Published:Updated:

அரசின் அனுமதியின்றி வெட்டப்பட்ட திருவாரூர் பனைமரங்கள்; சட்ட நடவடிக்கை பாயுமா?

வெட்டப்பட்ட பனைமரங்கள்

திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தில் பொது இடத்தில் மிகவும் செழிப்பாக வளர்ந்திருந்த பனை மரங்களை, சிலர் வெட்டி சாய்த்திருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் அனுமதியின்றி வெட்டப்பட்ட திருவாரூர் பனைமரங்கள்; சட்ட நடவடிக்கை பாயுமா?

திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தில் பொது இடத்தில் மிகவும் செழிப்பாக வளர்ந்திருந்த பனை மரங்களை, சிலர் வெட்டி சாய்த்திருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
வெட்டப்பட்ட பனைமரங்கள்

நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும், புயலால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கவும் பனைமரங்கள் அளப்பறிய சேவை ஆற்றுகின்றன. பனையிலிருந்து கிடைக்கக்கூடிய உணவுப்பொருள்கள், மனித உடலுக்கு ஏராளமான சத்துகளை வாரி வழங்குகின்றன. ஆனால், பனையின் மகத்துவங்களை உணராதவர்கள், சமூக நலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் சுயநலமாகச் சிந்திப்பவர்கள் பனை மரங்களை அழித்து சமூகத்துக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.

பனை மரங்கள்
பனை மரங்கள்

இதனால்தான் பனையைப் பாதுகாக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, பனை மரங்களை வெட்ட அரசின் அனுமதி அவசியம் எனத் தமிழக அரசு விதிமுறையை உருவாக்கியுள்ளது. தனியார் நிலங்களில் உள்ள பனை மரங்களை வெட்டுவதாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவை என விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தில் பொது இடத்தில் மிகவும் செழிப்பாக வளர்ந்திருந்த பனை மரங்களை, சிலர் வெட்டி சாய்த்திருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுற்றுச்சூழலுக்கு பல வகைகளிலும் பெருந்துணையாக இருக்கக்கூடிய பனைமரங்கள் குறித்து, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் விழிப்புணர்வு வளர்ந்துகொண்டே இருக்கிறது. பனை விதைகளைச் சேகரித்து, விதைப்பு செய்யும் உயரிய பணிகளில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். பனையை வளர்த்தெடுக்க பலரும் கடும் உழைப்பு செலுத்தி வரும் அதேநேரம், இதன் மகத்துவத்தை உணராதவர்கள், நன்கு வளர்ந்த பனை மரங்களை வெட்டி வீழ்த்தும் அவலமும் தொடர்ந்துகொண்டே இருப்பது கவலை அளிக்கிறது. திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பனைமரங்களை சிலர் வெட்டியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Palm Trees
Palm Trees

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர், ``பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்துல 8 பனை மரங்கள், நல்ல உயரமா செழிப்பா வளர்ந்துருச்சு. இதெல்லாம் 20 வருஷத்துக்கு மேல வயசுள்ள மரங்கள். நேத்து காலையில பார்த்தப்ப, வேரோடு வெட்டப்பட்டுக் கிடந்துச்சு. மனசு பதறிப் போயிடுச்சு, இதை வெட்ட எப்படித்தான் மனசு வந்துச்சோ தெரியலை. பனை விதைப்பு செய்வதைவிடவும், ஏற்கெனவே உள்ள பனை மரங்களைப் பாதுகாக்குறதுதான் ரொம்ப முக்கியமான கடமை. ஆயிரம் விதைகள் நட்டால், அதுல இருந்து நூறு விதைகள் பொழச்சு வர்றதே பெரிய விஷயமா இருக்கும். அதுவும்கூட பெரிய மரங்களா வளர்ந்து வர, 20 - 30 வருஷங்களுக்கு மேல ஆகுது. சுற்றுச்சூழலுக்கு பனைமரங்கள் ஆற்றக்கூடிய சேவை மகத்தானது.

இந்தப் பகுதியில பல தடவை கடுமையான வறட்சி ஏற்பட்டப்பக்கூட இங்க இருந்த பனைமரங்கள் பட்டுப்போகலை. ஆனா, இப்படி அநியாயமா அழிச்சுட்டாங்க. இந்த மரங்களை யார் வெட்டினதுனு விசாரிச்சோம். பிள்ளையார் கோயிலை நிர்வாகம் பண்ணக்கூடியவங்கதான் வெட்டியிருக்காங்க. கோயில் நிர்வாகிகள்கிட்ட இது பத்தி கேட்டபோது, கோயிலை சுத்தப்படுத்த இந்த மரங்கள் இடைஞ்சலா இருந்ததா பொய் சொல்றாங்க. பனை மரங்களை வெட்டி விற்பனை செஞ்சு காசு பார்க்குறதுதான் அவங்களோட நோக்கமா இருக்கும்னு சந்தேகப்படுறோம். தவிர்க்க முடியாத காரணங்களால் பனை மரங்களை வெட்ட வேண்டியிருந்தால்கூட வருவாய்த்துறையினருக்கு முதல்கட்டமா தகவல் தெரிவிச்சு, மாவட்ட ஆட்சியர்கிட்ட முறையான அனுமதி வாங்கணும்னு தமிழக அரசு விதிமுறை உருவாக்கியிருக்கு. கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிச்சுதான் வெட்டினாங்களானு தெரியலை’’ என்றார்.

இதுகுறித்து கமலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் தங்கபாண்டியனிடம் நாம் கேட்டபோது,

``இங்க இருந்த பனை மரங்களை வெட்டின பிறகுதான் எனக்கே இந்த விஷயம் தெரிய வந்துச்சு. கோயில் நிர்வாகத் தரப்புல இருந்து எனக்கு எந்ந தகவலுமே தெரிவிக்கலை. இந்தப் பகுதியில உள்ள விவசாயிகள் சிலர் தங்களோட வயல் வரப்புல உள்ள பனை மரங்களால் விளைச்சல் பாதிக்கப்படுது... வெட்ட அனுமதி கொடுங்கனு கேட்டதுக்கே, நான் மறுத்துட்டேன். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திச்சு அனுமதி கேளுங்கனு அனுப்பிட்டேன். பனைமரங்களை வெட்ட எந்த விதத்துலயும் நான் ஒரு காரணமா இருந்துடக் கூடாதுங்கறதுல நான் ரொம்பவே கவனமா இருக்கேன். பிள்ளையார் கோயிலுக்குப் போக வர சிரமமா இருக்கு... அதனால் கோயிலை சுத்தப்படுத்தும்போது இதையும் சேர்த்து வெட்டிட்டோம்னு சொல்றாங்க, இது ஏற்கக்கூடியது இல்லை. தாசில்தாருக்கு தகவல் தெரிவிச்சிருக்கேன். பனை மரங்களை வெட்டினவங்க மேல கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.