Published:Updated:

காய்கறி, கரும்பு, பேரீச்சை… 'கல்லுக்குள் ஈரம்' அருணாவின் கடற்கரைத் தோட்டம்!

நடிகை அருணா
பிரீமியம் ஸ்டோரி
நடிகை அருணா

வீட்டுத்தோட்டம்...

காய்கறி, கரும்பு, பேரீச்சை… 'கல்லுக்குள் ஈரம்' அருணாவின் கடற்கரைத் தோட்டம்!

வீட்டுத்தோட்டம்...

Published:Updated:
நடிகை அருணா
பிரீமியம் ஸ்டோரி
நடிகை அருணா

திரைப் பிரபலங்கள் பலரும் இயற்கை விவசாயம், வீட்டுத்தோட்டம் அமைத்துச் சிறப்புக் கவனம் பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுத் தோட்டத்தைச் சிறப்பாகப் பராமரித்து வருகிறார் நடிகை அருணா.

‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அறிமுகமாகி, 1980-களில் பரபரப்பான நடிகையாக இருந்தவர். திருமணத்துக்குப் பிறகு, திரைத்துறையிலிருந்து விலகிக் குடும்பப் பொறுப்புகளில் பரபரப்பாக இயங்கி வரும் அருணாவின் வீடு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடற்கரையையொட்டி அமைந்திருக்கிறது.

பிரமாண்டமான அந்த வீட்டுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன வீட்டுத்தோட்டப் பயிர்கள். காய்கறிகள், பழங்கள், கீரைகள், மூலிகைகள் என ஏராளமான தாவரங்கள் செழிப்பாக வளர்ந்து வரவேற்கின்றன.

கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பூசணிக்காய், பச்சைமிளகாய், சுரைக்காய், சுண்டைக்காய், புடலை, பீர்க்கன், அவரை எனக் காய்கறிச் செடிகளும், பூச்செடிகளும் வீட்டுக்குள் அதிக அளவில் இருந்தன.

நீலத்திரையிலிருந்து வெளிவரும் பொன் கதிர்களான சூரிய ஒளி, கடல் அலைகளின் ஓசை, சில்லென்ற காற்று, தோட்டத்திலுள்ள மலர்களில் தேனை ருசிக்கப் படையெடுக்கும் வண்டுகளின் ரீங்காரம் என அந்தச் சூழல் மனதை வருடியது.

நடிகை அருணா
நடிகை அருணா

புன்னகையுடன் நம்மை வரவேற்ற அருணா, வீட்டுத்தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபடியே தனது தோட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“என் அம்மாவுக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். செடி வளர்க்கிறது, நஞ்சில்லாத உணவுகளை நாமே உற்பத்தி செய்றதுனு பயனுள்ள விஷயங்களை அவங்கதான் எனக்குக் கத்துக்கொடுத்தாங்க. இதுக்கு முன்னாடி தியாகராய நகர்ல குடியிருந்தோம். அந்த வீட்டுல பெருசா தோட்டம் அமைக்க இடவசதி இல்ல. இருக்குற இடத்துல கொஞ்சமா செடிகளை வளர்த்தோம். 11 வருஷத் துக்கு முன்ன, இந்த இடத்தை வாங்கி வீடு கட்டி குடிவந்தோம். அப்போ இந்த நிலத்துல மணல்தான் அதிகம் இருந்துச்சு. லாரி லாரியா செம்மண் வாங்கிட்டு வந்து வீட்டுக்குள் கொட்டினோம். இந்தச் செம்மண் ணோடு சாண எரு, தேங்காய் நார்க்கழிவு சேர்த்துத் தோட்டம் உருவாக்குனோம். முதல் வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம். அப்படி உருவாக்கியும் நட்ட பல செடிகள் சரியாவே வளரல.

உப்புத் தன்மையுள்ள கடல் காத்துங்கற தாலயும், மணல் பகுதிங்கிறதாலயும், எடுத்ததுமே நல்ல வளர்ச்சி இருக்காதுனு தெரியும். அதனால மனசு தளராம, சரியா வளராத செடிகளை எடுத்துட்டு, புதுப்புது செடிகளை வளர்த்தேன். நல்லா வளர்ந்த ஒருசில பழ மரங்கள்ல மகசூல் கிடைச்சாலும் பழங்கள் சுவையா இல்ல. அதனால, அந்த மரங்களையெல்லாம் எடுத்திட்டு, புது மரங்களை நட்டு வளர்த்தேன். அந்த வகையில என்னால முடிஞ்ச வரைக்கும் இந்தத் தோட்டத்தை நல்ல முறையில உருவாக்கி கவனிச்சுட்டு வர்றேன்” என்று முன்கதையைப் பகிர்ந்த அருணா, ஒவ்வொரு செடியையும் தன் உறவுகளைப் போலவே சிநேகத்துடன் நமக்கு அறிமுகப்படுத்தினார்.

தண்ணீர் பாய்ச்சும் பணி
தண்ணீர் பாய்ச்சும் பணி

தினமும் கீரைக்கூட்டு

“தினமும் ரெண்டு வேளை பூஜை செய்வேன். அதனால, மல்லி, முல்லை, செம்பருத்தி, அரளினு பூச்செடிகளை அதிகமா வளர்க்குறேன். எங்க வீட்டுல 10 பேர் இருக்கோம். எங்க உணவுக்கு முடிஞ்ச வரைக்கும் தோட்டத்து காய்கறிகளைத்தான் பயன்படுத்துறோம். வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கரிசலாங் கண்ணி, மணத்தக்காளி, புளிச்சக்கீரைனு தினமும் ஏதாச்சும் ஒரு கீரையைப் பயன் படுத்திக் கூட்டுச் செய்வோம். புதினா, கொத்தமல்லி, பிரியாணி இலை, இஞ்சி மாதிரியான பயிர்களும் நல்லா வளருது.

மா, சீத்தா, கொய்யா, பப்பாளி, பலா மாதிரியான பழ மரங்களும் இருக்கு’’ என்றவர், வீட்டிலிருந்த வெளிநாட்டு மரங்களை அறிமுகப்படுத்தினார்.

அந்தமான் தென்னை

‘‘வியாபாரத்துல இருக்க என்னோட கணவருக்கு நானும் உதவியா இருக்கேன். அதனால, ரெண்டு பேரும் அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்குப் போவோம். அந்தப் பயணங்கள்ல பலவிதமான செடிகளைக் கொண்டுவந்து வளர்ப்போம். அப்படி வியட்நாம்ல இருந்து கொண்டு வந்ததுதான் இந்த ‘டிராகன்ஃப்ரூட்.’ அருமையா வளருது. இந்த ரெண்டு தென்னங்கன்றுகளையும் அந்தமான்ல இருந்து கொண்டு வந்தோம். எங்க வீட்டுல இருக்க 6 தென்னை மரங்களே, எங்களுக்கான எல்லாத் தேவைகளுக்கும் போதுமானதா இருக்கு.

இந்த மண்ணுக்கு வாழை நல்லா வளருது. அதனால, வாழைக்குனு தனி ஒரு பகுதியை ஒதுக்கியிருக்கோம். சிப்ஸ், பழம், பொரியல், இலைத்தேவைக்குனு பல வகையான வாழை மரங்களை வளர்க்குறோம். தொடர்ச்சியா கம்பு பயிரிடுவோம். அறுவடைக்குப் பிறகு, அந்தத் தானியத்தைக் காயவெச்சு அரைச்சு மாவாக்கி, கஞ்சி, சப்பாத்தி செய்வோம்.

வாழை
வாழை

மூலிகைச் செடிகள்

பீட்ரூட், கேரட், முள்ளங்கி மாதிரியான மலைப்பயிர்களும் இங்க நல்லா வளருது. அழகுச் செடிகளோடு கற்றாழை, துளசி, முடக்கத்தான், தூதுவளைனு மூலிகைச் செடிகளையும் அதிகமா வளர்க்குறோம். பின்பக்க காம்பவுண்டைச் சுத்தி நாட்டுப் பாதாம் மரங்களை வெச்சிருக்கோம்” என்று ஆர்வம் குறையாமல் சொன்னவர், செடிகளுக்குத் தண்ணீர் விட்டபடியே சவாலான படிப்பினைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

“குளிர்ச்சியா இருக்கும்னு மூங்கில் மரங்களை ஆர்வமா வளர்க்குறேன். ஆனா, கடல் காத்துக்கு இந்த மரங்கள் சரியா வளர்றதில்ல. நல்லா வளரக்கூடிய சில மூங்கில் மரங்களைக் கூடுதல் கவனிப்பு கொடுத்துப் பராமரிக்குறோம். அதிலேருந்து, குச்சிகளைச் சேகரிச்சு, கொடிகளுக்குப் பந்தல் போடவும், அலங்காரப் பொருள்கள் செய்யவும் பயன்படுத்துவேன்.

புயல் நேரங்கள்ல மட்டுமல்லாம, பெரும்பாலான நேரங்கள்லயும் பலமான காத்து வீசும். அப்போதெல்லாம் சில மரங்கள் சாஞ்சுடும். அதுக்காகக் கொஞ்சம்கூட வருத்தப்பட மாட்டேன். சேதாரமான மரங்களை அப்புறப்படுத்திட்டு உடனே வேற மரங்களை வளர்க்க ஆரம்பிச்சுடுவேன். இயற்கை நமக்குக் கொடுக்குற நன்மை களைப்போலவே, சில அசௌகரியங்களையும் சந்தோஷமா ஏத்துக்கப் பழகிட்டேன்.

தோட்டத்தில்
தோட்டத்தில்

பூச்சித் தாக்குதலைச் சமாளிக்க மஞ்சள்

கடல் பக்கத்துலேயே இருக்குறதால நிலத்தடி நீர் கொஞ்சம் உப்புத்தன்மையா இருக்கும். அதை ஃபில்டர் யூனிட்ல சுத்திகரிச்சு வீட்டுத்தேவைக்கும் செடி களுக்கும் பயன்படுத்துறோம். சுழற்சி முறையில வருஷத்துக்கு ஒரு தடவை தோட்டத்துல சில அடி உயரத்துக்கு மேல் மண்ணை மட்டும் மாத்திடுவேன். சமையலறைக் கழிவுகளை முறையா சேமிச்சு மட்க வைக்கிறேன். அதையும் சாண எருவையும் மட்டுமே செடிகளுக்கு உரமா பயன்படுத்துறேன். பூச்சித்தாக்குதல் இருந்தா, தண்ணியில மஞ்சளைக் கரைச்சு தெளிப்பேன். வேப்ப எண்ணெய்க் கரைசலையும் பயன் படுத்துவேன். ஒவ்வொரு விஷயத்தையும் சோதனை முயற்சியா செஞ்சு பார்த்துக் கத்துக்கிறேன்” என்றவர், புல்வெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

“தினமும் காலையிலயும் சாயந்திரத் திலயும் தோட்டப் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்கிடுவேன். இந்தத் தோட்ட வேலைகளே எனக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்குது. குடும்பமா ஒண்ணா உட்கார்ந்து பேசுறதுக் காகவே இந்தப் புல்வெளியை அமைச் சிருக்கோம். தினமும் சாயந்திரத்துல இங்க வந்து, செருப்பு இல்லாம நடப்போம்; ஓடியாடி விளையாடுவோம். இதனால, குதிகால், பாதத்துக்கு நல்ல பயிற்சி கிடைக்குது’’ என்றவர் நிறைவாக,

செடிகள் கண்பார்வையில இருக்கணும்

‘‘ ‘உன்னோட விவசாய ஆர்வத்துக்கு நிலம் வாங்கித்தர்றேன்’னு என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்வார். நிலமா இருந்தா தினமும் பார்த்துக்க நேரம் இருக்காது. நான் வளர்க்குற செடிகள் எந்நேரமும் என் கண் பார்வையிலேயே இருக்கணும். அதனால, இப்போதைக்கு நிலத்துல விவசாயம் செய்ய நான் விருப்பப்படல. இந்தத் தோட்ட வேலைகள்தான் என் மனசையும் உடலையும் சந்தோஷமா வெச்சுக்க உதவுது” என்றவர் மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

பேரீச்சை மரங்கள்
பேரீச்சை மரங்கள்

அழகுக்குப் பாக்கு... உணவுக்குப் பேரீச்சை!

“பாலைவனப் பகுதியில வளரக்கூடிய பேரீச்சைதான் நல்லா மகசூல் தரும்னு கேள்விப் பட்டிருக்கேன். அதனால, வீட்டு நுழைவாயில் பக்கம் அழகுக்காக, நாலு பேரீச்சை மரங்களுடன், மூணு பாக்கு மரங்களையும் நடவு பண்ணி வளர்த்தேன். 10 வருஷமாச்சு. அதுக்கு சிறப்புக் கவனிப்பு எதுவும் கொடுக்கல. ஆனா, எதிர்பாராத வகையில இந்த ரெண்டுமே இப்ப நிறைய மகசூல் கொடுக்குது. வருஷத்துக்கு ஒரு தடவை கோடைக்காலத்துல பேரீச்சையில மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு மரத்துலயும் தலா ரெண்டு கிலோ வரைக்கும் பழம் கிடைக்கும். பழம் பறிச்சதும் வெயில்ல சில நாள்கள் உலர்த்திட்டு, சில வாரங்கள் வெச்சிருந்து பிறகு சாப்பிடுவோம். சுவையா இருக்கும். இதேபோல, கோடைக்காலத்துல ஒவ்வொரு மரத்துலயும் தலா பத்து கிலோ பாக்கு கிடைக்கும். எங்க வீட்டுல யாருமே பாக்குப் பயன்படுத்த மாட்டோம். பூஜைக்கு மட்டும் கொஞ்சமா வெச்சுகிட்டு, மொத்தத்தையும் பணியாளர்களுக்குக் கொடுத்திடுவோம்” என்கிறார் அருணா.

கரும்பு
கரும்பு

பண்டிகையைத் தித்திப்பாக்கும் கரும்பு

பண்டிகைக்கால பூஜைப் பயன்பாட்டுக்காகவே, தனது தோட்டத்தில் 80-க்கும் அதிகமான கரும்புகளை வளர்த்து வருகிறார் அருணா. சிறப்பாக வளரும் கரும்பு வளர்ப்பு குறித்துப் பேசிய அருணா, “விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல்னு முக்கியமான பண்டிகைகள்ல எங்க வீட்டுல சிறப்பு பூஜை செய்வோம். அதுக்காகக் கரும்பைப் பயன்படுத்துவோம். கரும்பு ஒரு வருஷப் பயிர். ஆனா, வருஷம் முழுக்கவே கரும்பு கிடைக்குற மாதிரிச் சுழற்சி முறையில இங்க வளர்க்குறேன். நம் உடல்ல ரத்தத்தைச் சுத்தப்படுத்துறதுல கரும்பின் பங்கு முக்கியமானது. அதனால, எங்க வீட்டுல எல்லோரும் அடிக்கடி கரும்பு சாப்பிடுவோம். யாருக்குக் கரும்பு வேணும்னாலும், நேரடியா தோட்டத்துல அவங்களாவே பறிச்சுத்தான் சாப்பிடுவோம். கரும்புக்குன்னு தனிக் கவனிப்பு எதுவும் கொடுக்குறதில்ல” என்றார் மகிழ்ச்சியாக.