23-ம் புலிகேசி வீரர்களுக்கு பரிந்துரைத்த பருத்திப் பால்... நீங்க குடிச்சிருக்கீங்களா? | Have you ever tried drinking cotton seed milk

வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (06/08/2017)

கடைசி தொடர்பு:20:31 (06/08/2017)

23-ம் புலிகேசி வீரர்களுக்கு பரிந்துரைத்த பருத்திப் பால்... நீங்க குடிச்சிருக்கீங்களா?

பருத்தி

”சுடச் சுட பருத்திப் பால் 10 ரூபாய் மட்டுந்தாங்க…”

என்ற வாசகத்தை சிறு வண்டிக் கடைகளில், கடைத்தெருக்களில் கேட்டிருப்போம். ஆனால், அந்தப் பருத்திப் பாலை வாங்கிப் பருகியவர்கள் நம்மில் எத்தனைப் பேர்? பருத்திப் பால் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்தான் என்ன? 

தாய்ப்பாலிற்கு அடுத்த நிலையில் மாட்டுப் பால் என்ற நிலையில் அதில் மனித உடலுக்குத் தேவைக்கு மிகுதியாக கொழுப்பு இருக்கிறது. அதை மறுசுழற்சி செய்ய வேண்டும். அதைப் பதப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் நம்மைக் குழப்பத்தில் உள்ளாக்கி இருக்கிறது இந்தச் சமூகமும் அறிவியலும்.

பால் தேவை அதிகமான இன்றைய கால சூழ்நிலையில் பல்வேறு ஊசிகள், பதப்படுத்த கலப்பட பொருள்கள் என ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயத்தைக் கண்டுபிடித்து அதில் உள்ள சத்துக்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை நிலை. நாட்டுப் பசு என்ற இனமே அழிந்து, நல்ல பாலுக்குத் திண்டாடும் நாம், நம் முன்னோர்கள் கையாண்ட எந்த ஒரு முறையையும் பின்பற்றுவதில்லை. அன்றைய காலச் சூழ்நிலையில் பச்சைப் புல், எண்ணெய் எடுத்த நிலக்கடலை, புண்ணாக்கு போன்றவற்றை மாட்டுக்கு கொடுத்து வந்தனர். அதன்மூலம் நல்ல, அடர்த்தியான பாலையும் கறந்தனர். 

நம் முன்னோர்கள், மாடு அதிக பால் கறக்க என்ன செய்தார்கள் என்று வரலாற்றை புரட்டிப் பார்க்கலாம். மாட்டிற்காக தம் நிலத்தில் விளையும் பருத்தியை அறுவடை செய்து பஞ்சு, கொட்டை என தனியாக பிரித்து அந்தக் கொட்டையை ஊற வைத்து ஆட்டிப் பாலெடுத்து மாட்டடுக்குக் கொடுத்தனர். அவ்வாறாக செய்யும்போது மாடு நன்றாக பால் கறக்கும். இதை ”பருத்திப் பால் உண்ட பசு பாலை அருவியாய் சுரக்கும்” என பழமொழியாய் சொன்னார்கள்.

மன்னர்கள் அசதியாக உணர்ந்தாலோ, சக்தி போதவில்லை என்றாலோ பருத்திப் பாலைத்தான் அருந்துவார்கள் என்கிறது வரலாறு. 23-ம் புலிகேசி படத்தை வரலாறாக கொள்ள முடியாவிட்டாலும், அதில் வடிவேலு தன் வீரர்களுக்கு பருத்திப் பாலைத்தான் பரிந்துரை செய்வார். 

பால் கறக்கும் பசு மாடு, ஏர் உழும் காளை மாடு, ஜல்லிக்கட்டு மாடு, ரேக்ளா பந்தயத்துக்குப் பயன்படுத்தும் மாடு என அனைத்து வகையான மாடுகளையும், வலுவேற்ற பருத்திப் பால் கொடுத்து வந்திருக்கிறார்கள். பருத்திப் பால் என்பது விலங்குகளுக்கு மட்டும் கொடுக்கும் மருந்தா என்றால் இல்லை. அது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அருந்தும் ஆரோக்கிய பானமாக இருந்து வந்தது. இன்றைய காலகட்டத்தில் தீர்க்க முடியாத நோய்களுக்கும் அன்றைய காலகட்டத்தில் மருந்தாக பருத்திப் பால் பயன்பட்டு வந்தது. மிக முக்கியமாக காச நோய்க்கு பெரும் மருந்தாய் பருத்திப் பால் இருந்திருக்கிறது. 

இன்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் தெருக்களிலும் வண்டிகளில் வைத்து பருத்திப் பால் விற்கப்பட்டு வருகிறது. அதன் பலன் அறியாத நாம் அதைப் பற்றி சிந்தனை செய்வதுகூட கிடையாது. டீ, காபி, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும், சத்துக்கள் இல்லாத பானங்கள் என வாங்கிப் பருகும் நாம், ஆரோக்கியத்தின் காவலாய் விளங்கும் இதுபோன்ற பானங்களை வாங்கிப் பருகினால் உடல் ஆரோக்கியம் பெறலாம். 

நகரங்களின் வெகு சில இடங்களில் மட்டுமே பருத்திப் பால் கிடைக்கிறது. பரவலாக கிடைத்தால் பலரும் வாங்கி அருந்துவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.


டிரெண்டிங் @ விகடன்