Published:Updated:

தவிக்கவிட்ட தனியார் நிறுவனங்கள்... அரவணைத்த அரசு நிறுவனம்! - கொரோனா காலத்தில் கைகொடுத்த ஆவின்!

அரசு

பிரீமியம் ஸ்டோரி
ரடங்கு காலத்தில் பெரும்பாலான துறைகள் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டன. அதே நேரத்தில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டிருந்த அரசுத் துறைகள், கொரோனாநோய்த் தொற்று அச்சத்தையும் மீறிப் பணியாற்றி வந்தன.

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், விவசாயிகள் முன்களவீரர்களாகப் பணியாற்றினர். அப்படி, அத்தியாவசியப் பொருள்களில் முக்கிய இடத்திலுள்ள பால் மற்றும் பால் பொருள்களைத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டது ஆவின்.

சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தி

தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலை தனியார் பால் நிறுவனங்கள்தான் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாகப் பல தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதை நிறுத்திக்கொண்டன. கொள்முதல் செய்த சில நிறுவனங்களும் விலையைக் குறைத்துக்கொண்டன. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள் விவசாயிகள். தனியார் நிறுவனப் பாலை வாங்கும் நுகர்வோரும் பால் கிடைக்காமல் அவதிப்பட்டார்கள். இந்த இக்கட்டான நேரத்தில் நிலைமையைப் புரிந்துகொண்ட ஆவின் நிர்வாகம், துரிதமாகச் செயல்பட்டு பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் இருவருக்குமான பிரச்னையைத் தீர்த்து வருகிறது.

தவிக்கவிட்ட தனியார் நிறுவனங்கள்... அரவணைத்த அரசு நிறுவனம்! - கொரோனா காலத்தில் கைகொடுத்த ஆவின்!

லிட்டருக்கு 30 ரூபாய்!

தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்யாத நிலையில், கலங்கி நின்ற விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்ததுடன், நியாயமான விலை, மானிய விலையில் தீவனங்கள் எனக் கொடுத்துவரும் ஆவினின் செயல்பாடு விவசாயிகளிடம் பாராட்டைப் பெற்றுவருகிறது. இது தொடர்பாக மதுரை வாகைக்குளத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் ஜெயக்காமனிடம் பேசினோம். ‘‘என்கிட்ட 80 மாடுங்க இருக்கு. தினசரி சராசரியா 250 லிட்டர் பால் கறப்போம். இதுவரைக்கும் தனியார் கம்பெனிக்குத்தான் பால் ஊத்திக்கிட்டு இருந்தேன். இந்த கொரோனா நேரத்துல பால் வாங்குறதை நிறுத்திட்டாங்க. விலையும்கூடக் குறைவாகத்தான் கொடுத்தாங்க. அந்த நேரத்துலதான் ஆவின் அதிகாரிங்க வந்து பாலை ‘நாங்க வாங்கிக்கிறோம்’னு சொன்னாங்க. நான், `பாலை சொஸைட்டிக்குக் கொண்டு வர்றதுல சிரமம் இருக்குது’ன்னு சொன்னேன். அதுக்கு, ‘கவலைப்படாதீங்க, வீட்டுலேயே வந்து எடுத்துக்குறோம்’னு சொன்னாங்க. அதேமாதிரி இப்போ வந்து வாங்கிக்கிட்டு இருக்காங்க. பணத்தைப் போடுறதுக்காக பேங்க் கணக்கு ஆரம்பிக்கச் சொன்னாங்க. `ஊரடங்கு நேரத்துல புதுக்கணக்கு ஆரம்பிக்க முடியாது’னு பேங்க்ல சொல்லிட்டாங்க. பிறகு, ஆவின் அதிகாரிகள் நேரடியா பேங்குக்கு வந்து கணக்கு ஆரம்பிச்சுக் கொடுத்தாங்க. வாரா வாரம் டாக்டர் வந்து மாட்டைப் பார்க்குறாரு. மானிய விலையில தீவனம் கொடுக்குறாங்க. தனியாருக்குப் பால் ஊத்தும்போது லிட்டருக்கு அதிகபட்சமா 27 ரூபாய் வரைக்கும்தான் கொடுத்தாங்க. ஆனா ஆவின்ல 30 ரூபாய் வரைக்கும் கொடுக்கறாங்க. பொதுவா, `அரசாங்க அதிகாரிங்க பொதுமக்கள்கிட்ட சகஜமா பழக மாட்டாங்க’னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். இவங்க குடும்பத்துல ஒரு ஆள் மாதிரி பழகுறாங்க. தனியாரைவிட அரசாங்க நிறுவனத்துக்குப் பால் ஊத்துறதுல எங்களுக்குப் பல நன்மைகள் இருக்குன்னு இப்போதான் புரிஞ்சுது’’ என்றார்.

தனியார் கொடுக்காத விலை... ஆவின் கொடுக்குது!

திருவண்ணாமலை மாவட்டம், சீத்தம்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தியிடம் பேசினோம். ‘‘என்கிட்ட அஞ்சு மாடுகள் இருக்கு. நான் இதுவரைக்கும் தனியாருக்குத்தான் பால் கொடுத்துக்கிட்டு இருந்தேன். ஊரடங்கு காலத்துல ‘பால் வாங்க முடியாது’ன்னுட்டாங்க. `டீக்கடைகளும் இல்லாத நேரத்துல பாலை எப்படி விக்கிறது...’னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ ஆவின் உதவிக்கு வந்துச்சு. என் வீட்டுக்கே வந்த ஆவின் அதிகாரிங்க, ‘நாங்க பாலை எடுத்துக்குறோம். கவலைப்படாதீங்க’னு சொன்னாங்க. இப்போ தொடர்ந்து எடுத்துக்கிட்டு இருக்காங்க. வாரா வாரம் பணம் கொடுத்துடுறாங்க. லிட்டருக்கு 31 ரூபாய் வரைகூடக் கொடுத்தாங்க. சராசரியா 30 ரூபாய் கிடைக்குது. பொதுவா, பாலோட கொழுப்புச்சத்தைவெச்சுதான் விலை முடிவு பண்ணுவாங்க. ஆனா, இதுவரைக்கும் தனியார் இந்த விலையை எனக்குக் கொடுத்ததில்லை. தனியார் கம்பெனியில பாலை மட்டும் வாங்கிட்டுப் பணத்தைக் கொடுத்துடுவாங்க. வேற எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனா, ஆவின்ல வாரா வாரம் டாக்டர் வர்றாரு. சினை ஊசி இலவசமாகப் போடுறாங்க. மாட்டுக்கு நோய்நொடி இருந்தாலும் வைத்தியம் பார்த்துடுறாங்க. இதுக்குக் காசு வாங்குறதில்லை. ஆனா, இதுக்கு முன்னாடி டாக்டருக்கு எங்க கைக்காசைத்தான் செலவு பண்ணுவோம். இப்போ அந்தச் செலவே இல்லை. அதோட, மானிய விலையில தீவனம் கொடுத்துடுறாங்க. தீவனப்புல் குச்சியையும் கொடுத்துடுறாங்க. ஆவின்ல பால் ஊத்துறது பலவிதங்கள்ல உதவியா இருக்கு. எங்க கிராமத்துலேயே ஒரு சொஸைட்டி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்’’ என்றார்.

தவிக்கவிட்ட தனியார் நிறுவனங்கள்... அரவணைத்த அரசு நிறுவனம்! - கொரோனா காலத்தில் கைகொடுத்த ஆவின்!

இலவச சிகிச்சை!

பால் உற்பத்தியாளர்களின் வீடுகளுக்குச் சென்று கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாகப் பேசிய ஆவின் கால்நடை மருத்துவர் சுவாமிநாதன், “வாரம் ஒரு முறை பால் உற்பத்தியாளர்கள் வீடுகளுக்குச் சென்று செயற்கைக் கருவூட்டல், மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் மற்றும் இதர சிகிச்சைகளை இலவசமாகக் கொடுக்கிறோம். நாங்கள் நேரடியாகச் செல்வதால் அவர்களுக்கு அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. மாடு கன்று ஈன முடியாத நிலை, மடிவீக்க நோய்கள், வயிற்று உப்புச நோய்கள், உறுப்புக்கொடி போட முடியாத மாடுகளுக்குச் சிகிச்சை... என அவசர சிகிச்சைகளை இலவசமாக அளித்துவருகிறோம். இந்த ஆண்டுப் பெரியம்மை நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளின் உடலில் வீக்கம் ஏற்பட்டு, அது வெடித்துப் புண்களாக மாறிவிடும். இது வைரஸ் தொற்று நோய். ஒரு மாட்டுக்கு வந்தால் ஊரிலுள்ள மற்ற மாடுகளுக்கும் பரவிவிடும். இதுதான் கடந்த இரண்டு மாதங்களாக அதிக இடங்களில் இருக்கிறது. இதனால் பால் உற்பத்தித்திறன் குறைந்தது. போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு இதைக் கட்டுப்படுத்திவருகிறோம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை, பால் உற்பத்தியாளர்களிடம் எடுத்துச் சொல்கிறோம். தேசிய கால்நடைத் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு மானிய விலையில் காப்பீடு செய்து தருகிறோம். இந்த ஆண்டு 1,70,000 கால்நடைகளுக்குக் காப்பீடு செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறார்கள். சரிவிகித உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். மாடுகளுக்குத் தாதுஉப்புக் கலவையின் அவசியம் குறித்து வளர்ப்பவர்களிடம் எடுத்துச் சொல்கிறோம். அதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, சினைப் பிடிக்கும் தன்மை அதிகரித்து, பால் உற்பத்தியும் அதிகரிக்கும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவிக்கவிட்ட தனியார் நிறுவனங்கள்... அரவணைத்த அரசு நிறுவனம்! - கொரோனா காலத்தில் கைகொடுத்த ஆவின்!

போனஸ், ஊக்க விலை!

கொரோனா வைரஸ் தாக்குதல் காலத்தில் ஆவின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார், ‘‘தமிழகத்திலுள்ள 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம், கொரானா வைரஸ் தாக்குதலுக்கு முன்னர் சராசரியாக 28.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஊரடங்கு காலத்தில் சுமார் 105 புதிய சங்கங்கள் மற்றும் 400 பால் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டு, புதிதாக சுமார் 15,500 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டார்கள். தற்போது 20.5.2020 அன்று 36.25 லட்சம் லிட்டர் பால், அதாவது சுமார் 7.75 லட்சம் லிட்டர் பால் அதிகமாகக் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் கொள்முதல் அளவு மற்றும் பால் கொள்முதல் விலையைக் குறைந்த விலையில் மற்றும் கொள்முதல் செய்யாத நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் கைகொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிவருகிறது.

வள்ளலார், ஜெயக்காமன், சுவாமிநாதன்
வள்ளலார், ஜெயக்காமன், சுவாமிநாதன்

தனியார் பால் நிறுவனங்கள் செய்யாத பல சேவைகளை அளிக்கிறது. ஆவின் மூலமாக அரசு நிர்ணயித்த விலையில், இக்கட்டான காலகட்டத்திலும் தங்கு தடையின்றிப் பால் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு அண்ணா நல நிதித் திட்டத்தில் உறுப்பினர் காப்பீடு, சங்கங்கள் ஈட்டும் லாபத்தில் 50 சதவிகித வருடாந்தர போனஸ் மற்றும் வழங்கிய பாலுக்கு ஊக்க விலை, பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் கலப்புத் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை வழங்கப்படுகிறது. புல் கரணைகள் நியாயமான விலையில் வழங்கப்படுகின்றன. கொரோனா தாக்குதல் காலத்தில் பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குச் சுமார் 1,10,000 செயற்கை முறை கருவூட்டல் மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய கால்நடை மருத்துவர்கள், உற்பத்தியாளர்களின் வீடுகளுக்கே சென்று சுமார் 2,600 அவசரகாலச் சிகிச்சைகள் மேற்கொண்டார்கள். அதன் மூலம் சுமார் 37,000 கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு 50 சதவிகித மானிய விலையில் காப்பீட்டு வசதி செய்து தருகிறோம்.

பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டுவரும் ஆவின், தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து தன்னுடைய சேவையை வழங்கும். பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து சங்கங்களுக்குப் பால் வழங்கி, ஆவின் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்தி, பால் உற்பத்தியைப் பெருக்க ஆதரவை வழங்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

தவிடு விலைக்கே கிடைக்கும் கலப்புத் தீவனம்!

தவிக்கவிட்ட தனியார் நிறுவனங்கள்... அரவணைத்த அரசு நிறுவனம்! - கொரோனா காலத்தில் கைகொடுத்த ஆவின்!

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுக்கா, பள்ளிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி புஷ்பநாதனிடம் பேசினோம். “கொரோனா நேரத்துல தனியார் கம்பெனியில பால் வாங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. தினமும் 150 லிட்டர் பால் கறப்போம். அதை என்ன பண்றதுன்னே தெரியலை. அப்போ நானாகத்தான் ஆவின்ல போய்க் கேட்டேன். உடனே எடுத்துக்கிட்டாங்க. எங்க பண்ணைக்கே வண்டி வந்து எடுத்துகிட்டுப் போயிடுது. மாடுகளுக்கு ஏதாவது பிரச்னைனு போன் பண்ணினா, டாக்டரை அனுப்பிவெச்சுடுறாங்க. தவிடு விக்குற விலைக்கே கலப்புத் தீவனத்தைக் கொடுக்குறாங்க. தாதுஉப்புக் கலவை கொடுக்குறாங்க. பாலுக்கும் நல்ல விலை கிடைக்குது. தனியார் கம்பெனிகளைவிட ரொம்ப உதவியா இருக்காங்க. விவசாயிகள் தனியாருக்குப் பால் கொடுக்குறதைவிட ஆவினுக்குக் கொடுத்தா பல சலுகைகளை அனுபவிக்கலாம்’’ என்றார்.

மானிய விலையில் தீவனம்

தவிக்கவிட்ட தனியார் நிறுவனங்கள்... அரவணைத்த அரசு நிறுவனம்! - கொரோனா காலத்தில் கைகொடுத்த ஆவின்!

ஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பஞ்சாயத்து, சீலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, “தனியார் பால் எடுக்குறதை திடீர்னு நிறுத்திட்டாங்க. அந்த நேரத்துல ஆவின் உதவியா இருந்தது. சராசரியா 30 லிட்டர் பால் தினமும் கொடுப்பேன். ஆவினுக்குக் கொடுத்த பிறகு தீவனப்புல் குச்சி, கலப்புத் தீவனம் எல்லாம் மானிய விலையில கொடுத்தாங்க’’ என்றார்.

சொஸைட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கு!

தவிக்கவிட்ட தனியார் நிறுவனங்கள்... அரவணைத்த அரசு நிறுவனம்! - கொரோனா காலத்தில் கைகொடுத்த ஆவின்!

து தொடர்பாக பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத் தலைவர் செங்கோட்டுவேல், “இந்த கொரோனா காலத்துல பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் உதவியா இருக்கு. தனியார் பால் நிறுவனங்கள் கைவிட்ட பால் உற்பத்தியாளர்கள்கிட்டகூட ஆவின் பால் கொள்முதல் செய்யறாங்க. இந்த இக்கட்டான காலத்துலயும் அதிக அளவில் பாலை ஆவின் கொள்முதல் செஞ்சிருக்கு. சொஸைட்டிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கு” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு