Published:Updated:

`சொந்த ஊரில் விவசாயம்; சென்னையில் இருந்தும் ஜெயிக்கலாம்!' - ஒரு நம்பிக்கை கதை

ஏ.ஆர்.சரவணன்

``என்னுடைய ஓய்வுக் காலத்தை கிராமத்தில் விவசாயம் செய்து கழிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த நெல் சாகுபடி செய்த கன்னி முயற்சி பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது." - ஒரு நம்பிக்கை அனுபவம்

`சொந்த ஊரில் விவசாயம்; சென்னையில் இருந்தும் ஜெயிக்கலாம்!' - ஒரு நம்பிக்கை கதை

``என்னுடைய ஓய்வுக் காலத்தை கிராமத்தில் விவசாயம் செய்து கழிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த நெல் சாகுபடி செய்த கன்னி முயற்சி பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது." - ஒரு நம்பிக்கை அனுபவம்

Published:Updated:
ஏ.ஆர்.சரவணன்

`ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பதுபோல, `படிச்சவங்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாது. பட்டணத்தில் இருந்துகொண்டு விவசாயமெல்லாம் சாத்தியம் இல்லை’ என்று நிறையபேர் சொல்கிறார்கள். அதில் எள்ளளவும் உண்மையில்லை. அதை உணர்த்துவதற்காகவே என்னுடைய அனுபவத்தை இங்கே பதிவு செய்கிறேன். நான் விகடனில் மூத்த வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறேன். பாரம்பர்யமாக விவசாய குடும்பம்தான் என்றாலும், தொழில் ரீதியாகச் சென்னை மாநகருக்குக் குடியேறிவிட்டதால் ஊரோடு பிணைப்பு இருந்தாலும் விவசாயத்தோடு தொடர்புகொள்ள முடியவில்லை. பணம் கொடுத்தால் நகரத்திலேயே எல்லாம் கிடைப்பதால் உழைத்து ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு விவசாயம் மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருக்க, அதில் கால்பதிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன்.

ஆலம்பட்டு
ஆலம்பட்டு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள ஆலம்பட்டு கிராமத்தில் எங்களுக்குச் சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது (ஓர் இடத்தில் 2.60 ஏக்கர், இன்னோர் இடத்தில் 40 சென்ட்). என் அம்மாவுக்கு வயதாகிவிட்டதால் விவசாயம் செய்ய முடியவில்லை. அதனால் 2.60 ஏக்கர் நிலத்தை பங்குக்கு (குத்தகைக்கு) விட்டுவிட்டார். அதன்மூலமாக வருஷம் 5 மூட்டை நெல் கிடைக்கும். அதை அம்மா வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வார். மீதி இருக்கும் 40 சென்ட் நிலம் வானம் பார்த்த பூமி. கண்மாயில் தண்ணீர் வந்தால்தான் விவசாயம். இல்லையென்றால் தரிசாக இருக்கும். அப்படி அந்த நிலத்தில் விவசாயம் செய்யாமல் விட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் புதர் மண்டி, வேலிக்கருவை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. வருடத்துக்கு 3 முறை ஊருக்குச் செல்வோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சொந்த பந்தங்களைப் பார்ப்பது, விழாக்களைக் கொண்டாடுவது, கோயிலுக்குச் செல்வது என்று இருந்துவிட்டு வந்துவிடுவோம். இன்னும் பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற நோக்கில், எங்கள் ஊரைச் சேர்ந்த நண்பர்களோடு சேர்ந்து, அந்த 40 சென்ட் நிலத்தை ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் புதர்களை அகற்றி, நிலத்தைச் சுத்தப்படுத்தினோம். நல்ல விஷயத்தைத் திட்டமிட்டால் மற்ற எல்லா விஷயங்களும் கூடவே நடக்கும் என்பதுபோல் கடந்த வடகிழக்குப் பருவழை நன்றாகப் பெய்ததால் கண்மாய் நிறைந்தது. நிலத்திலும் தண்ணீர் தேங்கியது.

நெல்
நெல்

கண்மாய் பாசனம் என்பதால் மற்ற நிலங்களில் உழவு ஓட்டும்போதே நாமும் ஓட்டிவிட வேண்டும் என்று உழவு செய்து, நெல் விதைக்கும் கருவியால் 4 கிலோ அக்ஷயா பொன்னியை விதைத்தோம். நிலத்துக்குப் போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் விவசாயம் செழிப்பாக நடைபெற்றது. களைகளும் குறைவாகத்தான் இருந்தன. இருந்தாலும் கைக்களை ஒருமுறை எடுக்க வேண்டும் என்பதால் 5 பேரைக் கொண்டு களை எடுத்தோம். கண்மாய் பாசனத்துக்கு என்று ஒருவரை நியமித்திருக்கிறார்கள். அவர் மூலமாக வாய்க்கால் தண்ணீரைக் கொண்டு பாசனம் செய்தோம். அடியுரமாக 2 டிராக்டர் எரு கொடுத்திருந்தேன். நாங்கள் விதைத்தது நவம்பர் மாசம். பொங்கலுக்கு மறுநாள் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்தோம். அறுவை இயந்திரத்திலிருந்து நெல் கொட்டியதைப் பார்த்தபோது உற்சாகத்துக்கு அளவே இல்லை. சென்னையில் இருந்தாலும், ஈடுபாடும் ஆர்வமும் இருந்தால் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

40 சென்ட்டில் 5 மூட்டை நெல் கிடைத்தது.

புதர்களை அகற்ற, விதைநெல், களை எடுக்க, அறுவடை என்று எனக்கு ஆன செலவு 4,000 ரூபாய்.

5 மூட்டை (ஒரு மூட்டை 75 கிலோ) 375 கிலோ நெல்.

இதை அரைத்தால் சுமார் 200 கிலோ அரிசி கிடைக்கும்.

2 மாசத்துக்கு 25 கிலோ அரிசி வீட்டுக்கு பயன்படுத்துகிறோம். அந்தக் கணக்கில் இந்த அரிசி 16 மாதங்களுக்கு வரும்.

எனக்கு வீட்டுச் செலவில் 12,000 ரூபாய் மிச்சம். நகர வாழ்க்கையை விலைவாசி கழுத்தைக் நெரித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் வீட்டுச் செலவின் பிரதான அங்கமான அரிசி செலவு மிச்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்குக் காரணமாக இருந்தது பசுமை விகடன் இதழ்தான். புத்தகம் படித்தும் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது பசுமை விகடன்தான். பசுமை விகடன் ஒவ்வொரு இதழையும் தவறாமல் படித்துவிடுவேன். அதில் வருகின்ற விவசாயிகளின் அனுபவம் மிகவும் உற்சாகம் கொடுக்கும். நாம் மறந்துபோன விவசாயத்தை ஞாபகப்படுத்தும். அந்த வகையில் விவசாயத்தோடு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்பை உருவாக்கிக் கொண்டது போன்ற உணர்வு. பசுமை விகடன் இயற்கை விவசாயத்தைப் போதித்து வருகிறது. நானும் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்ய முயற்சி செய்தேன்.

 ஏ.ஆர்.சரவணன்
ஏ.ஆர்.சரவணன்

பராமரிப்பிலிருந்த ஆள் சிறிதளவு ரசாயன உரத்தைப் பயன்படுத்திவிட்டார். அதனால் முழு இயற்கை விவசாயம் என்று சொல்ல முடியாமல் போய்விட்டது. அடுத்த சாகுபடி முழுவதையும் இயற்கை விவசாயத்தில் செய்ய நிலத்தைத் தயார் செய்து வருகிறேன். இந்த முறை 40 சென்ட்டில் குறைந்தளவு விளைச்சல் என்றாலும், நம்மாலும் விவசாயம் செய்ய முடியும் என்ற மனநிறைவைக் கொடுத்துள்ளது. வரும் காலங்களில் பங்குக்கு விட்ட நிலத்தையும் எடுத்து நானே விவசாயம் செய்ய முடிவு செய்திருக்கிறேன்.

இனி, ஊருக்குப் போனால் சொந்த பந்தங்களைப் பார்ப்பதோடு விவசாய நிலத்தையும் பார்த்துக்கொண்டால், அது ஏதோவொரு வகையில் நமக்கு உதவியாக இருக்கும். என்னுடைய ஓய்வுக் காலத்தை கிராமத்தில் விவசாயம் செய்து கழிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த நெல் சாகுபடி செய்த கன்னி முயற்சி பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் நிலம் இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். அந்த அனுபவமே தனி அலாதிதான்.

- ஏ.ஆர்.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism