Published:Updated:

`4 செடில ஆரம்பிச்சது; இப்ப 40 செடிகள்!' - மனோபாலாவின் மாடித்தோட்ட ரவுண்டப் - நட்சத்திரத் தோட்டம் - 1

மனோபாலா
மனோபாலா ( Photo: Sathishkumar.V / Vikatan )

பிரபலங்களின் மாடித்தோட்டம் குறித்த தகவல்களைத் தருவதற்காகவும், அவர்களின் தோட்டத்திற்கே உங்களை அழைத்துச் செல்லவும்தான் இந்த தொடர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நம் வீடுகளில் மட்டுமல்ல; சினிமா, அரசியல் பிரபலங்கள் மத்தியிலும் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கும் வழக்கம் இப்போது வளர்ந்து வருகிறது. அவர்களின் மாடித்தோட்டம் குறித்த தகவல்களைத் தருவதற்காகவும், அவர்களின் தோட்டத்திற்கே உங்களை அழைத்துச் செல்லவும்தான் இந்த தொடர். இந்த முறை இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் மாடித்தோட்டம் பற்றிப் பார்க்கலாம்.

terrace garden
terrace garden
Photo: Sathishkumar.V / Vikatan

``சின்ன வயசுல இருந்தே செடிகள் வளர்க்குறதுல ஆர்வம் கொஞ்சம் அதிகம். காலப்போக்குல நேரமில்லாம இருந்ததால செடிகளை வளர்க்க முடியலை. ஆனா, கடந்த மூணு வருசத்துக்கு முன்னால மாடியில எப்படியாச்சும் நாலு செடிகள் வச்சிடணும்னு நினைச்சேன். நாலு செடிகள்ல ஆரம்பிச்சது. இப்போ 40 தொட்டிகளுக்கும் மேல செடிகளை வச்சிருக்கேன்" - விகடன் பேட்டியில் மனோபாலா சொன்ன வார்த்தைகள் இவை. அவர் சொன்னது போலவே இப்போதும் மாடித்தோட்டத்தைச் செழிப்பாக வைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மூலிகைச் செடிகளைப் பராமரிக்க ஆரம்பித்தவர், படிப்படியாகக் காய்கறிகள், கீரைகள் என முழுமூச்சாக இறங்கியிருக்கிறார். 10 அடி நீளம், 10 அடி அகலம் என்ற அளவில் தக்காளி, கத்திரி, கேரட் மாதிரியான செடிகளுக்காகப் பிரம்மாண்டமான மேட்டுப்பாத்தி முறையை மாடியில் அமைத்திருக்கிறார். அந்த மேட்டுப்பாத்தியில் 4 தக்காளிச் செடிகளிலிருந்து இதுவரை 30 கிலோ தக்காளிக்கும் மேல் பறித்திருக்கிறார். இன்னும் காய்கள் காய்த்துக் கொண்டிருக்கின்றன. தனது மாடித்தோட்டத்தில் விளைந்த தக்காளியைச் சாப்பிட்டுப் பார்த்தவருக்கும் அதன் இயற்கையான சுவை பிடித்துப் போக இன்னும் அதிகமான காய்கறிகளைப் பயிரிட்டிருக்கிறார். முதன்முதலாக மாடித்தோட்டம் அமைக்கும்போது பூச்சித்தாக்குதல் இருக்குமே எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறோம் எனத் தயங்கியவருக்கு மாடித்தோட்ட ஆலோசகர்கள் நம்பிக்கை கொடுக்கவே அதைச் செயல்படுத்தியிருக்கிறார்.

510 ரூபாய்க்கு அரசின் மாடித்தோட்டம் கிட்... என்னென்ன இருக்கும்? - வீட்டுக்குள் விவசாயம் - 23

இவரது தோட்டத்தில் வெண்டை, கத்திரி, சோளம், கீரைகள், பூக்கள், வெள்ளரிக்காய், கருவேப்பிலை, கற்பூரவள்ளி, மணத்தக்காளி, முள்ளங்கி, புதினா, தூதுவளை, தட்டைப்பயறு, புடலை, முருங்கை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் இருக்கின்றன. மாடித்தோட்டத்துக்கு முன்னர் வரை தொண்டை கரகரப்பு, சளி உள்ளிட்ட காரணங்களுக்காக மற்ற மருந்துகளை எடுத்து வந்தார். மாடித்தோட்டம் அமைத்த பின்னர் கற்பூரவள்ளி இலையை இரண்டு பறித்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகி வருகிறார். அப்போதிருந்து சளித்தொல்லை, தொண்டை எரிச்சல் பக்கத்தில் வருவதே இல்லையாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடித்தோட்டம் அமைக்க முதலில் இடத்தைத் தேர்வு செய்திருக்கிறார். பொதுவாகவே மாடித்தோட்ட செடிகளுக்குக் கொஞ்சம் வெயில் தேவை என்பதால் இவர் நிழல் வலைக்குடில் அமைக்கவில்லை. அதற்காக ஆகும் செலவில் தொட்டிகளை வைத்துவிடலாம் என யோசனை உருவாகியிருக்கிறது. தொட்டிகள் அமைக்கும்போது பராமரிக்க எளிமையான தொட்டிகளை ஒருபுறமும், அதிக பராமரிப்பு தேவையான தொட்டிகளை ஒருபுறமும், குளிர்ச்சி தேவைப்படும் செடிகளைச் சுவர் ஓரமாக நிழல் படும் இடங்களிலும் வைத்திருக்கிறார். ஒவ்வொரு செடிக்கும் நன்றாக இடைவெளிவிட்டு, ஒரு பைக்குக் குறைந்தபட்சம் ஒரு செடி என்ற அளவில் வளர்க்கிறார். ஒரு பையில் மண்ணையும், தேங்காய் நார்க் கழிவுகளையும் வைத்துச் செடிகளை வளர்க்க வேண்டியிருக்கிறது. அதனால் பையில் ஒரு செடியை மட்டும் வைத்தால் அனைத்து சத்துக்களையும் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வளரும் என்பது இவரது எண்ணமாக இருக்கிறது. 15 நாள்களுக்கு ஒருமுறை பூச்சிகள் தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்துவிடுகிறார். தான் ஊரில் இல்லாத நேரங்களில் தனது அலுவலகங்களில் பணியாற்றும் நபர்களை வைத்துப் பராமரித்துக் கொள்கிறார்.

manobala's terrace garden
manobala's terrace garden
Photo: Sathishkumar.V / Vikatan
வீட்டிலேயே விளைவிக்கலாம் முள்ளங்கி, புதினா... வாங்க கத்துக்கலாம்! - வீட்டுக்குள் விவசாயம் - 5

பலரும் காய்களைக் கடையில் வாங்கி சமைக்க வேண்டியதுதானே என நினைக்கலாம். அவர்களுக்கு, ``மாடித்தோட்டத்தில் இயற்கையாகக் காய்களை விளையவைத்து அதைச் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் சுவை நீங்கள் காய்கறிக் கடைகளில் வாங்கி உண்ணும் காய்களுக்கு எப்போதுமே ஈடாகாது. இன்னொன்று செடிகள் வளர்க்கும்போது செடிகளுடன் பேசிக்கொண்டே பராமரிக்க வேண்டும். அதன் பின்னர் உங்களுக்கு இருக்கும் மன அழுத்தம் முற்றிலுமாகக் குறையும். மனதுக்கும் உடலுக்கும் சேர்த்து ஒருவிதமான ஆரோக்கியத்தைக் கொடுக்கவல்லது இந்த மாடித்தோட்டம். மாடித்தோட்டத்தால் வீடுகள் குளிர்ச்சி அடையும்.

நட்சத்திரத் தோட்டம்
நட்சத்திரத் தோட்டம்

அதனால் வீட்டில் ஏ.சி போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடும் குறையும். மாடித்தோட்டம் அமைத்து மூன்று வருடங்களில் நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. 400 சதுர அடியில் இருக்கும் மாடித்தோட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு ஏற்றதுபோல என் ஷூட்டிங் நேரங்களைத் திட்டமிட வேண்டும். எதிர்காலத்தில் நிலத்தில் விவசாயம் செய்யும் அளவுக்கு வாய்ப்புகள் வந்தால் மகிழ்ச்சிதான்" என பதிலளிக்கிறார், மனோபாலா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு