Published:Updated:

``பேங்க் பேலன்ஸ் மட்டும் முக்கியம் இல்ல; சமூகமும் பேலன்ஸா இருக்கணும்ல?" - நடிகர் ஆரி

நிகழ்வில் நம்மாழ்வார் படத்திறப்பு
News
நிகழ்வில் நம்மாழ்வார் படத்திறப்பு

``எல்லோரும் கோயிலுக்கும் மசூதிக்கும் சர்ச்சுக்கும் தன் தேவைக்களுக்காகப் போறாங்க. உண்மையிலேயே இந்த மண்தான் நம் தேவைக்கானதைக் கொடுக்கிறது. அதனால்தான் இயற்கையே இறைவன் என்று சொல்கிறேன்." - ஆரி

இந்த மண்ணுக்காகவும், விவசாயிகளுக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 2013 டிசம்பர் 30-ம் தேதி இயற்கையில் கலந்தார். அவரின் நினைவாகத் தமிழகம் முழுவதும் டிசம்பர் 30-ம் தேதி விவசாயிகள் ஒன்றுகூடி அவரின் நினைவைப் போற்றி வருகின்றனர். தமிழகம் முழுக்க பல அமைப்புகள், இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் இதில் பங்கெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 30) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த புதிய இடையூரில் உள்ள இயற்கை விவசாயி இறையழகனின் தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணையில் நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். 

நிகழ்வில்...
நிகழ்வில்...

நிகழ்ச்சியின் தொடக்கமாக வேப்பிலை போடப்பட்ட நம்மாழ்வார் படம் திறக்கப்பட்டது. பிறகு, முதல் ஆளாகப் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இயற்கை விவசாயியுமான தமிழ்மணி, ``முன்னெல்லாம் சர்வ சாதாரணமாக ஒரு ஏக்கர்ல 60 மூட்டை வரைக்கும் மகசூல் எடுத்தோம். 1 மூட்டை என்பது 18 மரக்கால், 1 மரக்கால் என்பது நாலரை படி. அன்னைக்கு எந்த உரமும் போடாம 60 மூட்டை எடுத்தோம். விவசாயத்துல சம்பாதிச்ச பணத்த அரசியல்ல நுழைஞ்சு எல்லாத்தையும் இழந்தேன். தொண்ணூறுகள்லே 37 லட்சம் கடன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பிறகுதான் உணர்ந்தேன். மக்களுக்கு சேவை செய்யணும்னா அரசியல் இருந்து சேவை செய்யணும்னு அவசியம் இல்லனு உணர்ந்து இயற்கை விவசாயம் பக்கம் திரும்பினேன். இப்போ நல்ல ஆர்கானிக் அரிசி உற்பத்தி மக்களுக்குக் கொடுத்துட்டு இருக்கேன். இந்த முறை கோ.51 ரக அரிசி சாகுபடி பண்ணி, அதை அரிசியாக்கி வெச்சிருக்கேன். அரசியல்ல செய்ய முடியாத சேவையை இயற்கை விவசாயம் மூலம் செஞ்சிட்டு வர்றேன்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முன்னோடி இயற்கை விவசாயி இறையழகன் (தெய்வசிகாமணி) பேசியபோது, ``பொதுவா ஒரு தோட்டம்னு எடுத்துகிட்டா வணிக ரீதியான மரப்பயிர் இருக்கும். இல்லையென்றால் பழப்பயிர் இருக்கும். இரண்டும் இருக்கிற மாதிரி தோட்டம் இல்லையே ஐயா என்று நம்மாழ்வார் கேட்டேன். உடனே நம்மாழ்வார் `நீ செய்யிய்யா’ என்று சொன்னார். அதன் விளைவுதான் இந்தத் தோட்டம். இந்தத் தோட்டத்துல மரங்கள், பழப்பயிர், உயிர்வேலி, மரங்களுக்குக் கீழ் மஞ்சள் விவசாயம்னு ஓர் உணவுக்காடா இந்தத் தோட்டம் நிக்குது. எங்க தோட்டத்துக்கு மூடாக்குதான் முக்கிய உரம். இதை வெச்சே ஒரு முன்னோடி பண்ணையா மாத்தியிருக்கேன்” என்றார்.

இறையழகன்
இறையழகன்

பாலாறு கூட்டியக்கத்தின் தலைவர் காஞ்சி அமுதன் பேசியபோது, ``நம்மாழ்வார் இல்லையென்றால் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயமே இப்போது இருந்திருக்காது. அந்த அளவுக்கு இயற்கை விவசாயத்தை அழிக்கும் வேலைகள் நடந்தன. எல்லா மாவட்டத்திலேயும் கூட்டுப்பண்ணைகளை அரசு உருவாக்கணும். தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை என்று சொல்கிறார்கள். அது தவறான செய்தி. கிடைக்கிற மழைத் தண்ணீரை சரியா பயன்படுத்திக்கிட்டா தண்ணீர் பற்றாக்குறை இருக்காது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரிம கட்டமைப்பின் செயலாளர் தனபால் பேசியபோது, ``22 வருஷத்துக்கு முன்னாடியே இயற்கை விவசாயத்த பரப்ப களத்தில் இறங்கினோம். அப்போது கூட்டங்களில் பேசும்போது நம்மாழ்வார் தோட்டங்கள்ல மரம் நடுவது அவசியம். தோட்டத்தில் என்ன விவசாயம் செஞ்சிட்டு இருந்தாலும் அங்கே மரங்கள் வளர்க்கிறத கட்டாயமாக்கிங்கோனு சொன்னார். அதன்படிதான் நான் கரும்பு விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தாலும், சின்னதா ஒரு குறுங்காட்டையும் உருவாக்கியிருக்கேன். அது பழத்தேவையைப் பூர்த்தி செஞ்சிட்டு வருது” என்றார்.

மரபு விதைக் காவலர் வானவன் பேசியபோது, ``மகாத்மா காந்தி, அன்னை தெரசா மாதிரி நம்மாழ்வார் ஒரு சமூக அடையாளம். அவரை யார் வேண்டுமென்றாலும் பின்பற்றலாம். மா, கொய்யானு பல வகையான மரங்கள் இந்தத் தோட்டத்துல இருக்கு. நம்மாழ்வார் விரும்பிய நிலத்திலேயே அவருக்கு நினைவேந்தல் நடக்குது” என்றார்.

மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில்
மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில்

மண்வாசனை மேனகா பேசியபோது, ``இயற்கை விவசாய பொருள்கள மதிப்புக்கூட்டி மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கிற பணியை செஞ்சிட்டு வர்றேன். நம்முடைய பாரம்பர்ய அரிசி வகைகள கொண்டு ஐஸ்க்ரீம், தோசை மிக்ஸ், கஞ்சி மிக்ஸ் என்று பல வகையான உணவுப் பண்டங்களைத் தயாரிக்க முடியும். இன்றைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடலுக்கு வலிமை கூட்டுறதுக்கும் நம்முடைய பாரம்பர்ய அரிசி வகைகள் முக்கிய பங்காற்றுகிறது. நம்முடைய பாரம்பர்ய அரிசி உலம் பூரா போய் சேரணும்” என்றார்.

மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் பேசியபோது, ``இயற்கை விவசாயத்தை இலங்கை திடீரென்று அறிவித்தது. அறிவித்த ஓரு வாரத்தில் டீ எஸ்டேட் முதலாளிகள் எப்படி செயற்கை உரம் போடாமல், விவசாயம் செய்ய முடியும் என்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அறிவிப்பை திரும்பப் பெற்றது. தமிழ்நாட்டிலும் இயற்கை விவசாயம் குறித்தான அறிவிப்பு வெளியாக, சில பணிகளைச் செய்து வருகிறோம். ஆனால், அது இலங்கையில் நடந்த மாதிரி நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதற்காக இயற்கை விவசாயம் விஷன் 2040 என்ற பெயரில் படிப்படியாக இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்த அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறோம். 

செந்தூர்பாரி, சுல்தான் இஸ்மாயில்
செந்தூர்பாரி, சுல்தான் இஸ்மாயில்

இதுபோன்ற இயற்கை விவசாயப் பண்ணைகளை அரசு இயற்கை விவசாய பயிற்சி நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். மண்ணில் கார்பன் சத்து குறைந்திருக்கிறது. அதை அதிகரிப்பதற்கு இயற்கை விவசாயம்தான் தீர்வு.

கம்பெனிக்காரன் அயோடின் கலந்த உப்புனு சொல்லி விக்கிறான். அதனால, உப்பளத்துல உப்பு உற்பத்தி செய்றவங்க பாதிக்கப்படுறாங்க. அதேமாதிரி இரும்புச்சத்து கொண்டு செயற்கை செறிவூட்டம் செஞ்ச அரிசியைக் கொண்டு வரப் போறதா சொல்றாங்க. இதனால யாருக்கு லாபம். கம்பெனிகளுக்குத்தான். எல்லோரும் சன்ப்ளவர் எண்ணெயை உணவுக்குப் பயன்படுத்தறாங்க. அதுல பாமாயில் கலக்குறாங்க. அந்த எண்ணெய் பாக்கெட்ல பிளண்டட் என்று போட்டிருக்கும் இதை எத்தனை பேர் கவனிக்கிறாங்கனு தெரியல. அதனால உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிற கலப்படம் இல்லாத எண்ணெயை வாங்கி பயன்படுத்துங்க.

பசுமையா இருக்கிறதெல்லாம் மரங்கள் இல்லை. அந்தந்த மண்ணுக்கு ஏற்ற மரங்களை வளர்க்கணும். தோல் கெட்டியான தக்காளியை வெட்டினால் உணவுப் பொருள் மீது வைக்கும்போது பார்ப்பதற்கு பளபளப்பா இருக்கும். மேல்நாட்டினர் சாப்பிடும் உணவு பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தோல் கெட்டியான தக்காளியைத்தான் பயன்படுத்துறாங்க. ஆனா, நம்ம ஊர் நாட்டுத் தக்காளி தோல் மெல்லியதா இருக்கும். இதை அறுக்காமல் அப்படியே பிழிந்தால் அதன் ருசியோ ருசி. அதனால் நாட்டு ரகங்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்” என்றார்.

திரைப்பட நடிகர் ஆரி அர்ஜுனன் பேசும்போது, ``மண்ணுல வாழுற மனுஷன் நல்லா இருக்கணும். அடுத்த தலைமுறை நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க விவசாயிகள்தான். எல்லோரும் பேங்க் பேலன்ஸ் அதிகமாக்க ஓடிட்டு இருக்கிறாங்க. ஆனால், விவசாயிகள்தான் இந்தச் சமூகம் பேலன்ஸ்ஸா இருக்கணும்னு உழைச்சிட்டு இருக்காங்க. இங்கிருக்கிற வளங்களைக் கொண்டு போய் அதுக்கு காப்புரிமை செய்து திரும்பவும் நமக்கே கொண்டு வந்து விக்கிறாங்க. இதைத்தான் நம்மாழ்வார் தன் வாழ்நாள் காலம் முழுவதும் சொல்லிட்டு வந்தாரு. 

ஆரி
ஆரி

எங்க தாத்தா விவசாயம் செஞ்சார். அப்பா செய்யல. சினிமாவுல ஜெயிக்கணும்னு வந்தேன். எப்படியோ நடிகனாயிட்டேன். நடிப்பதில் என் கவனம் இருக்கு. ஆனா, அதைத்தாண்டி என்ன செய்யணும்னு யோசிச்சேன். அப்பதான் ஆரோக்கியமான உணவு குறித்தான தேடல் தொடங்கியது. நம்ம குழந்தைகளுக்கு நல்ல உணவு இல்லை. நல்ல பழங்கள் இல்லை. விவசாயிகளை கோடீஸ்வரர்களாக்குகிறோம் என்று உரக்கம்பெனிகள் வந்துச்சு. இப்ப பன்னாட்டு கம்பெனிகள்கிட்ட விவசாயிகள் விதைக்காகவும், உரத்துக்காகவும் மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. அப்படியில்லாம விதை, உரத்தில் சுயசார்போடு செயல்படுறவங்கதான் இயற்கை விவசாயிகள். நம் முன்னோர்கள் நல்ல விவசாயத்தைத்தான் செய்தாங்க. ஆனா, அதை அடுத்த சந்ததிக்கு கடத்த முடியல. நம்மகிட்ட இருக்கிற நல்ல விஷயங்கள நம்ம குழந்தைகளுக்குக் கடத்துறது ரொம்ப முக்கியம்.

இதற்கான ஒரு முயற்சியாக `மாறுவோம்... மாற்றுவோம்' என்ற அறக்கட்டளை தொடங்கினோம். அதோட நோக்கம் இந்த மண்மீது நிகழ்த்தப்படுற வன்முறை, இந்த விவசாயிகள் மீது நிகழ்த்தப்படுற வன்முறைக்கு மாற்றம் காண வேண்டும் என்ற நோக்கில்தான். எல்லோரும் கோயிலுக்கும் மசூதிக்கும் சர்ச்சுக்கும் தன் தேவைக்களுக்காகப் போறாங்க. உண்மையிலேயே இந்த மண்தான் நம் தேவைக்கானதைக் கொடுக்கிறது. அதனால்தான் இயற்கையே இறைவன் என்று சொல்கிறேன். இந்த மண்ணுக்காக உழைக்கிறவங்ககிட்ட வந்திருக்கிறதை பெருமையா நினைக்கிறேன். இந்த மண்ணுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா நல்ல ஆரோக்கியமான உணவை விலை கொடுத்து வாங்குங்க. நல்ல உணவை உற்பத்தி செய்கிற விவசாயிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவங்கள புரொமோட் பண்ணுங்க. தயவு செய்து பன்னாட்டு கம்பெனிகளோட பிராண்டுகளை புரொமோட் செய்யாதீங்க.

நிகழ்ச்சியில்...
நிகழ்ச்சியில்...

கிராமங்கள்ல நல்லபடியா சுயதொழில் செய்றவங்கள ஊக்கப்படுத்துங்க. நம்ம ஊரு கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பாவுல இல்லாத சத்துகளா கம்பெனிகள் விற்கும் சத்து டானிக்கில் இருக்கு. குழந்தைகளுக்கு நல்ல வாழ்வியல் கத்துக் கொடுக்கணும்னு நினைச்சா இந்த மாதிரி கூட்டங்களுக்கு கூட்டிட்டு வாங்க. சின்ன இடம் கிடைச்சாகூட அங்க நம்மோட பாரம்பர்ய விதைகள விதைச்சு மண்ணைப் பாதுகாப்போம்” என்றார்.

நிகழ்வில் இயற்கை விவசாயத்தில் சிறப்பாகச் செயல்பட்ட திருவேங்கடன், கணேஷ்குமார் ஆகிய விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட்டது. மதிய உணவாக பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. விழாவில் நாட்டுக் காய்கறி விதைகளும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் செந்தூர் பாரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பொன் பண்ணை கணேஷ் நன்றியுரை ஆற்றினார். முன்னோடி இயற்கை விவசாயிகள் டி.டி.சுப்பு, புலவர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படங்கள்: மா.சந்தீப் குமார்