"எங்களால் மாணவர்களுக்கு பாடம்தான் நடத்த முடியும்.!" - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரின் கவலை | Interesting details shared at vidhaikalin thevai conference

வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (31/07/2017)

கடைசி தொடர்பு:16:19 (31/07/2017)

"எங்களால் மாணவர்களுக்கு பாடம்தான் நடத்த முடியும்.!" - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரின் கவலை

விதைகளின்

பயோவெர்சிட்டி இன்டர்நேஷனல் மற்றும் கிரீன் காஸ் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து ‘விதைகளின் தேவை’ என்ற பெயரில் கருத்தரங்கை நடத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் இந்நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. சுற்றுவட்டார விவசாயிகள் சுமார் 100 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

முதலில் பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கே.ராமசாமி, "தமிழர் பண்பாடு உழவுத் தொழிலிருந்து தொடங்குகிறது. இன்றைக்கு உழவுத் தொழில் என்ன நிலையிலிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். வயலிலேயே விளைஞ்சதை வித்துட்டு வெறுங்கையோடு விவசாயி வீட்டுக்கு போகிறார். இதற்கு காரணமாக எல்லோரும் பல்கலைக்கழகத்தைக் கைநீட்டுகிறார்கள். ஆனால், செய்யவேண்டியதெல்லாம் விவசாயிகள்தான். எங்களால் மாணவர்களுக்கு பாடம் சொல்லிகொடுத்து அவர்களை வெளியில் அனுப்ப முடியும் அவ்வளவுதான்.

இந்தக் கூட்டத்தில் பெண்களே இல்லை. அந்தக் காலத்தில் பெண்கள்தான் விதைகளைச் சேமித்து வைத்தார்கள். அவர்களின் மடியிலிருந்து நிலத்தில் இரைத்ததால்தான் அது ‘வித்து’ என்று பெயர் பெற்றது. வித்தே பிறகு ‘விதை’யாக மாறியது. இப்போது விவசாயிகளெல்லாம் ‘80 நாள்ல விளையுற விதைகள் இருக்கா, 100 நாள்கள்ல விளையுற விதைகள் இருக்கா’னு கேக்குறாங்க. இந்தச் சூழலில் தொழில்நுட்பம் மட்டுமே கைகொடுக்கும். அதைப் பயன்படுத்தி, பாரம்பர்ய விதைகளைப் பயிர் செய்தால் விவசாயத்தை லாபகரமாக்க முடியும். வருங்கால குழந்தைகளுக்கு அதை மட்டும்தான் நாம் செய்ய முடியும். இந்தியாவில் 108 பயிர்கள் பிரதானமாக இருக்கிறது. இதை சார்ந்து பல்லாயிரக்கணக்கான விதைகள் உள்ளது. இந்தியாவின் பன்மை ரகங்களில்தான் இருக்கிறது. அதை காக்க வேண்டியது அவசியம்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பயோ வெர்சிட்டி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டர் கிருஷ்ணகுமார், "இந்தியாவில் ஆண்டுக்கு 268 மில்லியன் டன் தானிய உற்பத்தி நடந்து வருகிறது. இதில் 45 மில்லியன் டன் கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட சதவிகித உற்பத்தி குறைந்தாலும் பரவாயில்லை. நாம் இயற்கை விவசாயத்தையும் பாரம்பர்ய விதைகளையும் நோக்கி செல்வது அவசியம். பல்லுயிரினப்பெருக்கம் இருந்தால்தான் எல்லா உயிர்களும் இந்த மண்ணில் வாழ முடியும். 

கிருஷ்ணகுமார்

டாக்டர்கிட்ட போய் ஹீமோகுளோபின் செக் பண்ணினால் 10 புள்ளிகள் இருக்க வேண்டும் என்பார். அதேமாதிரி விவசாயத்தில் மண்வளம் 0.7 இருக்க வேண்டும் என்பார்கள். இருப்பதோ 0.3 லிருந்து 0.4 புள்ளிகள். இதைப்பற்றி எதையும் அறியாமல் டெல்லியில் உக்காந்துகிட்டு திட்டங்கள் போட்டுட்டு இருக்கிறார்கள். இப்படியே நிலைமை போனால் அடுத்த 40 வருடங்களில் கழித்து என்ன நடக்கும் என்று யோசிப்பதற்கே பயமாக இருக்கிறது.

அன்னிக்கு 100 கிலோ விளைகிற இடத்தில் 75 கிலோ விளைஞ்சாலும் தரம் இருந்தது. சுவை இருந்தது. இதை வைத்துதான் ஒரே வீட்டில் 10 பேர் இருந்தாலும், பகிர்ந்து சாப்பிட்டு வளர்ந்தார்கள். இன்னைக்கு ஹைபிரிட் விதைகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி தெளித்து விளைவிக்கப்படுகிற பொருள்களில் தரம் இல்லை. உண்மையிலேயே நம்முடைய தாத்தா பாட்டிகள் ரியல் ஹீரோஸ்தான். அன்னிக்கும் இந்த பருவநிலை மாற்றம் இருந்திருக்கும். ஆனால், அதையும் எதிர்த்து மண்புழு, தேனீ, பட்டாம்பூச்சிகள், பறவைகள், விலங்குகள் எல்லாவற்றுக்கு வாழ்வளித்து விவசாயம் செய்திருக்கிறார்கள். இனி, நாமும் கவனம் செலுத்த வேண்டியது அதுபோன்ற விவசாய முறைதான்" என்றார்.

விதைகள்

பாரம்பர்ய நெல் விதைச் சேகரிப்பாளர் நெல் ஜெயராமன் பேசும்போது, "முன்னெல்லாம் ஒரு நிலம் இயற்கை விவசாயத்துக்கு மாறுறதுக்கு 4 வருடங்கள் ஆகும். இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் 1-லிருந்து 2 வருடங்களில் இயற்கை விவசாயத்துக்கு நிலம் தயாராகி விடுகிறது. நிறைய பேர் ‘சீக்கிரமா வளர்ற விதைகள் இருக்கா’னு தேடி அலையறாங்க. நம்முடைய பாரம்பர்ய நெல் விதைகளிலேயே நிறைய இருக்கு. 60 நாள்களில் வளர்கிற அறுபதாம் குறுவை; 70 நாள்களில் வளர்கிற பூங்கார்; 90 நாள்களில் குள்ளகார், கருங்குறுவை; 110 நாள்களில் காட்டுயானம்; 120 நாள்களில் குழியடிச்சான்; 130 நாள்களில் கவுனி, தூயமல்லி; 135 நாள்களில் மைசூர் மல்லி; 140 நாள்களில் கருடன் சம்பா, 150 நாள்களில் மாப்பிள்ளைச் சம்பா, 180 நாள்களில் காட்டுயானம், 200 நாள்களில் ஒற்றடையான்னு நிறைய இருக்கு. இதுபோல 169 நெல் ரகங்கள் தமிழ்நாட்டில் இருக்கு. இதெல்லாம் தமிழ்நாட்டுடைய சூழலில் நன்றாக வளரக்கூடியவை. இதுபோன்ற பாரம்பர்ய நெல் விதைகளை பயிர் செய்ய வேண்டும் என்பவர்களுக்கு 2 கிலோ விதைநெல் கொடுப்போம். அதை விளைவித்து எங்களுக்கு 4 கிலோ விதைநெல்லை வழங்க வேண்டும். இந்த அடிப்படையில் எங்களிடம் விதைகளை வாங்கி கொள்ளலாம். அந்தந்த பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து 62 இடங்களில் விதை வங்கிகளையும் உருவாக்கி இருக்கிறோம். அவர்கள் மூலமும் வாங்கலாம்" என்றார்.இறுதியாக கிரீன் காஸ் பவுண்டேஷனின் திட்ட ஒருங்கிணைப்பாளரும் பத்திரிகையாளருமான எம்.ஜெ.பிரபு நன்றியுரை ஆற்றினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்