Published:Updated:

‘விவசாய மானியம் கட்டு... ரேஷனுக்கு வேட்டு!’ - அன்றே சொன்னார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி

‘விவசாய மானியம் கட்டு... ரேஷனுக்கு வேட்டு!’ - அன்றே சொன்னார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி
‘விவசாய மானியம் கட்டு... ரேஷனுக்கு வேட்டு!’ - அன்றே சொன்னார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி

வியாவுக்கு ஓட்டு போட்டு, 'பிக் பாஸ்'-க்குள் ஜாலியாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நேரத்தில், சிலிண்டர் மானியம் ரத்து, ரேஷன் பொருள்களுக்கு வேட்டு என அடுத்தடுத்து கிலி கொடுத்துவருகிறது அரசு! கோபமானாலும், சோகமென்றாலும் மீம்ஸ் போட்டுத் தாளிக்கும் இணைய உலகம், ரேஷன் பொருள்கள் தடை குறித்து ஒரு வருடத்துக்கு முன்பே எச்சரித்த, 'தீவிரவாதி' மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகனின் பழைய பேட்டியைப் பதிவேற்றிக்கொண்டிருப்பது... 'தலைவன் இருக்கிறான்' மொமன்ட்!

‘போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று அப்போது அலட்சியமாக நாம் தவறவிட்ட திருமுருகனின் பேட்டியை, இப்போது 'ஐ அவுட்டானபின் சன்னுக்கு சலாம்' போட்டு ரீவைண்ட் பண்ணலாம்...

“கடந்த வருடம், 'உலக வர்த்தக ஒப்பந்தம்' குறித்த விவாதம் நடைபெற்றது. அதில், 'ரேஷன் கடை மூலமாக, மக்களுக்கு மலிவு விலையில் அரிசி போன்ற உணவுப் பொருள்களைக் கொடுக்கக்கூடாது. உணவுப் பொருள்களுக்கான மானியம் மற்றும் விவசாயிகளுக்கான மானியத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கொடுக்கவேண்டும்.' என்ற இந்த 3 முக்கியமான அம்சங்களையும் மூன்றாம் உலக நாடுகள் மீது திட்டமிட்டுத் திணித்துள்ளன மேற்குலக நாடுகள்.

முன்னதாக கடந்த 15 வருடங்களாக இதுகுறித்து நடைபெற்றுவந்துள்ள ஒப்பந்த விவாதங்களின்போது இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தது. ஆனால், கடந்த வருடம் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுவிட்டது. எனவே இனிவரும் 2017-ம் ஆண்டிலிருந்து Food Corporation of India என்று சொல்லப்படக்கூடிய குடோன்களில், அரிசியைக் கொள்முதல் செய்வதோ சேமித்துவைப்பதோ நடைபெறாது. விவசாயத்துக்கு மானியத்தை நிறுத்திவிடுவார்கள். ஆனால், வெளிநாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்குக் குறிப்பாக அமெரிக்காவை எடுத்துக்கொண்டோமானால், அந்த நாடு தன் சொந்த மக்களாகிய விவசாயிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் மானியத்தை நிறுத்தாது. ஆனால், இங்கே நம் நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் மின்சார மானியத்தையோ, உரம் உள்ளிட்ட விவசாயப் பொருள்களுக்கான மானியத்தையோ நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் உத்தரவிடுகின்றன; இந்தியாவும் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டது.

இதுமட்டுமல்ல.... 2017-லிருந்து ரேஷன் கடைகளில் இனி மக்களுக்கு அரிசியைக் கொடுக்கப்போவதில்லை. நீங்கள் அரிசியை பொதுசந்தையில்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்டு வந்த உணவுப் பொருள்களுக்குப் பதிலாக மக்களுக்குப் பணம் கொடுக்கப்படும். அதாவது கேஸ் மானியம் எப்படிக் கொண்டுவந்தார்களோ அதேபோன்று. இதற்காகத்தான் ஆதார் அட்டை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இனி ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் அரிசி கிடைப்பதற்கு வாய்ப்பு கிடையாது. நீங்கள் இங்கே அரிசி உற்பத்தி செய்வீர்கள். ஆனால், வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யப்போகிறது அரசு. இதற்கான போக்குவரத்து செலவு என்பது ஒரு கிலோ அரிசிக்கு, மிகக்குறைவாக அதாவது 15 பைசாதான் செலவாகிறது. இங்கே இருக்கிற விவசாயிகளுக்கு உரம், மின்சாரம் உள்ளிட்ட விவசாய மானியங்கள் இல்லாதபோது, அதிக பொருள்செலவில்தான் அரிசியை உற்பத்தி செய்தாகவேண்டும். இந்த அரிசியை அரசு கொள்முதல் செய்யாது. அதேசமயம், வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும். எனவே, இங்குள்ள விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலை மோடி அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது.

இது மோடி அரசின் மீதானக் குற்றச்சாட்டு மட்டுமல்ல.... பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இதுகுறித்துப் பேசவில்லை. மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, 'உங்களுக்கு 20 கிலோ அரிசி தரப்போகிறோம்; 30 கிலோ அரிசி தரப்போகிறோம்' என்று அவர்கள் சொல்லி வருவதெல்லாம் சுத்தப்பொய்! இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பது குறித்து அ.தி.மு.க., தி.மு.க இரு கட்சிகளுமே எதுவும் பேசவில்லை. இந்த உலக வர்த்தக சபையில் இந்தியா கையெழுத்திட்டது குறித்து இதுவரையிலும் பத்திரிகையாளர்களிடம்கூட தெரிவிக்கப்படவில்லை. மிக ரகசியமாக இது மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. ஆக, பொதுவிநியோகத்தை முற்றிலுமாக இவர்கள் மூடப் போகிறார்கள். இதைத்தான் நாங்கள் மிக ஆபத்தான விஷயமாகப் பார்க்கிறோம். இதிலிருந்து விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் ஒழிக்கப்பட்டுவிடும்.'' என்று முழங்கித் தீர்த்திருக்கிறார் தீர்க்கதரிசி திருமுருகன் காந்தி!

திருமுருகனின் இந்தப் பேட்டியைப் பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும்....