Published:Updated:

"மண் நலமா இருந்தா மத்ததெல்லாம் தானாகவே நலமா மாறிடும்!" நம்பிக்கை விதைக்கும் நடிகர் ஆரி

நடிகர் ஆரி
பிரீமியம் ஸ்டோரி
நடிகர் ஆரி

நேர்காணல்

"மண் நலமா இருந்தா மத்ததெல்லாம் தானாகவே நலமா மாறிடும்!" நம்பிக்கை விதைக்கும் நடிகர் ஆரி

நேர்காணல்

Published:Updated:
நடிகர் ஆரி
பிரீமியம் ஸ்டோரி
நடிகர் ஆரி

இயற்கை விவசாயம் செய்வது, விவசாயம் சம்பந்தமான பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பது எனச் சமீப காலமாகத் திரைப்பட நடிகர்கள் கவனம் ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் ‘பிக்பாஸ்’ புகழ் நடிகர் ஆரி அர்ஜுனன்.

ஆடும் கூத்து, ரெட்டைச்சுழி, நெடுஞ்சாலை, மாயா அடுத்து வர இருக்கும் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஆரி, ‘பிக்பாஸ்’ பகுதி 4-ல் சிறந்தவராக வெற்றி பெற்றவர். இயற்கை விவசாயக் கூட்டங்களில் கலந்துகொள்வது, வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தது, தான் நடத்தும் பட விழாக்களில் பாரம்பர்ய உணவு, சிறுதானிய உணவை இடம் பெறச் செய்வது எனக் கவனம் ஈர்த்து வரும் நடிகர் ஆரி பசுமை விகடன் வாசகரும்கூட. பசுமை விகடன் 16-ம் ஆண்டுச் சிறப்பிதழுக்காக அவரைச் சந்தித்துப் பேசினோம்.

நடிகர் ஆரி
நடிகர் ஆரி

இயற்கை விவசாயம், நஞ்சில்லாத உணவு, மரம் நடுவது என இயங்கி வருகிறீர்கள். இந்தப் பயணம் எங்கிருந்து ஆரம்பித்தது?

“நான் ஒரு நடிகன் மட்டுமல்ல. ‘பிட்னஸ்’ பயிற்சியாளரும்கூட. நான் என் உடம்பை நேசிக்கிறேன். உடம்பை நல்லா வெச்சுக் கணும்னு உடற்பயிற்சி செய்றேன். அதேநேரம் ஆரோக்கியமான உணவு இருந்தாதான் இந்த உடம்பு கட்டுகோப்போடு இருக்கும். அதற்காக நஞ்சில்லாத நல்ல உணவை நோக்கிப் போயிட்டு இருக்கேன். அது எல்லாருக்கும் கிடைக்கணும்னுங்கறதுதான் என்னோட நோக்கம். ஆனா, இங்க சாப்பிடறதுக்கு நல்ல உணவு கிடைக்கல. எல்லாமே கலப்படமாவும், ரசாயனம் கலந்ததாவும் இருக்கு. இந்தக் கோபம்தான் இதை நோக்கித் தள்ளிச்சு. அன்னைக்குக் கஷ்டப்பட்டுப் போராடி சுதந்திரம் வாங்கினோம். இன்னைக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் போராட்டம் தேவைப்படுது. அந்த அளவுக்கு நாம் சாப்பிடும் உணவுல நஞ்சு கலந்திருக்கு. மரபணு மாற்றப்பட்ட உணவு, செயற்கை ஊட்டமேற்றப்பட்ட உணவு, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட உணவுனு தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் உணவு ஆபத்தானதா மாறிட்டு இருக்கு. இதைச் சரிசெய்யத்தான் என்னாலான முயற்சியைச் செஞ்சுகிட்டு இருக்கேன்.

நடிகர் ஆரி
நடிகர் ஆரி

நஞ்சில்லாத உணவுதான் உங்களை இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்த்தியதா?

பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப் பட்டபோது ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பற்றி விளம்பரம் மூலமா விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்த்தாங்க. ‘விவசாயிகளே... உங்கள் விளைச்சலை அதிகரிக்கிறோம், உங்களைக் குபேரனாக்கு கிறோம்’ என்று சொல்லி, பொறி வெச்சு எலியைப் பிடிக்கிற மாதிரி விவசாயிகளை ரசாயன விவசாயத்தை நோக்கி ஈர்த்தாங்க. அதன்மூலமா விவசாயிகளோட பொருளாதாரம் அதிகரிச்சிருக்கா? அன்னைக்கு இந்த ரசாயன விவசாயம் பின்னாடி நின்ற தெல்லாம் உரக் கம்பெனிகள்தான். இதன்மூலமா உரக் கம்பெனிகளுக்குப் பெரிய வணிகம் நடந்துச்சு. ஆனா, விவசாயிகளுக்கு? இதையெல்லாம் புரிஞ்ச விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டாங்க. இன்னும் பல விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு நினைச்சாலும் அதை இந்த அதிகார வர்க்கம் தடுக்குது.

எனக்கு நடிகன் என்கிற முகம் இருக்கு. அதன்மூலமா ஏதோவொரு வகையில மத்தவங்களுக்கு உதவணும்னு நினைச்சேன். அதன் விளைவுதான் விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முயற்சி. ஒவ்வொருவரும் ஓர் அடி எடுத்து வைக்கும்போதுதான் அந்த மாற்றம் நடக்கும். இந்தப் பணிகளுக்காகவே ‘மாறுவோம்... மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கினேன்.

நடிகர் ஆரி
நடிகர் ஆரி

2017-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கெடுத்தீர்கள், அதைப் பற்றி?

ஜல்லிக்கட்டுப் போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துனுச்சு. அங்கு சந்தித்த மனிதர்கள், பேசப்பட்ட விஷயங்கள் நம் பாரம்பர்யத்தைப் புரிய வெச்சது. சொல்லப் போனா அந்தப் போராட்டத்திலிருந்துதான் நம் பாரம்பர்யத்தைப் பத்தி அதிகமா சிந்திக்க ஆரம்பிச்சேன். உணவு, மருத்துவம், விவசாயம் இதெல்லாம் ‘கார்ப்பரேட்’கிட்ட இருக்கு. இந்த விஷயத்துல நம்ம பாரம்பர்ய கட்டமைப்புச் சரியாதான் இருந்திருக்கு. வெள்ளைச் சர்க்கரை நல்லதில்லை, கல் உப்பைப் பயன் படுத்துங்க, மைதா மாவைச் சாப்பிடாதீங்கனு இப்போதானே விழிப்புணர்வு பரவுது. இது ஆரம்பத்திலிருந்தே ஆபத்தானதுனு மக்களுக்குப் தெரியபடுத்தாம நவீன வாழ்கைக்குப் பழக்கப்படுத்திட்டாங்க. இதைப் புரிஞ்சுகிட்டு நாம வெளியே வரணும். இப்போகூட நான் போற இடத்துல, மாணவர்கள்கிட்ட சொல்ற ஒரே விஷயம். ஒரு வேளையாவது சிறுதானிய உணவுகள சாப்பிடுங்க என்பதுதான். ஏன்னா, என் உடல் கட்டுக்கோப்புக்கு சிறுதானிய மற்றும் பாரம்பர்ய உணவு ரொம்பவே உதவுது.

நடிகர் ஆரி
நடிகர் ஆரி

பாரம்பர்ய ரகங்களைக் கொண்டு ‘கின்னஸ்’ சாதனை முயற்சி செய்தீர்களே?

அரசு, வீரிய விதைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாட்டு விதைகளுக்குக் கொடுக்கிறதில்ல. நம்மகிட்ட இருந்த 80 சதவிகித நாட்டு ரக விதைகள் அழிஞ்சு போச்சு. எங்க அமைப்புமூலம் பாரம்பர்ய ரகங்களோட முக்கியத்துவத்த உணர்த்தணுங் கறதுக்காகத் திண்டிவனம் அருகில் ஆவணிப்பூர்ல 5 ஏக்கர்ல ஒரே நேரத்துல 2,700 பேர் கலந்துகிட்டு ஆயிரக்கணக்கான நாட்டுக் காய்கறி ரகங்கள நட்டு சீனாவோட சாதனையை முறியடிச்சோம்.

‘மாறுவோம்... மாற்றுவோம்’ அறக்கட்டளையின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

எப்போதுமே எனக்கான கனவுகள் பெருசாக இருக்கும். ஆனா, அதைச் செயல் படுத்துவதற்கான பொருளாதார வசதிதான் தடையா இருக்கும். அந்த வகையில பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கணும்னு முயற்சி செஞ்சுகிட்டிருக்கேன். ஏன்னா, எங்கப்பா கத்துக் கொடுத்த வாழ்வியல் இன்னைக்கு எனக்குக் கைகொடுத்துட்டு இருக்கு. அந்த மாதிரி மாணவர்களுக்கு வாழ்வியல் கல்வி கொடுத்துட்டா, படிப்பு கைகொடுக்கலை னாலும்கூட வாழ்வியல் கைகொடுத்துடும். இந்த வாழ்வியல் கல்விங்கறது உறவுகள், மனிதர்கள் மட்டுமில்லை. நம் மண்ணும் தான்.

நடிகர் ஆரி
நடிகர் ஆரி

இந்த மண் நலமா இருந்துட்டா மத்ததெல்லாம் நலமா மாறிடும்னு நம்பறேன். இந்த மண்ணைப் புரிஞ்சுகிட்டா நாம எங்க வேணும்னாலும் வாழ்ந்துட முடியும். இந்த மண்ணுல உயிர் சத்துகள் குறைஞ்சு போச்சு. அதனாலதான் விளைவிக்கிற விளை பொருள்கள்ல சத்துகள் இல்லாம இருக்கு. இதைச் சாப்பிடுற நம்மளுக்கும் சத்துகள் கிடைக்கிறதில்ல. நமக்குச் சத்துகள் கிடைக்கலைன்னா மாத்திரைகள் சாப்பிட்டுக் குவோம். ஆனா, மண்ணுக்கு என்ன செய்ய முடியும்? அதுக்கு உயிர் சத்துகள் கிடைக்கிறதுக்கு வழிவகை செய்யணும். அதைச் செஞ்சாலே போதும் மற்றவை தானாகச் சரியாயிடும். இதைத்தான் எங்க அமைப்பு மூலமா முன்னெடுத்துகிட்டு வர்றோம்.

இன்னொன்னு நிறைய பேர் சுயதொழில் மூலமா மரச்செக்கு எண்ணெய், பாரம்பர்ய அரிசி வகைகளை மதிப்புக்கூட்டுவது, காய்கறி உற்பத்தி செய்றவங்க, பழங்கள உற்பத்தி செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள ஊக்குவிக்கும் விதமா ஒரு நெட்வொர்க்கை உருவாக்கற எண்ணம் இருக்கு. எல்லாத்தையும் சூப்பர் மார்க்கெட்லயும், கார்ப்பரேட் கம்பெனிக் காரங்ககிட்டதான் வாங்கணும்னு அவசியம் இல்ல. உள்ளூர் சுயதொழில் செய்றவங்க கிட்டயும் வாங்கலாம். அவங்கள ஊக்குவிக்கணும். அதுக்கான வேலைகளையும் செய்ய இருக்கிறோம்.

நடிகர் ஆரி
நடிகர் ஆரி


நீங்க எப்போது விவசாயம் செய்யப்போறீங்க?

சென்னையைச் சுத்தி 100 கி.மீ தொலைவுல விவசாயம் செய்றதுக்கு இடம் பார்த்துகிட்டு இருக்கேன். விரைவில் விவசாயம் நிலம் கிடைச்சுடும். அந்த நிலம் எல்லோரும் வந்து இயற்கை விவசாயப் பயிற்சி எடுத்துக்கிற இடமாவும், இயற்கை விவசாயத்தைப் பத்தி உரையாடுறதுக்கு, ஆராய்ச்சி செய்றதுக்கு உரிய இடமாகவும் இருக்கும்.

பசுமை விகடனைப் பற்றி?

2007-ம் ஆண்டுக்குப் பிறகு, வளரும் தலைமுறைக்குக் கிடைச்ச வரப்பிரசாதம் பசுமை விகடன். பசுமை விகடன் மூலமா நிறைய விஷயங்கள தெரிஞ்சுகிட்டு இருக்கேன். வேளாண் ஆராய்ச்சி சம்பந்தமான கட்டுரைகள் எழுதுவதாகட்டும், விவசாயிகள கொண்டாடுவதாகட்டும், விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுவதாகட்டும் அனைத்தையும் தொகுத்து திறம்பட எழுதி அதை மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கிற பணியைச் செஞ்சுகிட்டு வருது. இதைப் பணி என்று சொல்ல மாட்டேன். பணியோடு சேர்ந்த சேவை என்றுதான் சொல்வேன். பசுமை விகடன் செய்வது முக்கியமான பசுமைப் பணி. நிறைய பேர பசுமையா மாத்திக்கிட்டு இருக்கு. பசுமை விகடனோடு பயணிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கு.

நடிகர் ஆரி
நடிகர் ஆரி

விவசாயத்தைப் பற்றி நிறைய பேசுறீங்க? உங்க பின்னணி பற்றி?

எனக்குச் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், பழனி. அப்பா விவசாயி கிடையாது. தாத்தா விவசாயம் செஞ்சார். சோத்துல கை வைக்கிற எல்லோரும் விவசாயத்தைப் பத்தி பேசணும்ங்கறது என்னோட எண்ணம். டாக்டர், இன்ஜினீயர், நடிகர், விஞ்ஞானி என்று எல்லோரும் பேசணும். அப்பதான் விவசாயிகளோட கஷ்டம், அவங்களோட முக்கியத்துவம் எல்லாருக்கும் தெரிய வரும்.

எல்லோருமே அடுத்து என்ன வாங்கணும், எங்க சொத்து சேர்க்கணும்னுதான் யோசிக்கிறாங்களே தவிர, யாரும் உணவைப் பத்தியோ, விவசாயத்தைப் பற்றியோ யோசிக்கிறதில்ல. இந்த கொரோனா ஊரடங்குல எல்லோரும் வீட்டுக்குள் முடங்கியபோது எங்க போகணும்னு நினைச்சாங்க? இயற்கையான காத்து, சத்தான உணவு வேணும்னுதான நினைச்சாங்க. இயற்கைக்கேத்த மாதிரி நாம் ஏன் நம் வாழ்க்கையைத் தகவமைச்சுக்கக் கூடாது? நாம் எல்லோரும் போய்ச் சேர வேண்டிய இடம் அதுதானே.

நடிகர் ஆரியின் பேட்டியைப் பார்க்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும். https://www.youtube.com/watch?v=5BQ3ow665Bc

படங்கள்: மா.சந்தீப் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism