Published:Updated:

2000 சதுர அடி, 50-க்கும் அதிகமான காய்கறி சாகுபடி... `ஜே ஜே’ மாளவிகாவின் வீட்டுத்தோட்ட அனுபவம்!

நடிகை மாளவிகா
News
நடிகை மாளவிகா

வீட்டிலுள்ள நபர்கள் மாடித்தோட்டத்தைப் பார்த்து ரசிக்கலாம். ஆனால், தண்ணீர் விடுவது உட்பட எந்தப் பராமரிப்பு வேலைகளையும் செய்யக்கூடாது. மாளவிகா மட்டுமே அந்தப் பணிகளைச் செய்கிறார்.

‘ஜே ஜே’, ‘ஆதி’, ‘பைரவா’ உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களிலும், 'KGF' உள்ளிட்ட ஏராளமான கன்னடத் திரைப்படங்களிலும் நடித்தவர் மாளவிகா. பல்வேறு சீரியல்களிலும் நடித்திருப்பவர், பா.ஜ.க-வில் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார். இவரின் கணவர் அவினாஷ், பிரபல கன்னட நடிகர். சினிமா, அரசியல் பயணங்களுக்கு இடையே இவருக்கு இயற்கை விவசாயத்தின்மீது அதிக ஆர்வம் உண்டு. பெங்களூரு மாநகரிலுள்ள தனது வீட்டு மொட்டைமாடியில் பெரிய அளவில் மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார்.
நடிகை மாளவிகா
நடிகை மாளவிகா

வீட்டிலுள்ள நபர்கள் மாடித்தோட்டத்தைப் பார்த்து ரசிக்கலாம். ஆனால், தண்ணீர் விடுவது உட்பட எந்தப் பராமரிப்பு வேலைகளையும் செய்யக்கூடாது. இவர் மட்டுமே அந்தப் பணிகளைச் செய்கிறார். தன் மாடித்தோட்ட விவசாய அனுபவங்களைப் புன்னகையுடன் கூறுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“என் பூர்வீகம் பெங்களூரு. டெல்லியில் ஸ்கூல் படிப்பையும், பெங்களூருவில் சட்டப் படிப்பையும் முடிச்சேன். அப்பா வங்கி அதிகாரியா இருந்தவர். படிப்பு, வீடு, நகர வாழ்க்கை மட்டும்தான் என் உலகமா இருந்துச்சு. பிறகு சினிமா பயணம். பல வருஷமா அரசியல்லயும் இருக்கேன். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அடிக்கடி விவாதிப்போம். அதற்குத் தீர்வுகாண ஆட்சியில் உள்ளவர்களிடம் தொடர்ந்து முறையிடுவோம். ‘இதையெல்லாம் பேசுறோமே தவிர, விவசாயியாக வாழ்ந்து பார்த்தால்தானே அவர்களின் உண்மையான உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியும்’னு ஒருநாள் நண்பர் ஒருத்தர்கிட்ட பேசிட்டிருந்தேன்.

நடிகை மாளவிகா
நடிகை மாளவிகா

‘சொல்றதோடு இல்லாம உடனே இதைச் செய்துகாட்டு. நிலம் வாங்கி விவசாயம் செய்றதெல்லாம் இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆனா, வீட்டுலயே தோட்டம் போட்டுப்பாரு’ன்னு சொன்னதுடன், அதற்காகக் கொஞ்சம் தொட்டிகளையும் கொடுத்தார். அதில் செடிகளை வளர்த்தேன். ஒவ்வொரு நாளும் புது அனுபவம் கிடைச்சுது. மழை இல்லாட்டியும், மழை அதிகம் வந்தாலும், அதிக வெயில் வந்தாலும், காத்து பலமா வீசினாலும் செடிகளின் வளர்ச்சியில் பலவித மாற்றங்கள் ஏற்படும். எல்லாக் காய்கறிகளும் செடியில் பூமியைப் பார்த்ததுபோல விளையும். ஆனா, வெண்டைக்காய் மட்டும் வானத்தைப் பார்த்த மாதிரி விளையும். இதெல்லாம் இயல்பான, சாதாரண விஷயம்தான். ஆனா, கிராமத்துக் கலாசாரமே தெரியாம வளர்ந்த எனக்கு இவையெல்லாம் ஆச்சர்யமா இருந்துச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘சிட்டியில் பிறந்து வளரும் குழந்தைகள்கிட்ட, தினந்தோறும் சாப்பிடும் அரிசி எப்படி விளையுது?’ன்னு கேட்டுப்பாருங்க. அந்தக் கேள்வியே ஏற்படாதவாறுதானே குழந்தைகளை வளர்க்கிறோம். அப்போ, நகரத்துல வளரும் குழந்தைகளெல்லாம் நாளைக்குச் சமூகப் பிரச்னைக்கு எப்படி முன்வந்து குரல் கொடுப்பாங்க? முதல்ல அதைப் பத்தி நாம யோசிச்சுப் பார்த்தால்தானே, குழந்தைகளுக்குச் சொல்லித்தர முடியும். இந்தக் கேள்வியையெல்லாம் நான் எனக்கே கேட்டுப் பார்த்துகிட்டேன். பிறகு சில மாத அனுபவத்துல, நான் வசிக்கும் பகுதியில எந்தச் செடியெல்லாம் நல்லா வளரும், எதெல்லாம் வளராதுனு நிறைய விஷயங்களை அனுபவ ரீதியா கத்துக்கிட்டேன்” என்பவர் அதன் பிறகு கடந்த ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து மாடித்தோட்டத்தைப் பராமரிக்கிறார்.

மாடித்தோட்டத்தில் மாளவிகா
மாடித்தோட்டத்தில் மாளவிகா

“என் வீட்டின் பரப்பளவு கொஞ்சம் பெரிசு. வீட்டின் மொட்டைமாடிப் பரப்பளவு மட்டும் 4,000 சதுர அடி இருக்கும். அதன் தடுப்புச் சுவரைச் சுற்றி, உள்பகுதியில தலா ஒன்றரை அடி அகல, உயரத்துல தொட்டி கட்டியிருக்கேன். அதுல மண்ணுடன், அதிகளவில் தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் கலந்து, 2,000 சதுர அடியில செடிகள் வளர்க்கிறேன். கேரட், முள்ளங்கி, பீட்ரூட், குடமிளகாய், பீன்ஸ், பச்சைமிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரிக்காய், பாகல், கொத்தமல்லிதழை, அவரை உட்பட 50-க்கும் மேற்பட்ட பயிர் வகைகளை வளர்க்குறேன்.

மேலும், பாலக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை உட்பட பல்வேறு வகையான கீரைகளையும் வளர்க்கறேன். வீட்டுத் தேவையில் 70 சதவிகிதக் காய்கறிகள் மாடித்தோட்டத்துலயே கிடைக்குது. வெளியூர், வெளிநாடுகளுக்குப் போறப்போ அங்குள்ள நர்சரிகளுக்குத் தவறாமல் போய் பல்வேறு விதைகளை வாங்கிட்டுவருவேன். அதை என் மாடித்தோட்டத்தில் பயிரிடுவேன். வளர்ச்சி எப்படி இருக்குனு தொடர்ந்து சோதனை பண்ணிட்டேதான் இருப்பேன். அதேசமயம், என் மாடித்தோட்டத்துல வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற சில பயிர்கள் மட்டும் சரியா விளையாது.

மாளவிகாவின் மாடித்தோட்டம்
மாளவிகாவின் மாடித்தோட்டம்

நானும் பலமுறை முயற்சி பண்ணிப் பார்த்தும் அந்தப் பயிர்கள் வராததால, நல்லா வளரக்கூடிய பயிர்களை மட்டும் தொடர்ந்து பயிரிடறேன். ரொம்ப உயரமா வளரக்கூடிய செடி முருங்கை மாதிரியான எந்தப் பயிர்களையும் வளர்ப்பதில்லை. நாலு மாசத்துக்கு ஒருமுறை செடிகளை நீக்கிட்டு, மண்ணை வளப்படுத்தி மறுபடியும் புதுச் செடிகளை வளர்க்க ஆரம்பிச்சுடுவேன். அதனால, பயிர்கள் வாடாம, எல்லாச் சூழல்லயும் மகசூல் கொடுக்குது” என்னும் மாளவிகா, தான் மட்டுமே மாடித்தோட்டத்தைக் கவனிப்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்.

“எந்தச் செடியில் எப்போ என்ன மாதிரியான பிரச்னைகள் வருது, ஒவ்வொரு பருவநிலையிலும் ஒவ்வொரு பயிரின் வளர்ச்சி எப்படியிருக்குனு தொடர்ந்து கண்காணிக்கணும். அதுக்கு ஒவ்வொருநாளும் எல்லா விஷயங்களையும் நானே பக்கத்துல இருந்துப் பார்த்துகிட்டாதானே தெரிஞ்சுக்க முடியும்? அதனால என் வீட்டு நபர்கள் எப்போ வேணா மாடித்தோட்டத்தைப் பார்த்து ரசிக்கலாம். ஆனா, யாருமே தண்ணி விடுறது உட்பட எந்தப் பராமரிப்பையும் செய்யக்கூடாது. நான் நினைக்கும் காரணத்தை வீட்டிலுள்ளவங்க நல்லாவே புரிஞ்சுக்குவாங்க. எனவே, யாரும் செடிகளைத் தொடமாட்டாங்க.

மாளவிகா
மாளவிகா

வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்துல பழ வகை மரங்கள், மூலிகைப் பயிர்களைப் பெற்றோர் வளர்க்கறாங்க. அவங்க அந்த வேலைகளை முழுமையா, திருப்திகரமா செய்ய நானும் அவங்க விவசாய வேலையில தலையிடமாட்டேன். மாடித்தோட்ட விவசாயத்தை எப்படிச் செய்யணும், எப்படிச் செய்யக்கூடாதுனு நிறைய அனுபவங்கள் கிடைச்சிருக்கு. அதனால, தினந்தோறும் பராமரிப்புக்கு ஒருமணிநேரம் மட்டுமே ஒதுக்கறேன். பிறகு, என்னோட மற்ற வேலைகளுக்கே நேரம் சரியா இருக்கும். நோய் பாதிப்பு வந்தால் வேப்பெண்ணெய் கரைசல் உட்பட எளிய இயற்கை முறையிலான பராமரிப்பை மட்டுமே செய்றேன். எந்த ரசாயன உரங்களையும் பயன்படுத்துறதில்லை.

எல்லோருக்கும் தோட்டம் வைக்கணும்னு ஆசை இருக்கும். ஆனா, அதைச் சாத்தியப்படுத்துறதுதான் பெரிய சவால். வீட்டுல ஒருசில செடிகளையாவது சின்னத் தொட்டியில் எல்லோராலும் வளர்க்க முடியும். ஆர்வம் இருந்தால்தான் அதைச் செயல்படுத்த முடியும். குழந்தைகளை வளர்க்கிற மாதிரி, தினமும் செடிகளோடு அன்பா பேசணும். அப்போதான் அது உயிர்ப்போடு வளரும். நமக்கும் விவரிக்க முடியா மனநிறைவு கிடைக்கும்.

மாடித்தோட்டத்தில் மாளவிகாவின் கணவர் அவினாஷ்
மாடித்தோட்டத்தில் மாளவிகாவின் கணவர் அவினாஷ்

மாடித்தோட்ட விவசாயத்துல தினந்தோறும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்குது. நிறைய சவால்கள் இருக்குது. விவசாயத்தையே பிரதான தொழிலா செய்ற சாமான்ய விவசாயிகள் எல்லாக் காலத்திலும் போற்றப்பட வேண்டியவங்க. அவங்க கவலைப்படாம விவசாயம் செஞ்சாதான், நாம சாப்பிடும் சாப்பாட்டுக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.