Published:Updated:

`நானும் இயற்கை விவசாயிதான்!' - நடிகர் கிஷோர் பங்குபெறும் பசுமை விகடனின் ஆன்லைன் பயிற்சி

நடிகர் கிஷோர்
நடிகர் கிஷோர்

நடிகர் கிஷோர் தற்சார்பு வாழ்க்கை பற்றி விரிவாகப் பேச இருக்கும் பசுமை விகடன் நடத்தும் இலவச ஆன்லைன் பயிற்சியில் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

இன்றைய திரைப்பட நடிகர்களில் ஆர்வமாகவும் அர்ப்பணிப்போடும் இயற்கை விவசாயம் செய்துவருபவர்களில் நடிகர் கிஷோர் முக்கியமானவர். ஆடுகளம், கபாலி, வட சென்னை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பெங்களூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள கரியப்பன்தொட்டி என்னும் ஊரில் எட்டு ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மா, எலுமிச்சை, தென்னை, கொய்யா என்று பலவகைப் பயிர்களை நான்கடுக்கு, ஐந்தடுக்கு முறையில் வளர்த்து வருகிறார். விவசாயத்தோடு நாட்டு மாடுகள், கோழிகள் என ஓர் உயிர்ப்பான விவசாயத்தை முன்னெடுத்து வருகிறார்.

உழவுப் பணியில்
உழவுப் பணியில்

இவர் மடிக்கேரி மாடலில் பண்ணை வீடும் அமைத்திருக்கிறார். இது பார்ப்பதற்கே கண்ணைக் கவரும் விதத்திலும் நம் பாரம்பர்யம் சிதைவுறா வடிவத்திலும் இருக்கிறது. தண்ணீர்ச் சிக்கனத்துக்காக சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து பழமரங்களுக்குப் பாசனம் செய்து வருகிறார். பண்ணை நிலத்தைச் சுற்றிலும் மலைகள் இருப்பதால் அதிலிருந்து மழை பெய்யும்போது வடிந்து வரும் நீரைச் சேகரிப்பதற்காக பெரிய பள்ளங்கள் எடுத்து அதிலிருந்து நீர் வெளியேறாதவாறு சேகரிக்கப்படுகிறது. மலையிலிருந்து வரும் யானை போன்ற விலங்குகள், பறவைகள் பண்ணையில் சேகரிக்கப்பட்டிருக்கும் நீரைக் குடித்துவிட்டு உணவுக்கு மீண்டும் காட்டுக்குச் சென்று விடுகின்றன. இயற்கை விவசாயம் என்பதே அனைத்து உயிர்களுக்கும் வாழ்வளிப்பதே என்பதை உணர்ந்து அதற்கான அம்சத்தையும் இதில் சேர்த்துள்ளார்.

வயலில்
வயலில்

தன்னுடைய பண்ணைப் பற்றிப் பேசும் நடிகர் கிஷோர், ``இந்த ஊரடங்கு எப்போது முடியும்னு தெரியாது. நம்ம நிலத்துல விளையும் பொருள்களை முறையா பயன்படுத்திக்கிட்டு தேவையற்ற செலவினங்களைக் குறைச்சுக்கிட்டால்தான் எதிர்கால வாழ்க்கையைப் பிரச்னையில்லாமல் எதிர் கொள்ள முடியும். எனக்கு நடிக்கிறது ஒரு தொழிலா இருந்தாலும் விவசாயம்தான் எனக்கு ரொம்பவும் பிடிச்சது. இதற்காக பெங்களூரில் எங்கள் வீட்டிலேயே இயற்கை அங்காடியையும் நடத்திட்டு வர்றோம். நஞ்சில்லாத உணவு எல்லோருக்கும் சேர வேண்டும். அதற்கு எங்களால் முடிந்த சிறு பங்களிப்பு இது. நான், மனைவி மட்டுமல்லாமல் பிள்ளைகளையும் இதில் ஈடுபடுத்திட்டு வர்றோம். அவர்களும் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.

இப்படி நடிகர் கிஷோர் தற்சார்பு வாழ்க்கை பற்றி விரிவாகப் பேச இருக்கும் பசுமை விகடன் நடத்தும் இலவச ஆன்லைன் பயிற்சியில் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள்: 14.6.20 (ஞாயிற்றுக்கிழமை), நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை zoom மீட்டிங்கில் பங்கு பெற இருக்கிறார். கீழ்க்காணும் இணைப்பில் சென்று முன்பதிவு செய்துகொள்ளவும். முன்பதிவு செய்த பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான zoom லிங்க் அனுப்பப்படும்.

முன்பதிவு செய்வதற்கான லிங்க்: https://forms.gle/A2VZ2BmRyNsHQwYY8

அடுத்த கட்டுரைக்கு