Published:Updated:

மூடநம்பிக்கை முதல் புரட்சியின் அடையாளம் ஆனது வரை... இது `தக்காளி'யின் கதை!

18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தக்காளி ஆசியா முழுவதும் மிகவும் பிரபலமடைந்தது. குறிப்பாக சிரியா, இரான் மற்றும் சீனாவில் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியதுதான் ஆசியாவில் தக்காளி பிரபலமாக முக்கியக் காரணம்.

ஒரு காலத்தில் `விஷம்' என்று கருதப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தக்காளி, இப்போது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத உணவாக மாறியிருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

18-ம் நூற்றாண்டில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவம். அப்போது களத்தில் நின்ற பிரெஞ்சு புரட்சியாளர்களின் கைகளில் ஆயுதங்களோடு இன்னொரு விஷயமும் இடம் பிடித்திருந்தது. அது... தக்காளி! சிவப்பு நிறத்தைப் பெற்றிருந்ததால், தக்காளியும் புரட்சியின் சின்னமாக அன்றைக்கு `தளதள'த்து நின்றது.

அத்தகைய `தக்காளியின் பிறப்பிடம் அமெரிக்கக் கண்டம்' என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். அந்தக் கண்டத்தில் 16-ம் நூற்றாண்டில் உணவுக்காகத் தக்காளி பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷயம் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. அதே நூற்றாண்டில் மெல்ல நகர்ந்து ஸ்பெயின், ஆப்பிரிக்கா, ஆசியா என்று ஊடுருவியிருக்கிறது தக்காளி. தக்காளி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, `தங்க ஆப்பிள்', `காதல் ஆப்பிள்', `பெருவியன் ஆப்பிள் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டது. இப்போது `ஏழைகளின் ஆப்பிள்' என எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

`புரட்சி'கரமான ஒரு காய்கறியாக இருந்தாலும் இதை உணவுப் பொருளாகவும் விவசாயப் பயிராகவும் பயன்படுத்த ஆரம்பத்தில் மக்கள் அஞ்சிருக்கிறார்கள். `தக்காளி விஷத்தன்மை கொண்ட ஒரு பழம்' என்ற அச்சம் பரவியிருந்ததே காரணம்.

அமெரிக்கக் கண்டத்தில் தக்காளியைத் தொட மக்கள் பயந்து நடுங்கிய சமயத்தில், அவர்களின் பயத்தைப் போக்கி, தக்காளியும் உணவுப் பொருள்தான் என்று ஏற்றுக் கொள்ளச் செய்தவர், கிப்சன் ஜான்சன் எனும் விஞ்ஞானி, `2,000-க்கும் அதிகமான மக்களை ஓரிடத்தில் திரட்டி உட்கார வைத்துவிட்டு, ஒரு கூடை தக்காளியைச் சாப்பிட்டுக் காண்பித்திருக்கிறார். தக்காளி சாப்பிட்டு, அவர் ஆரோக்கியமாக நடமாடுவதைக் கண்முன்னே பார்த்த பிறகே, தயக்கமின்றி அதை உணவாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் மக்கள்.

பிரிட்டனிலும் இதே கதைதான். அந்நாட்டைச் சேர்ந்த சவரத் தொழிலாளியும் அறுவை சிகிச்சை நிபுணருமான ஜான் ஜோராடு என்பவர், தக்காளி சாப்பிடுவதற்கு உகந்த ஒன்று என்பதை நிரூபித்து மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார்.

தக்காளியைப் பார்த்து பயந்து நடுங்கிய நாடுகளின் வரிசையில் இத்தாலிக்கும் இடம் உண்டு. ஆனால், 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உணவு தானிய உற்பத்தி குறைந்து, கடுமையான சிக்கலில் ஆழ்ந்தது இத்தாலி. அந்தக் காலகட்டத்தில் வேறு வழியின்றி தக்காளியைச் சாப்பிட ஆரம்பித்துள்ளனர் அந்நாட்டு மக்கள். இப்படிப் பல நாடுகள் தக்காளியைக் கண்டு கிலி பிடித்துக்கிடந்த காலத்தில், உணவுக்கு என்று இல்லாமல் வீடுகளில் பூச்செடியைப் போல அழகுக்காக அதை வளர்த்துள்ளனர் ஆப்பிரிக்கர்கள். ஆரம்பகாலங்களில் அலறி ஓட வைத்தாலும், 18-ம் நூற்றாண்டில் உலகம் முழுக்க நீக்கமற எல்லா வீட்டுச் சமையலறையிலும் இடம் பிடித்துவிட்டது தக்காளி.

சாதாரணமாக வளர்ந்த தக்காளியை வணிக ரீதியாக மாற்றும் செயலில் இறங்கியவர் அமெரிக்கத் தாவரவியலாளரும், விஞ்ஞானியுமான அலெக்சாண்டர் டபிள்யூ லிவிங்ஸ்டன். அவர் தக்காளியை மேம்படுத்தப்பட்ட இனப்பெருக்கம் மூலம் புதிய ரகங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இறுதியாக அவரது முயற்சியால் 1870-ம் ஆண்டில் பாரகான் (Paragon) என்று பெயர் வைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. உடனடியாக வட அமெரிக்காவில் அதிக மக்கள் பயன்படுத்தத் தொடங்கி வெற்றியைப் பெற்றது. அந்தத் தக்காளி உருவத்தில் பெரியதாக இருந்ததால், தொழில்ரீதியாகப் பலரும் சாகுபடி செய்ய ஆரம்பித்தனர்.

கிப்சன் ஜான்சன்
கிப்சன் ஜான்சன்

18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தக்காளி இறுதியாக ஆசியாவுக்கு வந்தது. சிரியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் மற்றும் ஜான் பார்கரின் வழிகாட்டுதலின்படி அது அங்கு வந்தது. அவர்தான் ஆசியாவில் முதல் சாகுபடி முயற்சியில் இறங்கினார். 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தக்காளி ஆசியா முழுவதும் மிகவும் பிரபலமடைந்தது. குறிப்பாக சிரியா, இரான் மற்றும் சீனாவில் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியதுதான் ஆசியாவில் தக்காளி பிரபலமாக முக்கியக் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டில் தக்காளி!

இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலும் கோ.1, கோ.2, கோ 3, பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனான்யா உள்ளிட்ட பல ரகங்கள் உற்பத்தியில் இருக்கின்றன. தக்காளி பயிரிடுவதில் இன்று பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மண் மற்றும் வெப்பநிலைக்கு ஏற்றபடி இன்று பயிரிடப்படுகின்றன. இது வடிகால் வசதியுடன் கூடிய மணல் கலந்த பரப்பில் நன்றாக வளரக் கூடியது. ஆழ உழுவது வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், மண் காற்றோட்டமாக இருக்க உதவும். மண்ணின் காரத்தன்மை 6.0 - 7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். தக்காளியிலிருந்து ஏராளமான உணவுப் பொருள்கள் செய்யப்படுகின்றன. அவற்றில் தக்காளி ஜாம், சாலட், சாஸ், ஊறுகாய் முக்கியமானவை.

இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் தக்காளி அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சிக்கன், மட்டன் போன்றவற்றில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கும் சக்தி தக்காளிக்கு இருப்பதனாலேயே அமெரிக்கர்கள் தக்காளியை அதிகமாகத் தங்கள் உணவில் பயன்படுத்துகிறார்கள். தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சாகுபடிக்கு வெப்பம் மிகவும் அவசியம். குளிர் பிரதேசங்களில் சாகுபடி செய்வது கடினமாகும். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் ஏற்றது. சூரிய ஒளியைப் பொறுத்து பழங்களின் வண்ணம் மற்றும் தன்மைகள் மாறக்கூடும்.

`விஷத்தன்மை' கொண்டது என்ற மூடநம்பிக்கையைப் போலவே, தக்காளியைப் பற்றி இன்னொரு சர்ச்சையும் உண்டு. `தக்காளி’ பழ வகையைச் சேர்ந்ததா... காய்கறி வகையைச் சேர்ந்ததா?' என்பதுதான் அது. இதற்கு,`விஞ்ஞானபூர்வமாக இது பழ வகையைச் சார்ந்தது. ஆனால், உணர்வுபூர்வமாகக் காய்கறி வகையைச் சேர்ந்தது' என்று வித்தியாசமான ஒரு பதிலைக் கொடுக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு