Published:Updated:

மாதம்தோறும் வருமானத்தைத் தரும் கலப்பு பயிர்! பட்டதாரிகளின் இயற்கை வேளாண்மை!

சி.வீரப்பன், சி.அசோக்குமார் ( ரா.கலையரசன் )

சாணத்திலிருந்து எடுக்கும் விபூதியை கிலோவுக்கு 300 ரூபாயாக, பசும்பாலை லிட்டருக்கு 45 ரூபாயாகவும் முட்டை மற்றும் கோழி இறைச்சியையும் விற்பனை செய்கிறோம். நாய்களைக் காவலுக்கு பயன்படுத்துவதோடு அதன் குட்டிகளையும் விற்பனை செய்து வருகிறோம்.

மாதம்தோறும் வருமானத்தைத் தரும் கலப்பு பயிர்! பட்டதாரிகளின் இயற்கை வேளாண்மை!

சாணத்திலிருந்து எடுக்கும் விபூதியை கிலோவுக்கு 300 ரூபாயாக, பசும்பாலை லிட்டருக்கு 45 ரூபாயாகவும் முட்டை மற்றும் கோழி இறைச்சியையும் விற்பனை செய்கிறோம். நாய்களைக் காவலுக்கு பயன்படுத்துவதோடு அதன் குட்டிகளையும் விற்பனை செய்து வருகிறோம்.

Published:Updated:
சி.வீரப்பன், சி.அசோக்குமார் ( ரா.கலையரசன் )

வீரப்பனும் அவருடைய தம்பி அசோக்குமாரும் நம்மாழ்வாரை முன்னோடியாகக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். படித்த பட்டதாரிகளான இவர்கள், புதுச்சேரியில் இருக்கும் கூனிச்சம்பட்டு கிராமத்தில் 2013-ல் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். அதன் மூலம் இவர்கள் செய்துவரும் வியாபாரமும் பலருக்கு வழிகாட்டியாக உள்ளது.

இவர்களைச் சந்திக்க கூனிச்சம்பட்டு கிராமம் சென்றோம். இயற்கைக் காற்று தென்றலாக வீச பசுமை சூழ்ந்த சூழலில் அவர்களின் வசிப்பிடம் இருந்தது. கதவைத் தட்டியபோது, கையில் நாய்க்குட்டியோடு வெளிய வந்த வீரப்பன் எங்களை வரவேற்றார்.

சி.வீரப்பன்
சி.வீரப்பன்
ரா.கலையரசன்

சுமார் ஒன்றரை ஏக்கர் களிமண் விளைநிலத்தில், பாரம்பர்ய நெல் வகைகளான சீரகச்சம்பா, கறுப்புக்கவுனி, நவரா, கறுங்குறுவை, நாட்டுபாஸ்மதி பயிர் செய்திருந்தனர். அரை ஏக்கரில் வாழைக்கன்றுகளை இரட்டை வரிசை முறையில் பயிரிட்டு திருப்பத்தையும் காண முடிந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கலப்பு விவசாயம்

இவர்கள் செய்யும் கலப்பு விவசாயத்தில், 130 தென்னங்கன்றுகள்,  200 கொய்யா, 30 எலுமிச்சை, 50 மகோக்கனி மற்றும் இவைகளுக்கு இடைஇடையே மஞ்சள், மிளகாய், காய்கறிகள் போன்ற ஊடுபயிர்களையும் பயிரிட்டிருந்தனர்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்
ரா.கலையரசன்

``இந்தக் கலப்பு விவசாயத்தின் சிறப்பு என்னவென்றால், எல்லா காலத்திலும் வருமானம் தரும். ஒவ்வொரு பயிர் வகையும் குறிப்பிட்ட காலத்தில் விளைச்சல் கொடுக்கும் அதன் மூலம் வருமானம் கிடைக்கும்.

கலப்பு விவசாயத்தின் மூலம் பலவகை பயிர்கள் விவசாயம் செய்வதால் எல்லா காலத்திலும் ஏதாவது ஒன்று விளைச்சல் மூலம் வருமானம் தந்துகொண்டே இருக்கும். எந்த நிலைமையிலும் நஷ்டம் ஏற்படாமல் வருமானம் வருகிறது'' என்கின்றனர் இருவரும்.

கலப்பு விவசாயத்தைப் பற்றி வீரப்பன் தன் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார்...

``20 சென்ட் குட்டையில் கெண்டை மீன் மற்றும் விறால் மீன்களை வளர்த்து வருகிறோம். ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு உரம் என்னும் நம்மாழ்வாரின் அறிவுரைகேற்ப வளர்ப்பு பிராணிகளோட கழிவுகளை மீன்களுக்கும் பயிர்களுக்கும் உரமா பயன்படுத்துறோம்.

கோழி வளர்ப்பு | இயற்கை விவசாயம்
கோழி வளர்ப்பு | இயற்கை விவசாயம்
ரா.கலையரசன்

மாட்டுத்தொழுவத்திலிருந்து சாணமும் மாட்டு சிறுநீரும் நேரடியாக மீன்குட்டைக்குச் செல்லும்படி குழாய் பாதை அமைத்துள்ளனர். மாட்டின் சாணமும் சிறுநீரும் கொண்டு செய்யும் உரத்தின் பெயர் அமுதக்கரைசல்.

அமுதக்கரைசல் குட்டையில் சேர்வதால் அது பாசியாக மாறி அந்த பாசிகள் மீன்களுக்குத் தீணியாகின்றன. இந்த அமுதக்கரைசலை சுமார் 4,000 லிட்டர் கொள்ளும் தண்ணீர்த்தொட்டியில் சேமித்து பயிர்களுக்கு பயன் படுத்துகிறோம். இதனால் வேலை நேரம் குறைவதோடு செலவில்லாமல் விளைச்சலை பெருக்க சத்தான உரங்களை பெறமுடிகிறது.

மாடு வளர்ப்பு | இயற்கை விவசாயம்
மாடு வளர்ப்பு | இயற்கை விவசாயம்
ரா.கலையரசன்

ஆடு மாடு கழிவுகளில் உள்ள புழுக்கைகளையும் செரிமானமாகாத உணவுகளையும் கோழிகள் உணவாக எடுதுக்கொள்ளும், வாத்துகள் மீன்குட்டைகளில் மேய்வதால் அவற்றின் எச்சம் மீன்களுக்கு உரமாவதோடு குட்டையையும் தூய்மையாக்குகிறது. மீன்களுக்கு ஆக்சிஜனும் கிடைக்கிறது.

கோழிகளுக்கு ஒன்பது மாதத்துக்கு ஒருமுறை தடுப்பூசி போடுவதோடு, மாதம் ஒரு முறை கீழாநெல்லி, மஞ்சள், மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரிசியோடு ஊற வைத்து கோழிகளுக்கு உணவாகக் கொடுக்கிறோம். இதனால் அவறுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

மாதம்தோறும் வருமானத்தைத் தரும் கலப்பு பயிர்! பட்டதாரிகளின் இயற்கை வேளாண்மை!
ரா.கலையரசன்

மேலும் பஞ்சகவ்யம், மீன்அமிலம், தேமோர்கரைசல் முதலான இயற்கை உரங்களை செய்து பயிர்களுக்கு இடுவதோடு, அவற்றை விற்பனையும் செய்கிறோம்.

பலன் தரும் அரிசி வகைகள்

மாப்பிளைசம்பா அரிசி வடித்த கஞ்சியை, தொடர்ந்து 45 நாள்களுக்கு குடித்துவந்தால் உடல் வலுப்பெறும். சீரகச்சம்பா அரிசி சாப்பிடுவதால் உடலிலுள்ள வாதம், பித்தம் குறைந்து செரிமானம் மேம்படுவதோடு மேனியும் அழகுபெறும். கருப்புக்கவுனி அரிசி சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

கோழி வளர்ப்பு | இயற்கை விவசாயம்
கோழி வளர்ப்பு | இயற்கை விவசாயம்
ரா.கலையரசன்

கர்ப்பிணி பெண்கள் நான்காவது மாதம் முதல் பூங்காரு அரிசியை சாப்பிட்டு வர சுகப்பிரசவம் ஆகும். பால்குடவரசம்பா அரிசி சாப்பிடுவதால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.

விவசாயியும் நானே, வியாபாரியும் நானே என்று சொல்வதைப் போல விலைபொருள்களை நாங்களே விற்பனை செய்வதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது.

சீரகச்சம்பா அரிசியையும் கறுப்புக்கவுனி அரிசியையும் கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் நவரா, கறுங்குருவை மற்றும் நாட்டுபாஸ்மதி முதலான அரிசிகளை கிலோவுக்கு 80 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம்.

மாடு வளர்ப்பு | இயற்கை விவசாயம்
மாடு வளர்ப்பு | இயற்கை விவசாயம்
ரா.கலையரசன்

புதுச்சேரி வேளாண்மை துறையில் `RKVY' என்னும் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூபாய் 5,00,000 உதவித்தொகையைப் பெற்றுள்ளேன்'' என உற்சாகமாகத் தெரிவித்தார்.