Published:Updated:

1,000 ரூபாய் போதும்... அழகாய் அமைக்கலாம் வீட்டுத் தோட்டம்- கம்ப்ளீட் கைடு!

பல்வகை தாவரங்கள், 
மூலிகைத் தோட்டம்
பல்வகை தாவரங்கள், மூலிகைத் தோட்டம்

வீட்டிலேயே தோட்டம் அமைக்க, பரந்துவிரிந்த இடம் தேவையில்லை. பால்கனி அல்லது மொட்டைமாடிகூட போதும்.

நவீன மயமாக்கல் என்ற பெயரில் நமது பாரம்பர்ய விவசாயத்தைத் தொலைத்துவிட்டோம். செயற்கை உரங்கள் இட்டு வளர்த்த நஞ்சு கலந்த காய்கறிகளைத்தான் உணவாக உட்கொள்கிறோம். கொரோனா ஊரடங்கு நேரங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் காய்கறிகளின் விலை வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது. உலகமெங்கும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், ஊரடங்கிற்கு பின்பு பெரும்பாலான பொருள்கள் விலையேற்றம் காணும் சூழலே நிலவிவருகிறது. அத்தியாவசிய பொருளான காய்கறிகளுக்கு, வீட்டிலேயே தோட்டம் அமைத்து பராமரிப்பதன் மூலம், காய்கறிகளை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை. மேலும், இயற்கை உரங்களுடன் வளர்க்கப்பட்ட சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள முடியும்.

மாடித் தோட்டம்
மாடித் தோட்டம்

தோட்டம் அமைக்கும் முறை :

வீட்டிலேயே தோட்டம் அமைக்க, பரந்துவிரிந்த இடம் தேவையில்லை. பால்கனி அல்லது மொட்டைமாடிகூட போதும். அந்த இடமும் இல்லையென்பவர்கள், வெயில்படும் இடத்தில் தொங்கும் செடிகள் அமைப்பது, வீட்டின் கைப்பிடிச் சுவர்களில் சிறிய தொட்டிகள் அமைத்து பராமரிப்பது என நிறைய வழிகள் இருக்கின்றன. பழைய குடம், கேன், வாளிகள், டயர்கள் என எதில் வேண்டுமானாலும் செடிகளை வளர்க்க முடியும். இதுபோன்ற பழைய பொருள்களில் செடிகள் வளர்ப்பவர்கள், 1,000 ரூபாய் செலவில் தோட்டம் அமைக்க முடியும்.

10 தொட்டிகளுடன் அமைக்கும் ஒரு சிறிய தோட்டத்திற்கு விதைகளை வாங்க 100 ரூபாய் வரை செலவாகும்.

10 தொட்டிகளுக்கு 2 கிலோ தென்னங்கழிவு போதுமானதாக இருக்கும். அதற்கு 50 ரூபாய் ஒதுக்க வேண்டும்.

புது தோட்டம் அமைப்பவர்கள், பஞ்ச கவ்யாவை விலைக்கு வாங்கலாம். அதற்கு 100 ரூபாய் ஒதுக்க வேண்டும்.

உரங்கள் தயாரிக்க முடியாதவர்கள், 5 கிலோ உரம் விலைக்கு வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதற்கு 50 ரூபாய் வரை செலவாகும்.

பூவாளி வாங்க 100 ரூபாய் செலவாகும்.

வளமான மண் இல்லை என்பவர்கள், அருகில் உள்ள நர்சரிகளில் 10 தொட்டிகளுக்கு மண் வாங்கி, உங்கள் பகுதியில் உள்ள மண்ணுடன் கலந்துகொள்ளலாம். ஒரு கிலோ மண் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 10 கிலோ வாங்கினால் 600 ரூபாய் செலவாகும்.

இதில், உங்களிடம் இருக்கும் பொருளுக்கு ஏற்ப உங்கள் பட்ஜெட்டை மாற்றியும் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், அதில் சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களை கையாள வேண்டும். அந்தத் தகவல்களைப் பகிர்கிறார்கள் மாடித்தோட்ட விவசாயிகள் சிலர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சக்தி, செடிகள் விதைக்கும் விதங்களைப் பகிர்கிறார்.

``செடிகள் நன்கு செழித்து வளர வளமான மண் மிக முக்கியம். எந்த வகை செடியாக இருந்தாலும் மண், தொழுவுரம், தென்னங்கழிவு ஆகியவற்றை 2:1:1 என்ற விகிதத்தில் சேர்த்துதான் தொட்டிகளில் நிரப்ப வேண்டும். அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு, ஆட்டுச்சாணம், மாட்டுச் சாணம், காய்கறிக்கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இப்படி தயார் செய்த மண் கலவையில் உடனடியாக விதைகளை விதைத்துவிடக்கூடாது. மண்ணைத் தொட்டியில் நிரப்பி, ஐந்து நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதனால் மண்ணில் நுண்ணியிரி உருவாகும். செடிகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

நீங்கள், செடி வளர்க்கவிருக்கும் தொட்டி அல்லது பொருள் முழுவதும் மண்ணை நிரப்பாமல், அதன் மொத்த உயரத்தைவிட சற்று குறைவாக மண்ணை நிரப்ப வேண்டும். மண்ணில் விதைகளை விதைப்பதற்கு முன் ஆறுமணிநேரம் பஞ்சகவ்யாவில் ஊற வைத்தால், விதையின் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். விதையின் அளவைவிட இரண்டு மடங்கு அளவிற்கு குழி தோண்டி விதை விதைக்க வேண்டும். வெண்டை, கீரை, போன்றவற்றை நேரடியாக விதைக்கலாம். கத்தரி, தக்காளி, மிளகாய் போன்றவற்றிக்கு குழித்தட்டுகளில் நாற்று நடவுசெய்து அதன்பின் பெரிய தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும்.

உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை, விதைத் திருவிழாக்கள் போன்றவற்றிலும் விதைகளை வாங்கலாம். முன்பே செடிகள் வளர்த்துவருபவர்கள் எனில், செடியிலேயே காய்கறிகளை முற்றவிட்டு, அதிலிருந்து விதைகளைச் சேமித்து, சாம்பலுடன் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்தலாம்" என்றவரிடம், தொட்டிகள் தேர்வு முறை குறித்து கேட்டோம்.

``வீட்டுத்தோட்டம் எனில், வீட்டில் எங்கு மணல் சார்ந்த இடம் இருக்கிறதோ அங்கு வாழை, பப்பாளி, நெல்லி, தென்னை, கொய்யா போன்றவற்றை வளர்க்கலாம். வீட்டில் பாத்திரம் கழுவும் நீர், துணி துவைக்கும் நீர் போன்றவற்றை அந்தச் செடிகளுக்குப் பாய்ச்சலாம். மாதம் ஒருமுறை உரங்கள் வைத்து பராமரித்தால் போதும்.

தொட்டிகள் வைக்கும் அளவுதான் இடம் இருக்கிறது என்றால், நீங்கள் எந்தப் பொருளில் வேண்டுமானாலும் செடி வளர்க்கலாம். ஒரே மாதிரியான தொட்டிகள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழைய பொருள்களில் செடிகள் வளர்க்கிறீர்கள் எனில், தேவையில்லாத தண்ணீர் வெளியேறும் வகையில் துளைகள் போட்டுக்கொள்ளுங்கள். பழைய வாட்டர் பாட்டில் போன்று நீள அகலம் குறைவான பொருள்களில் புதினா, கொத்தமல்லி, அழகுச்செடிகள் என குறைந்த அளவில் வேர் படரும் செடிகளைத்தான் வளர்க்க வேண்டும். பழைய குடங்கள், மினரல் வாட்டர் கேன்கள், வாளிகள், போன்றவற்றில் கத்தரி, தக்காளி, எலுமிச்சை போன்ற செடிகளைக்கூட வளர்க்கலாம். குறைவான இடமே இருக்கிறது என்பவர்கள், வீட்டில் இருக்கும் பழைய ஷு அல்லது கப்களில் மண்ணை நிரப்பி கீரைகள், மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். அப்பார்ட்மென்ட் வீடுகள் என்றாலும்கூட, தொட்டிகளைத் தொங்கவிட்டு கீரை, பூச்செடி வகைகளை வளர்க்கலாம்.

தொட்டிகளை நேரடியாகத் தரையில் வைத்து வளர்த்தால் தரை பாதிக்கப்படும் என்பதால், தொட்டிகளை வைக்கும் முன், பிளாஸ்டிக் கவர்களையோ, கடப்பா கல், மரப்பலகைகள் போன்றவற்றை வைத்து அதன்மீது தொட்டிகளை வைக்க வேண்டும்" என்றார் சக்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உரம் தயாரிப்பு

`உரங்கள் தயாரிக்கும் முறை' பற்றிய தவல்களை, சென்னையைச் சேர்ந்த மாடித்தோட்ட விவசாயி ராதா கண்ணனிடம் கேட்டோம்.

``வீட்டுத்தோட்டம் வைப்பவர்கள், இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சத்தான காய்கறிகளைப் பெறமுடியும். வீட்டில் கிடைக்கும் காய்கறிக்கழிவுகள், முட்டை ஓடுகள், டீத்தூள் போன்றவையும் உரங்களே. இதுதவிர ஆட்டுச்சாணம், சாம்பல், மாட்டுச்சாணம், மண் புழு உரம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். செடிகள் செழித்துவரும்போது பூச்சி தாக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி லிட்டர் பஞ்சகவ்யா கலந்து, வாரம் ஒருமுறை செடிகளுக்கு ஸ்பிரே செய்யலாம். பஞ்சகவ்யா வாங்க அல்லது தயார் செய்ய முடியாதவர்கள் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம் அல்லது வேப்ப எண்ணையைத் தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம்.

விடுமுறை தினத்தில் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க மாடித்தோட்டம் அமைக்கும் முறை....#LockDown #TerraceGarden வீடியோ ஒருங்கிணைப்பு - சு.சூர்யா கோமதி

Posted by Vikatan EMagazine on Wednesday, May 6, 2020

செடிகள் செழித்து வளர முறையாகத் தண்ணீர் ஊற்றுவதும் அவசியம். செடிகளில் தண்ணீர் வடிய வடிய ஊற்றத் தேவையில்லை. ஒரு செடிக்கு கால் லிட்டர் தண்ணீரே போதுமானதாக இருக்கும். மழை நேரங்களில், செடிகள் மழைத் தண்ணீர் படும் இடங்களில் இருந்தால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. கோடைக் காலங்களில் காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் தண்ணீர் ஊற்றுவது அவசியம். வேலைக்குச் செல்பவர்கள், தினமும் செடிகள் பராமரிப்பதில் நேரம் செலுத்த முடியாது என்பவர்கள், அரைலிட்டர் வாட்டர் பாட்டில்களில் சிறிய துளைகள் இட்டு, வேர் பாதிக்காதவாறு செடிகள் இருக்கும் தொட்டியில் புதைத்துவிடலாம். இரண்டு நாளைக்கு ஒரு முறை பாட்டிலில் தண்ணீர் ஊற்றிவைத்து விட்டால், அதில் உள்ள துளைகள் மூலம் செடிகளுக்கு தண்ணீர் சென்றுவிடும். அகலமான தொட்டிகளில் வளர்க்கும் செடிகளுக்கு மட்டுமே இது சாத்தியம்.

ஜூன், ஜூலை மாதங்கள்தான் விதைகள் நட சரியான காலம். சில செடிகளை அக்டோபர் மாதத்திலும் நடலாம். புதிதாகத் தோட்டம் அமைப்பவர்கள் எனில், மானிய விலையில் அரசு கொடுக்கும் தோட்டப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். ஜூன் மாதத்தில் விதைக்க வேண்டும் என்பதால், மே மாத இறுதியிலேயே மண்ணை செழுமைப்படுத்துவது, உரங்கள் தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடலாம். ஏற்கெனவே தோட்டம் அமைத்தவர்களாக இருந்தால் ஒரே தொட்டியில், ஒரே வகையான செடிகளை விதைக்காமல் ரகத்தை மாற்றிப் பயிரிடுங்கள். காய்ந்த இலைகள், பூச்சி தாக்குதலுக்கு உள்ளான இலைகளை செடிகளிலிருந்து உடனே பறித்துவிட வேண்டும். அதையும் உரங்களாகப் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறை செடியைச் சுற்றி உள்ள மண்ணைக் கொத்திடவிட வேண்டும். கொத்திவிட்ட பின்பு பஞ்சகவ்யா அல்லது உரம் இடலாம்.

மானிய விலை பொருள்கள்
மானிய விலை பொருள்கள்

அதிகமான வெயில்படும் இடங்களில் நிழல்வலைக் குடில் அமைத்துக்கொள்ளலாம். அது, அமைக்க அதிக செல்வாகுமே என்பவர்கள், உங்கள் தோட்டத்தின் நீள அகலத்திற்கு ஏற்ப கடைகளில் நிழல்வலைகளை வாங்கிக்கொள்ளுங்கள் , ஒரே அளவுள்ள எட்டுச் சாக்குப் பைகளில் மணல்களை நிரப்பி, மூலைக்கு ஒன்றாகவும், இரண்டு மூலைக்கு நடுவில் ஒரு மண் பையை வையுங்கள். அதில், உயரமான கம்புகளை மணல் பையில் ஊன்றி, நிழல்வலைகளை அதில் கட்டினால் அதிகமான வெயிலில் இருந்து செடிகளைப் பாதுகாக்கலாம். வலை பாதிப்புக்குள்ளானால் மாற்றிக்கொள்ளலாம்

கோடை காலத்தில் செடிகள் வாடுவதைத் தவிர்க்க, பழக்கரைசல் தெளிக்கலாம்.

பழக்கரைசல் தயாரிக்கும் முறை:

தேவையானவை: நன்கு கனிந்த வாழைப்பழம், பப்பாளி, பரங்கிக்காய் - தலா அரைக்கிலோ. பொடித்த வெல்லம் - ஒரு கிலோ

செய்முறை: பழங்களைத் தோலுடன் பொடிப்பொடியாக நறுக்கி வெல்லத்துடன் சேர்த்து, கைகளால் பிசைந்து கூழாக்கவும். இத்துடன் ரெண்டரை லிட்டர் தண்ணீர் கலந்து, 21 நாள்கள் காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி மூடிவைக்கவும். 21 நாள்களுக்குப் பிறகு, கலவையின்மீது வெள்ளை நிற ஏடு படிந்திருக்கும். இந்தப் பக்குவத்தில் பெரிய துளைகள் கொண்ட வடிகட்டியில் பழக்கரைசலை வடிகட்டி, தண்ணீரை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.

20 மில்லி பழக்கரைசலுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளின் மேல் தெளித்துவிட, செடிகள் வெயில் நேரத்திலும் செழித்து வளரும். தோட்டம் அமைக்க திட்டமிடுகிறீர்கள் எனில் காய்கறி, கீரை, பழங்கள், பூச்செடி எனக் கலந்து தோட்டம் அமைத்தால் எல்லாப் பயன்களும் கிடைக்கும். உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு, திட்டமிட்டு தோட்டம் அமையுங்கள் ஆரோக்கியமான வாழ்வு நிஜமாகும்.

அடுத்த கட்டுரைக்கு