Published:Updated:

"இப்போதான் புரிஞ்சுது!" - விவசாயிகளைக் கைவிட்ட தனியார் நிறுவனங்கள்... ஆதரித்த ஆவின்!

பால் கொள்முதல்
பால் கொள்முதல்

பாலை சொஸைட்டிக்குக் கொண்டு வர்றதுல சிரமம் இருக்குது'ன்னு சொன்னேன். அதுக்கு, 'கவலைப்படாதீங்க, வீட்டுலேயே வந்து எடுத்துக்குறோம்'னு சொன்னாங்க

தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்யாத நிலையில், கலங்கி நின்ற விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்ததுடன், நியாயமான விலை, மானிய விலையில் தீவனங்கள் எனக் கொடுத்துவரும் ஆவினின் செயல்பாடு விவசாயிகளிடம் பாராட்டைப் பெற்றுவருகிறது.

இது தொடர்பாக மதுரை வாகைக்குளத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் ஜெயக்காமனிடம் பேசியபோது, ''என்கிட்ட 80 மாடுங்க இருக்கு. தினசரி சராசரியா 250 லிட்டர் பால் கறப்போம். இதுவரைக்கும் தனியார் கம்பெனிக்குத்தான் பால் ஊத்திக்கிட்டு இருந்தேன். இந்த கொரோனா நேரத்துல பால் வாங்குறதை நிறுத்திட்டாங்க. விலையும்கூடக் குறைவாகத்தான் கொடுத்தாங்க. அந்த நேரத்துலதான் ஆவின் அதிகாரிங்க வந்து பாலை 'நாங்க வாங்கிக்கிறோம்'னு சொன்னாங்க.

பால் கொள்முதல்
பால் கொள்முதல்

நான், `பாலை சொஸைட்டிக்குக் கொண்டு வர்றதுல சிரமம் இருக்குது'ன்னு சொன்னேன். அதுக்கு, 'கவலைப்படாதீங்க, வீட்டுலேயே வந்து எடுத்துக்குறோம்'னு சொன்னாங்க. அதேமாதிரி இப்போ வந்து வாங்கிக்கிட்டு இருக்காங்க. பணத்தைப் போடுறதுக்காக பேங்க் கணக்கு ஆரம்பிக்கச் சொன்னாங்க. `ஊரடங்கு நேரத்துல புதுக்கணக்கு ஆரம்பிக்க முடியாது'னு பேங்க்ல சொல்லிட்டாங்க. பிறகு, ஆவின் அதிகாரிகள் நேரடியா பேங்குக்கு வந்து கணக்கு ஆரம்பிச்சுக் கொடுத்தாங்க. வாரா வாரம் டாக்டர் வந்து மாட்டைப் பார்க்குறாரு. மானிய விலையில தீவனம் கொடுக்குறாங்க.

தனியாருக்குப் பால் ஊத்தும்போது லிட்டருக்கு அதிகபட்சமா 27 ரூபாய் வரைக்கும்தான் கொடுத்தாங்க. ஆனா ஆவின்ல 30 ரூபாய் வரைக்கும் கொடுக்கறாங்க. பொதுவா, `அரசாங்க அதிகாரிங்க பொதுமக்கள்கிட்ட சகஜமா பழக மாட்டாங்க'னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். இவங்க குடும்பத்துல ஒரு ஆள் மாதிரி பழகுறாங்க. தனியாரைவிட அரசாங்க நிறுவனத்துக்குப் பால் ஊத்துறதுல எங்களுக்குப் பல நன்மைகள் இருக்குன்னு இப்போதான் புரிஞ்சுது'' என்றார்.

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான துறைகள் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டன. அதே நேரத்தில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டிருந்த அரசுத் துறைகள், கொரோனாநோய்த் தொற்று அச்சத்தையும் மீறிப் பணியாற்றி வந்தன. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், விவசாயிகள் முன்களவீரர்களாகப் பணியாற்றினர். அப்படி, அத்தியாவசியப் பொருள்களில் முக்கிய இடத்திலுள்ள பால் மற்றும் பால் பொருள்களைத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டது ஆவின்.

பால் கொள்முதல்
பால் கொள்முதல்

தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலை தனியார் பால் நிறுவனங்கள்தான் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாகப் பல தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதை நிறுத்திக்கொண்டன. கொள்முதல் செய்த சில நிறுவனங்களும் விலையைக் குறைத்துக்கொண்டன. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள் விவசாயிகள்.

தனியார் நிறுவனப் பாலை வாங்கும் நுகர்வோரும் பால் கிடைக்காமல் அவதிப்பட்டார்கள். இந்த இக்கட்டான நேரத்தில் நிலைமையைப் புரிந்துகொண்ட ஆவின் நிர்வாகம், துரிதமாகச் செயல்பட்டு பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் இருவருக்குமான பிரச்னையைத் தீர்த்து வருகிறது.

- இதுதொடர்பான பசுமை விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > தவிக்கவிட்ட தனியார் நிறுவனங்கள்... அரவணைத்த அரசு நிறுவனம்! - கொரோனா காலத்தில் கைகொடுத்த ஆவின்! Click here https://bit.ly/2THnxZn

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு