Published:Updated:

விவசாயிகளை யார் கடனாளி ஆக்கியது..? - தரவுகளுடன் அரசாங்கத்திற்கு சில கேள்விகள்! #Analysis #VikatanExclusive

விவசாயிகளை  யார் கடனாளி ஆக்கியது..? - தரவுகளுடன் அரசாங்கத்திற்கு சில கேள்விகள்! #Analysis #VikatanExclusive
விவசாயிகளை யார் கடனாளி ஆக்கியது..? - தரவுகளுடன் அரசாங்கத்திற்கு சில கேள்விகள்! #Analysis #VikatanExclusive

விவசாயிகளை யார் கடனாளி ஆக்கியது..? - தரவுகளுடன் அரசாங்கத்திற்கு சில கேள்விகள்! #Analysis #VikatanExclusive

சில தினங்களுக்கு முன் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தன் ட்விட்டர் பதிவுகளில், 'விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வது நிரந்தர தீர்வு ஆகாது... தொடந்து விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்தால், விவசாய உட்கட்டமைப்பை மேம்படுத்த முடியாது' என்ற தொனியில் சில பதிவுகளைப் பகிர்ந்திருந்தார். இதைப் படித்துவிட்டுச் சில ஐ.டி நண்பர்கள், “அவர் சொல்வது உண்மைதானே... தொடர்ந்து கடன் தள்ளுபடி செய்து வருவது எப்படிச் சரியாகும்... விவசாயத்தை லாபகரமாக, வெற்றிகரமாக மேற்கொள்ளத் தெரியாமல் டெல்லியில் போய்ப் போராட்டம் நடத்துவது எப்படிச் சரியாக இருக்கும்...? நாம் அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல், சரிசெய்யாமல்... விவசாயத்தையும், விவசாயிகளையும் ரொமாண்டிசைஸ் செய்கிறோம். அவர்களுக்குக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் நமது வரிப்பணம்தான் போகிறது. விவசாயிகள் தவறுகளிலிருந்து பாடம் படிக்க வேண்டும்” என்று தங்கள் ஆதங்கத்தை அடுக்கிக்கொண்டே போனார்கள்.  

தட்டையாகப் புரிந்துகொண்டால் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் அந்த ஐ.டி நண்பர்கள் சொல்வது மிகச் சரியானதாகத் தோன்றும்... விவசாயிகள் நம் வரிப்பணத்தை விரயம் செய்கிறார்கள் என்று கோபம்கூட வரலாம். ஆனால், கொஞ்சம் நுணுக்கமாக இந்தப் பிரச்னையை ஆராய்ந்தால்தான் புரியும், யார் விவசாயிகளைக் கடனாளி ஆக்கியது... யார் நம் வரிப்பணத்தை வீண் செய்வது என்று...?

“கொம்புத் தேன் தடவிய வார்த்தைகள்”

விவசாயம் பரந்துபட்டத் துறை. அதனால், பி.டி பருத்தியை மட்டும் எடுத்துக்கொண்டு, நம் அரசாங்கமும், நம் வேளாண் விஞ்ஞானிகளும் என்னென்ன பிழை செய்திருக்கிறார்கள்... எப்படியெல்லாம் நம் விவசாயிகளைக் கடனாளி ஆக்கியிருக்கிறார்கள்... தற்கொலை செய்யக் காரணமாகியிருக்கிறார்கள்... நம் வரிப்பணத்தை வீணாக்கியிருக்கிறார்கள் என்று தரவுகளை முன்வைக்கிறேன். 
பி.டி பருத்தி நம் இந்திய நிலத்தில் பயிரிட அனுமதி கொடுக்கப்பட்ட ஆண்டு 2002. முதலில், அது மத்திய மற்றும் தென்னிந்தியாவில் மட்டும்தான் பயிரிட அனுமதி கொடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதாவது, 2005-இல்தான் வட இந்தியாவிலும், இதற்கு அனுமதிக் கொடுக்கப்பட்டது. பி.டி பருத்தி இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியபோது, அதை உருவாக்கிய மான்சாண்டோவும், இந்திய அரசும் அடுக்கிய காரணங்கள் சிலிர்க்கவைப்பதாக இருந்தன. இனி ஒவ்வொரு விவசாயியும் சுவீஸ் வங்கியில் கணக்குத் தொடங்கிவிடலாம்... நிலத்திலிருந்து வரும் வருமானத்தைக் கொஞ்சம் சரியாக மேலாண்மை செய்தால் மடகாஸ்கர் அருகே சில தீவுகளைக்கூட வாங்கிப் போட்டுவிடலாம் என்ற அளவுக்குக் கொம்புத் தேன் தடவிய வார்த்தைகளால் விவசாயிகளை மயக்கமுறச் செய்தார்கள். குறிப்பாக, பி.டி பருத்தியில் மகசூல் அதிகம்; பூச்சி தாக்காது என்றார்கள்.
 
எளிய விவசாயி நம்பினான். அவனுக்குச் சுவீஸ் வங்கி, தீவுகள் குறித்தெல்லாம் கனவில்லை. தன் பிள்ளைகளைப் படிக்கவைத்துவிட முடியும்... யாரிடமும் கடன் வாங்காமல் தன் மானத்துடன் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும் என்று நம்பினான். அரசின், அதிகாரிகளின், வேளாண் விஞ்ஞானிகளின் பகட்டான ஆங்கிலம் புரியவில்லை என்றாலும், அவர்கள் சொல்லியது எல்லாவற்றையும் நம்பினான். தம் நிலத்தில் பி.டி பயிரிடத் தொடங்கினான்.

அரசே ஒப்புக்கொண்ட தோல்வி!

இந்தியப் பருத்திச் சாகுபடி நிலப்பரப்பில் ஏறத்தாழ 93 சதவிகித பரப்பைப் பத்து ஆண்டுகளில் பி.டி பருத்தி ஆக்கிரமித்தது. முதலில், வழக்கம்போல அதிக மகசூல் வந்தது. மான்சாண்டோவின் தூதர்கள் நிலங்களைப் பார்வையிட்டு வெற்றிக் கட்டுரைகள் எல்லாம் எழுதினார்கள். நம் விவசாயியும் புன்னகைப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். ஆனால், அந்தப் புன்னகை அதிக நாள்கள் நீடிக்கவில்லை. சில ஆண்டுகளிலேயே பி.டி பருத்தி பல் இளிக்கத் தொடங்கியது. எந்த வாக்குறுதியை நம்பி நம் விவசாயி பி.டி-யைப் பயிரிட்டானோ, அந்த வாக்குறுதியையே போல்வார்ம் பூச்சிகள் அரிக்கத் தொடங்கின.

நம்மூரைப் பொறுத்தவரை, பருத்தி என்பது மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர். நம்முடைய மரபு பருத்திப் பயிர்களுக்கு, குறைந்த அளவில்தான் தண்ணீர் தேவைப்படும். ஆனால், இந்தப் பி.டி பருத்திகள் அதிகம் தண்ணீர் நுகர்பவையாக இருந்தன. விவசாயிகள் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தடுமாறினார்கள். பயிர்கள் கருகின... பிழைத்த பயிர்களிலும் மகசூல் குறைந்தது. 
விவசாயிகள் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கினார்கள். ''இது எதுவும் என் கண்டுபிடிப்புகள் அல்ல... அமெரிக்கா பல்கலைகழகத்தின் கண்டுபிடிப்பு; அரசாங்கமே ஒப்புக்கொண்ட கண்டுபிடிப்பு. விதைகள் விவசாயியின் கட்டுப்பாட்டில் இல்லாததால், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அதிகம் தேவைப்படுவதால், பி.டி பருத்தி பயிரிட்டவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்'' என்றது கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் ஆய்வறிக்கை. குறிப்பாக, மானாவாரி நிலத்தில் பயிரிட்டு இறந்தவர்கள் அதிகம் என்று சுட்டிக்காட்டியது அந்த அறிக்கை.

அரசாங்கத் தரவுகளும் இந்த அறிக்கை உண்மை என்பதற்கு வலுவூட்டுவதாகத்தான் இருந்தது. மத்திய விவசாயத் துறையின் ஒரு தரவு, 2002-இல் ஒரு ஹெக்டேரில் பருத்திச் சாகுபடி செய்ய 20,603 ரூபாய் செலவு ஆனது என்றும்... 2013-இல் அதே ஒரு ஹெக்டேரில் பருத்திச் சாகுபடி செய்ய 72,434 ரூபாய் ஆனது என்றும் கூறுகிறது. அதாவது, மூன்று மடங்கு சாகுபடிச் செலவு அதிகரித்திருக்கிறது. விலைவாசி ஒருபக்கம் உயர்ந்திருந்தாலும், அதிக உரங்கள், பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டதுதான் இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம்.

இதையும் இந்திய அரசு 2016-இல் அளித்த வாக்குமூலத்திலேயே ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய அரசு, “ஆம். பி.டி பருத்தி, பூச்சிகளுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை இழந்துவிட்டது” என்று அறிக்கையைச் சமர்பித்துள்ளது. அதே ஆண்டில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, “நாட்டுப் பருத்திகள் குறைந்த தண்ணீரை நுகர்பவை... நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளவை” எனப் பதில் அளித்துள்ளது. ஆக, அரசே தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது.
 
யார் விவசாயிகளைக் கடனாளி ஆக்கியது?

நம் விவசாயிகள், நாட்டுப் பருத்திதானே பயிரிட்டுவந்தார்கள். அரசுதானே அவர்கள் கைகளில் பி.டி பருத்தியைத் திணித்தது. இப்போது, நாட்டுப் பருத்திதான் நல்லது என்று சொல்வது யாரை முட்டாள் ஆக்கும் வேலை...? இந்தப் பதினான்கு ஆண்டுகளில் இறந்தவர்களுக்கு யார் பொறுப்பு...?  

பி.டி பருத்தியைப் பயிரிட்டு மகசூல் பொய்த்த விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை இந்த 15 ஆண்டுகளில் இழப்பீடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது நம் வரிப்பணம்தான்.  இதற்கு மூலக்காரணம் யார்..?

நம் விவசாயி, பல பயிர் சாகுபடிதானே செய்துவந்தான்... ஒருபயிர், நஷ்டத்தைத் தந்தாலும் இன்னொரு பயிர் அவனைக் காப்பாற்றி வந்ததுதானே?! அதையெல்லாம் அழித்து ஒற்றைப் பயிர் சாகுபடிக்கு அவனைத் தள்ளியது  யார்... பூச்சித் தாக்காது என்று பொய் சொல்லி அல்லது உண்மை தெரியாமல் மான்சாண்டோ நிறுவனத்தின் ஊதுகுழலாகச் செயலப்பட்டது யார்... விவசாயிகளை மீளாக்கடனில் தள்ளியது யார்...? அரசுதானே...!

'விவசாயிகள் தவறுகளிலிருந்து பாடம் படிக்க வேண்டும்' என்கிறீர்கள். அரசு பாடம் படித்ததா...? மீண்டும் ஜி.எம் (Genetically Modified) கடுகுடன் நம்மை நோக்கி வருகிறது நமக்கான அரசு.

நியாயமாக அந்த அரசை நோக்கி... அதன் தவறானக் கொள்கைகளை நோக்கித்தானே நம் சுட்டு விரல்கள் நீள வேண்டும். அதைச் செய்யாமல் விவசாயியைச் சிலுவை ஏற்றுவது அயோக்கியதனமன்றி வேறென்ன...?

அடுத்த கட்டுரைக்கு