கால்நடை
நாட்டு நடப்பு
Published:Updated:

காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை... பழையகோட்டையில் அசத்தும் பொறியாளர்!

காங்கேயம் மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காங்கேயம் மாடுகள்

சந்தை

பொதுவாக மாட்டுச் சந்தைகளில் பலவகைப்பட்ட மாடுகள், விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பழையகோட்டையில் காங்கேயம் நாட்டு மாடுகளுக்காக மட்டுமே செயல்படும் பிரத்யேக சந்தை கவனம் ஈர்க்கிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயங்கி வரும் இச்சந்தையானது... இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் இச்சந்தையின் மூலம் 25,000-க்கும் அதிகமான காங்கேயம் மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

திருப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர் இளைஞர் சிவக்குமார். இவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, அங்கு கணினித் துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றியவர். மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து இங்கேயே நிரந்தரமாக வசித்து வந்த நிலையில், காங்கேயம் நாட்டு மாடுகள் மீதான நேசத்தின் காரணமாக, இச்சந்தையையும் கோசாலை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

சிவக்குமார்
சிவக்குமார்

ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல்பொழுதில் பழையகோட்டை மாட்டுச் சந்தைக்குச் சென்றோம். வாகனங்கள் மூலமாகவும் நடையாகவும் கொண்டு வரப்பட்ட காங்கேயம் நாட்டு மாடுகளுக்கு டோக்கன் வழங்கி உள்ளே அனுப்பிக்கொண்டிருந்த சிவக்குமாரிடம் இச்சந்தை குறித்துப் பேச்சுக் கொடுத்தோம். மிகுந்த உற்சாகத்தோடு பேசத் தொடங்கியவர், ‘‘திருப்பூர் நகரப் பகுதியில உள்ள விஜயாபுரம்தான் எனக்கு பூர்வீகம். கோயம்புத்தூர்ல பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சிட்டு, மேல் படிப்புக்காக அமெரிக்கா போனேன். அங்கேயே எனக்கு நல்ல வேலையும் அமெரிக்கக் குடியுரிமையும் கிடைச்சதுனால, 18 வருஷம் அங்கேயே இருந்துட்டேன். இதுக்கு இடையில எனக்குத் திருமணமாகி, 2010-ம் வருஷம் மகன் பிறந்தான். அவன் வளர வளர எனக்குள்ள ஒரு நெருடலும் குற்ற உணர்ச்சியும் வர ஆரம்பிச்சது. ‘நாம சின்ன வயசுல இருக்கும்போது திருப்பூர்ல ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு வளர்ந்தோம். குறிப்பா, நாட்டு மாட்டுப் பால் குடிச்சோம். ஆனா அந்த வாய்ப்புகள், நம்ம மகனுக்கு வாய்க்கலையேங்கற எண்ணம் எனக்குள்ளார உறுத்திக்கிட்டே இருந்துச்சு. என் மகனோட எதிர்கால நலன் கருதி, 2013-ம் வருஷம் என் குடும்பத்தோடு திருப்பூருக்கே வந்துவிட்டேன்.

சந்தையில்
சந்தையில்

நாட்டு மாட்டுப் பாலுக்காகக் காங்கேயம் இன மாடு வாங்கலாம்னு முடிவெடுத்து ஒட்டன்சத்திரம், குண்டடம், பொள்ளாச்சி, திருப்பூர் சந்தைகளுக்குப் போயி பார்த்தப்பத்தான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை எனக்குத் தெரிய வந்துச்சு. அங்கு கொண்டு வரக்கூடிய காங்கேயம் மாடுகள்ல 90 சதவிகிதம் இறைச்சிக்காகக் கேரளாவுக்கு அனுப்பப்படுதுனு தெரிஞ்சு அதிர்ச்சி அடைஞ்சிட்டேன்.

அதிக பாலுக்கு ஆசைப்பட்டு நம்ம விவசாயிங்க, கலப்பின சீமை மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சதுனாலதான், காங்கேயம் மாதிரியான நாட்டு மாடுகளுக்கு மதிப்பு இல்லாம போயிடுச்சிங்கற யதார்த்த நிலை தெரிஞ்சதும், மனசுக்கு ரொம்ப வேதனையா போயிடுச்சு. இதே நிலை நீடிச்சா, காங்கேயம் இன மாடுகளை எதிர்காலத்துல போட் டோவுல மட்டும்தான் பார்க்க முடியும்னு நினைச்சு, ரொம்பவே பதறிப்போயிட்டேன். நம்மாள முடிஞ்ச அளவுக்கு இந்த மாடுகளைப் பாதுகாக்குறதுக்கான முயற்சிகளைச் செய்யணும்னு முடிவெடுத்தேன்.

சந்தையில்
சந்தையில்

அடிமாடாகக் கொண்டு செல்லப்படுற காங்கேயம் மாடுகளை விலைக்கு வாங்க ஆரம்பிச்சேன். திருப்பூருக்குப் பக்கத்துல இருக்கற காடையூருல எங்க குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் இருக்கு. 2013-ம் வருஷம் அங்க கோசாலை அமைச்சேன். பொள்ளாச்சி, குண்டடம், ஒட்டன்சத்திரம், திருப்பூர் பகுதிகள்ல உடல் நலிவுற்ற நிலையில இருக்கக் கூடிய காங்கேயம் மாடுகளையும் விலைக்கு வாங்கிட்டு வந்து, அடர் தீவனம், பசுந்தீவனம் எல்லாம் கொடுத்து முறையா பராமரிச்சேன்.

காங்கேயம் மாடுகள் விற்பனைக்காகவே, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள்ல ஒரு குழு ஆரம்பிச்சேன். என்கிட்ட விற்பனைக்குத் தயாராக உள்ள மாடுகளோட புகைப்படங்களைப் போட்டு, விலை உள்ளிட்ட விவரங்களையும் பதிவிட்டேன். நான் என்ன விலைக்கு வாங்கி னேனோ, அதே விலைக்கு அந்த மாடுகளை விற்பனை செய்யணும்ங்கறதுல உறுதியா இருந்தேன். அதனால, நான் எதிர்பார்த்ததை விடவும் இயற்கை விவசாயிகள் மத்தியில, குறிப்பா இளைஞர்கள் மத்தியில இந்த மாடுகளுக்கு வரவேற்பு அதிகமா இருந்துச்சு.

மாட்டுக்குத் தேவையான பொருள்கள்
மாட்டுக்குத் தேவையான பொருள்கள்

காங்கேயம் மாடுகளை விற்பனை செய்ய நினைக்கூடிய விவசாயிகள், வழக்கமான சந்தைகளுக்குக் கொண்டு போறதுனால தான், அவங்களுக்கு நியாயமான விலை கிடைக்குறதில்லை. அதோட மட்டுமல்லாம வியாபாரிகள் அங்க வந்து, அந்த மாடுகளை வெட்டுக்காக வாங்கிக்கிட்டு போறாங்க. இதைத் தடுக்கணும்னா, காங்கேயம் மாடுகளை வாங்கக்கூடிய, விக்கக்கூடிய விவசாயிகள் மட்டுமே வந்து போற மாதிரி யான ஒரு பிரத்யேக சந்தையைத் தொடங் கணும்னு முடிவெடுத்தேன்.

கொங்க இன மாடுகள்ல இருந்து காங்கேயம் இன மாடுகள் உருவாக, பல வருஷங்களுக்கு முன்னாடி பெரும் முயற்சிகள் எடுத்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் நினைவா பழையகோட்டையில சந்தையை உருவாக்கணும்னு ஆசைப்பட்டேன். இது சம்பந்தமா அவரோட பேரன் ராஜ்குமார் மன்றாடியார்கிட்டயும், அவரோட உறவுக் காரர்களான நவீன் மன்றாடியார், மகேன் மன்றடியார்கிட்டயும் பேசினேன். காங்கேயம் மாட்டுச் சந்தைக்காக, பழையகோட்டையில உள்ள அவங்க இடத்தை இலவசமா கொடுத்தாங்க.

சந்தையில்
சந்தையில்

பழையகோட்டை மாட்டுத்தாவணி நாட்டு மாட்டுச் சந்தைங்கற பேருல 2016-ல இந்தச் சந்தைய தொடங்கினோம். மாட்டுத்தாவணினு சொன்னாலே மதுரை மாவட்டம்தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். ஆனா, பழங்காலத்துல மாடுகள் விற்பனை செய்யக்கூடிய இடங்கள் எல்லாமே மாட்டுத்தாவணினுதான் அழைக்கப்பட்டுருக்கு. மற்ற சந்தைகள் மாதிரி இல்லாம, இங்க சில கட்டுப்பாடுகள போட்டோம்.

காங்கேயம் மாடுகள் மட்டுமே இங்க விற்பனைக்கு அனுமதிக்கப்படும். வளர்ப்புக் காகக் காங்கேயம் மாடுகள் வாங்க வர்றவங் களுக்கு மட்டும்தான் இங்க அனுமதி. குறிப்பா, தரகர்களுக்கு இங்க அனுமதி கிடையாது.... இப்படி இன்னும் சில கட்டுப்பாடுகளைத் தீவிரமா கடைப்பிடிச்சிக்கிட்டு இருக்கோம். யாரு விவசாயி, யாரு தரகர்ங்கறதை எங்களால எளிதா அடையாளம் காண முடியும்.

சந்தையில்
சந்தையில்

இங்க விற்பனை செய்றதுக்காக மாடுகள் கொண்டு வரக்கூடிய விவசாயிகள்கிட்ட ஒரு மாட்டுக்கு 50 ரூபாய் வீதம் கட்டணம் வசூல் செய்றோம். அதுக்கு முறையான ரசீது கொடுக்குறோம், அந்த விவசாயியோட பேரு, முகவரி, மாட்டைப் பத்தின விவரம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செஞ்சுகிறோம். அந்த மாடு யாருக்கு விற்பனை செய்யப்பட்டதோ, அந்த விவசாயியைப் பத்தின விவரங்களையும் ஆவணப்படுத்துறோம். மாட்டை வாங்கிகிட்டு போனதுக்கு அப்புறம், அதுல பிரச்னைனு சொன்னாங்கனா, வித்தவங்களயும், வாங்குன வங்களயும் நேர்ல கூப்பிட்டுப் பேசி, சரி செஞ்சிடுவோம்.

இந்தச் சந்தை தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகுது. ஆரம்பத்துல கோயம் புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு பகுதிகள் இருந்து மட்டும்தான் இங்க மாடுகள் வாங்க வந்தாங்க. இந்தை சந்தையைப் பத்தி, சமூக ஊடகங்கள்ல அதிகமா விளம்பரம் செய்ய ஆரம்பிச்ச பிறகு... திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உட்பட இன்னும் பல மாவட்டங்கள்ல இருந்தும் இங்க வந்துகிட்டு இருக்காங்க. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் 60 - 100 மாடுகள் வீதம் விற்பனை ஆகுது. இதுவரைக்கும் 25,000-க்கும் அதிகமான மாடுகள் விற்பனை ஆகியிருக்கு’’ எனத் தெரிவித்தார்.

மாட்டுக்குப் பல் பார்த்தல்
மாட்டுக்குப் பல் பார்த்தல்

கொம்புகளுக்குக் காவி சாயம்

‘‘மாடுகளுக்கான கயிறு, விவசாயத்துக்குத் தேவையான மண்வெட்டி உள்ளிட்ட பொருள்களும்கூட இங்க விற்பனை செய்யப்படுது. கொம்புகளுக்கு இப்ப அடிக்கப்படுற பெயின்ட்டுகள் பெரும்பாலும் ரசாயனம் கலந்ததாதான் இருக்கு. அதனால மாடுகளுக்கு ஏதாவது பாதிப்புகள் வர வாய்ப்புகள் இருக்கு. அந்தப் பெயின்ட்டை நீக்கீட்டுக் காவி சாயம், இல்லைனா, எண்ணெய் பூசுறதுக்காகவே இங்க மாணிக்கம்னு ஒருத்தர் இருக்கார்.

தன்னார்வலர்கள்

இந்தச் சந்தை ஞாயிற்றுக்கிழமையில செயல்படுறதுனால, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகள்ல பல்வேறு துறைகள்ல வேலை பார்க்கக்கூடிய நிறைய இளைஞர்கள், இங்க மாடுகள் வாங்க வர்றாங்க. மாடுகள் எப்படி வாங்கணும்னு தெரியாதவங்களுக்கு உதவி செய்றதுக்காகவே இங்க சில தன்னார்வலர்கள் இருக்காங்க. மாடுகளோட சுழி உட்பட இன்னும் சில அம்சங்களைப் பார்த்து வாங்க அந்தத் தன்னார்வலர்கள் உதவி செய்றாங்க. அதுக்குப் பணம் எதுவும் வாங்க மாட்டாங்க’’ என்கிறார் சிவக்குமார்.

காங்கேயம் மாடுகள்
காங்கேயம் மாடுகள்

காளை சேர்ப்புக்கான ஆப்

‘‘தங்களோட பசு மாடுகளைக் காங்கேயம் காளைகளோடு இனச்சேர்க்கை செய்ய விரும்புற விவசாயிகளுக்கு உதவுறதுக்காக. கொங்க மாடு என்ற பெயர்ல செல்போன் ஆப் வெச்சுருக்கோம். அதுல பதிவு செய்யலாம். அது மட்டுமல்லாம, மாடுகள் வாங்குறதுக்கும். விற்பனை செய்றதுக்கும்கூட இந்த ஆப்பை பயன்படுத்திக்கலாம். கால்நடை மருத்துவரோட ஆலோசனைகளுக்கும் இதைப் பயன்படுத்திக்கலாம். இந்தச் சந்தைக்குக் கொண்டு வரப்படக்கூடிய மாடுகள்ல 60 - 80 சதவிகிதம் மாடுகள் இங்கயே வித்துப் போயிடும். மீதி இருக்குற மாடுகளைப் பத்தின விவரங்களைக் கொங்கு நாட்டின் காங்கேய மாடுகள் என்ற எங்களோட முகநூல் பக்கத்துல போட்டுடுவோம். இந்த முகநூல் பக்கத்தைச் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பின் தொடர்றாங்க’’ என்கிறார் சிவக்குமார்.

குழந்தைவேலு
குழந்தைவேலு

20 வருஷமா காங்கேயம் மாடுகள் விற்பனை செய்றேன்

இந்தச் சந்தைக்கு வந்திருந்த நாட்டு மாடு வியாபாரி பி.குழந்தைவேலு, ‘‘காங்கேயம் மாடுகளை மட்டும்தான் நான் வாங்கி விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். கடந்த 20 வருஷமா இந்தத் தொழிலை செஞ்சுகிட்டு இருக்கேன். இந்தச் சந்தை வந்த பிறகு காங்கேயம் மாடுகளை வளர்ப்புக்காக வாங்கிக்கிட்டு போறவங்களோட எண்ணிக்கை பல மடங்கு அதிகரிச்சிருக்கு’’ எனத் தெரிவித்தார்.

பராமரிப்புச் செலவு

‘‘50 ரூபாய் கட்டணம் வசூல் செய்றது, லாபம் சம்பாதிக்கறதுக்கு இல்லை. சந்தையைத் தூய்மையா பராமரிக்குறதுக்கும், இங்க வேலை செய்யக்கூடியவங்களுக்குச் சம்பளம் கொடுக்குறதுக்கும்தான் பயன்படுத்திக்கிறோம். இன்னும் சொல்லப்போனா, நாங்க வசூலிக்கிறதைவிடவும் கூடுதலாதான் செலவாகிக்கிட்டு இருக்கு.

மாடுகளைச் சோதனை செய்தல்
மாடுகளைச் சோதனை செய்தல்

ஸ்கேன் மெஷின்

காங்கேயம் மாடுகள காப்பாத்துறதுக்கு விவசாயிகள் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மாடு வியாபாரிகளும் ரொம்ப முக்கியம். மாடுகளை வாங்கிக்கிட்டுப் போயி, மற்ற விவசாயிகள்கிட்ட வளர்ப்புக்காக விற்பனை செய்யக்கூடிய வியபாரிகள் இருக்காங்க. அவங்களை மட்டும் சந்தைக்குள்ள விடுவோம். விவசாயிக விக்கறப்பயோ வாங்கறப்பயோ வியாபாரிக போட்டி போடக்கூடாதுனு, ஞாயிற்றுக்கிழமை காலையில 11 மணி வரைக்கும் விவசாயிகளை மட்டும் இங்க மாடுகள் வாங்க, விக்க விடுவோம். அதுக்குப் பிறகுதான் வியாபாரிகளைச் சந்தைக்குள்ள விடுவோம். கன்னுக்குட்டியோடு விற்பனை செய்யப்படுற தாய் மாட்டை, நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரோட புகைப்படத்துக்கு முன்னாடி நிறுத்தி பூஜை செஞ்சுட்டு அதுக்குப் பிறகு, அதை வாங்கினவங்களோடு அனுப்பி வைப்போம். இந்தச் சந்தையில 10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும், வேணுங்கற விலையில காங்கேயம் மாடுகளை வாங்கலாம்.

மதன்குமார்
மதன்குமார்

சினைமாடு வாங்குறதுக்காக இங்க வரக்கூடியவங்களுக்காக... நாங்களே 2 லட்சம் ரூபா செலவு செஞ்சு ஸ்கேன் மெஷின் வாங்கி வச்சிருக்கோம். நாம வங்கின மாடு உண்மையாவே சினையாதான் இருக்கானு இது மூலமா உறுதிசெஞ்சு வாங்கிக்கிட்டு போறதுனால ரொம்ப நிறைவோடு போறாங்க’’ என்கிறார் சிவக்குமார்.

இங்க வந்தா நிறைய கத்துக்கலாம்

மாடு வாங்க இங்கு வந்திருந்த மதன்குமார், ‘‘இந்த சந்தைக்கு 2017-ம் வருஷத்துல இருந்து வந்துகிட்டு இருக்கேன். நாட்டு மாடுகள் வளர்ப்புல எனக்கு ஆர்வம் அதிகம். மாடு வாங்க சுழி பார்க்குறது ரொம்ப முக்கியம்னு பெரியவங்க சொல்வாங்க. மாட பத்தி தெரியாதவங்ககூட, இங்க வந்தா, தன்னார்வலர்கள் மூலம் நிறைய கத்துக்கலாம். இங்க புரோக்கர்கள் இல்லாததுனால, மாடுகளை விக்க வர்ற விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்குது. வாங்க வர்றவங்களுக்கும் நியாயமான விலையில மாடுகள் கிடைக்குது’’ என்றார்.