Published:Updated:

”எங்க அமைப்பின் பெயர் டாஸ்மாக்..!” - வேலையை உதறி விவசாயத்தில் சாதித்த இளைஞர்கள்

”எங்க அமைப்பின் பெயர் டாஸ்மாக்..!” - வேலையை உதறி விவசாயத்தில் சாதித்த இளைஞர்கள்
”எங்க அமைப்பின் பெயர் டாஸ்மாக்..!” - வேலையை உதறி விவசாயத்தில் சாதித்த இளைஞர்கள்

காவிரியில் தண்ணீர் வராத கோளாறு,142 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தை வாட்டும் வரலாறு காணாத வறட்சி எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். 38 நாள்களாக டெல்லியில் போராடிய விவசாயிகள் (மறுபடியும் போராடுவது), ஹைட்ரோகார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராடி வரும் விவசாயிகள், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிரான போராட்டம் என்று அனைவரையும் கிள்ளுக்கீரையாக பார்க்கும் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்குதான் விவசாயத்தின் மீது விவசாயிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச 'நம்பிக்கை'க்கும் வேட்டு வைத்திருக்கிறது. விவசாயிகளை இந்த அரசுகள் ஐந்தாம்கட்டத்தில் வைத்தே பார்க்கிறது என்றே எண்ணத்  தொடங்கி இருக்கிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில்தான், முப்பது வயதையே  நெருங்காத ராஜேஷூம், கணேசமூர்த்தியும் விவசாயத்தின்மீது 200 சதவிகிதம் நம்பிக்கை கொள்ள வைக்கும்விதமாக செயல்படுகிறார்கள். அதுவும் இயற்கை விவசாயத்தில். முன்னவர் எம்.ஏ, பி.எட்டை டீச்சராகும் கனவில் முடித்தவர். ஆனால், இன்று விவசாயத்தில் காலூன்றி இருக்கிறார். மற்றவர் டெக்னிக்கல் கோர்ஸ் முடித்துவிட்டு, சிங்கப்பூரில் இரண்டு லட்சம் வரை மாதச் சம்பளம் வாங்கியவர். ஆனால், அதை உதறித் தள்ளிய அவர், இப்போது கால் பதித்திருப்பதோ சேற்றில். இருவரையும் அப்படி உந்தி வயல், வரப்பு என்று தள்ளியது நம்மாழ்வார் என்னும் மாமனிதன். கரூர் வானகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவிற்குதான் இருவரும் வந்தனர். 

ராஜேஷ் தனது நிலத்தில் மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி, காட்டுயானம் என்று நமது பாரம்பர்ய நெல் ரகத்தை இயற்கை முறையில் விளைவித்து, செயற்கை விவசாயம், ஹைபிரிட் விதைகள் போட்டு வெள்ளாமை செய்தவர்கள் ஏக்கருக்கு 25 மூட்டைகள் எடுக்க, இவர் மாப்பிள்ளை சம்பா நெல்லைப் போட்டு 36 மூட்டைகள் எடுத்திருக்கிறார். அதைப் பாராட்டிதான் வானகத்தில் அவருக்கு விருது கொடுத்தார்கள்.  

'இந்த ஆர்வத்தை விதைத்ததே நம்மாழ்வார் அய்யாதான். இந்த வெற்றிக்கு என்னை உந்திய அவரது ஆத்மா உறங்கும் இந்த வானகத்திற்கு எனது குருகாணிக்கை இது' என்றபடி மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி, காட்டுயானம் என்று மூன்று ரகத்திலும் தலா ஒரு கிலோ நெல்லை வானகத்திற்கு நெகிழ்ச்சியோடு அர்ப்பணித்தார். கணேசமூர்த்தியோ வெளிநாட்டு வேலையை தனது பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி உதறிவிட்டு, இங்கே வந்து இயற்கை விவசாயத்தில் கால் பதித்து, ஆரம்பத்தில் சறுக்கினாலும் இப்போது சாதித்துக் காண்பித்திருக்கிறார். அதோடு, இயற்கை முறை காய்கறிகளும், அரிசி வகைகளும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், அதேநேரத்தில் இயற்கைப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபமும் கிட்ட வேண்டும் என்ற நல்ல நோக்கில் கடந்த பதினைந்தாம் தேதி புதுச்சேரியில் 'டாஸ்மாக்' என்ற பெயரில் இயற்கைப் பொருள்கள் வாங்கி விற்கும் அமைப்பை இளைஞர்களை இணைத்து ஆரம்பித்திருக்கிறார். இந்த இரண்டு இளைஞர்களும்தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களின் பிரதிபலிப்பு. மனசாட்சி. 'ஆயிரம் தடைகள் வந்தாலும் விவசாயத்தை புதைகுழிக்குள் சிக்க விடமாட்டோம்' என்று ஆளும்பேருமாக கூடி தடுக்க நினைக்கிற முனைப்பு. இதுதான் இன்றைய விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் டானிக். இந்த மாற்றத்துக்கு ஒரே ஒருத்தர்தான் காரணம்.. அது பெருங்கிழவன் நம்மாழ்வார்.

 முதலில், ராஜேஷிடம் பேசினோம்.

 "எனக்குச் சொந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள சாதனூர். எனக்கு இப்போ வயசு 29. நாங்க விவசாய குடும்பம்னாலும், 2008 வரை விவசாயத்தின் மீது பெரிய பிடிப்பு இல்லாமல்தான் இருந்தேன். எங்கப்பாவும், 'நான் படுற கஷ்டத்தை நீ படக்கூடாது. படிச்சு பெரிய வேலைக்கு போ'ன்னு சொல்லி என்னைப் படிக்க வச்சார். நானும் அரசாங்க பள்ளிக்கூடத்துல ஆசிரியராகனும்ங்கிற வெறியில படிச்சேன். ஆனால், 2009-ம் வருஷம் நம்மாழ்வார் அய்யாவை எதேச்சையாக புதுக்கோட்டையில் சந்தித்தபிறகு, என் கொள்கை மாறிட்டு. 'ரொம்ப சின்ன வயசா இருக்கீங்க. உலகத்துக்கே சோறு போடும் விவசாயத்தை மட்டும் கைவிட்டிறாதீங்க. நீங்க ஏரோப்பிளேன் ஓட்டுங்க. விஞ்ஞானியா ஆவுங்க. ஆனால், பார்ட் டைமானாச்சும் விவசாயம் பாருங்க'ன்னு சொன்னார். எனக்கு சுளீர்ன்னு உரைச்சுச்சு. மனசுல மாட்டி வச்சுருந்த டீச்சர் வேலையைத் தூக்கி கடாசிட்டு, எனக்கு இருந்த ரெண்டு ஏக்கர்ல விவசாயம் பார்க்க இறங்கிட்டேன். ஆனால், என்ன பண்றது, எப்படி செய்றதுன்னு கண்ணைக் கட்டி காட்டுல விட்டாப்புல இருந்துச்சு. நம்மாழ்வார் புத்தகங்களையும், பசுமை விகடனையும் படிச்சேன்.

 அதோட, என்னோட நண்பர் அமுல்ராஜூக்கு என் நிலத்தை ஒட்டியே அஞ்சு ஏக்கர் நிலமிருந்துச்சு. அதனால், ரெண்டு பேரும் சேர்ந்து இயற்கை விவசாயத்துல இறங்கினோம். 2010-ம் வருடம் ஹைபிரிட் விதையான ஆடுதுறை 38ஐ இயற்கை விவசாயம் மூலம் பயிர் செஞ்சேன். ஏக்கருக்கு 15 மூட்டை வந்துச்சு. 'உனக்கு இது தேவையா?'ன்னு ஊர் ஏசுனுச்சு. நம்மாழ்வார் அய்யாவை மனசுல வணங்கிக்கிட்டு அடுத்த வருஷம் பாரம்பர்ய ரகமான சீரகச்சம்பாவை போட்டோம். ஏக்கருக்கு அதுவும் பதினைஞ்சு மூட்டைதான் வந்துச்சு. என்னன்னு காரணம் தேடினப்ப மண் வளம் செயற்கை உரங்களால் கெட்டுப் போயிருப்பது தெரிந்து இயற்கை முறையில் மண் வளத்தை செம்மையாக்கினோம். அதன்விளைவாக, 2012-ம் வருடம் சீரகச்சம்பா போட்டு 25 மூட்டைகள் அறுவடை பண்ணினோம். அடுத்தடுத்த வருடங்களும் அதே அளவுதான் வந்தது. இந்தச் சூழலில்தான், இந்த வருடம் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொட்டி வெள்ளாமை பண்ணி மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி நெல் ரகங்களை ஏக்கருக்கு தலா 36 மூட்டைகள் ஈல்டு எடுத்து காண்பிச்சுருக்கோம். பொன்னி அது இதுன்னு ஹைபிரிட் விதைகளை செயற்கை விவசாயத்தில் வெள்ளாமை பார்த்த விவசாயிகள் 26 மூட்டைகள்தான் எடுத்திருக்காங்க. எங்களை நக்கல் பண்ணிய அவர்களின் வாய், எங்களை பார்த்து இப்போ சங்கடத்தில் ஈன்னு இளிக்குது. குடவாழை, பூங்கார்ன்னு ஐம்பது பாரம்பர்ய ரகங்களையும் சேகரித்து வைத்திருக்கோம். அதைக் கொடுத்து, இருநூறு இளைஞர்களை விவசாயிகளாக, அதுவும் இயற்கை விவசாயிகளா மாற்றி இருக்கிறேன். விவசாயிகளுக்கு எதிரி அரசுகள் என்பது இருக்கட்டும். விவசாயிகளே விவசாயிகளுக்கு எதிரியாக இருப்பதுதான் கொடுமை. நம்மாழ்வாரின் கனவை கைவிடமாட்டோம். விவசாயத்தின்மீது எழுந்திருக்கும் அவநம்பிக்கையை துடைக்கும் வரை இயங்கிகிட்டே இருப்போம்" என்றார்.

 அடுத்து பேசிய கணேசமூர்த்தி,
 

"எனக்குச் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், பாளத்தளி. நான் டிப்ளமோ இன் டிசைனிங் படிப்பு படிச்சுட்டு, சிஙக்கப்பூர்ல இரண்டு லட்சம் சம்பளம் வாங்கினேன். நினைச்ச வாழ்க்கை, கையருகில் வசதிகள்ன்னு இருந்தாலும், மனசுல ஏதோ ஒரு வெறுமை அடுநாதமா இருந்துச்சு. 2013-ம் வருஷம் லீவுல ஊருக்கு வந்தப்ப, மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்துல இருந்த அய்யா நம்மாழ்வாரை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. அவரை சந்தித்த பிறகுதான், 'காசு மட்டுமல்ல வாழ்க்கை'ங்கிறது புரிஞ்சுச்சு. அன்னைக்கே வீட்டுக்கு போய், 'சிங்கப்பூர் போகலை. இங்கேயே விவசாயம் பார்க்கப் போறேன்'ன்னு சொன்னதும், குடும்பமே அதிர்ந்து போச்சு. 'உனக்கு என்ன பைத்தியமா?. கையில கிடைச்ச தங்க முட்டையை புழுதியில எறிஞ்சுட்டு, காக்காமுட்டைக்கு ஆசைப்படலாமா?'ன்னு வானத்துக்கும் பூமிக்கும் அப்பா குதிச்சார். நான் உறுதியா இருந்தேன். இதனால், அப்பா என்னோட பேசலை. நான் அதுக்கும் சுணங்காம, ஒரு ஏக்கர் நிலத்துல விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். ஆனால், அப்போ பூங்கார் போட்டேன். ஏழு மூட்டைதான் கிடைச்சுச்சு. சுணங்கிப் போகலை. அதனால், எங்களுக்கு இருந்த அஞ்சு ஏக்கர் நிலத்தையும் இயற்கை முறையில் வளப்படுத்தினேன். அப்படியும், மாப்பிள்ளைச் சம்பா, சீரகச்சம்பான்னு போட்டேன். 2015 வரை அப்படி போட்டேன். ஏக்கருக்கு பத்து, பதினைஞ்சுதான் வந்துச்சு.
 ஆனால், நம்மாழ்வார் மனசுக்குள்ள உந்தி தள்ளிகிட்டே இருந்தார். அதன் விளைவு, நெல் ஜெயராமன் அய்யாகிட்ட வாங்கிய கருடன் சம்பாவை போன போகத்தில போட்டு, ஏக்கருக்கு 46 மூட்டைகள் எடுத்தேன். இதனால், அஞ்சு வருஷமா என்கிட்ட சரியா பேசாம இருந்த எங்கப்பா இப்போ, என்கிட்ட பேசுறார். 'என்னை கைவிட்ட விவசாயம் உன்னையும் கைவிட்டுருமோன்னுதான் உன்னை தடுத்தேன். ஆனால், எனக்குள்ள இருந்த விவசாயத்தின் மீதான அவநம்பிக்கையை நீ ஜெயிச்சுட்டே. இனி பயமில்லை'ன்னு எனக்கு ஒத்தாசை பண்ண ஆரம்பிச்சுட்டார். இதற்கிடையில், முகநூல் மூலமா பல ஆயிரம் இளைஞர்களை இணைத்து மீத்தேனுக்கு எதிராகப் போராடினோம். இயற்கை விவசாய பொருள்களும் கார்ப்பரேட் ஆக்கப்படுவதை தடுக்கும் முயற்சியில் இறங்கினோம். நம்மாழ்வார் அய்யா கண்ட கனவுப்படி இன்றைக்கு பல பேர் இயற்கை விவசாயத்தில் இறங்குறாங்க. ஆனால், அதற்கான சரியான சந்தையோ, லாபமோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த குறையைப் போக்கதான் கடந்த பதினைந்தாம் தேதி ரோஹிணி மேடத்தை அழைத்து வந்து புதுச்சேரியில் வைத்து, டாஸ்மாக்குங்கிற பெயரில் இயற்கை உணவுப் பொருள்களை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் அமைப்பைத் தொடங்கி இருக்கிறோம். விவசாயிகளுக்கு லாபத்தை தேடித் தரும் அமைப்பா இது இருக்கும். இப்போ, செயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருள்கள் டாஸ்மாக் சரக்கு போல தீமையானது என்பதை உணர்த்தத்தான் எங்க அமைப்புக்கு டாஸ்மாக்குன்னு பேர் வச்சுருக்கோம். நம்மாழ்வார் காட்டிய வழியில் சரியா போய்கிட்டு இருக்கேன். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்" என்று முடித்தார்.

 இவர்கள் விதைப்பது வெள்ளாமை மட்டுமல்ல...பாடடியாக கிடக்கும் தமிழக விவசாயத்திற்கும்,விவசாயிகளுக்குமான நம்பிக்கை!