Published:Updated:

“மாறுவோம்... மாற்றுவோம்..!” விவசாயத்துக்கு குரல் கொடுக்கும் நடிகர் ஆரி

“மாறுவோம்... மாற்றுவோம்..!” விவசாயத்துக்கு குரல் கொடுக்கும் நடிகர் ஆரி
“மாறுவோம்... மாற்றுவோம்..!” விவசாயத்துக்கு குரல் கொடுக்கும் நடிகர் ஆரி

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் நின்ற நடிகர் ஆரி, இப்போது விவசாயத்துக்காகக் களமிறங்கியிருக்கிறார். ‘எல்லோரும் விவசாயிகளாக மாற வேண்டும்' என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் `மாறுவோம்... மாற்றுவோம்!' என்ற அமைப்புக்கு ஆரிதான் விதை. இந்த அமைப்பின் முதல் முன்னெடுப்பாக ‘நானும் ஒரு விவசாயி' என்ற திட்டத்தை சமீபத்தில் தொடங்கிவைத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். என்ன செய்யப்போகிறார் ஆரி?

“சமீபத்தில் ‘சீனாவில் பல ஆயிரம் மக்கள், ஒரே இடத்தில் பாரம்பர்ய விதைகள் மூலம் உருவான நாற்றுகளை நட்டார்கள்’னு ஒரு செய்தியைப் படிச்சேன். அரசாங்கமே முன்னெடுத்த விஷயம் இது. ஆனா நம்ம நாட்டுல, விவசாயிகள் தற்கொலை பண்ணிக்கிறாங்க... பட்டினியா கிடந்து போராடிக்கிட்டிருக்காங்க. நம்ம நாட்டுல விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்னைகளை காதுகொடுத்துக் கேட்டால்தான் புரியும். நான் கேட்டேன். அவங்களுக்கு இயற்கை விவசாயம் பண்ண ஆசைதான். ஆனா, செயற்கை முறையைத்தான் அரசாங்கம் என்கரேஜ் பண்ணுது. ‘இது விவசாயத்துக்குப் பண்ற துரோகம். எல்லாம் தெரிஞ்சும், வேற வழியில்லாமல்தான் விவசாயம் பார்க்கிறோம்’கிற குற்ற உணர்ச்சியோடுதான் விவசாயம் செய்துக்கிட்டிருக்காங்க. விவசாயிகளோட இந்தக் குற்ற உணர்ச்சிக்கு நாமதான் காரணம்!” என்கிறார் நடிகர் ஆரி.

“அரசாங்கம் செயற்கை விதைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இயற்கை விதைகளுக்குத் தருவதில்லை. பல நூறு வகையான கத்திரிக்காய் இருக்குனு சொல்றாங்க. இப்போ ரெண்டு மூணு வகைகள்தான் இருக்கு. சாதாரணமா விளைஞ்சுக்கிட்டிருந்த பப்பாளி மரங்களை இப்போ பார்க்க முடியுறதில்லை. நாட்டுப் பப்பாளி விதை 10 கிராம் 2,500 ரூபாய்க்கு வித்துக்கிட்டிருக்காங்க. இப்படி 80 சதவிகித நாட்டு விதைகள் அழிஞ்சுப்போச்சு. சில விவசாயிகள், பாரம்பர்ய விதைகளை ஆங்காங்கே பாதுகாத்து வெச்சிருக்காங்க. ஆனா, `நாட்டு விதைகளைப் பாதுகாப்பது தவறு'னு அரசு சொல்லுது. விவசாயத்தையும் விவசாயிகளையும் மீட்டெடுக்க வெறும் பிரசாரங்களைப் மட்டுமே பண்ணாம, களத்துலயும் இறங்கவைக்கணும். அதுக்குத்தான், ‘நானும் ஒரு விவசாயி'ங்கிற பெயர்ல வர்ற ஆகஸ்ட் 26-ம் தேதி திண்டிவனத்துல ஒரு கின்னஸ் ரெக்கார்ட் பண்றதுக்கு ப்ளான் பண்ணியிருக்கோம். அந்த ஒருநாள் பல ஆயிரம் பேர் திரண்டு, நாட்டு விதைகளை வெச்சு விவசாயம் கத்துக்கணும். ஒருநாள் முழுக்க விவசாயியா வாழ்ந்து பார்க்கணும். ஏன்னா, நாட்டு விதைகளைப் பாதுகாப்பது தவறுனு விவசாயிகளை நோக்கித்தான் அரசு வாள் வீசும். நாம ஒவ்வொருவரும் தனிமனிதரா இதை முன்னெடுக்க ஆரம்பிச்சா, விவசாயிகளுக்குக் கேடயமா நிற்கலாம்!'' என ஐடியா கொடுக்கிறார் ஆரி.

“ஆமா. சம்பாதிக்கிறது சாப்பிடுறதுக்குத்தானே? அந்தச் சாப்பாடு உங்களுக்கு ஆரோக்கியமானதா கிடைக்குதானு கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. உலகத்துலேயே பெரிய மாஃபியாக்கள், மருத்துவமும் உணவும்தான். பி.டி கத்திரிக்காய்க்கு எதிரா போராடின மாதிரி, நாட்டு விதைகளுக்கு ஆதரவான குரலும் தேவை. மேலோட்டமாவே பாருங்க... செயற்கை விவசாயத்துல விதை வாங்கணும், உரம் வாங்கணும், பூச்சிக்கொல்லி மருந்து வாங்கணும், அடுத்தமுறை விதைப்புக்குப் புது விதைகள் வாங்கணும்... இப்படி எல்லாமே வியாபார சூழ்ச்சியிலேயே இயங்கிக்கிட்டிருக்கும். தவிர, செயற்கை விதைகள் மூலமா விளைஞ்ச உணவுகளைச் சாப்பிட்டா உடல்நிலை பாதிக்கும், மருத்துவத்துக்குச் செலவு பண்ணவேண்டிய சூழல் வரும். ஏன்னா, எல்லாமே ஸ்லோ பாயிசன். கடைக்குப் போய் கண்ணாடிப் பெட்டியில இருக்கிற ஆப்பிளை வாங்கி வெட்டாம நாலு நாளைக்கு வெச்சுப்பாருங்க, பளபளப்பு மாறாம அப்படியே இருக்கும்'' என்றவரிடம், “இத்தனை நாள் இல்லாம, ஏன் திடீர்னு இந்த விழிப்புஉணர்வு?” என்று கேட்டால்,

“ ‘ஒயிட் சுகர் நல்லதில்லை, கல்லுப்பைப் பயன்படுத்துங்க, மைதா மாவைச் சாப்பிடாதீங்க!’னு இப்போதானே விழிப்புஉணர்வு பரவுது. இது ஆரம்பத்திலிருந்தே ஆபத்தானதுதான்னு மக்களுக்குப் புரியலை. ஏற்கெனவே சொன்னேனே... எல்லாம் ஸ்லோ பாய்சன். ரிசல்ட் நமக்கு லேட்டா தெரியுது. தவிர, அரசாங்கம் இவ்ளோ மெத்தனமா இருக்கும்னு நினைக்கலை. பிளாஸ்டிக், ஆபத்துனு தெரியும். அந்தப் பிளாஸ்டிக்குக்கான ஒழுங்குமுறை ஆணையம் நம்ம நாட்டுல இல்லை. அரசாங்கம்தான் அப்படி இருக்குன்னா, நாமளும் எல்லாத்தையும் கவர்ல வாங்கிட்டு வர்றதையே கெளரவமா பார்க்கிறோம். மைதாவுல செஞ்ச பீட்சா, பர்கரைத்தான் `ஸ்டேட்டஸுக்குத் தகுந்த உணவு'னு நம்புறோம். பூச்சி இருந்தா காய்கறிகளை வாங்க மாட்டேங்கிறோம். நம்ம விவசாய முறையே `பூச்சி விரட்டி'தானே தவிர, `பூச்சிக்கொல்லி' அல்லனு நமக்குப் புரிய மாட்டேங்குது. அதையெல்லாம் எப்போ புரிஞ்சுக்கிறது? 

தவிர, நான் ஒரு ஃபிட்னெஸ் டிரெய்னர். உணவு விஷயத்துல அக்கறையா இருக்கிறவன். எனக்குத் தெரிஞ்ச இயற்கை ஆர்வலர்கள், இந்தியா மேல பல நாடுகள் `ஆர்கானிக் வார்' தொடுத்திருக்கிறதா சொல்றாங்க. யோசிச்சுப்பார்த்தா உண்மையா இருக்குமோனுதான் தோணுது. ஏன்னா, ‘நிலக்கடலை உடலுக்கு நல்லதல்ல’னு சொன்ன கம்பெனிகள்தான், இன்னிக்கு சாக்லேட்ல கடலையைப் புகுத்தி, ‘உடலுக்கு ஆற்றல் தரும் கடலை இருக்கிறது’னு விளம்பரம் பண்றாங்க. ‘குழந்தைகளுக்கு கோக் கொடுக்கக் கூடாது'னு எழுதியிருந்தாலும், அவங்க காட்டுற விளம்பரங்கள்ல அதைப் பதிவுபண்றதில்லை. முக்கியமா, இயற்கையான முறையில் உருவான உணவுப் பண்டங்களை எல்லாம் அவங்க போட்டியிலேயே சேர்த்துக்கிறதில்லை. தியேட்டர், ஹோட்டலுக்குப் போனா இவங்க சொல்ற உணவுப் பண்டங்களை மட்டும்தான் `சாய்ஸ்'ல வெச்சிருக்காங்க. வாங்கிச் சாப்பிடும் நாமதான் `சாய்ஸ்' வைக்கணுமே தவிர, விற்கும் அவங்க வைக்கக் கூடாது இல்லையா... இதெல்லாம் நாம என்னிக்கும் கேட்கலை, இன்னிக்காவது கேட்போமே?" எனப் பொறுப்பாகப் பேசும் ஆரிக்கு, இந்த விஷயத்தில் “ஏன் இந்த வேலை?” என்பதுதான் எதிர்கொண்ட முதல் கேள்வி.

“சினிமாவுல சான்ஸ் இல்லையா... ‘இப்படியெல்லாம் பேசிக்கிட்டிருந்தா, நடிக்க கூப்பிட மாட்டாங்க'னுகூட பலர் சொல்லிட்டாங்க. சாப்பிட்டால்தான் வாழ முடியும். சாப்பிடுற உணவு ஆரோக்கியமா இருந்தால்தான் வாழ முடியும். நடிகரோ, பிரதமரோ... சம்பாதிக்கிறது மூணு வேளைக்கும் சாப்பிடணும்னுதான். மைதா உடலுக்குக் கேடுனு சொல்லியாச்சு. இன்னும் நெய் பரோட்டாவைத் தேடிப் பிடிச்சு சாப்பிடுறோம். பக்கத்து மாநிலத்துல மைதா மாவைத் தடையே பண்ணிட்டாங்க. நாம கண்டுக்காம இருக்கோம். விவசாயிகள் பொழுதுபோகாமலா போராட்டம் பண்ணிக்கிட்டிருக்காங்க. விவசாயம், உணவுப் பிரச்னை ‘ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு மனுஷனைக் கடிச்ச’ கதையா இல்லாம, மனுஷனை முழுங்குற நிலைக்கு மாறிடுச்சு. அதை மாற்றித்தான் தீரணும். விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்க, தெருவுக்கு வர வேணாம். உங்க வீட்டு கிச்சன்ல தொடங்குங்கனு சொல்றதுக்குத்தான், இந்த முயற்சி.

இயற்கையான முறையில் விளைஞ்ச உணவுகளுக்கு மாறுங்க. கல்லுப்பைப் பயன்படுத்துங்க, ஒயிட் சுகரை ஒதுக்கிட்டு, நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துங்க. மாடித்தோட்டம் மூலமாவோ, நிலங்கள் மூலமாவோ... நமக்கான காய்கறிகளை நாமளே உற்பத்தி பண்ணிக்கிற முறையைக் கத்துக்கோங்க. இதெல்லாம் பண்ணாலே விவசாயிகளுக்கு ஆதரவாகவும் உணவு அரசியலுக்கு எதிராகவும் போராட ஆரம்பிச்சுட்டீங்கனு அர்த்தம்!” என்றதோடு,

“ ‘மண்புழு வளர்ப்புத் தந்தை'னு அழைக்கப்படும் டாக்டர்.சுல்தான் ஹமீது இஸ்மாயில், ‘மாறுவோம் மாற்றுவோம்’ ஆக்டிவிட்டியில் ஆர்வமா இருக்கார். அவரோட ஆலோசனைகள் எங்களுக்கு பெரிய பலத்தைக் கொடுத்திருக்கு. ‘இப்போ என்னப்பா சொல்ல வர்ற... உடனே எல்லோரும் மாறிடணுமா?'னு கேட்டீங்கன்னா, என் பதில் ‘ஆமா’ மட்டும்தான். ‘இனி கொஞ்சமாவது விவசாயத்தைக் கற்றுக்கொள்வேன். விவசாயிகளோட பிரச்னைகளைப் புரிந்துகொள்வேன்’னு ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல மட்டுமே பிரசாரம் பண்ணாம, ஒவ்வொரு நாளும் முயன்றுகொண்டே இருக்கணும். ஏன்னா, ஒவ்வொரு நாளும் நாம சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கோம்!” என்ற பளீர் பன்ச் கொடுத்து முடித்தார் நடிகர் ஆரி. 

மாறுவோம்... மாற்றுவோம்!