Published:Updated:

மயிலாடுதுறை: `குப்பைமேடு காய்கறித் தோட்டமானது!’ - மாற்றிக் காட்டிய தூய்மைப் பணியாளர்

காய்கறித் தோட்டமானது
காய்கறித் தோட்டமானது

'வாடகை கொடுக்க முடியலை. குப்பைக் கிடங்கில் ஓரமாகத் தங்கிக் கொள்கிறோம்' என்றார்கள். அனுமதி தந்தேன். ஆனால், தற்போது குப்பைமேடு காய்கறித் தோட்டமாக மாறியிருக்கிறது.

பேரூராட்சி குப்பைமேட்டை காய்கறித் தோட்டமாக மாற்றியிருக்கிறார் தூய்மைப் பணியாளர் பரமேஸ்வரி. வெண்டை, கொத்தவரை, கீரை, சோளம் எனப் பயிரிடும் அவரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

காய்கறி தோட்டமானது
காய்கறி தோட்டமானது

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றுகிறார் பரமேஸ்வரி. அவர் கணவர் சுப்ரமணியனும் அதே பணியில்தான் இருக்கிறார். இருவரும் குத்தாலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வைத்தீஸ்வரன் கோயிலில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

ஆனால், இவர்கள் பெறும் சொற்ப ஊதியத்தில் வீட்டு வாடகை கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை. அதனால் குப்பைக் கிடங்கிலேயே ஓர் ஓரமாகக் தங்கிக்கொள்ள, பேரூராட்சிச் செயல் அலுவலர் குகனிடம் அனுமதி கேட்டனர். குப்பைக் கிடங்குக்கும் காவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டி இருந்ததால் இவர்களையே அங்கு குடியிருக்க அனுமதித்து குப்பைக் கிடங்கின் காவலராகப் பணிபுரியவும் செயல் அலுவலர் அனுமதித்தார்.

'வளம் மீட்புப் பூங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ள இங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன்கோயிலைச் சுற்றி விவசாய நிலங்கள் அதிகமுண்டு. அதனால் பரமேஸ்வரிக்கும் விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது.

முதலில் குப்பை மேட்டின் ஒரு பகுதி நிலத்தை மண் வெட்டியால் சமன்படுத்தி பக்குவப்படுத்தினார். அதில். சோளம், கீரை வகைகள் பயிரிட்டுள்ளார். தற்போது வெண்டை, கொத்தவரை போட்டுள்ளார். பரமேஸ்வரியின் இச்செயலைப் பாராட்டிய பேரூராட்சி செயல் அலுவலர் குகன், பரமேஸ்வரிக்கு மின்விசிறி ஒன்றைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

காய்கறி தோட்டமானது
காய்கறி தோட்டமானது

இதுபற்றிச் செயல் அலுவலர் குகனிடம் பேசினோம். ``பிழைக்க வழி தேடி வந்தார்கள். தற்காலிகப் பணியாளர்களாக வேலை கொடுத்தேன். 'வாடகை கொடுக்க முடியலை. குப்பைக் கிடங்கில் ஓரமாகத் தங்கிக்கொள்கிறோம்' என்றார்கள். அனுமதி தந்தேன். ஆனால், தற்போது பரமேஸ்வரியின் விவசாய ஆர்வத்தால் குப்பைமேடு காய்கறித் தோட்டமாக மாறியிருக்கிறது உண்மையில் அவரது செயல் மிகவும் பாராட்டுக்குரியது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு