நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

"மனத்திருப்தி, மகிழ்ச்சி விவசாயத்துலதான் கிடைக்குது!" நெகிழும் நடிகர் கருணாஸ்!

பண்ணையில் நடிகர் கருணாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணையில் நடிகர் கருணாஸ்

பண்ணை

திரைப்பட நடிகர், மக்கள் இசைப்பாடகர், அரசியல்வாதி இப்படிப் பல அடையாளங்கள் இருந்தாலும் விவசாயி என்ற அடையாளமே பெருமை தருகிறது’’ என்கிறார் நடிகர் கருணாஸ்.

சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தில் இருக்கிறது நடிகர் கருணாஸ் தோட்டம். ஒரு தகாலை வேளையில் தோட்டத்தில் இருந்த அவரை சந்திக்கச் சென்றோம். சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட தோட்டம். நிலத்தின் நடுவே வாகனம் செல்ல வசதியாக அமைக்கப்பட்ட பாதை. அதன் இரண்டு பக்கமும் தென்னை, வாழை உள்ளிட்ட பலவகை மரங்கள். தோட்டத்தின் ஒரு பகுதியில் பெரிய வட்டக் கிணறு. அதில் தண்ணீர் தளும்பி நிற்கிறது. தொழுவத்தில் மாடுகள் இளைப்பாற, நாட்டு நாய்கள் சுற்றி வந்தன.

பண்ணையில் நடிகர் கருணாஸ்
பண்ணையில் நடிகர் கருணாஸ்

அங்கிருந்த சிறிய வீட்டின் முன்பாக அமர்ந்து அவித்த வேர்க்கடலையை உறித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் கருணாஸ். ‘‘வாங்க... கடலை சாப்பிடுங்க. நம்ம தோட்டத்தில விளைஞ்ச கடலை” எனக் கைநிறைய அள்ளிக் கொடுத்து வரவேற்றார். “இங்க வந்தா இதுதான் எனக்குக் காலை உணவு” என்றவர், முற்றிய தேங்காயில் பிழியப்பட்ட பாலை குடித்தார். “கடலையும் தேங்காய்ப்பாலும் காலையில சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லது. எந்த நோயும் வராது” என்றவர், எழுந்து நடந்துகொண்டே பேசினார்.

‘‘என்னோட அமைப்புல இருக்க ஒரு தம்பிக்கு இங்க தோட்டம் இருக்கு. அவரு தோட்டத்துல பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட்டு, விருந்து சாப்பிட பலதடவை குடும்பத்தோட வந்திருக்கேன். அப்பல்லாம் நாமளும் இதுமாதிரி ஒரு தோட்டம் வாங்கி, விவசாயம் செஞ்சு, இயற்கையோட வாழணும்னு ஆசையா இருக்கும். அந்த நேரத்துலதான் ‘பக்கத்துல விவசாய நிலம் விலைக்கு வருது. வாங்கிப் போடுங்க’ன்னு அந்தத் தம்பி சொன்னாப்ல.

நாட்டு நாய்கள்
நாட்டு நாய்கள்

நானும் உடனே வாங்கிட்டேன். நான் வாங்கும்போது புதர் மண்டிப்போய் தரிசு நிலமாதான் இருந்துச்சு. நிலம் வாங்குனதும் சிலபேரு, ‘சிவகங்கை டவுனுக்குப் பக்கத்தில இந்த இடம் இருக்குது. ப்ளாட் போட்டு வித்தா நல்ல லாபம் கிடைக்கும்’னு சொன்னாங்க. விவசாயம் செய்யுற நிலத்துல ப்ளாட் போட்டு விக்கிறது சின்ன வயசுலருந்தே எனக்குப் பிடிக்காது. ஒரு புல்லும் முளைக்காத நிலத்துல வேணா வீடு கட்டலாம். விளையுற பூமியில வீடு கட்டுறது கொடுமை. அதனால நிலத்தை விவசாயப் பண்ணையா ஆக்கணும்னு முடிவு பண்ணினேன்.

நம்மாழ்வார் புத்தகங்களைப் படிச்சிருக்கேன். அவர் பேசுனதைக் கேட்டுருக்கேன். அதனால, எந்தக் காரணம் கொண்டும் ரசாயன உரம் பயன்படுத்தக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். லாபத்தைக் குறிக்கோளா நினைக்காம, என் மன திருப்தி, மகிழ்ச்சிக்காகத்தான் விவசாயம் பண்றேன். அதனால இயற்கை முறையிலதான் விவசாயம் செய்யணுங்கிறதுல தெளிவா இருக்கேன்” என்றவர், தோட்டத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

பண்ணையின் மேற்புறத் தோற்றம்
பண்ணையின் மேற்புறத் தோற்றம்

‘‘புதுக்கோட்டை மாவட்டம், மேலக் கோட்டை தாஞ்சூர்தான் என் அம்மா அப்பா ஊரு. அப்பா விவசாயம் செய்யல. ஆனா, எங்க தாத்தா ஊருல விவசாயம் செஞ்சிருக்காரு. என் அம்மாயி விவசாய வேலைக்குப் போகும்போது சின்ன வயசுல நானும் அவங்க கூட வேலைக்குப் போயிருக்கேன். கிணத்துல கவட்டை போட்டு மாடு வச்சு தண்ணி இறைச்சு ஊத்தியிருக்கேன். அதுக்கு பிறகு 17 வயசுல ஊரைவிட்டுப் போயிட்டேன். அப்புறம் பாடகரா, நடிகரா வாழ்க்கை மாறிப் போயிடுச்சு.

5 வருஷத்துக்கு முன்னால இந்த நிலத்தை வாங்கினேன். வாங்கிக் கொஞ்சநாள் சும்மாதான் போட்டுருந்தேன். அப்புறம்தான் விவசாயம் செய்யணும்கிற ஆசை வந்து, இப்ப கொஞ்சம் கொஞ்சமா பண்ணிட்டுருக்கேன். அதிலயும் போன வருஷம் கொரோனா காலத்துல கிடைச்ச ஓய்வுலதான் இங்க அடிக்கடி வர ஆரம்பிச்சேன்.

வாழை மற்றும் மரப்பயிர்கள்
வாழை மற்றும் மரப்பயிர்கள்

ஒரு விவசாய நிலத்தை உருவாக்குறது சாதாரணமான வேலையில்ல. இந்த நிலத்தை வாங்குன பிறகு, டன் கணக்கா கல் எடுத்தோம். அந்தளவுக்குக் கல்லும் முள்ளுமா கிடந்துச்சு. அப்படீன்னா நம்ம முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நிலங்களை உருவாக்கித் தந்துட்டுப் போயிருக்காங்கனு நினைக்கும்போது பிரமிப்பா இருக்குது. அதை இப்ப இருக்கத் தலைமுறை நினைச்சு பார்க்கணும்’’ என்றவர், தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நெல் சாகுபடி
நெல் சாகுபடி


‘‘விவசாயத்தைப் பத்தி எனக்குப் பெருசா ஒண்ணும் தெரியாது. ஒவ்வொருத்தர் கிட்டயும் கேட்டு, பட்டுத் தெளிஞ்சு பண்ணிக்கிட்டு வர்றேன். இது மொத்தம் 14 ஏக்கர் நிலம். மகோகனி, காட்டுப் பலா, தேக்கு, வில்வம், இலந்தை, நாவல், மலைவேம்பு, மா, கொய்யான்னு பலவிதமான மரங்களை வளர்த்துகிட்டு இருக்கேன். 21 அடி இடைவெளியில தென்னை மரம் வச்சிருக்கேன். உளுந்து, நாட்டு வேர்க்கடலை போட்டு மகசூல் எடுத்துட்டேன். இப்ப, நெல் ஜெயராமன் ஐயா அறிமுகப்படுத்துன கறுப்புக் கவுனி, தூயமல்லி நெல் நாத்து விட்டிருக்கேன். எல்லா வியாதிகளையும் தீர்க்குற மருந்து நம்ம பாரம்பர்ய அரிசி’’ எனப் பெருமையைப் பேசியவர் மீண்டும் தனது விவசாயத் தகவலுக்குள் புகுந்தார்.

‘‘இங்க 100 நாட்டுக்கோழிகள் வளர்க்கிறேன். பசு மாடும், மஞ்சு விரட்டு காளையும் வச்சிருக்கேன். கன்னி, சிப்பிப்பாறை, அலங்குனு நம்ம பாரம்பர்ய நாட்டு நாய்கள் 5 வளர்க்கிறேன். அலங்கு நாய் இனம் அழிஞ்சிட்டு வருது. ரொம்ப குறைஞ்சுபோச்சு. அதை இனப்பெருக்கம் பண்ணி, மக்களுக்குக் கொடுத்து அந்த இனத்தை மீட்டெடுக்கணும்னு ஒரு திட்டம் வச்சிருக்கேன். மீன் வளர்க்குற துக்காகக் குட்டை அமைச்சேன். ஆனா, ஆள் இல்லாம அதைத் தொடர்ந்து பராமரிக்க முடியல.

நிலக்கடலை சாகுபடி
நிலக்கடலை சாகுபடி

இயற்கை உரம் போட்டுக் கடலைச் சாகுபடி பண்ணி அறுவடை செஞ்சேன். அதிக மகசூல் கிடைச்சது. ‘இந்தாளு 90 சென்ட்ல அதிக மகசூல் எடுத்திருக்கான். அதுவும் எந்த உரமும் போடாம எடுத்திருக்கான்’னு பக்கத்துல இருக்க விவசாயிங்க ஆச்சர்யப் பட்டுப் போனாங்க. ‘எப்படி’ன்னு என்கிட்டே ஆலோசனை கேட்டாங்க. கத்துக்குட்டி விவசாயியான எனக்கு இது மகிழ்ச்சியா இருக்கு’’ என்று பெருமையாகச் சிரித்தவர்,

கிணற்றின் மேற்புறத் தோற்றம்
கிணற்றின் மேற்புறத் தோற்றம்


‘‘போர் தண்ணிய கிணத்துல விட்டு, அதைச் சொட்டுநீர்ப் பாசன முறையில சிக்கனமா பயன்படுத்துறேன். கோழிக்கழிவு உரம் நல்லதுன்னு சிலர் சொன்னாங்க. அதை வாங்கி இங்க கொட்டி வச்சிருக்கேன். ஒரு வருஷமாகியும் அதுல இருக்க மருந்து வாசம் இன்னும் போகல. அதனால அந்த உரத்தைப் பயன்படுத்தல. பக்கத்து கிராமங்கள்லப் போய்ச் சாணம், ஆட்டுப்புழுக்கை வாங்கிட்டு வந்து உரமா போடுறேன். அடுத்து இங்கேயே மண்புழு உரம் தயாரிக்கப்போறேன்.

எனக்கு லாபத்தைவிட மனத் திருப்திதான் முக்கியம். எல்லோரும் அப்படி இருக்கத் தேவையில்ல. இயற்கை விவசாயத்தை லாபகரமா செய்யலாம். நான் சினிமாவுல இருக்குறதால அப்பப்ப வந்து பார்த்தே இந்தளவுக்குச் செய்ய முடியுதுன்னா, ஏன் முழுநேர விவசாயிகளால பண்ண முடியாது? உங்க புள்ளைங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சா, மரம் வெச்சு, இயற்கை நேசிக்கக் கத்துக்கொடுங்க. விவசாயத்தைச் சொல்லிக் கொடுங்க’’ என்றவர் நிறைவாக,

வண்டி மாடுகள்
வண்டி மாடுகள்

‘‘இந்தத் தோட்டத்துக்குள்ள வண்டி போற மாதிரி பாதை அமைக்கும்போது ஒரு பனைமரம் குறுக்கே இருந்துச்சு. அதை எடுக்கணும்னு சொன்னாங்க. நான் முடியாதுன்னு சொல்லிட்டு, பாதையை வளைச்சு கொண்டு போனேன். இனிமே லெல்லாம் ஒரு பனைமரத்தை நம்மால உருவாக்க முடியுமா? எனக்கு வருமானம், புகழ் தர்ற தொழில் சினிமாவா இருந்தாலும், மனசுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கிற தொழில் விவசாயம்தான்’’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.