நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

30 கறவை மாடுகள்... மாதம் ரூ. 2,00,000 வருமானம்! - அசத்தும் திருநங்கைகள்!

பசுமை வீட்டில் திருநங்கைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை வீட்டில் திருநங்கைகள்

முயற்சி

‘திருநங்கைகள்’ என்றாலே சமுதாயத்தில் மாறுபட்ட கருத்துகளும் பார்வைகளும் இருந்து வருகின்றன. திருநங்கைகள் பலரும் அரசு வேலை, தனியார் வேலை என்று கலக்க ஆரம்பித்துள்ளனர். சொந்தமாகத் தொழில் தொடங்கி, தொழில்முனைவோராகவும் மாறிவருகிறார்கள்.. அந்த வகையில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியால் இந்தியாவிலேயே முதல்முறையாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு பால் பண்ணையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் 30 திருநங்கைகள்.
கிரேஸ் பானு, சாரதா
கிரேஸ் பானு, சாரதா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள மந்தித்தோப்பு சந்தீப் நகரில் இருக்கிறது திருநங்கைகளின் குடியிருப்புகளுடன் அமைந்த பால் பண்ணை. திருநர் உரிமை கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் சமூகச் செயற் பாட்டாளருமான கிரேஸ் பானுவின் தலைமையில் 85 திருநங்கைகள் இங்கு வசித்து வருகிறார்கள். இதில் 30 திருநங்கைகளுக்குத் தலா ரூ.2.10,000 மதிப்பீட்டில் பசுமை வீடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1,15,000 மதிப்பீட்டில் மாட்டுத் தொழுவம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சோலார் மின்சாரம் ஆகியவை அமைக்கப்பட்டுத் தனிநகராகவே உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே வளாகத்தில் திருநங்கைகள் இணைந்து பால் பண்ணை நடத்தி வருகிறார்கள்.

பசுமை வீட்டில் திருநங்கைகள்
பசுமை வீட்டில் திருநங்கைகள்

வாய்ப்பு கொடுத்த தீர்ப்பு

திருநர் உரிமைக் கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான கிரேஸ் பானுவைச் சந்தித்தோம். பால் கறக்கும் பணியை மேற்பார்வை செய்துகொண்டிருந்தவர் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “என்னோட சொந்த ஊர் தூத்துக்குடி. நான் படிச்சது எல்லாமே கோவில்பட்டியிலதான். 10 வருஷத்துக்கும் மேல திருநங்கைகளின் உரிமை மீட்பு, வாழ்வாதாரம் மேம்பாட்டுக் காகத் திருநங்கைகளோட சேர்ந்து போராடிட்டு வர்றேன். 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் எங்க கூட்டியக்கம் சார்பா தொடரப்பட்ட வழக்குல கிடைச்ச தீர்ப்பு அடிப்படையிலதான் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத வாய்ப்பு கிடைச்சது. கோவில்பட்டி பகுதியில 85 திருநங்கைகள் வசிக்கிறாங்க. ஆனா, இதில் பெரும்பாலானவங்ககிட்ட நல வாரிய ஐ.டி கார்டுகூடக் கிடையாது. ஐ.டி கார்டுவாங்குறதுக்கே 10 மாசம் போராடினோம். அந்த ஐ.டி கார்டை வச்சுதான் ஆதார்கார்டு வாங்குனோம்.

கணவன், மனைவி, குழந்தைகள்னு வசிக்கிற குடும்பத்துக்கு வீட்டு வாடகை மாசம் 3,000 ரூபாய்னா எங்களுக்கு 6,000 ரூபாய் வரைக்கும் கேட்குறாங்க. அவ்வளவு வாடகையைக் கொடுத்தாலும் திடுதிப்புனு காலி பண்ணச் சொல்லிடுவாங்க. ஒரு வருஷத்துல அதிகபட்சமா ஆறேழு வீடு மாறியிருப்போம். குடியிருக்க வீடு கேட்கலான்னு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கலெக்டர் சந்தீப் நந்தூரிகிட்ட மனு கொடுத்தோம். எங்களை முதல்தடவை சேர்ல உட்காரச் சொல்லி எங்க கோரிக்கையைக் கவனமாக் கேட்டார். ‘ஒரு வாரத்துக்குள்ள கோவில்பட்டியிலயே இடம் ஒதுக்கி, பசுமை வீடு திட்டத்துல தகுதி இருக்கவங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்யுறேன்’னு சொன்னார். எங்கள்ல 30 பேர்கிட்டதான் எல்லா ஆவணங்களும் இருந்துச்சு. அவங்களுக்கு மந்தித்தோப்பு மலையடிவாரப் பகுதியில 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கிட்டாரு. 30 வீடுகள் கட்டுற வேலை நடந்துகிட்டிருந்துச்சு.

பால் கறக்கும் பணி
பால் கறக்கும் பணி

திரும்பவும் கலெக்டர்கிட்ட போனோம், “குடியிருக்க வீடு கட்டித்தர ஏற்பாடு செஞ்சதுக்கு நன்றி. கூடவே எங்களோட வாழ்வாதாரத்துக்காகத் தொழிலுக்கும் ஏற்பாடு செஞ்சா உதவியா இருக்கும்”னு சொன்னோம். ‘உங்க குடியிருப்புப் பகுதியில குடியிருப்புக்குப் போக மீதி நிலம் இருக்கே. அங்கேயே ஏதாவது செய்யாலாமே’ன்னு சொல்லிப் பால் பண்ணை வைக்கலாம்ங்கிற ஐடியாவை சார்தான் சொன்னார். நாங்களும் சரின்னு சொன்னோம். அடுத்த ஒரு வாரத்துல கோவில்பட்டி மத்திய கூட்டுறவு வங்கியில கலெக்டர் பரிந்துரையால ஒருவருக்கு ரெண்டு மாடுக வீதம் 30 பேருக்கு 60 மாடுக வாங்க லோன் கிடைச்சுது. இதுக்கிடையில மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் மாட்டுத்தொழுவம் கட்டுற வேலையும் நடந்துச்சு.

பாலை வண்டியில் ஏற்றும் பணி
பாலை வண்டியில் ஏற்றும் பணி

எங்கள்ல ஒருவரோட அப்பா மாடு வளர்க்குறாரு. அவரைக் கூப்பிட்டுப் போய்க் கிராமங்கள்ல மாடுகளை வாங்குனோம். மாட்டுப்பண்ணை நடத்தினாலும் கறக்கிற பாலை எங்க விற்பனை செய்றது, எப்படி விற்பனை செய்றது?னு கேள்வி வந்துச்சு. கலெக்டர் சார் பரிந்துரையால ஆவின் நிர்வாகத்துல விற்பனைக்காகப் பேசினோம். ‘சொசைட்டியா பதிவு செஞ்சா மட்டும்தான் பாலைக் கொள்முதல் செய்ய முடியும்’னு சொல்லிட்டாங்க. திருநங்கைகள் இணைந்து நடத்துற பால் பண்ணையைப் பத்திரப் பதிவுத்துறையில பதிவு செய்றதும் இதுதான் முதல் முறை. அதனால பதிவுத்துறை அதிகாரிகளும் பலமுறை பரிசீலனை செஞ்சு, ‘TUT 28 –மந்தித்தோப்புத் திருநங்கைகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்’ங்கிற பேர்ல சொசைட்டியைப் பதிவு செஞ்சாங்க. எங்க குடியிருப்பு, பால்பண்ணையைச் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கலெக்டர் சந்தீப் நந்தூரி இரண்டு பேரும்தான் திறந்து வச்சாங்க.

பால் சொசைட்டி ஆரம்ப விழா
பால் சொசைட்டி ஆரம்ப விழா

முதல்கட்டமா தலா ஒரு மாடு வீதம் 30 மாடுகள் வாங்கியிருக்கோம். தினமும் காலையில 130 லிட்டர், சாயங்காலம் 100 லிட்டர் வரையிலும் பால் கிடைக்கிது. ஒரு லிட்டர் பால் 29 முதல் 32 ரூபாய் வரைக்கும் விற்பனை யாகுது. தினமும் 230 லிட்டர் மூலம் ரூ.6,670 வருமானம் கிடைக்குது. மாசக்கணக்கு பார்த்தா 6,900 லிட்டர் மூலம் 2,00,100 ரூபாய் வருமானமாக் கிடைச்சுட்டு இருக்கு. இதுல 30 மாடு களுக்கான மாதத்தவணை ரூ.90,000 கட்டுறோம்.

பசுமை வீடுகள்
பசுமை வீடுகள்

மாட்டுத்தீவனம், பராமரிப்புச் செலவு போக மீதி பணத்தைச் சேமிச்சு வச்சுகிட்டு வர்றோம். அடுத்த மாசம் 30 பேருக்கும் ரெண்டாவது மாட்டுக்கான லோன் தொகை கிடைச்சுடும். ஆளுக்கு ரெண்டு மாடுகள் வந்த பிறகு, வருமானம் இரட்டிப்பாகும். ‘இவங்களுக்கெல்லம் கலெக்டர் சார் லோன் வாங்கிக் கொடுக்கிறாரே. ஒழுங்கா லோனைக் கட்டுவாங்களான்னே தெரியல”ன்னு அதிகாரிகள் சிலர் பேசுனதைக் காதுபடக் கேட்டிருக்கோம். அந்த வைராக்கியத்துல முதல்ல லோனைக் கட்டி முடிக்கிறதுதான் எங்க நோக்கம். இந்த மாட்டுப்பண்ணையை இன்னும் விரிவுபடுத்தணும். ஆதரவற்ற திருநங்கைகளுக்கு வேலை கொடுக்கணும். எங்களையும் மதிச்சு வீடு கட்டி, வாழ்வாதாரத்துக்கு லோன் வாங்கிக் கொடுத்ததால எங்க குடியிருப்புப் பகுதிக்கு ‘சந்தீப் நகர்’னு கலெக்டர் சார் பெயரையே வச்சிருக்கோம்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

மாட்டுக் கொட்டகை
மாட்டுக் கொட்டகை

பண்ணைப் பராமரிப்புக் குறித்துப் பேசிய திருநங்கை சாரதா, “தினமும் காலையில் 5 மணிக்குப் பண்ணையைச் சுத்தம் செஞ்சுட்டு, பால் கறப்போம். 6.30 மணிக்குள்ள பாலை வேன்ல ஏத்தி அனுப்பிடுவோம். பிறகு, ஒரு மாட்டுக்கு தலா 500 கிராம் நவதானியத் தூள், கோதுமைத் தவிடு, குச்சிப்பிண்ணாக்கு கலந்து தண்ணீர் வைக்கிறோம். 11 மணிக்கு மாட்டைக் குளிப்பாட்டிட்டு சோளத்தட்டு இல்லைன்னா அசோலா கொடுப்போம். மதியம் வெறும் தண்ணியை மட்டும் காட்டுவோம். சாயங்காலம் 4 மணிக்கு பால் கறக்க ஆரம்பிச்சு 5.30 மணிக்குள்ள வேன்ல ஏத்திடுவோம். பால் கறந்த பிறகு, காலையில கொடுக்குற அதே தீவனம்தான். மாடுகளைக் கவனிக்கத் தினமும் கால்நடை டாக்டர் வந்திடுவார். கால்நடை ஆராய்ச்சி மையத்தில், கால்நடை பராமரிப்பு தொடர்பா 10 நாள் பயிற்சி எடுத்திருக்கோம். அதனால கால்நடைகளுக்கு முதலுதவிகளை நாங்களே செஞ்சுக்கிறோம். எங்கள்ல பால் கறக்கத் தெரிஞ்ச அஞ்சு பேரு, மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம்” என்றார் உற்சாகத்துடன்.

தொடர்புக்கு, செல்போன்: 77087 89616.

சபாஷ்... சந்தீப் நந்தூரி!

தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும் தற்போதைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரியிடம் பேசினோம். “திருநங்கைகளும் மனிதர்கள்தாம். சமுதாயத்தில் அவர்களையும் சக மனிதர்களைப் போலத்தான் பார்க்க வேண்டும். குடியிருக்க வீடும், வாழ்வாதாரத் துக்காக மாட்டுப்பண்ணையும் அமைத்துத் தர அவர்கள் என்னிடம் உதவி கேட்டபோது வாழ்க்கையில் பிறரைப் போல முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் வெளிப்பட்டது. வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை, மின்வாரியத்துறை, கனிமம் மற்றும் சுரங்கத்துறையென 7 துறைகள் ஒன்றிணைந்து தமிழக முதல்வரின் சூரிய ஒளி மின்சக்தியுடன்கூடிய 30 பசுமை வீடுகள், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் மாட்டுத்தொழுவம், கூட்டுறவுத்துறையின் மூலம் கறவை மாடுகள் வாங்கக் கடனுதவி, பால் வளத்துறையின் மூலம் விற்பனை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

30 கறவை மாடுகள்... மாதம் ரூ. 2,00,000 வருமானம்! - அசத்தும் திருநங்கைகள்!

பால் உற்பத்தி மட்டுமல்லாமல் பால்கோவா, மில்க் ஸ்வீட்ஸ், மில்க் ஷேக் போன்ற பாலிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கவும் பயிற்சி வழங்க உள்ளோம். இதன் மூலம் அவர்களே பேக்கரி தொடங்கலாம். மேலும், கூட்டுறவுச் சங்கம் சார்பில் ஆவின் பார்லரும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்ற இந்தத் திட்டங்களைச் செயல் படுத்தியுள்ளோம். இந்தியாவில் முதல்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தைப் போல் மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் திருநங்கைகளைத் தொழில் முனைவோராக மாற்ற இத்திட்டம் முன்மாதிரியாக இருக்கும்” என்றார்.

திருநங்கைகளின் மீது நமது ஆட்சியாளர்களின் கரிசனப்பார்வை கடந்த சிலபல ஆண்டுகளாகவே ஆழமாகப் பதிய ஆரம்பித்துவிட்டது. அந்த வரிசையில் மிகவும் போற்றுதலுக்குரிய வகையில், வீடுகள் கட்டிக்கொடுத்திருப்பதோடு, அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, போற்றுதலுக்குரிய விஷயமே. இதற்கு உறுதுணையாக நின்ற ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரிக்கு பசுமை விகடனின் சல்யூட்டும் பாராட்டுகளும்!

ஆவினும் உதவும்!

30 கறவை மாடுகள்... மாதம் ரூ. 2,00,000 வருமானம்! - அசத்தும் திருநங்கைகள்!

திருநங்கைகள் பால்பண்ணைக்கு மேலும் சில உதவிகள் செய்து தரும்படி ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலாரிடம் கோரிக்கை வைத்தோம். “திருநங்கைகளின் பால்பண்ணைக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அரசு வழிகாட்டுதல்படி வழங்கப்படும். குறிப்பாகத் தீவனம் வெட்டும் இயந்திரம், பால் எடை போடும் எலக்ட்ரானிக் எடை மிஷின் மற்றும் பால் சேகரிக்கப் பயன்படும் கேன் உள்ளிட்ட பொருள்களை அவர்களுக்கு இலவசமாகக் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறோம். இத்துடன் மாவட்ட ஆட்சியர் இடம் கொடுத்தால் அவர்களுக்கு இரண்டு ஆவின் பார்லர் அமைக்க ஏற்பாடு செய்து தரப்படும்’’ என்றார்.