தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

வீட்டுத் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுத் தோட்டம்

தொகுப்பு: ரேவதி

கொரோனாவின் கோர முகத்தைப் பார்க்கும்வரை ஹோட்டல் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்த பலரும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு உணவுகளுக்கு மாறியுள்ளனர். வீட்டுச் சாப்பாட்டுடன் அலுவலகம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் வரவேற்கத்தக்க

விஷயம். ஊரடங்கு நாள்களில் வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து இயற்கை ஆர்வலர்களாக மாறியவர்களும் அதிகரித் துள்ளனர்.

ஒரு கெட்டது நடந்தால், ஒரு நல்லதும் நடக்கும் என்பார்கள். அதுபோல், இந்தக் கொரோனா சூழல், பலரையும் இயற்கையின் பக்கம் திருப்பிவிட்டுள்ளது. ஏற்கெனவே, இயற்கை சார்ந்த விழிப்புணர்வு பற்றி பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இந்த கொரோனா, அந்த விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. அந்த வகையில், சமையலுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் மூலிகைகளை நம் வீட்டுக்குள்ளே விளைவித்துக்கொள்வதன் மூலம் வரும் தலைமுறையினரின் ஆரோக்கியத்துக்கு நாம் அழகாக அஸ்திவாரமிட முடியும் என்று பலரும் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், கிச்சன் கார்டன் குறித்த ஏ டு இஸட் விஷயங்களை விளக்குகிறார்கள், தோட்டக்கலைத் துறை சார்ந்த நிபுணர்களும் வீட்டுக்குள் தோட்டம் அமைத்து வெற்றி கண்டவர்களும்.

வாருங்கள்... இயற்கையை இல்லத்துக்குள் வரவேற்போம்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

தோட்டம் அமைக்கத் தேவை இடமல்ல, மனம்!

``சாப்பிடும் உணவு சக்கையாக இல்லாமல் சப்புக்கொட்டி சாப்பிடும் அளவுக்கு ருசியாக, கூடவே சத்தானதாக இருந்தால் உடல் ஆரோக்கியம் பெருகும். அதற்கு ஒரே வழி, கிச்சன் கார்டனிங் அமைப்பதுதான்’’ என்கிறார் எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல்.

போதிய வருமானம் இல்லாத இன்றைய நிலையில், எந்த அளவுக்கு இயற்கையோடு நாம் இணைகிறோமோ அந்த அளவுக்கு உடல் மன ஆரோக்கியம் மேம்படும். செலவையும் மிச்சப்படுத்தலாம்.

வீட்டுக்குள் தோட்டம் அமைக்க ஆசைதான். ஆனால், அதற்கு இடம் இல்லை, தண்ணீர் அதிகம் செலவாகும் என்றெல்லாம் பலருக்கும் சந்தேகம் வரும். இதெல்லாம் பிரச்னையே இல்லை. மனம் இருந்தால் செடிகளுக்கும் வீட்டில் இடமுண்டு.

பொதுவாக, ஒரு செடி வளர்வதற்குத் தேவையானது ஓர் ஊடகம். அது பை, தொட்டி, சாக்கு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அடுத்து, அது வளரத் தேவையான சத்துகள், தண்ணீர் இவை மூன்றும்தான் அடிப்படை. இவை இருந்தால் போதும்; நமது விருப்பத்துக்கேற்ப விவசாயம் செய்யலாம்.

நிர்மல்
நிர்மல்

வாசல் முதல் வராண்டாவரை...

நாம் வசிக்கும் வீட்டில் எங்கெல்லாம் இடமிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். மாடிப்படிகள், பால்கனி, வராண்டா, வாசல் எனக் காலியாக இருக்கும் எந்த இடத்திலும் தொட்டிகள் அமைத்து வளர்க்கலாம். வெயில் படும்படியான இடமாக இருப்பது சிறப்பு. ‘வாடகை வீட்டில் இருக்கிறேன். நான் எப்படி செடி வளர்ப்பது’ எனக் கவலைப்பட வேண் டாம். வீட்டு காம்பவுண்ட் சுவரில் கீரை வளர்க் கலாம். நமது சுவருக்கேற்ப பிளாஸ்டிக் ஷீட் டில் குரோ பேக் போல தைத்துக்கொள்ளலாம்.

அதில் 30 சதவிகிதம் தேங்காய்நார்க் கழிவு (தேங்காய்நார்க் கழிவைப் பொறுத்தவரை, காயர்பித் / தேங்காய்நார் கம்போஸ்ட் ஆகிய வடிவில் பயன்படுத்துவதுதான் நல்லது. இவை கடைகளிலும் கிடைக்கும். செடிகளுக்கு ஏற்ற வகையில் அதைப் பண்படுத்தியிருப் பார்கள். நேரடியாகத் தேங்காய்நாரைப் பயன் படுத்தும்போது, அதிலிருக்கும் தேவையற்ற சில வேதிப் பொருள்கள் காரணமாக, செடி மற்றும் கொடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்), 30 சதவிகிதம் எரு (சாண எரு / மண்புழு உரம்), 40 சதவிகிதம் செம்மண் போட்டு கலந்து அதில் கீரை விதைகளைத் தூவலாம். 25 முதல் 40 நாள்களில் சமையலுக்குத் தேவையான கீரை கிடைத்துவிடும். பார்க்கவும் பசுமையாக அழகாக இருக்கும். காலையில் எழுந்ததும் பசுமை படர்ந்திருக்கும் செடி கொடிகளைப் பார்ப்பதே கண்களுக்குக் குளிர்ச்சி.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்
Explora_2005
நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

கீரைதான் ஆரம்பம்!

முதன்முறை மாடித்தோட்டம் அமைப்பவர்கள், எடுத்தவுடனே கத்திரி, தக்காளி சாகுபடியில் இறங்கக் கூடாது. அதில் ரிஸ்க் அதிகம். குறிப்பாக கத்திரியில் பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகமாக இருக்கும். எடுத்தவுடனே அதை நடவு செய்து, சோர்வு ஆகிவிடக் கூடாது. அதனால், முதலில் கீரை, வெண்டை, முள்ளங்கி, கொத்தவரை மாதிரியான குறுகிய காலப் பயிர்களை நடவு செய்ய வேண்டும்.

கீரை 25 முதல் 30 நாள்களில் அறுவடை முடிந்துவிடும். மற்ற காய்களும் 45 நாள்களில் ஒட்டுமொத்தமாக அறுவடையாகிவிடும். அதோடு இந்தப் பயிர்களில் பூச்சி, நோய்த் தாக்குதல் பெரிதாக இருக்காது. வேலையை ஆரம்பித்த உடனே பலனைப் பார்க்கும்போது மனசுக்குள் ஒரு மத்தாப்பு பூக்கும். அதுதான் உந்துசக்தி. இது, இன்னும் இன்னும் என உங்கள் ஆர்வத்தைத் தூண்டும்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

தண்ணீர்ப் பஞ்சமா... தேங்காய்நார்க் கழிவு கைகொடுக்கும்!

மாடித்தோட்டத்தில் மண் அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. அதுக்குப் பதிலாகத் தென்னைநார்க் கழிவுதான் (காயர்பித் / தேங்காய்நார் கம்போஸ்ட்) பயன்படுத்த வேண்டும்.

மண் அதிகமாகப் பயன்படுத்தும்போது மாடியில் எடை கூடிக்கொண்டே போகும். அது ஒருகட்டத்தில் கட்டடத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பலரும் மாடியில் மண்தொட்டி பயன்படுத்துகிறார்கள். அதுவே எடை அதிகம். அதில் மண்ணை வேறு கொட்டிவிடுகிறார்கள். வீட்டின் கீழ்ப்பகுதியில் நிலத்தில் மண் தொட்டி பயன்படுத்தலாம். ஆனால், மாடியில் மண்தொட்டி, மண் இரண்டையும் தவிர்ப்பது நல்லது.

அதேபோல மாடித்தோட்டத்தில் தண்ணீர் தேங்காமல் வடிந்து போவது போல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது அதற்குத் தனியாக சிமென்ட், பெயின்ட் எனப் பல டெக்னாலஜி பொருள்கள் கடைகளில் கிடைக்கின்றன.

இரண்டு பயிர் அறுவடை முடிந்த பிறகு, தென்னைநார்க் கழிவு உரத்தையும் மாற்றி விட வேண்டும். பையில் இருக்கும் தென்னைநார்க் கழிவு உரத்தை வெயிலில் கொட்டி நன்றாகக் காய வைக்க வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் தீமை செய்யும் நுண்ணுயிர்கள் அழிந்துபோகும். பிறகு, அதை ஒரு பையில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது, அதில் `டிரைக்கோடெர்மா விரிடி', `சூடோமோனஸ்' சேர்த்து ஊட்டமேற்றி பயன்படுத்த வேண்டும். தேங்காய்நார்க் கழிவு தண்ணீரை உறிஞ்சி தக்கவைத்துக்கொள்ளும் என்பதால் இரண்டு, மூன்று நாள்கள் நாம் வெளியூர் போனாலும் கவலைப்படத் தேவையில்லை.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

செடிகளுக்கும் தேவை சமூக இடைவெளி!

ஒரு பையில் ஒரு செடியைத்தான் வைக்க வேண்டும். அப்போதுதான் பயிரின் முழுமையான மகசூல் நமக்குக் கிடைக்கும். பொதுவாக, தக்காளி, கத்திரி இரண்டும் ஆறு முதல் எட்டு கிலோ வரை மகசூல் கொடுக்கும். ஆனால், ஒரே தொட்டியில் இரண்டு செடி வைத்தால், நிறைய காய்க்கும் என நினைக்கிறார்கள். அது தவறு.

ஒரு செடி மட்டும் இருந்தால் சத்துகளை முழுமையாக எடுத்துக்கொண்டு ஆறு கிலோ மகசூல் கொடுக்கும். அதே இடத்தில் இரண்டு செடிகள் இருக்கும்போது இரண்டும் சேர்ந்து நான்கு கிலோவுக்கு மேல் காய்க்காது. நமக்கு இரண்டு கிலோ மகசூல் இழப்பு ஏற்படும். அதே போல் ஒரே செடியாக இருந்தால் நான்கைந்து மாதங்கள்கூட செடி காய்க்கும். ஆனால், இரண்டு, மூன்று செடிகள் இருந்தால் மூன்று மாதத்துக்கு மேல் செடிகளில் மகசூல் எதிர்பார்க்க முடியாது.

கத்திரி, தக்காளி வளைந்து நெளிந்து போகாமல், நேராகப் போவது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். குட்டி மரம் போல் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல மகசூல் கிடைக்கும்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

மண்பானைகளிலும் செடிகளை வளர்க்கலாம்!

``வழக்கமாகப் பானையின் வாய்ப் பகுதியில்தான் செடிகளை வளர்ப்பார்கள். ஆனால், குழி விவசாயம் (Pole Farming) முறையில் பானை யின் பக்கவாட்டிலும் துளையிட்டு அதில் நாற்றுகளை நடவு செய்து பயிர் வளர்க்கலாம். இந்த முறையில் எனது வீட்டில் தக்காளி, மிளகாய், கத்திரி, வெண்டைக்காய் சாகுபடி செய்து மகசூல் எடுத்திருக்கிறேன்.

பானையில் துளை போட்ட பிறகு, உரக்கலவையால் நிரப்பி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிக்கொள்ள வேண்டும். அதில் நாம் பயிர் செய்ய வேண்டிய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நாற்றுகளை மேல் நோக்கி நேராகத்தான் நடவு செய்ய வேண்டும் என்பதில்லை. பக்க வாட்டிலும் நடவு செய்யலாம்.

நான்கு பானைகளில் 16 செடிகளை நடலாம். பானையில் மேல்பகுதியில் அழகு பூச்செடிகளை நடவு செய்தால் பார்க்க அழகாக இருக்கும். மேற்பகுதியில் மண்ணுக்குக் கீழே விளையக்கூடிய கிழங்கு வகை பயிர்கள், முள்ளங்கி போன்றவற்றை நடவு செய்யலாம். அந்தப் பயிர்களைப் பக்கவாட்டில் நடவு செய்யக் கூடாது. அப்படி நடவு செய்தால் சைஸ் பெரிதானால் அறுவடை செய்வதில் சிக்கலாகிவிடும்’’ என்கிறார் எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல்.

ஸ்ரீபிரியா கணேஷ்
ஸ்ரீபிரியா கணேஷ்

அடுக்குமாடிக் குடியிருப்பிலும் அசத்தலான தோட்டம்!

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் 32 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் ஸ்ரீப்ரியா கணேஷ். 10 வருடங்களுக்கு முன்பு, மொட்டை மாடியில் வீட்டுக்குத் தேவையான காய்கறி, மூலிகைகளைப் பயிரிட ஆரம்பித்தார். கடந்த நான்கு வருடங்களாக `ஸ்ரீ கார்டன் நீட்ஸ்' என்ற பெயரில் தோட்டம் அமைத்துத் தரும் தொழிலில் பிசியாக இருக்கிறார்.

கிச்சன் கார்டனிங் செட் பண்ணித்தருவது, ஏற்கெனவே வீட்டில் தோட்டம் இருந்தால் அதைப் பராமரித்துத் தருவது போன்றவற்றைச் செய்கிறார்.

``என் வீட்டு மொட்டைமாடியில் போட்டிருக்கும் காய்கறிகள், கீரை வகையைத்தான் நான் தினமும் பறித்து சமைத்துச் சாப்பிடுகிறேன். உடல்நலனில் அக்கறையுள்ளவர்கள், சிறிய இடம் கிடைத்தால்கூட சமையலுக்குத் தேவையான காய்கறிகள், மூலிகை களைப் பயிரிட்டுக் கொள்ளலாம். அதுதான் தலை முறைக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து’’ என்கிற ஸ்ரீப்ரியா, செடி கொடிகள் அமைப்பது குறித்து ஆலோசனைகள் தருகிறார்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

அழகான வரிசையில் அசத்தும் செடிகள்!

1,000 சதுர மொட்டை மாடியில் ஒரு பகுதியில் பூக்களையும், மற்றொரு பகுதியில் புடலங்காய், கொத்தவரங்காய், பச்சை மிளகாய், தக்காளி, பாகற்காய், பீர்க்கங்காய் எனக் காய்கறிகளையும் நேர்த்தியான வரிசையில் அழகாகப் பயிரிட்டிருக்கிறார் ஸ்ரீப்ரியா. கொடிகட்டி அதிலிருந்து புடலங்காய் தொங்குவது அழகோ அழகு. சுவரின் ஓர மூலைகளில் கீரை வகைகள் போட்டிருக்கிறார். தவிர, கற்பூரவள்ளி, துளசி, மஞ்சள், மணத்தக்காளி, வல்லாரை, வெற்றிலை எனப் பல்வேறு வகையான மூலிகைகளையும் வளர்க்கிறார்.

‘`பூஜைக்குப் பூக்கள், சமையலுக்குக் காய்கறிகள், கீரைகள், சுவைக்க பழங்கள், உடல்நலனுக்கு மூலிகைகள்... இவற்றை நிறைவாகப் போட்டிருப்பதால், எதையும் விலை கொடுத்து வெளியில் வாங்கியது இல்லை” என்கிறார் உற்சாகத்துடன்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

நேரடி நடவு கவனம்!

நேரடியாக விதையைப் பையில் நடவு செய்யக் கூடாது. அப்படி நடவு செய்தாலும் நேரடியாக வெயில்படக் கூடாது. தக்காளி, கத்திரி, மிளகாய் விதை மெல்லியதாக இருக்கும். மண்ணில் மேலாக வைத்துதான் மூடுவோம். அது முளைக்க ஈரப்பதம் முக்கியம். நடவு செய்யும்போது மண்ணில் ஊற்றும் தண்ணீரின் ஈரப்பதத்தை விதை உறிஞ்சி, பிறகு தான் முளைக்கும். அது முளைக்கும் வரை ஈரப்பதம் குறையாமல் இருக்க வேண்டும். வெயிலில் வைக்கும்போது, மண்ணின் ஈரப்பதம் போய், விதையிலும் ஈரப்பதம் போய்விடும். முளைக்காது. ‘என்னால ஈரப்பதம் போகாம பார்த்துக்க முடியும்’ என நினைப்பவர்கள் நேரடியாக நடவு செய்யலாம். அதற்கு இரண்டு, மூன்று விதைகளை நடவு செய்ய வேண்டும். முளைவிட்டதும், நன்றாக இருக்கும் செடியை விட்டுவிட்டு மற்ற செடிகளைக் கிள்ளி விட வேண்டும். இதில் கவனமாக இருந்தால் மாடித்தோட்ட விவசாயத்தில் நீங்களும் கில்லிதான்.

என்ன பயிரிடலாம்?

மாடித்தோட்டத்தில் பப்பாளி, முருங்கை, வாழை, மாதுளை, கொய்யா வளர்க்கலாம். ஆணிவேர் இல்லாத எல்லா பயிர்களையும் மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம்.

காய்கறிகள்

சீசனல் வெஜிடபிள்ஸ் பயிரிடலாம். எப்போதும் காய்க்கும் வெண்டைக் காய், கத்திரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தவரங்காய், கீரை வகைகளை விதைக்கலாம். கொடி வகைகளில் புடலங்காய், சுரைக்காய், பாகற்காய் விதைக்கலாம். மர வகையில் முருங்கை நடவு செய்யலாம்.

பழ மரங்கள்

பப்பாளி, வாழை, மாதுளை, எலுமிச்சை, நார்த்தங்காய், சப்போட்டா, கொய்யா, கிடாரங்காய், சீத்தா, டிராகன் ஃப்ரூட், வாட்டர் ஆப்பிள் போன்ற பழ மரங்களையும் வளர்க்கலாம்.

மருத்துவ மூலிகைகள்

கீழாநெல்லி, கற்பூரவள்ளி, கல்லுருக்கி, நித்திய கல்யாணி, இன்சுலின், ஆடாதொடா, எலுமிச்சை, நார்த்தங்காய், சப்போட்டா, கொய்யா, கிடாரங்காய், முருங்கை, கறிவேப்பிலை, இஞ்சி, வெற்றிலை, வல்லாரை, மணத்தக்காளி பயிரிடலாம்.

பூச்செடிகள்

அரளி, ரோஸ், மல்லிகை, முல்லை, செம்பருத்தி, நந்தியாவட்டை, பாரிஜாதம் போன்றவற்றை வளர்க்கலாம்.

காய்கறிகளுக்கு என்று ஒரு வகையான குரோ பேக், கீரைகளுக்கு ஓரளவு சிறிய குரோ பேக், பழச்செடிகள்/மரங்கள் வளர்க்கும்போது, ஊடகம் பெரிதாக இருக்க வேண்டும். பழைய இரும்புக்கடைகளில் பெரிய டிரம்கள் வாங்கி வந்து, அவற்றில் நடவு செய்ய வேண்டும். செடிகளின் அமைப்பு, வளர்ச்சியைப் பொறுத்து தேர்வு செய்வதன் மூலம், இடத்தை வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

வெங்காயம்தான் வாட்ச்மேன்!

நாம் எந்தப் பயிர் செய்தாலும் சரி, ஒவ்வொரு தொட்டியிலும் ஒரு சின்ன வெங்காயம் நடவு செய்ய வேண்டும். வெங்காயம் வளர்ந்து நமக்கு மகசூல் கொடுக்காவிட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படக் கூடாது. ஆனால், ஒவ்வொரு தொட்டியிலும் ஒரு வெங்காயச் செடி கட்டாயம் இருக்க வேண்டும். இது செடிக்கான வாட்ச்மேன். தொட்டியில் இருக்கும் செடிக்குப் பாதுகாப்பாக இந்தச் சின்ன வெங்காயம் இருக்கும். இதன் மூலம் நோய்த் தாக்குதல் குறையும்.

மாடித்தோட்டத்தில் பூக்கள், மூலிகைகள் அதிகம் வளர்க்கலாம். பலர் காய்கறிகளை மட்டும்தான் வளர்க்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. வீட்டுத்தோட்டத்தைச் சுற்றிலும் செண்டுமல்லி இருக்க வேண்டும். அது பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும். அதனால் பிரதான பயிருக்குப் போகும் பூச்சி, செண்டுமல்லிக்குப் போய்விடும். பிரதான பயிருக்கு எந்தப் பிரச்னையும் வராது.

தக்காளி நடவு செய்த பையில் கொத்தமல்லி நடவு செய்யலாம். தக்காளி வருவதற்குள் கொத்தமல்லி அறுவடைக்கு வந்துவிடும். அதேநேரம் தக்காளியைத் தாக்கக்கூடிய வேர் சம்பந்தமான புழுக்களைக் கொத்த மல்லி செடி அழித்துவிடும். காய்கறி பயிர்களுக்கு இடையில் அவரைக் குடும்ப பயிர்களை நடவு செய்யலாம். குத்து அவரை, கொத்தவரை செடிகளை நடவு செய்தால் பூச்சிகளை இந்தச் செடிகள் கவர்ந்து இழுக்கும். பிரதான பயிருக்கு எந்தச் சிக்கலும் வராது.

இப்படி ஒவ்வொரு செடியையும் தாக்கக்கூடிய பூச்சிகளுக்கு எதிரான வினைபுரியக்கூடிய செடிகள் இருக்கின்றன. அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதை ஒவ்வொரு செடியிலும் நட வேண்டும்.

ஷேடு நெட் அவசியமில்லை!

`ஷேடு நெட்’ என்ற நிழல்வலை நமது ஊருக்குத் தேவையில்லாதது. இன்றைக்கு அது ஃபேஷன் ஆகிவிட்டது. நமது பயிர்கள் நிழலில் வளரக்கூடிய பயிர்கள் இல்லை. எல்லாமே வெப்ப மண்டல பயிர்கள்தான். அந்தத் தாவரங்களில் முழுக்க முழுக்க வெயில்பட்டால்தான் நன்றாக வளரும். அதனால்தான் மொட்டை மாடியில் வைக்கிறோம்.

‘ஷேடு நெட்’ போடும்போது தேவையான சூரிய ஒளி கிடைப்பது இல்லை. செடி வளரும். ஆனால், நமது தேவையை நிறைவேற்றாது. ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்குமான இடைவெளி அதிகரிக்கும். தேவையான மகசூல் கிடைக்காது. வாளிப்பான தரமான காய்கறிகள் கிடைக்காது.

‘சரி அப்ப `ஷேடு நெட்’ பயன்படுத்தக் கூடாதா?’ என ஒரு கேள்வி வரலாம். எந்தெந்தத் தாவரங்கள் பூக்காதோ, அந்தத் தாவரங்களுக்குப் பயன்படுத்தலாம். புதினா, கொத்தமல்லி, கீரை போன்ற பூக்காத தாவரங்களை வளர்க்கலாம். தக்காளி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட பூப்பூத்து காய்காய்க்கும் பயிர்களை வெயிலில்தான் வைக்க வேண்டும். இதுதான் மாடித்தோட்டத்தின் அடிப்படை.

தொட்டியா... பையா?

பிளாஸ்டிக் தொட்டிகள் வெயில்பட்டு உருகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சிமென்ட் தொட்டிகள் நாளாக நாளாக உடைந்துவிடும். தவிர, தொட்டிகள் அதிக கனமாக இருப்பதால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாற்றிவைப்பது சிரமம். இதற்கெல்லாம் மாற்றாக வந்திருப்பவைதான் குரோ பேக்ஸ். தார்பாலின் குரோ பேக்ஸ் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கின்றன. இவை ஏழு வருடங்கள் வரை கலர் மாறாது, கிழியாது.

பூச்சி பிரச்னைக்கு மஞ்சள் வண்ண அட்டை போதும்!

பூச்சி தாக்குதலைத் தடுக்க மஞ்சள் வண்ண அட்டைகள் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கின்றன. அதைத் தோட்டத்தில் ஆங்காங்கே

கட்டித் தொங்கவிடலாம். பூச்சிகள் இந்த அட்டையில் ஒட்டி இறந்து போய்விடும். இது சாதாரண விஷயம். இதையும் பலர் செய்வதில்லை. மஞ்சள் அட்டையைக் கடையில் போய் வாங்க யோசிப்பவர்கள், ஒரு தகரத்தில் மஞ்சள் கலர் பெயின்ட் அடித்து, அதில் எண்ணெய் அல்லது கிரீஸ் தடவி அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கட்டி வைக்கலாம்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

இயற்கையே இனிது!

குரோ பேக்கில் மண்ணை அப்படியே போட்டுவிடக் கூடாது. செடி வளர்க்கத் தேவையான மண் கலவையை நாம் தயாரிக்க வேண்டும். 30 சதவிகிதம் தேங்காய்நார்க் கழிவு, 30 சதவிகிதம் எரு (சாண எரு அல்லது மண்புழு உரம்) 40 சதவிகிதம் செம்மண் போட்டு கலந்து கொள்ள வேண்டும். அந்த மண் கலவையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

தேங்காய்நார் இல்லாமல் வெறும் செம்மண், எரு மட்டும் போடும்போது மண் இறுகிவிடும். செடிகள் வேர் விடுவதற்கு சிரமமாகிவிடும் (தொட்டிகள் இல்லாமல் வெறும் மண் தரையில் பயிரிடும்போது, மண்ணில் பல்வேறு நுண்ணுயிரிகளும் மண்புழு போன்றவையும் தானே உருவாகி வேலை செய்வதால் இந்தப் பிரச்னை இருக்காது). மேலும், செம்மண் போடுவதால் எடை அதிகரிக்கும். தேங்காய்நார் போடும்போது அதிகம் எடை தெரியாது. வேறு இடத்துக்கு நகர்த்தி வைப்பதும் எளிது.

விதை நடவு செய்த பிறகு, செடி வளர ஆரம்பிக்கும். வீட்டில் தினமும் கிடைக்கும் காய்கறிக் கழிவுகளைத் தனியாக ஒரு தொட்டியில் சேகரித்து, மட்கவைத்தால் கம்போஸ்ட் இதமாக மாறிவிடும். அதைச் செடிகள் இருக்கும் ஒவ்வொரு தொட்டியிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் போட்டுக்கொண்டே வர வேண்டும். அது உரமாகி விடும்.

அரிசி கழுவும் தண்ணீரில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் இருக்கின்றன. அதைச் செடிகளுக்கு ஊற்றலாம். அந்தத் தண்ணீரை அப்படியே ஊற்றாமல் அதில் ஒரு லிட்டருக்கு 50 கிராம் மண்டை வெல்லத்தைப் போட்டு வேடு கட்டி வைக்க வேண்டும். இரண்டு நாள்கள் கழித்து அந்தத் தண்ணீரை எடுத்து, செடிக்கு ஊற்றினால் வளர்ச்சி அருமையாக இருக்கும்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்
Patrick Daxenbichler

பொதுவாக, மாடித்தோட்டத்துக்கு மண்புழு உரம் ஒன்று மட்டும் போட்டால் போதும் எனப் பலரும் நினைக்கிறார்கள். மண்புழு உரத்தில் நல்ல சத்துகள் இருக்கின்றன. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது மட்டுமே பயிருக்குப் போதாது. வீட்டில் இருக்கும் குழந்தையைக் கொண்டுபோய் ஹாஸ்டலில் சேர்த்திருப்போம். அங்கேயும் சாப்பாடு தருவார்கள். ஆனால், அது நமது குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. அதனால் நாம் என்ன செய்வோம். வாராவாரம் குழந்தையைப் பார்க்கப்போகும்போது வீட்டில் ஏதாவது செய்து எடுத்துக் கொண்டு போய்க் கொடுப்போம் இல்லையா... அப்படித்தான் பயிரையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை செடிக்கு ஊட்டச்சத்து கொடுத்தே ஆக வேண்டும். ஏனென்றால் மண்ணை அதன் பூர்வீக இடத்திலிருந்து எடுத்து வந்து தனிமைப்படுத்தி பயன்படுத்துகிறோம். அப்போது, அதில் இருக்கும் சத்து மட்டும்தான் இருக்கும். பிள்ளைகள் ஹாஸ்டலில் இருப்பதுபோல. அதுக்கு தேவையான சத்துகளை நாம்தானே கொடுக்க வேண்டும்? ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதற்கு ஒதுக்க வேண்டும். மாதம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் வரும். அதில் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகள் பூச்சி மேலாண்மைக்கும், இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் சத்துக்காகவும் வைத்துக்கொள்ளலாம்.

முதல் வாரம் மண்புழு உரம் கொடுக்க வேண்டும். இரண்டாவது வாரம் வேப்ப எண்ணெயைக் காதி சோப் கலந்து செடிகள் மீது

தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் செடியில் ஒட்டாமல் போய்விடக் கூடாது. அதற்காகத்தான் காதி சோப். மூன்றாவது வாரம் பஞ்சகவ்யா கொடுக்கலாம். அதை வேருக்கும் கொடுக்கலாம். இலை வழியாகவும் தெளிக்கலாம். நான்காவது வாரம், மூலிகைப் பூச்சி விரட்டி அடிக்கலாம். இதைத் தொடர்ந்து சுழற்சி முறையில் செய்ய வேண்டும். பயிரில் பூச்சி வரவில்லை. நோய் இல்லை என யோசிக்காமல், இதைச் செய்துகொண்டே இருந்தால் பூச்சி, நோய்த் தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. இதைத்தான் வருமுன் காப்போம் எனச் சொல்கிறார்கள்.

வேர்க் கறையான் வராமல் இருப்பதற்காக வேப்பம் பிண்ணாக்கைத் தூளாக்கி செடிகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும். இது பயிர் வளர்ச்சிக்கும் ஊக்கமாக இருக்கும். உரம் கொடுத்தால் உடனே பாசனம் செய்ய வேண்டும். செடிகளில் காரம், கசப்புத் தன்மையை ஏற்படுத்த வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசலை அடிக்கடி தெளிக்க வேண்டும். இப்படி பல நுணுக்கங்கள் இருக்கின்றன. அவற்றைக் கையாண்டால் போதும். மாடித் தோட்டத்தில் மகத்தான மகசூல் எடுக்கலாம். தினமும் அரை மணி நேரம், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும்.

தினமும் தண்ணீர் விட வேண்டுமா?

இரண்டு வேளைகள் தண்ணீர் விட வேண்டும் என்பதில்லை. அந்த மண்ணை தொட்டுப் பார்த்தால் ஈரப்பதத்துடன் இருந்தால் தண்ணீர் விட வேண்டிய அவசியமில்லை. காய்ந்திருப்பது போன்று தெரிந்தால் தண்ணீர் விட வேண்டும்.

ரெடி... ஸ்டார்ட்...

தோட்டம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் முதலில் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ஜன்னல் ஓரம், பால்கனி, மொட்டை மாடி, காம்பவுண்ட் சுவர் என எங்கு வேண்டுமானாலும் செடிகள் வளர்க்கலாம். வாடகை வீட்டில் இருந்தால் உரிமையாளரிடம் அனுமதி பெறுவது நல்லது.

என்னென்ன பயிரிடலாம் என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். எந்தச் செடியை அமைக்க இருக்கிறோமோ அதன் பலன்கள் என்னென்ன, அது எத்தனை நாள்களுக்குள் வளரும் என்பது பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கும் செடி தரும் பலன்களை அப்படியே பாடமாக நடத்திவிடலாம். அவர்களும் ஆர்வம் காட்டத் தொடங்கிவிடுவார்கள்.

காய்கறித் தோட்டம் போடுவது ஒரு முதலீடு போன்றுதான். அது பின்னால், கொடுக்கும் பலன்கள் ஏராளம். முதலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டிவிட்டு பின்னால், கண்டு கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு. பராமரிப்பு என்பது ஒரு கலை. அதிகபட்ச பொறுமை, ஆர்வம் இருக்க வேண்டும். வீட்டில் குழந்தையைப் பராமரிப்பது போல், தினமும் செடி கொடிகளைக் கவனிக்க வேண்டும்.

கீரை போட்டால் ஒரு மாதம் முதல் 45 நாள்களுக்குள் எடுத்துவிடலாம். அஞ்சறைப் பெட்டிக்குள் இருப்பதையே விதைத்து ஆரம்பிக்கலாம். வெந்தயத்தை ஒரு பிடி எடுத்துப் போட்டீர்கள் என்றால் சட்டென்று வெந்தயக்கீரை வளர்ந்துவிடும். தனியா விதைகளை உடைத்து, தூவினால் கொத்தமல்லி நன்றாக வளரும். காய்ந்த மிளகாயின் விதைகளைத் தூவி விடலாம்.

டிப்ஸ்...

இரும்புச் சத்து குறைபாடுள்ள பயிர்களில் இலைகள் மஞ்சள் நிறக்கோடுகளோடு இருக்கும். அதற்கு முருங்கையிலை, வாழைப்பழத்தோல் இரண்டையும் பச்சையாக மிக்ஸியில் அடித்துத் தெளித்தால் இந்தக் குறைபாடு சரியாகிறது. வாழைப்பழத்தோலில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது. இப்படி நமது வீட்டில் இருக்கும் பொருள்களைப் பயன்படுத்தி பூச்சி, நோயைக் கட்டுப்படுத்தி காய்கறிகளை உற்பத்தி செய்தால் வீட்டுத் தோட்டம் உண்மையிலேயே நமது உடலுக்கும் பொருளாதாரத்துக்கும் ஆரோக்கியமானதுதான்.

இரண்டு சீசனில் நீங்களும் விவசாயி!

பொதுவாக ஒரு பயிரில் பூ எடுக்கும்போது, பிஞ்சு வரும்போது, காய் காய்க்கும்போது என்னென்ன பூச்சி, நோய்த் தாக்குதல் ஏற்படுகிறதோ அதுதான் ஒவ்வொரு முறையும் இருக்கும். அதனால் இரண்டு சீசனுக்கு குறைந்த பயிர்களை வளர்த்தால், அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். செடி வளரும்போது என்ன மாதிரியான பாதிப்பு வருகிறது, பிஞ்சு வரும்போது என்ன பாதிப்பு வரும், காய், பழம் வரும்போது என்ன பாதிப்பு வரும் என அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். அவற்றை ஒரு டைரியில் எழுதி வைக்க வேண்டும். இரண்டு சீசனில் ஒரு பயிரைப் பற்றிய முழுமையான பூச்சி, நோய்த் தாக்குதல் விவரங்கள் நமக்கு கிடைத்துவிடும்.

பயிர்களுக்குத் தேவையான உரத்தை நமது வீட்டில் கிடைக்கக்கூடிய கழிவுகளில் இருந்து தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம். 100 லிட்டர், 50 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பேரல் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதன் அடியில் 3 இன்ச் உயரத்துக்கு மரத்தூள் அல்லது பேப்பர் பரப்பி விட வேண்டும். அதற்கு மேல காய்ந்த இலைதழைகளைப் போட வேண்டும். அதற்கு மேல் காய்கறி கழிவுகளைப் போட்டு புளித்த மோரை தெளித்து விட வேண்டும். இது ஒரு லேயர். அடுத் தடுத்து போடக்கூடிய காய்கறிக் கழிவுகளை இதே போலத் தான் போட வேண்டும்.

இரண்டாவது முறை போடுவதற்கு முன் பழைய கழிவுகளை லேசாக கிளறி விட்டுத்தான் அடுத்த லேயர் போட வேண்டும். இப்படி ஒவ்வொரு லேயராக பேரல் நிறையும் வரை போட வேண்டும். அது நிறைந்ததும் மூடி ஓரமாக வைத்துவிடலாம். மூடிகளில் லாக் இருப்பது போன்ற பேரல்கள் இப்போது கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். இரண்டு பேரல்கள் வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று நிரம்பியதும் அடுத்த பேரலில் கழிவுகளைக் கொட்டலாம். முதல் பேரலை 30 நாள் களுக்குப் பிறகு, எடுத்து உள்ளே இருப்பதை உரமாகப் பயன்படுத்தலாம்.

ஒரே குடும்பம் ஒன்றாக இருக்கக் கூடாது!

மாடித்தோட்டத்தில் ஆர்வக்கோளாறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களை அருகே அருகே நடவு செய்துவிடுகிறார்கள். அப்படி செய்யக் கூடாது. உதாரணமாக, தக்காளி, கத்திரி, மிளகாய் இவை மூன்றும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒரே அப்பார்ட்மென்ட்டில் அண்ணன், தம்பி, அக்கா வீடுகள் இருக்கின்றன என வைத்துக்கொள்ளுங்கள். அண்ணன் வீட்டுக்கு வரும் உறவினர்கள் நமது வீட்டுக்கும் வருவார்கள்‌. அக்கா வீட்டுக்கும் செல்வார்கள்தானே... அதுதான் இங்கேயும் நடக்கிறது. தக்காளிச் செடிக்கு வரும் பூச்சி கத்திரிக்கும் போகும். மிளகாய்க்கும் போகும். ஆக ஒரு பயிருக்கு வரும் பூச்சியை இன்னும் இரண்டு பயிருக்குப் போயிட்டு வாங்க என அனுப்பும் வேலைதான் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த பயிர்களை அருகே அருகே வைப்பதால் நடக்கிறது. அதனால் இந்த மூன்று பயிர்களையும் அருகே அருகே வைக்கக் கூடாது.

நமக்கு இருப்பதோ குறைவான இடம். இதில் எப்படித் தள்ளித்தள்ளி வைப்பது என யோசிக்கிறீர்களா... தக்காளியை அடுத்து வெண்டைக்காய் வைக்கலாம். இது வேறு குடும்பத்தைச் சேர்ந்தது. தக்காளிக்கு வரும் பூச்சி இதற்குப் போகாது. தக்காளி செடியில் இருந்து நான்கு அடி தள்ளி கத்திரிக்காய் செடி வையுங்கள். அதில் இருந்து நான்கு அடி தள்ளி மிளகாய் செடியை வையுங்கள். இவற்றுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் மற்ற பயிர்களை வையுங்கள்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

பந்தல்... பாதுகாப்பு!

கொடி வகைகளுக்கு நான்கு பக்கங்களிலும் கம்பை நட்டு பந்தல் போட்டுக்கொள்ளலாம். கொடிகள் நன்றாக மேல்நோக்கிப் படர்வதற் கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம்.

தவிர, வெயில் நாள்களில் பந்தல் அமைப்பு சூழலுக்கு ஒருவிதக் குளிர்ச்சியையும் தரும். பந்தல் அமைக்க இடவசதி இல்லாதவர்கள், சுவர் ஓரமாகக் கம்புகளை வரிசையாக

நட்டு, அதில் கயிற்றைக் குறுக்கும் நெடுக்கு மாகக் கட்டி அதில் கொடி வகை பயிர்களை ஏற்றி விடலாம். அது பசுமை சுவர் போலவும் பார்க்க அழகாக இருக்கும்.

300 ரூபாயில் முதல் அடி...

இடத்தின் அளவைப் பொறுத்து கிச்சன் கார்டனிங் அமைத்துக் கொள்ளலாம். நடுத்தர வர்க்கத்தினருக்கு அவரவர் வசதிக்கேற்ப

300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை காய்கறிச் செடி, கொடிகளுடன் வீட்டுத் தோட்டம் அமைத்துக்கொள்ள முடியும்.

பூப்பூக்கும் ஓசை!

மாடித்தோட்டத்தில் செடிகளை வைத்துவிட்டால் போதும். தானாகக் காய்த்துவிடும் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், மகரந்தச் சேர்க்கைக்கான வாய்ப்பை நாம ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு உதவி செய்வது பூக்கள்தான். குறிப்பாக, செம்பருத்தி செடிகளை ஆங்காங்கே வைத்தால் போதும். அது மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதே போல, செண்டுமல்லி பூ மகரந்தச் சேர்க்கைக் கும் உதவி செய்யும், பூச்சிக் கட்டுப்பாட்டிலும் உதவி செய்யும்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

வீட்டுத் தோட்டம்... உற்சாகத்தின் உச்சம்! - நடிகை சீதா

குழந்தைகளைப் பராமரிப்பது போல், தோட்டத்தைப் பார்த்துக்கொள்பவர் நடிகை சீதா. அவரின் அனுபவங்கள், தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு நிச்சயம் உற்சாகமும் ஊக்கமும் தரும்.

‘`தோட்டம் வளர்ப்பதும் பராமரிப்பதும் ஒரு கலை. செடியோட முக வாட்டத்தைக் கூட நான் நொடியில கண்டுபிடிச்சிடுவேன். அதுங்ககூட பேசுவேன். பாடலைப் போட்டு ரசிப்பேன்’’ என்று உற்சாகத்துடன் பேசும் சீதா, தோட்டம் அமைத்ததற்கான அனு பவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

‘`சின்ன வயசுலேந்தே செடி கொடிகளோடுதான் நான் வளர்ந்தேன். ரொம்ப ஆர்வமா வளர்ப்பேன். ரொம்ப நாளா தோட்டம் அமைக்கணும்னு ஆசை மனசுல இருந்தது. என் வீட்டு மொட்டை மாடி ரொம்ப பெரிசு. என்னோட ஃபேமிலி ஃப்ரெண்ட், அக்ரிகல்சர் ஆபீசர் ஒருத்தர் இரண்டரை வருஷத்துக்கு முன்னால வந்திருந்தார். ஏம்மா... இவ்வளவு பெரிய இடத்தை சும்மா போட்டிருக்கீங்க... காய்கறித் தோட்டம் போட வேண்டியதுதானேன்னு கேட்டார். நான் ரொம்பவும் குஷியாயிட்டேன். உடனே முழு மூச்சா இறங்கிட்டேன். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தத் தோட்டம்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

முதல்ல கீரை, காய்கறிகள். சாமிக்கு போட பூச்செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். முதல் பூ, கீரை, காய்னு அவை வளர்ந்து வருவதைப் பார்த்ததும்... நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

தொட்டி, மண் வாங்கி நானே பத்து பத்தா செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். அப்படியே அதிகரிச்சுட்டே வந்தேன். கரும்பு, சோளம், வாழைக்காய்னு இன்னிக்கு என்கிட்ட இல்லாத செடி கொடிகளே இல்லை. வீட்டில் பறிச்ச கத்திரிக்காய், தக்காளி போட்டு சாம்பார் வெச்சா... தெருவே மணக்கும்.

நடிகை சீதா, தன்னுடைய வீட்டுத்தோட்டம் பற்றி பசுமை விகடன் யூடியூப் தளத்தில் பகிர்ந்ததை பார்த்துப் பயன்பெற,

அக்கறை இருந்தால் போதும், ஆரோக்கியம் நம் வசம்தான்!

முதல்ல உரம் பண்றது எப்படின்னு தெரியலை. அதையும் கத்துக் கிட்டேன். இப்ப இயற்கை உரமான பஞ்சகவ்யத்தையும் நானே தயாரிக்கிறேன். சருகு, காபி பொடி, காய்கறிக் கழிவுகள், பழத் தோல்கள் எல்லாத்தையும் தனியா சேமிச்சு உரமாக்கி, கொஞ்சம் மண் புழு உரம் வாங்கி கலந்துப்பேன்.

தோலுடன் தட்டின பூண்டு, அதே அளவு வெல்லத்தைச் சேர்த்து ஒரு துணியில் கட்டி வெச்சிடுவேன். 40 நாள்கள் அப்படியே வெச்சிருந்தால், பூண்டு வெல்லத்தில் கரைஞ்சிடும். அதில் கொஞ்சம் போல் எடுத்து தண்ணீர் சேர்த்து ஸ்ப்ரே பண்ண வேண்டியதுதான். உரம் போட்டு மூணே மாசத்துல காய்கறிகளை எடுக்கலாம்.

தொட்டியில வைக்கிறதால மழை வந்தா மண் கரைஞ்சு நொச நொசனுஆகிடும். அதுக்காக மண்ணை மாத்தணும்ங்கிறது இல்லை. கொஞ்சம் மண்ணை எடுத்து அதில் மண் புழு உரம், சாணம், வேப்பம் பிண்ணாக்கு போட்டு கலந்து நல்லா கொத்திவிட்டுட்டு மறுபடி போடணும். நீரும் தங்காது. செடிகளுக்குள்ளேயே பரவிடும்...’’ அனுபவங்களையும் பராமரிப்பு டிப்ஸையும் பகிரும் சீதாவுக்கு அவரது தோட்டத்தில் செலவிடும் நேரம்தான் உற்சாகத்தின் உச்சமாம்.

``நாலு நாள் நான் வெளியூர் போனா செடி கொடிகளைப் பார்க்காத ஏக்கம் ஆரம்பிச்சிடும். வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், முதல்ல மொட்டை மாடிக்குதான் போவேன். அதுங்களும் எனக்காக ஏங்கி காத்திட்டிருக்கிறதை உணர்வேன். தோட்டம் வெச்சு, செடி, கொடிகளைப் பராமரிச்சுப் பாருங்க... அது வேற லெவல் உற்சாகம்...’’ உணர்ந்து சொல்கிறார் சீதா.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

மாடித்தோட்ட ஆலோசனை முதல் மண்புழு உரம் தயாரிப்புவரை

மாடித்தோட்ட வல்லுநரும் மண்புழு விஞ்ஞானியுமான முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் வீட்டிலேயே தோட்டம் அமைத்து, மண்புழு உரம் தயார் செய்து வருகிறார். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற் கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். வீட்டுத்தோட்டத்தால் கிடைக்கும் விளைபொருள்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இவர் தரும் தகவல்கள் அனைத்தும் பொக்கிஷம். தேவைப் படுபவர்கள், தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் இவரைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு... sultanismail@gmail.com

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

உதவக் காத்திருக்கிறது அரசு!

தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மிகக் குறைந்த விலையில் (Roof Garden Kit) பேக் ஒன்றை தருகிறது. தோட்டம் அமைப்பதற்குத் தேவையான பொருள்களை சலுகை விலையில் வெறும் ரூ.510-க்கு வழங்குகிறது. விதை, உரம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய காய்கறி கிட் இதில் இருக்கும். மாடித்தோட்ட இயக்கம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த பேகினுள் ஆறு குரோ பேக் (செடி கொடிகள் வளர்ப்பதற்கான பை), தேங்காய் நார்க் கழிவு, உயிர் உரங்கள், வேப்பெண்ணெய், ஆறு வகையான காய்கறி விதைகள் (வெண்டை, முருங்கை, கத்திரி, அரைக்கீரை, மிளகாய், தக்காளி) இருக்கும்.

எப்போது அறுவடை செய்யலாம், எத்தனை நாள்களில் வளரும் என்பது பற்றிய அனைத்து விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றும் இருக்கும்.

வெயிலின் கொடுமையிலிருந்து செடிகளைக் காக்க உதவும் வலை யையும் மிக மலிவான விலையில் தருகிறது அரசு. அந்தந்தப் பகுதி வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகம் மூலம் பெறலாம்.

கொய்யா, சப்போட்டா போன்ற பழ விதைகளை அரசு தோட்டக்கலை பண்ணைகளில்தான் வாங்கிக்கொள்ள வேண்டும்.

510 ரூபாயில் விற்பனையாகும் இந்த கிட்டை வாங்க விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் மற்றும் தோட்டக் கலைத்துறை விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

எச்சரிக்கை: விதைகள் மற்றும் உயிர் உரங்கள் காலாவதியான பிறகும் விற்பனை செய்யப்படுவதால், வாங்கும்போது அதன் காலாவதி தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும்.

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

கார்டன் ஷாப்பிங்!

கார்டன் அமைக்கத் தேவையான உபகரணங்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் பண்ணலாம். தோட்டம் அமைக்கத் தேவையான உபகரணங்களைத் தெரிந்துகொள்ளவும் வாங்கிப் பயனடையவும் உங்களுக்கான கிச்சன் கார்டனிங் ஷாப்பிங் டிப்ஸ்...

இரண்டு பூந்தொட்டியுடன் கூடிய இரண்டு மெட்டல் பாட் ஸ்டாண்ட் விலை ரூ.780/-

ஆறு குரோ பேக் விலை ரூ.750/-

10 குரோ பேக் செட் விலை ரூ.1,050/-

மண்ணைக் கிளறிவிடவும்... மற்ற தேவைகளுக்குமான ஐந்து பொருள்கள் அடங்கிய செட் விலை ரூ. 260/-

மண்ணைப் பரப்பி சரிசெய்ய உதவும் மரப்பிடியினால் ஆன மூன்று செட் பிளேடின் விலை ரூ.320/-

Small, Medium, Large என மூன்று அளவுகளில் இருக்கும் ஒரு செட் க்ரீன் ஹவுஸ் நெட்டின் விலை ரூ.550/-

கத்தரிக்கோல் மற்றும் கட்டர் செட்டின் விலை ரூ.260/-

மண்ணில் விதைகளைப் போட்டு நிரப்பி, கிளறும் அகப்பை விலை ரூ.150/-

மூன்று தொட்டிகள் வைக்கும் அளவிலான மெட்டல் ஸ்டாண்ட் விலை ரூ.1,300/-

பால்கனியில் பூந்தொட்டி வைப்பதற்கான இரும்பு ஸ்டாண்ட் (4) விலை ரூ.490/-

29 இஞ்ச் அளவிலான ஸ்ட்ரெய்ட் இரும்பு ஸ்டாண்ட் (4) விலை ரூ.1,500/-

தொட்டிகளைத் தொங்க விட ஏதுவான மெட்டல் ஹேங்கிங் ஸ்டாண்ட் (4) விலை ரூ.600/-

செடிகளுக்கு தண்ணீர் நிரப்பி ஊற்றுவதற்கான இரண்டு லிட்டர் கேன் விலை ரூ.400/-

ஒரே ஸ்டாண்டில் பத்து ஜாடிகளை வைக்கக்கூடிய மல்டி பர்ப்பஸ் ஸ்டாண்ட் விலை ரூ.3,000/- முதல்

நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள்

வாடிய செடிகளுக்கு இளநீர்!

வெளியூர் சென்று திரும்புகையில், செடிகள் வாடிவிட்ட மாதிரி தோன்றினால் கவலைப்பட வேண்டாம். நம் உடலுக்கு எப்படி இளநீர் குளிர்ச்சியைத் தருகிறதோ, அதுபோல் செடிகளுக்கு இளநீர் புத்துணர்ச்சியைத் தரும். இரண்டு தேங்காய்களின் இளநீரை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வாடிய செடிகள் மீது தெளித்துவிட்டால் போதும்.

சில மணி நேரத்தில், செடிகள் புத்துணர்ச்சியுடன் பச்சைப் பசேலென மாறிவிடும்.