Published:Updated:

"யானைகள் சீக்கிரமே எங்க விருந்தாளியாக வரும்; ஆவலுடன் காத்திருக்கிறோம்!"- நடிகர் கிஷோர்

"எங்க தோட்டத்துலயும் பலா மரம் நல்லா வளர்ந்துட்டு வருது. அதுல காய்கள் அதிகரிக்க ஆரம்பிச்சதும், யானைகள் தினசரி விருந்தாளியா வர ஆரம்பிச்சுடும்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா லாக்டெளனால் சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். ஆனால், பனியன் மற்றும் ஷார்ட்ஸ் (shorts) அணிந்துகொண்டு, கையில் மண்வெட்டியுடன் விவசாய வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நடிகர் கிஷோர். நாட்டு மாடுகளைப் பூட்டி ஏர் கலப்பையில் நிலத்தை உழுது விவசாயம் செய்பவர், அந்த விவசாய வேலைகளை மகன்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்.
நடிகர் கிஷோர்
நடிகர் கிஷோர்

‘ஆடுகளம்’, ‘கபாலி’ உட்பட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கும் கிஷோர், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் புகழ்பெற்ற நடிகர். இயற்கை விவசாயத்தின்மீது அதீத ஆர்வம் கொண்டவர். நடிப்புக்கு இடையே மனைவி விஷாலாவுடன் இணைந்து இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.

பெங்களூருவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரியப்பனதொட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது இவரின் வசிப்பிடம். அங்கு, எட்டு ஏக்கரில் மினி காடுபோல காட்சியளிக்கும் இவரின் ‘பஃபல்லோ பேக்’ பண்ணை இனிதே வரவேற்கிறது.
உழவுப் பணியில் கிஷோர்
உழவுப் பணியில் கிஷோர்

வீட்டுக்குத் தேவையான உணவை தாங்களே உற்பத்தி செய்துகொள்வது, குழந்தைகளுக்கும் விவசாயம் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்றுக்கொடுப்பது, ஆடம்பரம் இல்லாத முழுமையான இயற்கை வாழ்வியல் முறை என, கிஷோரின் வீடு கண்களை மட்டுமல்ல மனத்தையும் குளிர்விக்கிறது. ஒரு சினிமா பிரபலத்தின் வீட்டு ஆடம்பரங்களின் எந்த அறிகுறியும் அங்கு தென்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிஷோரின் லாக்டெளன் கால விவசாய அனுபவங்களைக் கேட்பதற்கு முன்பு, ஒரு சிறிய ஃப்ளாஷ்பேக். கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு கல்லூரியில் கிஷோரும் விஷாலாவும் பி.எஸ்ஸி (விலங்கியல்) படித்துள்ளனர். கிஷோர் விஷாலாவுக்கு சீனியர். கல்லூரி தியேட்டர் நாடகங்களில் இருவரும் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலானது. பிறகென்ன, திருமணமாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இவர்களின் மனத்தை மட்டுமல்ல, மனத்திலிருந்த இயற்கை வாழ்வியல் மீதான ஆர்வத்தையும் சேர்த்தே இணைத்திருக்கிறது, காதல்!

குடும்பத்தினருடன் கிஷோர்
குடும்பத்தினருடன் கிஷோர்
`மூணு இடத்துல இயற்கை விவசாயம் செய்றோம்; வீட்டுத் தோட்டத்துல மூணு பலா காய்ச்சிருக்கு!' - நடிகை ஊர்வசி

புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார், கிஷோர். “என்னோட தாத்தா கர்நாடக மாநிலம் சென்னப்பட்டணா பகுதியில வசிச்சார். அங்க இயற்கை விவசாயத்துடன் கிராமத்து வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்தார். சின்ன வயசுல ஸ்கூல் விடுமுறை காலங்களை அவருடன் கழிச்சேன்.

அந்த இயற்கை வாழ்க்கை முறை எனக்கு பிடிச்சுப்போச்சு. தண்ணி, காடு, மேடு, கிராமம், நல்ல காத்து இருக்கிற சூழல்ல வாழணும்னு முடிவெடுத்தேன். அதே ஆசை என் மனைவிக்கும் இருந்துச்சு.

கிஷோரின் மகன்கள்
கிஷோரின் மகன்கள்

கல்யாணத்துக்குப் பிறகு எங்களுக்குப் பிடிச்ச மாதிரியான வாழ்க்கைக்கு இடம் தேடினோம். நானும் மனைவியும் இயற்கையை நேசிக்கிறவங்க; ரசாயன உரத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்றா சிந்திக்கிறவங்க. எனவே, எதிர்காலத்துல நாம ‘இயற்கை விவசாயிகள்’னு உறுதியா முடிவெடுத்தோம். எங்க வருமானத்தை சரியா சேமிச்சு, 2009-ல் இந்த நிலத்தை வாங்கினோம். பிறகு, படிப்படியா விவசாயத் தேடல்ல இறங்கி களத்தில் இறங்கிட்டோம்.

ஆனா, விவசாய வாழ்க்கை முறையை லாப நோக்கத்தில் கொண்டுபோக எங்களுக்கு விருப்பமில்லை. எனவே, பொருளாதாரத் தேவைக்காக நான் சினிமாவில் நடிக்கிறேன். மனைவி முழுக்கவே விவசாய வேலைகளைப் பார்த்துக்கறாங்க. ஷூட்டிங் இல்லாத நாள்களில் நானும் விவசாய வேலைகளைப் பார்ப்பேன்” என்பவர், லாக்டெளன் கால அனுபவங்களைப் பகிர்கிறார்.

தோட்டத்தில் கிஷோர்
தோட்டத்தில் கிஷோர்

“லாக்டெளன் அறிவிக்கப்பட்டப்போ ஹைதராபாத்தில் ஷூட்டிங்ல இருந்தேன். பிறகு பெங்களூரு வந்தேன். அங்கே, எங்களுடைய இயற்கை அங்காடி இருக்கும் மற்றொரு வீட்டில் 15 நாள்கள் என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன். எந்தப் பிரச்னையும் இல்லைனு உறுதியான பிறகு கரியப்பனத்தொட்டி வீட்டுக்கு வந்தேன். தொடர்ந்து ஒன்றரை மாசத்துக்கும் மேல் இங்கதான் இருக்கேன்.

தற்சமயம், நாள் முழுக்க கணிசமான நேரத்தை எங்க தோட்ட வேலைகள், குடும்பத்தினருடன் செலவிடறேன். இது என் வாழ்க்கையில ரொம்பவே சிறப்பான காலம். நாங்க வசிக்கும் கிராமத்துல வீடுகள் குறைவு. அதுவும் இடைவெளிவிட்டுத்தான் இருக்கும். எனவே, கொரோனா பாதிப்பால் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், கவனமுடன் இருக்கோம். ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் உணவு முறைகளை இப்போ சரியா கடைப்பிடிக்க முடியுது.

கிஷோர் வீட்டில் காலை உணவு
கிஷோர் வீட்டில் காலை உணவு

ஒன்றரை வருஷமா ரெண்டு வேளை மட்டும்தான் சாப்பிடுறோம். காலையில 11 மணிக்கு எளிமையான முறையில் இட்லி, தோசை, பழைய சோற்றுக் கரைசல்னு ஏதாவதோர் உணவை சாப்பிடுவோம். இங்க நாட்டுக் கோழி முட்டைகள் அதிகம் கிடைப்பதால் அதையும் உணவில் சேர்த்துப்போம்.

இரவுக்கு ராகி களிதான் சாப்பிடுறோம். கீரையுடன் பருப்பு சேர்த்து வேக வெச்சு, அந்தத் தண்ணியை எடுத்து தயார் செய்த களியுடன் சேர்த்து கரைச்சுக்கணும். அதனுடன் கொஞ்சம் நெய், காரத்துக்கு அரைத்த மிளகாய், உப்பு கொஞ்சம் சேர்த்துக்கணும்.

மகன்களுடன் சமையல் செய்யும் கிஷோர்
மகன்களுடன் சமையல் செய்யும் கிஷோர்

தண்ணி எடுக்கப்பட்ட கீரைப் பருப்புக் கடைசலைத் துவையல் மாதிரி செய்து, களிக் கரைசலுக்குத் தொட்டுக்கணும். ரொம்பவே சுவையான இந்த டிஷ்தான் எங்க தினசரி இரவு டின்னர். பின்னர், 8 - 9 மணிக்குள் தூங்கிடுவோம்” என்னும் கிஷோரின் அன்றாட விடியல், விவசாய வேலைகளுடன் தொடங்குகின்றன. எட்டு ஏக்கர் நிலத்தில், ஏராளமான பழ வகை மரங்கள், காய்கறிகளை வளர்க்கிறார்.

“எங்க சுற்றுவட்டாரத்துல கோழி, சேவல்கள், மாடுகள் வளர்ப்போர் அதிகம். அவை அதிகாலையில் சத்தம்போட ஆரம்பிச்சுடும். அந்த இயற்கையான அலாரச் சத்தத்துல விடியற்காலை 4 மணிக்கெல்லாம் எழுந்திடுச்சுடுவோம். உடனே தோட்ட வேலைகளைக் கவனிக்க ஆரம்பிச்சுடுவோம்.

தோட்டத்தில் கிஷோர்
தோட்டத்தில் கிஷோர்

மேடு பள்ளமா, சரிவுகளாக இருக்கும் நிலம்தான் தற்சார்பு விவசாயத்துக்கு சிறந்ததுனு நினைப்பேன். அதுக்காகவே அந்த அமைப்பிலுள்ள நிலத்தை தேடிப்பிடிச்சு வாங்கினோம். நான் லாப நோக்கத்தைத் திட்டமிட்டு இந்த வாழ்க்கை முறைக்கும், விவசாய வேலைகளையும் செய்யல. எனவே, பழ மரங்கள், காய்கறிகளைக் கலந்து கலந்துதான் நடவு வெச்சிருக்கோம்.

தென்னை, கொய்யா, சப்போட்டா, மா, எலுமிச்சை, பப்பாளி, பலா உட்பட நிறைய பழ வகை மரங்களையும், காய்கறிகளையும் வளர்க்கிறோம். படிப்படியா விளைச்சல் அதிகரிக்குது. ஒன்றரை ஏக்கர்ல நாட்டு மாடுகளுக்கான தீவனப் புல் வளர்க்கிறோம். விவசாய வேலைகளை ஆரம்பிச்சு அஞ்சு வருஷத்துக்குப் பிறகுதான் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் சூழல் உருவாச்சு. அதுவரை, ‘நம்மை நாம நம்பினா மட்டும் போதும்’னு உறுதியா இருந்தோம். இப்போ படிப்படியா வெற்றி கிடைச்சிருக்கு.

உழவுப் பணியில் மகன்
உழவுப் பணியில் மகன்

வன விலங்குகள், பறவைகள் தொந்தரவால் சுத்தியிருக்கும் விவசாயிகள் பழ மரங்களை வளர்ப்பதில்லை. அதனால, எங்க தோட்டத்துக்கு விலங்குகளும் பறவைகளையும் வந்து பழங்களைச் சாப்பிடுறது வாடிக்கை. அதுங்க சாப்பிட்டதுபோக இருக்கிற மிச்ச மீதிதான் எங்களுக்கு.” – கிஷோரின் சிரிப்பில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி வெளிப்படுகிறது.

கிஷோர் வளர்க்கும் நாட்டு மாடுகளில் ஒன்றின் பெயர் ஜெயலலிதா. மற்றொன்றின் பெயர் கபாலி.
நாட்டு மாடுகளுடன் கிஷோர்
நாட்டு மாடுகளுடன் கிஷோர்

“எங்க விருப்பத்துக்கு ஏற்ப தேடிப்பிடிச்சு, விலங்குகள் தொந்தரவு இருக்கும்னு தெரிஞ்சுதான் வனப்பகுதிக்குப் பக்கத்துல இருக்கிற இந்த இடத்தை வாங்கினோம். நினைச்சதைவிட விலங்குகளால் சேதாரம் அதிகம் இருந்ததால, ஆரம்பத்துல கொஞ்சம் வருத்தப்பட்டோம். ‘எல்லாம் சரியாதான் நடக்குது. விலங்குகள், பறவைகள் இல்லாம இயற்கை வாழ்வியல் எப்படி முழுமையடையும்? இப்பதான் இயற்கை வாழ்வியலை நோக்கி சரியாகவும் வேகமாகவும் நகர்கிறோம்’னு பாசிட்டிவா எடுத்துக்கிட்டோம்.

யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை, குரங்கு உட்பட பல விலங்குகளும், மயில், கிளி, காகம், குருவி உட்பட நிறைய பறவைகளும் எங்க தோட்டத்துக்கு அடிக்கடி வந்து பழங்களைச் சாப்பிடும். இந்த ஊரிலுள்ள பெரிய பலா மரத்துல காய்கள் அதிகம் இருக்கு. அதைச் சாப்பிட சில தினங்களுக்கு முன்பு பெரிய காட்டு யானை வந்துச்சு. பயத்துல மக்கள் சத்தமிட அது போயிடுச்சு. எங்க தோட்டத்துலயும் பலா மரம் நல்லா வளர்ந்துட்டு வருது. அதுல காய்கள் அதிகரிக்க ஆரம்பிச்சதும் யானைகள் தினசரி விருந்தாளியா வர ஆரம்பிச்சுடும்.

மனைவியுடன் கிஷோர்
மனைவியுடன் கிஷோர்

ஆறு நாட்டு மாடுகள் வளர்க்கிறோம். ரெண்டு சின்ன கறவை மாடுகள் இருக்கு. அதுல ஒண்ணு ஜெயலலிதா அம்மா இறந்த தினத்துல பிறந்துச்சு. எனவே, அன்பின் நிமித்தமா அதுக்கு ‘ஜெயலலிதா’னு பெயர் வெச்சோம். ‘கபாலி’ பட ரிலீஸ் நாள்ல பிறந்த காளை மாட்டுக்கு, ‘கபாலி’ன்னு பெயர் வெட்டுட்டோம். கபாலி ரொம்பவே குறும்பு செய்வான். ஜெயலலிதா ரொம்பவே சமத்தா இருக்கும். நாட்டு மாடுகளை விவசாயத் தேவைக்குத்தான் அதிகம் பயன்படுத்தறோம். மாடுகளைப் பயன்படுத்தி, செக்கு எண்ணெய் தயாரிப்புப் பணிகளை ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். லாக்டெளனால் நேரம் அதிகம் கிடைப்பதால், கோழி மற்றும் வான்கோழி வளர்ப்புகளை அதிகப்படுத்தலாம்னு இருக்கேன்.

எவ்வளவுதான் புதுத் தொழில்நுட்பம் மற்றும் யுக்திகளைப் பயன்படுத்தினாலும், நம்ம நிலத்துக்கு அது பொருந்தினால்தான் பலன் கிடைக்கும். மண், தண்ணி ஆகியவைதான் நிலத்தின் வளர்ச்சிக்கு அதிகம் பயன் தரும். அதற்கேற்ப அனுபவப் பாடத்துல இருந்து ஒவ்வொரு புது விஷயத்தையும் கத்துக்கிறோம். மேலும், புத்தகங்கள், யூடியூப்ல பார்த்துத் தெரிஞ்சுக்கிறோம். கத்துக்கிற விஷயங்களை எங்க நிலத்துக்கு ஏற்ப முறையா செயல்படுத்தறோம்.

விலங்குகளால் சேதாரம் அதிகம் இருந்ததால, ஆரம்பத்துல கொஞ்சம் வருத்தப்பட்டோம். ‘எல்லாம் சரியாதான் நடக்குது. விலங்குகள், பறவைகள் இல்லாம இயற்கை வாழ்வியல் எப்படி முழுமையடையும்? இப்பதான் இயற்கை வாழ்வியலை நோக்கி சரியாகவும் வேகமாகவும் நகர்கிறோம்’னு பாசிட்டிவா எடுத்துக்கிட்டோம்.
கிஷோர்
`இயற்கை வளங்களை அழித்துவிட்டு தொழில்மயமாக்குவது சரியான வளர்ச்சியா?' - ஒர் ஆய்வு! #InDepthAnalysis

அனுபவம் கூடக்கூட ஏற்கெனவே படிச்ச, கத்துகிட்ட விஷயங்களும்கூட புதுசா தெரியுது. எனவே, ‘இயற்கை விவசாயத்துல எல்லாமே தெரிஞ்சுகிட்டேன்’னு யாராலும் எப்போதும் தன்னிறைவு அடையவே முடியாது” என்று உற்சாகமாகக் கூறும் கிஷோரின் மனைவி விஷாலா, பெங்களூருவில் இயற்கை அங்காடி ஒன்றை நடத்துகிறார்.

நான்கு குழுக்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் விளை பொருள்களை அந்த அங்காடியில் கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள். வீட்டுத் தேவைக்குப் போக, கிஷோரின் தோட்டத்தில் விளையும் பழங்கள், காய்கறிகளையும் அந்த அங்காடியில் விற்பனை செய்கிறார்கள்.
தோட்டத்தில் விளைந்த விளை பொருள்கள்
தோட்டத்தில் விளைந்த விளை பொருள்கள்

“அந்த அங்காடி வாரத்துல ரெண்டு நாள் மட்டும் செயல்படும். அந்தப் பணிகளை என் மனைவிதான் கவனிச்சுக்கிறாங்க. அங்கயே இப்ப பேக்கரி ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம். விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயன் கிடைக்கிற மாதிரி நியாயமான விலையில்தான் விவசாய விளை பொருள்கள் மற்றும் பேக்கரி பொருள்களை விற்பனை செய்றோம். அங்காடியில மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த 12 பெண்கள் வேலை செய்றாங்க. இப்ப பெரிசா லாபமெல்லாம் இல்லைனாலும், விவசாயிகளையும் மக்களையும் இணைக்கிற சின்ன பாலமா அந்த அங்காடி செயல்படுதுவதில் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி.

எங்க தோட்டத்துல கிடைப்பது தவிர, எங்க அங்காடியில இருந்தும் வீட்டுத் தேவைக்கான காய்கறிகளைப் பயன்படுத்துவோம். எனவே, பெரும்பாலும் இயற்கை விளை பொருள்களைத்தான் சாப்பிடுறோம். எங்க ரெண்டு பசங்களும் ஸ்கூல் படிக்கிறாங்க. அவங்களுக்கும் இயற்கை வாழ்வியல்தான் சிறந்ததுனு செயல்முறையுடன் படிப்படியா சொல்லிக்கொடுக்கிறோம். ஆனாலும், அவங்க குழந்தைகள்தானே!

மகன்களுடன் விஷாலா
மகன்களுடன் விஷாலா

வாரத்துல ஒரு வேளைக்கு மட்டும் ஜங்க் ஃபுட் சாப்பிட அனுமதிக்கிறோம். இன்னும் கொஞ்ச காலத்தில் அவங்களும் இயற்கை வாழ்வியல் முறைக்கு ஆர்வமுடன் பழக்கமாகிடுவாங்க” என்பவரின் வீட்டில் டி.வி கிடையாது. குடும்பமாக நால்வரும் உட்கார்ந்து உரையாடுவது, விளையாடுவதுதான் இவர்களின் பொழுதுபோக்கு.

“தோட்டத்துல இயற்கை உரங்கள்கூட அதிகம் போடுறதில்லை. இயற்கையாகவே எல்லா மரங்களும் செடிகளும் வளருது. எங்க நிலத்துல நிறைய இடங்கள்ல குழி வெட்டியிருக்கோம். அதனால மழை பெய்யும்போது குழிகளில் தண்ணி தேங்கி நிக்கும். தவிர, மூடாக்கு முறையைச் சரியா செய்றதால தண்ணிப் பிரச்னை இப்ப பெரிசா இல்லை. இன்னும் ரெண்டு வருஷத்துல முழுமையா தற்சார்பு வாழ்க்கை முறைக்கு மாறிடுவோம்.

மகன்களுடன் கிஷோர்
மகன்களுடன் கிஷோர்

கொரோனா பாதிப்பு எப்போ சரியாகும்னு யாருக்கும் தெரியாது. அதனால கையில இருக்கிற பொருள்களையும், நம்ம நிலத்துல விளையும் பொருள்களையும் முறையா பயன்படுத்திக்கிட்டு, தேவையற்ற செலவினங்களைக் குறைச்சுக்கிட்டால்தான் இனிவரும் காலங்களை நல்ல முறையில் எதிர்கொள்ள முடியும். இதுதான் தற்சார்பு வாழ்க்கை! அந்த வாழ்க்கைக்கு சீக்கிரமே மாறச் சொல்லி கொரோனா லாக்டெளன் எச்சரிக்கை செய்திருக்குது. அந்த நிலையை முழுமையாக அடைய முயற்சி செய்றோம். அதற்கான பணிகளை இனி கூடுதல் முனைப்புடன் செய்யவிருக்கோம்.

குறிப்பா, சினிமா தொழிலுக்கு இடையே விவசாய வேலைகளைப் பார்க்கிறது கொஞ்சம் சவால்தான். சவால் இருந்தால்தானே வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும். அதனால ரெண்டு வேலைகளையும் ரசிச்சு செய்றேன்.” - பச்சைப்பசேலென காட்சியளிக்கும் இவரின் தோட்டத்தைப் போலவே, கிஷோரின் முகத்திலும் பிரகாசிக்கிறது பசுமையான புன்னகை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு