Published:Updated:

`பணத்தை வைத்து நிலத்தை வரையறைக்கும் தலைமுறையில் வாழ்கிறோம்!' - நம்மாழ்வார் விழாவில் பொன்வண்ணன்

எங்க ஊரில் மார்கழியில் பட்டாம் பூச்சிகள் பறக்கும்… பண்ணைப் பூக்கள் பூத்துக் குலுங்கும். தட்பவெப்பத்துக்கேற்ப உடைகளும் பழக்க வழக்கங்களும் இருக்கும்.

நம்மாழ்வார் படத்திறப்பு விழாவில் பொன்வண்ணன்
நம்மாழ்வார் படத்திறப்பு விழாவில் பொன்வண்ணன்

நம்மாழ்வாரின் 6-வது நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இயற்கை விவசாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் - வேலூர் எல்லைப் பகுதியில் உள்ள கிளையாறு முதல் மாமல்லபுரம் அருகே உள்ள கடும்பாடி வரை 100 கி.மீ வாகனப் பயணம் நடைபெற்றது.

நம்மாழ்வார் படத்திறப்பு
நம்மாழ்வார் படத்திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் அருகே உள்ள கிளையாறு பகுதியில் உள்ள `வையகம்’ இயற்கை பண்ணையில் நம்மாழ்வாரின் படத்திறப்பு விழா நடைபெற்றது. அப்போது பேசிய காஞ்சி அமுதன், ``நம்மாழ்வாரை அழைத்து வந்து காஞ்சிபுரத்தில் விழா நடத்தி இருக்கிறேன். அவருடன் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன்.

அவரைப்போல எளிமையான மென்மையான மனிதரைப் பார்ப்பது அரிது. ஒருவர் வாழும்போது அவரை கொண்டாடுவதில்லை. இது நம் சாபக்கேடு. தமிழக அரசு கொண்டு வந்துள்ள கால்நடை இனப்பெருக்க தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகள் உடனே கட்ட வேண்டும். நம்மாழ்வார் பெயரில் இயற்கை விஞ்ஞான கல்லூரியைக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்“ என்றார்.

பின்னர் அங்கிருந்து வாகனப் பயணம் தொடங்கியது பல்வேறு இடங்களில் நம்மாழ்வாரின் படத்திறப்பு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு உத்திரமேரூர், கைத்தண்டலம் பகுதியில் உள்ள எழில்சோலை பண்ணைக்கு வந்தனர். அப்போது மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு நம்மாழ்வாரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் `மரம்’ மாசிலாமணி.

எழில்சோலை பண்ணை
எழில்சோலை பண்ணை

``நம்மாழ்வார் வாழும் காலத்தில் அரசு அவரைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், பசுமை விகடன் அவரை அங்கீகரித்து தொடர்ந்து நிகழ்சிகள் நடத்தின. காற்று, குடிநீர், உணவு என எல்லாவற்றிலும் நஞ்சு கலந்துவிட்டது. விவசாயிகளிடமிருந்து மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காகப் போராடியவர் நம்மாழ்வார்” என்றார்.

மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட வாகனப் பயணம் இரவு 7 மணிக்கு கடும்பாடியில் உள்ள இறையழகன் பண்ணைக்கு வந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் பொன்வண்ணன், ``1980 காலகட்டங்களில் ஏற்றம் இறைக்கும் பாசன முறை மெதுவாக டீசல் இன்ஜினுக்கு மாறத் தொடங்கியது. பணக்காரர்கள் மின்மோட்டார் வைத்து பாசனம் செய்யத் தொடங்கினார்கள். பசுமைப் புரட்சி என்ற பெயரில் புதிய விவசாய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி, விவசாய முறையை மாற்றி அமைக்கும் பணியும் அந்தக் காலகட்டங்களில் நடைபெற்றது.

`பணத்தை வைத்து நிலத்தை வரையறைக்கும் தலைமுறையில் வாழ்கிறோம்!' - நம்மாழ்வார் விழாவில் பொன்வண்ணன்
`பணத்தை வைத்து நிலத்தை வரையறைக்கும் தலைமுறையில் வாழ்கிறோம்!' - நம்மாழ்வார் விழாவில் பொன்வண்ணன்

எங்க ஊரில் மார்கழியில் பட்டாம் பூச்சிகள் பறக்கும்… பண்ணைப் பூக்கள் பூத்துக் குலுங்கும். தட்பவெப்பத்திற்கேற்ப உடைகளும் பழக்க வழக்கங்களும் இருக்கும். 1995-ல் சினிமாவுக்கு வந்த பிறகு, ஊருக்குப் போகும்போதெல்லாம் சாலை ஓரங்களில் வண்ண வண்ணக் கொடிகள் நடப்பட்டிருப்பதைப் பார்ப்பேன். புதிதாகக் கோழிப்பண்ணைகள் தொடங்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில் விமானநிலையம் வரப்போகிறது... ரயில்வே நிலையம் வரப்போகிறது என நிலங்களை வரையறை செய்து பேசுவார்கள்.

பயிர்கள், உயிர்களை விதைப்பதற்கான இடமாக இருப்பது மறைந்து, செம்மண், சரளை மண் என நிலத்தை வகைப்படுத்தி பணத்தை வைத்து நிலத்தை மதிப்பிடும் முறை புதிதாக அறிமுகமானது. விவசாய பழக்க வழக்கங்களிலிருந்து ஒரு தலைமுறை விடுபட்டது அந்தக் காலகட்டத்தில்தான். இந்த நிலம் இவ்வளவு பணம் என்று வரையறை செய்த பிறகு, அந்த நிலத்தில் தென்னையை வைத்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும், கடலை போட்டால் எவ்வளவு கிடைக்கும் என நிலத்தை மதிப்பீடு செய்யும் தலைமுறையை நாம் இப்போது காண்கிறோம். நிலத்தின் மீதான பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

நடிகர் பொன்வண்ணன்
நடிகர் பொன்வண்ணன்

நிறைவாகப் பேசிய சித்த மருத்துவர் திருதணிகாச்சலம், ``இன்றைக்கு நீங்கள் சாப்பிடக்கூடிய காய்கறிகள், பழங்கள், கீரைகள் என எல்லாவற்றிலும் 96 சதவிகிதம் மரபணு மாற்றப்பட்டவைதான். அரசாங்கம் சட்டபூர்வமாக மரபணு மாற்றம் செய்வது எதையும் அனுமதிக்காவிட்டாலும், சட்டவிரோதமாகச் செய்ய அனுமதித்திருக்கிறார்கள். சூரியகாந்தி ரிஃபைன்ட் எண்ணெய் குறித்து தற்போது விவாதங்கள் எழுகின்றன. இதனால் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் செக்கு எண்ணெய் விற்பனை ஆகிறது“ என்றார்.