Published:Updated:

நடிகர் கம் இயற்கை விவசாயி பக்ரூ... 15 சென்ட் தோட்டத்தில் நிறைய பழ மரங்கள்!

விவசாய வேலையில் பக்ரூ
விவசாய வேலையில் பக்ரூ

இயற்கை விவசாயத்தின்மீது அதிக ஆர்வம் கொண்ட பக்ரூ, கேரளாவிலுள்ள தனது வீட்டுக்கு அருகிலேயே 15 சென்ட் நிலத்தில் தோட்டம் வைத்திருக்கிறார். அதில் வீட்டுத் தேவைக்கான காய்கறிகளையும் பழங்களையும் விளைவிக்கிறார்.   

பிரபல மலையாள நடிகர் `கின்னஸ்’ பக்ரூ, தமிழில் `காவலன்’, `ஏழாம் அறிவு’, `டிஷ்யூம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ்பெற்றவர். உயரம் குறைவான தோற்றம் கொண்டவர். அதனால் இளமைக்காலத்தில் பல்வேறு புறக்கணிப்புகளை எதிர்கொண்டார். ஆனால், சினிமா துறையில் தனது திறமையை நிரூபித்து முத்திரை பதித்துள்ளார். இயற்கை விவசாயத்தின்மீது அதிக ஆர்வம் கொண்ட பக்ரூ, கேரளாவிலுள்ள தனது வீட்டுக்கு அருகிலேயே 15 சென்ட் நிலத்தில் தோட்டம் வைத்திருக்கிறார். அதில் வீட்டுத் தேவைக்கான காய்கறிகளையும் பழங்களையும் விளைவிக்கிறார்.
சினிமா நிகழ்ச்சியில் அஜித் உடன்
சினிமா நிகழ்ச்சியில் அஜித் உடன்

`இயற்கையின் தேசம்' கேரளாவைக் குளிர்வித்துக்கொண்டிருக்கிறது பருவமழை. ஒரு மழை நாளில், தனது விவசாய ஆர்வத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் பக்ரூ.

``பூர்வீகம், கொல்லம் மாவட்டம். படிச்சது, வளர்ந்ததெல்லாம் கோட்டயம் மாவட்டம். அப்பா டிரைவர், அம்மா தபால் நிலைய ஏஜென்ட். எங்க வீட்டில் யாருக்கும் விவசாய முன் அனுபவம் ஏதுமில்லை. ஆனா, உறவினர்கள் சிலர் விவசாயம் செய்தாங்க. அவங்க வீட்டுக்குப் போகும்போது மட்டும் விவசாயத்தைப் பத்தி ஓரளவுக்குத் தெரிஞ்சுப்பேன். சொந்தமா விவசாயம் செய்யும் ஆர்வம் இருந்தாலும், அப்போ எங்களுக்குச் சொந்த நிலமில்லை. பொருளாதார ரீதியாவும் சிரமத்துல இருந்தோம். முதல்ல நிரந்தரமான வேலையை ஏற்படுத்திக்கும் நிர்பந்தத்தில் இருந்தேன்.

நடிகர் பக்ரூ
நடிகர் பக்ரூ

ஸ்கூல் படிக்கும்போதே சினிமாவில் சின்ன ரோல்களில் நடிச்சேன். எம்.ஏ முடிச்சுட்டு, சினிமா துறையை என் கரியரா தேர்வு செஞ்சேன். படிப்படியா பல்வேறு மலையாளப் படங்கள்லயும், சில தமிழ் படங்கள்லயும் நடிச்சேன். சொந்த சம்பாத்தியத்தில கொஞ்சம் சொத்துகள் வாங்கினேன். சோட்டானிக்கரையில இருக்கும் என்னுடைய வீட்டின் பரப்பளவு அஞ்சு சென்ட். வீட்டைச் சுத்தி காம்பவுன்டுக்குள் அழகுச் செடிகள் அதிகளவில் வெச்சிருக்கோம். இதன் மூலம், பசுமையான சூழல், நல்ல காற்று, பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குது.

வீட்டிலிருந்து நடந்துபோகும் தூரத்தில்தான் தோட்டம் இருக்கு. அந்த 15 சென்ட் நிலத்தை நாலு வருஷத்துக்கு முன்னாடி வாங்கினேன். கிராமங்கள்ல, நிலத்தைச் சும்மா விட்டிருக்கக் கூடாதுனு சொல்வாங்க. சின்ன வயசுல இருந்தே எனக்கிருந்த விவசாய ஆர்வத்தைப் பூர்த்தி செய்துக்க நினைச்சேன். 15 சென்ட் நிலத்தைச் சமன்செஞ்சு அதில் மா, பலா, வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, சீதா, சப்போட்டா, பப்பாளி, நாவல்ன்னு பலவகையான பழ வகை மரங்களையும், மரவள்ளிக் கிழங்கையும், அவற்றுக்கு இடையே காய்கறிச் செடிகளையும் வளர்க்க ஆரம்பிச்சேன்...” என்கிறார் பக்ரூ. பக்ரூவுக்கு இப்போது வயது 43.

மகளுடன் விவசாய வேலையில் பக்ரூ
மகளுடன் விவசாய வேலையில் பக்ரூ
`அற்புதத்தீவு’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த பக்ரூ, உயரம் குறைந்த நடிகர் ஹீரோவாக நடித்த வகையில், 2008-ம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். ஒரு மலையாளப் படத்தை இயக்கியிருப்பவர், அதற்காக `லிம்கா’ சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார். வெகுளித்தனத்தையும் குறும்புத்தனத்தையும் தனது நடிப்பில் அதிகம் வெளிப்படுத்தும் பக்ரூ, கேரளக் குழந்தைகள் மனதை வெகுவாகக் கொள்ளை கொண்டிருக்கிறார்.

``காய்கறிச் செடிகள்ல தொடர்ந்து பலன் கிடைக்குது. ஒவ்வொரு வருஷமும் பருவமழை நேரத்துல காய்கறிச் செடிகளை எடுத்துட்டு, புதுச்செடிகளை நட்டு வைப்பேன். இந்த வருஷமும் பருவ மழை நல்லாவே கிடைச்சிருக்கு. போனமாதம்தான் மறுபடியும் காய்கறிச் செடிகளை நட்டிருக்கேன். தக்காளி, வெண்டை, கத்திரிக்காய், பச்சைமிளகாய், குடமிளகாய், முருங்கை, அவரை உட்பட நிறைய காய்கறிகள், சிலவகை கீரைச் செடிகள் இருக்கு. அவை அடுத்த மாசத்திலிருந்து பலன் கொடுக்க ஆரம்பிச்சுடும். அதேசமயம் பழ வகை மரங்கள்ல இருந்து இப்போதான் பழங்கள் வர ஆரம்பிச்சிருக்கு.

தோட்டத்தில் விளைந்த பலா பழத்துடன்
தோட்டத்தில் விளைந்த பலா பழத்துடன்

மொத்தம் 50 மரங்களுக்கு மேல் இருக்கும். அதுல அஞ்சு பலா மரங்கள்ல இருந்து இதுவரைக்கும் 25 பழங்கள் பறிச்சுட்டோம். பலா பழங்கள் என் உயரத்துக்கு இருந்துச்சு. என் தோட்டத்தில் விளையும் பலா பழங்கள் ரொம்பவே பருமனுடன் இருக்காது. ஆனா, சுவை அபாரமா இருக்கு. சொந்தக்காரங்களுக்கும் பலா பழங்களைக் கொடுத்தோம். இப்போ மரத்துல சில காய்கள் இருக்கு. பப்பாளி, எலுமிச்சை, சீதா, ஆரஞ்சு, வாழை, சப்போட்டா பழங்களையும் பறிக்கிறோம்.

ஷூட்டிங் இல்லைனா, சாயங்கால நேரம் முழுக்கவே தோட்டப் பராமரிப்புலதான் நேரம் செலவிடுவேன். நான் இல்லாத நேரத்துல குடும்பத்தினர் தோட்டத்தைக் கவனிச்சுப்பாங்க. தோட்டத்துல கிணறு இருக்கு. அதுல தண்ணி எப்போதும் இருக்கும். எனவே, தண்ணிக்குப் பிரச்னையில்லை. தோட்ட வேலைக்கு ஒரு வேலையாளும் இருக்காங்க.

நடிகர் பக்ரூ
நடிகர் பக்ரூ

ரசாயன உரங்கள் பயன்படுத்தாம, இயற்கை அங்காடிகள்ல இருந்து மண்புழு உரம் உள்ளிட்ட சில இயற்கை உரங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்தறோம். எனக்கு நகரப் பகுதியில் வசிக்கிறதுல ஆர்வம் இல்லை. அமைதியா, காற்றோட்ட வசதியுள்ள, நல்ல குடிநீர் கிடைக்கும் கிராமப்புறச் சூழல்ல வசிக்கவே விருப்பப்படுவேன். அதனாலதான் இப்ப வசிக்கும் இடத்தைத் தேடிப்பிடிச்சு குடிவந்தோம். இந்தச் சூழல்ல வசிக்கிறதால மனசுக்கு நிறைவான அனுபவம், மகிழ்ச்சிக் கிடைக்குது. இதை வார்த்தைகளில் சொல்வது கஷ்டம். அனுபவத்தில் உணர்ந்து பார்த்தால்தான் தெரியும்” என்கிற பக்ரூ, லாக்டெளன் சூழல் குறித்துப் பேசினார்.

``கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்கள்ல பருவமழை சரியா கிடைக்கும். விவசாயத்துக்குத் தேவையான நீரும் இருக்கும். அதனால, இங்க விவசாயம் தொடர்ந்து நடப்பதுடன், பலரும் இயற்கை விவசாயத்துக்குத் திரும்பியிருக்காங்க. இங்குள்ள அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் பலரும் இயற்கை விவசாயம் செய்றாங்க. இதன் மூலம் பலருக்கும் விவசாயம் பத்தின விழிப்புணர்வு கிடைக்குது. அந்த வகையிலதான், என்னுடைய சிறிய அளவிலான நிலத்துல இயற்கை விவசாயம் செய்யறேன்.

மனைவி, மகளுடன் பக்ரூ
மனைவி, மகளுடன் பக்ரூ

இதுல நிறைய அனுபவம் கிடைச்சிருக்கு. நண்பர்களுடன் சேர்ந்து ஏக்கர் கணக்கில் பெரிய அளவில் இயற்கை விவசாயம் செய்ய முயற்சி செய்துட்டிருக்கேன். அப்படி நடந்தா, விவரிக்க முடியாத அளவுக்கு சந்தோஷப்படுவேன். சொந்த நிலத்துல சில செடிகள் வெச்சு, அதுல கண் முன்னே விளைஞ்ச காய்கறிகளைப் பறிச்சு சமையலுக்குப் பயன்படுத்துறது அலாதியான அனுபவம். லாக்டெளன்ல சினிமா ஷூட்டிங் இல்லாம வீட்டுலயேதான் இருக்கேன். ஆனா, சோர்வு என்பதே எனக்கு ஏற்படுறதில்லை

காலையில வீட்டுக்குள் என் மகள் தீப்தகீர்த்திகூட விளையாடுவேன். மனைவி காயத்ரி மோகன்கூட நிறைய சினிமா கதைகள் பத்திப் பேசுவேன். சாயந்திரம் குடும்பத்துடன் தோட்டத்துக்குப் போய், சில மணிநேரம் இயற்கையை ரசிப்போம். தோட்டத்துக்குப் போய் நின்னாலே குளுமையான காத்துல, மனசெல்லாம் நிறைவாகிடும். இதனால, மன அழுத்தம்ங்கிற வார்த்தைக்கு இடமே இல்லை. எனக்குனு சின்னதா தோட்டம் இருந்ததால்தான் இதெல்லாம் சாத்தியமாகியிருக்கு.

விஜய் உடன் பக்ரூ
விஜய் உடன் பக்ரூ

பொருளாதாரத் தேவைக்காக எல்லோரும் ஓடிக்கிட்டே இருக்கோம். ஆனா, உடல்நலனைவிட முக்கியமான விஷயம் வேறெதுவுமில்லை. குழந்தைங்க முதல் பெரியவங்கவரை பலருக்கும் கேன்சர் வருது. இதற்கு அடிப்படை காரணமே, உணவு முறைதான். ரசாயன உரங்களின் பயன்பாடும் அதிகமாகி, மண்ணும் மக்களும் ரொம்பவே பாதிக்கப்படுவதை நிச்சயம் சரிசெய்தாகணும். முடிஞ்ச வரைக்கும் சில தொட்டிகளில், வீட்டுத் தோட்டத்தில் காய்கறிச் செடிகளையாவது வளர்த்து அனைவரும் பயன்பெறணும்” என்று முடிக்கும் பக்ரூ, குடும்பத்துடன் தோட்டத்துக்குச் செல்ல ஆயத்தமானார்.

அடுத்த கட்டுரைக்கு