவனங்கள் சார்பு அரசியல்தான். அதற்காக வடிவமைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள்தான், இன்று நம் தேசத்தின் எளிய விவசாயிகளும்... எத்தியோப்பியாவும் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம்.

எத்தியோப்பியா சந்திக்கும் பிரச்னை:

2012 ஆம் ஆண்டு இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங், 'நம் தேசத்து விவசாயிகளை எல்லாம் விவசாயத் துறையைவிட்டு வேறு துறைக்குச் செல்லுங்கள்' என்று சொன்னார் அல்லவா... அதே காலகட்டத்தில், நம் தேசத்தின் பெரும் முதலாளிகள், நிறுவனங்கள் எத்தியோப்பியா தேசத்தில் விவசாய நிலங்களைக் குத்தகைக்கு வாங்கத் தொடங்கினார்கள். நிலம் குத்தகைக்கு என்றால், ஏதோ நூறு ஏக்கரோ, இருநூறு ஏக்கரோ அல்ல...  லட்சக்கணக்கான ஏக்கர்கள். மன்னிக்கவும்... ஹெக்டேர்கள். ஒரு தரவு, 'இந்திய நிறுவனங்கள் எத்தியோப்பியாவில் வாங்கி இருக்கும் நிலத்தின் பரப்பளவு, பிரான்ஸ் தேசத்தின் மொத்தப் பரப்பளவுக்கு நிகரானது' என்கிறது. அதுவும் நம் நிறுவனங்கள் குத்தகையா கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா...? ஹெக்டேருக்கு 1.10 டாலர்கள். இன்றைய மதிப்பில், ரூபாய். 70.87.

உலகம் முழுவதும் அரசுகள் ஒரே மாதிரிதானே இருக்கின்றன. சிங்கூர்... நெடுவாசல் என மண்ணின் மக்களை நிலத்திலிருந்து துரத்த வேண்டும் என்பது மட்டும்தானே அரசின் நோக்கம். அதற்கு எத்தியோப்பியா மட்டும் என்ன விதிவிலக்கா? ஆம், அந்தத் தேசத்து அரசு ஒன்றும் தன் வசமிருந்த சொந்த நிலத்தைக் கொடுத்துவிடவில்லை. அதன் வசம் அவ்வளவு வளமான பரப்பும் இல்லை. அரசு கொடுத்தது அனைத்தும், மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்கள்... அந்தத் தேசத்து எளிய விவசாயிகள் சீர்படுத்தி வைத்திருந்த நிலங்கள். அதை அனைத்தையும் கைப்பற்றி, இந்திய நிறுவனங்களுக்கு மிகவும் குறைவான விலைக்குத் தாரைவார்த்தது. 
 
மும்பை ஷேர் மார்க்கெட்டின் உயரங்களைப் படபடப்புடன் நம்மவர்கள் ரசித்துக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில் எத்தியோப்பிய விவசாயிகள் ஒருவேளை உணவுக்காக... பிழைப்புத் தேடி பரதேசிகளாகத் தங்கள் சொந்த நிலத்தை இழந்து திரிந்துகொண்டிருந்தார்கள். 

அந்தத் தேசத்தின் செயற்பாட்டாளர்கள் டெல்லியில் நின்று கதறிக்கொண்டிருந்தார்கள். ஆப்ரிக்கச் செயற்பாட்டாளர் ஒபாங்க் மீத்தோ, “இந்திய அரசு, ஆப்ரிக்கக் கொடுங்கோலர்கள் பின்னால் மறைந்துகொண்டு ஓர் அறமற்றச் செயலைச் செய்துகொண்டிருக்கிறது... நிலத்தை அப்பாவி மக்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டிருக்கிறது. இது, நில ஆக்கிரமிப்பு. நீடித்த வளர்ச்சிக்கு இது நல்லதல்ல... மக்கள் அமைதியாகவே சென்றுவிட மாட்டார்கள். ஒருநாள் நிச்சயம் திருப்பி அடிப்பார்கள். இதை, இந்தியா உணர வேண்டும்” என்று கதறினார். ஆனால், வளர்ச்சி மமதையில் நான்கு வழிச் சாலை பயண வேகத்தில் சென்றுகொண்டிருந்த ஆட்சியாளர்களின் செவிக்கு அது விழவில்லை. அந்தச் செயற்பாட்டாளர்கள் நேரடியாக நிறுவனங்களிடமே முறையிட்டார்கள், “இது நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து, லாபக்கணக்கை எண்ணிக்கொண்டிருந்தன நிறுவனங்கள். 

விரிவாகப் பார்க்க வேண்டுமானால், இது எத்தியோப்பியாவின் கதை மட்டுமல்ல... உலகம் முழுவதும் 23 ஏழை நாடுகளை இவ்வாறாகத்தான் சுரண்டி, அங்கு பெரும் பரப்பைக் கைப்பற்றி விவசாயம் செய்துகொண்டிருக்கிறது இந்தியா.

எத்தியோப்பியாவும், டெல்டாவும், மத்திய பிரதேசமும்:

சரி... இதற்கும் இந்தியாவில் விவசாயிகள் படும் வேதனைகளுக்கும்... டெல்டாவில் உற்பத்தி குறைந்ததற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? கொஞ்சம் காங்கிரஸ் ஆட்சியின் மன்மோகன் சிங் முதல் தற்போதைய பி.ஜே.பி அரசின் மத்தியப் பிரதேச துப்பாக்கிச் சூடுவரை எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றாகத் தொடர்புபடுத்திப் பாருங்கள். எல்லாம் தெளிவாகப் புரியும்.

ஆம், உலகமயம், சுயசார்பு எல்லாவற்றையும் உதிர்த்துவிடச் சொன்னது; மக்களின் நலனைப் பின் வைத்துவிட்டு லாபத்தின் பின்னால் ஓடச் சொன்னது. அந்தக் கொள்கையைத் தழுவிக்கொண்ட இந்திய அரசு அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் விவசாயம் செய்வதைவிட, ஏழை எத்தியோப்பியா தேசத்தில் விவசாயம் செய்தால் நிறுவனங்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும். அங்கு விவசாயக் கூலி குறைவு, மிகவும் குறைவான விலையில் நிலம் வாங்க முடியும். அதனால், நம் விவசாயிகளை வேறு துறைக்குப் போகச் சொன்னது; கொஞ்சம் கொஞ்சமாக மானியங்களைக் குறைத்துக்கொள்ளவும் தொடங்கியது. அதையும் மீறி விவசாயம் செய்பவர்களை, தற்போது சுட்டுக்கொன்று கொண்டு இருக்கிறது அல்லது தண்ணீர் தராமல் அரசியல் செய்து விவசாய உற்பத்தியைக் குறைத்துக்கொண்டிருக்கிறது. 

யார் எப்படிப் போனால் எனக்கு என்ன...? எத்தியோப்பியாவிலிருந்தோ அல்லது உகாண்டாவிலிருந்தோ உணவு வருகிறதுதானே... அது போதும் என்று நினைப்போமாயின், நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்கிறோம் என்று அர்த்தம். ஆம், ஆப்ரிக்கச் செயற்பாட்டாளர் ஒபாங்க் மீத்தோ சொன்னதைக் கொஞ்சம் கூர்ந்து இன்னொரு முறை படியுங்கள், “மக்கள் அமைதியாகவே சென்றுவிட மாட்டார்கள். ஒரு நாள் நிச்சயம் திருப்பி அடிப்பார்கள்”.  அப்படித் திருப்பி அடிக்கும்பட்சத்தில் நிறுவனங்கள் நிலத்தைத் தூக்கிக்கொண்டு இங்குத் திரும்பிவர முடியாது. அந்த மக்களிடம் அனைத்தையும் கொடுத்துவிட்டுத்தான் வர வேண்டும்... அந்தச் சமயத்தில் அங்கிருந்தும் உணவு வராது; நம்மிடமும் உணவு உற்பத்தி இருக்காது. அப்போது, ஒருவேளை சோற்றுக்காகக் கலகம்தான் வெடிக்கும்!