நமக்குப் பேரரணாக இருந்த காடுகளை அழித்தோம்; இயற்கையைச் சிதைத்தோம்; புயல், மழை, வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற வடிவங்களில், இயற்கையின் கோபத்தைச் சம்பாதித்தோம். ‘இப்போதாவது இயற்கையைச் சீரமைக்காவிட்டால், நாம் இன்னும் நிறைய இயற்கைப் பேராபத்துகளைச் சந்திக்க நேரிடும்’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விழிப்புணர்வு விதையை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார். அப்படி நம்மாழ்வாரின் சீடராக இருந்து, அவருடைய அறிவுரைப்படி 10 ஏக்கர் நிலத்தில் சூழலியல் காக்கும் அடர் வனத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன். அந்தச் சூழலியல் காக்கும் அடர் வனத்துக்குள் 500 வாழைகளும், கிராம்பும் சாகுபடி செய்து, தற்சார்பு வாழ்வியல் முறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் குணசேகரன்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலுள்ள மாயனூர் முடக்குச்சாலைப் பகுதியில் இருக்கிறது, இவர் உருவாக்கியிருக்கும் அந்த அடர்வனம். இந்தப் பகுதி முழுக்க வறட்சியின் பிடியிலிருக்க, இவர் 250 ரகங்களில் 2,500 மரங்களை உருவாக்கி, வறண்ட பூமியில் இயற்கை சொர்க்கத்தைக் கட்டமைத்திருக்கிறார். அந்த வனத்துக்குள் நுழைந்தால், நிஜக் காட்டுக்குள் உலாவரும் உணர்வு ஏற்படுகிறது. அந்த அற்புத வனத்துக்குள் குடிகொண்டிருக்கும் ‘இயற்கை’யை ரசித்தபடி குணசேகரனோடு பேசினோம்.

‘‘எனக்குப் பூர்வீகம் இதே ஒன்றியத்திலுள்ள குப்பிரெட்டிப்பட்டி. என் அப்பா காவல்துறையில் பணிசெய்ததால், சிறு வயதிலிருந்தே கரூர் நகரத்தில்தான் வசித்தோம். டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடிச்சேன். சின்ன வயசுல இருந்து சொந்தமா நிலம் வாங்கி, விவசாயம் பார்க்கணும்னு நினைச்சேன். 2000-ம் வருஷத்துக்கு முன்னாடி சில வருடங்கள் சிங்கப்பூர்ல வேலை பார்த்தேன். அதன் பிறகு ஊருக்கு வந்த எனக்கு, அரசுப்பள்ளி ஆசிரியரா வேலை கிடைச்சது. இப்போ மாயனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியரா வேலை பார்க்கிறேன். இடையில் 2002-லேயே இந்தக் காடும் மேய்ச்சல் நிலமும் அடங்கியிருக்கும் 14 ஏக்கர் நிலத்தையும் வாங்கினேன். எல்லாரையும்போல ‘அதுல விவசாயம் பார்த்து, லாபம் பார்க்கணும்’னு நினைச்சேன். அதனால மாங்கன்றுகளையும் தென்னங்கன்றுகளையும் நடவு செஞ்சு வளர்த்துட்டு வந்தேன். நான் குருவாக ஏத்துக்கிட்ட நம்மாழ்வார் அய்யாவின் அறிமுகம் 2008-ம் வருஷம் கிடைச்சுது. அவரை இங்கே அழைச்சுட்டு வந்தேன். இதைப் பார்த்துட்டு, ‘மாந்தோப்பும் தென்னந்தோப்பும், மாட்டுக்கும் மனுஷனுக்கும் உகந்தது இல்லை’னு சொன்னார். அப்போதான், ‘வியாபார நோக்கத்தைக் கடந்து, சூழலுக்கு உகந்த அடர்வனத்தை உருவாக்கணும்’னு முடிவு பண்ணினேன்.

சந்தனம், மருது, வாகை, அத்தி, பூவரசு, புங்கன், வேம்பு, புளியமரம், நாட்டு மூங்கில், மலைவேம்பு, நாவல், சரக்கொன்றை, பப்பாளி, கொய்யா, புன்னை, புரசு, தடசு, காடுகளில் மட்டுமே வளரும் என்று சொல்லப்படும் சந்தன வேங்கை, இந்தியன் ரப்பர், மகிழம், நாகலிங்கம், திருவோட்டு மரம்னு 250 வகையான மர வகைகளில் 2,500 மரக்கன்றுகளை நட்டேன். இவை தவிர, 1,500 பனைவிதைகளையும் விதைச்சேன். இதற்காகக் கிணறு வெட்டி, அதில் ரெண்டு போர்வெல்களை அமைச்சேன்.

வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், ஆடாதொடா, கற்பூரவள்ளி, துளசி, சிறியாநங்கை, பெரியாநங்கை, பிரண்டை, மருதாணி, ஊமத்தைன்னு 50-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளையும் வளர்த்தேன். மெள்ள மெள்ள எல்லாமே நல்லா வளர்ந்து, நம்மாழ்வார் எனக்கு உணர்த்திய அடர்வனம் கண்முன்னே விரிய ஆரம்பிச்சது. இப்படி எல்லாம் மரமாகி, காடுபோல ஆனதால எண்ணற்ற அருகிப்போன பறவைகளும் இங்கே வந்து தங்க ஆரம்பிச்சிருக்கு. கிளி, கருங்குயில், செம்பூத்து, தவிட்டுக் குருவி, ஆந்தை, சிட்டுக்குருவி, காகம், புறா, மயில் போன்ற பறவைகளும், முயல், அணில், வௌவால் போன்ற உயிரினங்களும் இங்கே அதிகமா இருக்கு.

அவை சாப்பிட்டது போக மீதமுள்ள பழங்களைத்தான் நாங்க பறிக்கிறோம். இந்த வனத்தில் எல்லா வகை மரங்களும் மாறி மாறி இருப்பதுபோல், ஒரு இயற்கைக்காடு போலத்தான் உருவாக்கியிருக்கேன். அதேபோல, இந்த வனத்துக்குள் வேற செடி, கொடிகள் முளைத்தால், அதையெல்லாம் அப்புறப்படுத்தாம அப்படியே இயற்கைக்காடுபோல உருவாக்கிட்டு வர்றேன். கிணறு, போர்வெல்லுல கிடைக்கும் தண்ணியைவெச்சு தெளிப்பு நீர்ப்பாசனம் முறையில பாசனம் பண்றேன். இன்னும் ரெண்டு வருஷத்துல இந்த அடர்வனத்துக்கு தண்ணீர் பாய்ச்சாமல், இயற்கையான தகவமைப்பைப் பெறவைக்கும் முயற்சியையும் செய்ய இருக்கிறேன்.

அதேபோல, மழைநீரை மேட்டுப்பாத்தி முறையில் சேமிக்கும் கட்டமைப்பை உருவாக்கியிருக்கேன். கடந்த 2006-ம் வருஷமே கரூர்ல இருந்த வீட்டை வித்துட்டு, இந்த வனத்துக்குக் குடிபெயர்ந்துட்டோம். இந்த வனத்துக்குள்ள கிடைக்கும் பொருள்களை வெச்சு, இயற்கை முறையிலான மரபு வீட்டை அமைச்சு அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகளுடன் குடியிருக்கேன். மின்சாரத் தேவைக்குச் சோலார் முறையில் மின்சாரம் எடுத்துக்கிறோம். அடுப்பு எரிக்கப் பயோகேஸை பயன்படுத்துறோம். வனத்துக்கு இயற்கை உரம் கொடுக்கவும், பயோகேஸ் தயாரிக்கத் தேவைப்படும் சாணத்துக்காகவும் 15 எருமைகளை வாங்கி வளர்த்துட்டு வர்றேன்.

“250 வகையான மர வகைகளில் 2,500 மரக்கன்றுகளை நட்டேன்.” “அப்படியே இயற்கைக்காடுபோல உருவாக்கிட்டு வர்றேன்.”

இந்தக் காட்டுக்கு மாட்டு எரு, மரங்கள் உதிர்க்கும் இலை, சருகுகளைத் தவிர வேற எந்த உரத்தையும் பயன்படுத்துறதில்லை. சமீபத்துலதான் சின்னச் செடிகள் வளர்றதுக்கு ஏதுவா பெரிய மரங்களைக் கவாத்துப் பண்ணினேன். அதில், 100 டன் விறகு கிடைச்சுது. ஒரு டன் விறகு ரூ.2000னு 100 டன் விறகையும் ரூ.2,00,000-க்கு விற்பனை செய்தேன். இதுவரை சூழலியல் காடாக உருவாக்கிய நான், தற்சார்பியல் பொருளாதாரத்தை மேம்படுத்த நினைச்சேன். அதற்காக இப்போ இந்தக் காட்டுக்குள்ள ஊடுபயிரா செவ்வாழை, ரஸ்தாளி, பூவன்னு மூன்று வகையான 500 வாழைக்கன்றுகளை நட்டிருக்கேன். அதோடு, அங்கங்கே கிராம்பையும் பயிர் செஞ்சிருக்கிறேன். அடுத்து மிளகு நட இருக்கேன். இப்படியே அஞ்சு வகையான அடுக்குகளில் ஊடுபயிராகப் பல பயிர்களை வெள்ளாமை பண்ணப் போறேன்’’ என்றவர் நிறைவாக,

“கரூர் மாவட்டம் வறட்சி நிறைந்த பூமி. காடுகளின் அளவு குறைவாக இருக்கும் மாவட்டம். அதுவும், இந்த வனமிருக்கும் மண் முழுக்க சுண்ணாம்பு மண். எல்லா வகை மரங்களையும் வளர்ப்பதற்கு ஏற்ற மண்ணில்லை. ஆனா, இங்கே இதுபோல் ஓர் அடர்வனத்தை உருவாக்கியிருப்பது, நம்மாழ்வார் காட்டிய வழியிலதான் நான் போய்க்கிட்டு இருக்கேன்னு உணர்த்துது. இதை மாதிரி அடர்வனமாக ஆக்கி இருக்கேன். நெருங்கிய சொந்தக்காரங்களே, ‘பொழைக்கத் தெரியாதவன். இவ்வளவு நிலத்தை பாழ் பண்ணிட்டான்’னு காதுபடப் பேசுறாங்க. அவர்களுக்கு நான் கட்டமைத்த இந்த இயற்கையே பதில் சொல்லட்டும்னு அமைதியா இருந்திடுவேன். இங்கே குறுங்காடு இருக்கறதால, இந்தப் பகுதியில் சீரான மழை பொழிய ஆரம்பிச்சிடுச்சு. என் மனைவி சித்ரா இயற்கை மருத்துவர். விரும்புறவங்களுக்கு, சேவை அடிப்படையில இயற்கை முறையிலான சிகிச்சை தர்றாங்க.

இந்த அடர்வனத்தைப் பார்க்க இயற்கை குறித்த விழிப்புணர்வுள்ள பலர் வர்றாங்க. இதுபோல் யாருக்கேனும் அடர்வனம் அமைக்க இலவச வழிகாட்டுதல் தேவைப்பட்டாலும் கட்டாயம் என்னை அணுகலாம். ஊர்கூடித் தேர் இழுப்பதுபோல், எல்லோரும் முயன்றால்தான் தமிழகமெங்கும் இதுபோல் பல அடர்வனங்களை உருவாக்க முடியும்’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, குணசேகரன், செல்போன்: 99422 19939.

பச்சை மனுசங்களை உருவாக்கிய பசுமை விகடன்!

பசுமை விகடன் வாசகரான குணசேகரன், பசுமை விகடன் பற்றிய தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார். ‘‘தமிழகத்துல இன்னிக்கு இயற்கை விவசாயம் வளர்ந்திருக்குன்னா அதுக்கு நம்மாழ்வாரும் பசுமை விகடனும்தான் முக்கியக் காரணம். நம்மாழ்வாரை மூலை முடுக்கெல்லாம் அழைச்சுட்டுப் போய் அவரோட அருமையை எல்லோருக்கும் தெரியவெச்சதுல பசுமை விகடனோட பங்கு முக்கியமானது.

அதேபோல, மரம் வளர்க்கணும்கிற ஆர்வத்தை நிறைய பேர் மனசுல விதைச்சது பசுமை விகடன்தான். பசுமை விகடன் வந்ததுக்குப் பிறகுதான், விவசாயம்னாலே என்னனு தெரியாதவங்ககூட விவசாயத்துக்கு வந்தாங்க. அதுல பலபேர் இன்னிக்கு முன்னோடி விவசாயியா இருக்காங்க. அந்த வகையில தமிழ்ச் சமுதாயத்துக்கு பசுமை விகடன் செஞ்சிட்டு இருக்கும் சேவைகள் நன்றிக்குரியது’’ என்றார்.