Published:Updated:

`என் மாடித்தோட்டத்துலயே காய்கறிகள், பழங்கள் கிடைக்குது; வீட்டை விட்டு வெளியே போறதேயில்லை!’ - நடிகை சீதா

மாடித்தோட்டத்தில் சீதா
மாடித்தோட்டத்தில் சீதா

``குறைந்தபட்சம் மூணு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் கையிருப்பு இருக்கு. அரிசி, சிறுதானியங்களும் ஆறு மாதத் தேவைக்கு இருக்கு. அதனால, எந்தத் தேவைக்கும் வீட்டைவிட்டு வெளியே போறதில்லை."

தற்போதைய கொரோனா ஊரடங்கு காலத்தில் காய்கறிகள் வாங்குவதற்குக்கூட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும், விலை உயர்வு, காய்கறிகள் தட்டுப்பாடு, விற்பனை நேரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைப் எதிர்கொள்கின்றனர். ஆனால், இதுபோன்ற சிக்கல்கள் நடிகை சீதாவுக்கு இல்லை.

மாடித்தோட்டத்தில் சீதா
மாடித்தோட்டத்தில் சீதா

அன்றாட வீட்டுத் தேவைக்கான காய்கறிகளைத் தனது மாடித்தோட்டத்தில் இருந்தே பறித்துக்கொள்கிறார். சில வகைப் பழங்களும் மாடித்தோட்டத்திலேயே கிடைக்கிறது. மூன்று மாதத் தேவைக்கான வெங்காயம், தேங்காய், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட சமையல் பொருள்களையும் இருப்பு வைத்திருக்கிறார். இதனால், ``காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட தேவைகளுக்கு வீட்டைவிட்டு வெளியே போகும் அவசியம் எனக்கு ஏற்படுவதில்லை. அரசின் அறிவுரைப்படி வீட்டுக்குள்ளயே தனிமைப்படுத்திக் கொள்வதைக் கடந்த ரெண்டு வாரமா சரியா கடைப்பிடிக்கிறேன்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் சீதா.

காலை நேரத்தில் செடிகளுக்குத் தண்ணீர் விடும் வேலையை முடித்தவர், செடிகளைப் பார்வையிட்டுக்கொண்டே மாடித்தோட்டத்தில் கிடைக்கும் காய்கறிகள், தற்போதைய தினசரி பராமரிப்பு, மாடித்தோட்டத்தின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் விரிவாகப் பேசினார்.

மாடித்தோட்டத்தில் சீதா
மாடித்தோட்டத்தில் சீதா

``இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே போய் காய்கறிகள் வாங்க முடியாத சூழல் வந்த பிறகுதான், சமைச்ச உணவை வீணாக்கக் கூடாதுங்கிற புரிதல் எல்லோருக்குள்ளும் வந்திருக்கு. முன்னாடியெல்லாம் எங்க வீட்டில் குழம்பு, தொக்கு ஏதாவது மீதமாகிட்டா ஃப்ரிட்ஜ்ல எடுத்து வெப்போம். இதையெல்லாம் இப்போ முழுமையா தவிர்த்துவிட்டோம். எங்க வீட்டில் இருக்கிற அஞ்சு பேருக்கு ஏற்ற அளவில்தான் இப்போ தினமும் சமையல் செய்றோம்.

சென்னையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலிகிராமத்தில் வசிக்கும் சீதா, தனது வீட்டில் 1,500 சதுர அடியில் மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார். பால்கனியிலுள்ள இடங்களிலும் செடிகளையும் மரங்களையும் வளர்க்கிறார். பழைய டயர்களை பிறை வடிவில் கட் செய்து தொங்கவிட்டு அதிலும் செடிகளை வளர்க்கிறார்.

சாப்பாடு பத்தாமப் போனாக்கூட பழங்கள் சாப்பிட்டுகிட்டு சமாளிச்சுக்கிறோம். சிறிதளவு உணவைக்கூட வீணாக்கிறதில்லை. அதைவிட, சாப்பாடு வீணாகிடுமேனு பசிக்கு மீறிச் சாப்பிடுவதும் சாப்பாட்டைக் குப்பையில் கொட்டுவதும் ஒண்ணுதான். உடம்பைக் கெடுத்துக்கிற அந்த விஷயத்தையும் தவிர்த்துவிட்டோம்.

அகத்திக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, சிறுகீரை, கரிசலாங்கண்ணி கீரை, பாலக்கீரை, முருங்கைக்கீரை, முடக்கத்தான் கீரை என 12 வகையான கீரைகள் இருக்கு. தினமும் ஒருவகை கீரையைப் பறிச்சு சமையலுக்கும் சூப் செய்யவும் பயன்படுத்துவேன். இருக்கிற காய்கறியைப் பயன்படுத்தி இரவு டிபனுக்கு பிரண்டை தொக்கு உள்ளிட்ட எளிமையான டிஷ் ஏதாச்சும் பண்ணிக்குவோம்.

மாடித்தோட்டத்தில் சீதா
மாடித்தோட்டத்தில் சீதா

தற்போது தக்காளி, வெண்டை, கத்திரி, புடலை, சுரைக்காய், பீர்க்கன், கீரைகள், எலுமிச்சை, பச்சைமிளகாய், சுண்டைக்காய், வெள்ளரி, அவரை உட்பட பலவகையான காய்கறிகள் நல்லா விளைச்சல் கொடுக்குது. மாதுளை, அத்தி, பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பழங்களும் கிடைப்பதால், தினமும் ஏதாச்சும் ஒருவகைப் பழத்தைப் பறிப்போம். இதனால பழங்கள் வாங்கவும் வெளியே போக வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. தினமும் காலையில ஒரும ணிநேரமும் சாயந்திரம் மூணு மணிநேரமும் மாடித்தோட்ட பராமரிப்புக்கு நேரம் செலவிடுறேன். இதனால வீட்டுக்குள்ளயே முடங்கியிருந்தாலும், மன அழுத்தம் உட்பட எந்தப் பிரச்னையும் இல்லாம புத்துணர்ச்சியுடன் இருக்க முடியுது” என்பவர் முன்னெச்சரிக்கையுடன் சமையல் பொருள்களை வாங்கி சேமித்து வைத்தது குறித்துப் பேசுகிறார்.

``தேவையில்லாம வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்னு அரசு எச்சரிக்கை விடுத்தப்பவே நான் உஷாராகிட்டேன். ஒரு மூட்டைப் பெரிய வெங்காயத்தையும், சில மாதத்துக்குத் தேவையான பூண்டு சின்ன வெங்காயத்தையும் வாங்கிட்டேன். பூண்டு, வெங்காயத்தைத் தரையில் பரப்பிவிட்டு காத்துப் படும்படி வெச்சுட்டா பல மாதங்களுக்குக் கெடாது. எங்க வீட்டுல எப்போதுமே சில மாதங்களுக்குத் தேவையான தேங்காய்களை ஒரே நேரத்தில் வாங்கி வெச்சுக்கிறது வழக்கம். அதன்படி கடந்த மாதத் தொடக்கத்துலயே நிறைய தேங்காய்களை வாங்கிட்டேன்.

மாடித்தோட்டத்தில் சீதா
மாடித்தோட்டத்தில் சீதா

குடுமி மேற்புறம் பார்த்ததுபோல் தேங்காய்யை செங்குத்தாக இருப்பதுபோல தரையில நிற்க வெச்சு அடிக்கிட்டா மூணு மாசத்துக்குக் கெடாது. சில கிலோ இஞ்சி வாங்கி அதுல பாதியை மாடித்தோட்டத்துல நட்டுவெச்சுட்டேன். அஞ்சு வாரத்துக்குப் பிறகு அறுவடைக்குத் தயாராகிடும். குறைந்தபட்சம் மூணு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் கையிருப்பு இருக்கு. அரிசி, சிறுதானியங்களும் ஆறு மாதத் தேவைக்கு இருக்கு. அதனால, எந்தத் தேவைக்கும் வீட்டைவிட்டு வெளியே போறதில்லை. அரசு சொன்னதுபோல, வீட்டுக்குள்ளயே இருந்து தனிப்படுத்திக்கொள்வதை என் வீட்டில் உள்ளவங்க முறையாகக் கடைப்பிடிக்கிறோம்” என்கிறார்.

இயற்கை வாழ்வியல் மீதான ஆர்வத்தில் புதிய வாழ்க்கை முறைக்கு மாறத் தயாராகியிருக்கிறார் சீதா. அது குறித்துப் பேசுபவர், ``சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க கட்டத்துக்குள் நின்னு காய்கறிகள் வாங்குவது, வெளியே போறத்துக்குக் கட்டுப்பாடுகள், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, விலை உயர்வுனு மக்கள் படும் சிரமங்களைத் தினமும் செய்திகளில் பார்க்கிறேன். கஷ்டமாதான் இருக்கு. மாடித்தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் வளர்க்கிறவங்களுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படாது.

குளிர்பிரதேசங்களில் வளரும் டிராகன் ஃப்ரூட் மரத்தையும் மாடித்தோட்டத்தில் வளர்க்கிறார். சீதாவின் வீட்டுத் தேவையில் 80 சதவிகிதக் காய்கறிகள் மாடித்தோட்டத்திலேயே கிடைக்கிறது. தற்சமயம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மாடித்தோட்டக் காய்கறிகளை மட்டுமே உணவுக்குப் பயன்படுத்துகிறார்.

என்னுடைய அனுபவத்தில் சொல்றேன், முறையாக நேரம் ஒதுக்கிப் பார்த்துகிட்டால் மாடித்தோட்டம் அமைப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிமையானதுதான். பல்வேறு தனி வீடுகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் கொஞ்சம் இடவசதி இருப்பவங்ககூட அழகுக்கு அலங்காரச் செடிகளை வளர்க்கிறாங்க. அது தவறில்லை!

மாடித்தோட்டத்தில் சீதா
மாடித்தோட்டத்தில் சீதா

அதேநேரத்தில் அவங்கெல்லாம் இப்போ காய்கறிகள் வாங்க சிரமப்படுவதைப் பார்க்க முடியுது. அதனால, இட வசதி இருக்கிறவங்க அழகு செடிகளைக் குறைச்சுக்கிட்டு அன்றாட சமையல் தேவைக்கான சில காய்கறிகள், கீரைகளையும் வளர்க்கலாம். இட வசதி இல்லாதவங்கக்கூட குறைந்தபட்சம் ரெண்டு பைகளில் கீரைகளைப் பயிரிட்டால்கூட 10 நாள்களுக்குள் அறுவடைக்குத் தயாராகி பயன்தரும்.

கொரோனா பிரச்னை வரும், வீட்டுக்குள்ளயே பல வாரங்கள் முடங்கியிருப்போம்னு நாம யாருமே நினைச்சுப்பார்க்கலை. இதுபோன்ற இக்கட்டான சூழல்கள் வரும்காலங்கள்ல ஏற்படாதுனும் சொல்ல முடியாது. ஆனா, எது நடந்தாலும் சூழலை சிக்கலின்றி எதிர்கொள்ள முடிந்த அளவுக்கு நாம தயாரா இருக்கணும். வொர்க் ஃப்ரம் ஹோம், போக்குவரத்துக்குத் தடைனு எத்தகைய மாற்றங்கள் வந்தாலும், தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதன் வாழ்வதற்கு சாப்பிட்டுத்தான் ஆகணும்.

ஆரோக்கியமான உணவு, மனதுக்கு மகிழ்ச்சித் தரும் கிராமத்துச் சூழல் இருப்பிடம், எளிமையா வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரம்... இதைவிட மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னங்க வேணும்? நிச்சயம் இந்த வாழ்க்கை முறைக்கு சில ஆண்டுகளில் மாறிடுவேன்.
சீதா

இந்த அடிப்படை விஷயத்தை மட்டும் இனி எத்தனை தலைமுறைகள் வந்தாலும் மாத்தவே முடியாது. அதுக்காக வயிறு நெறஞ்சா போதும்னு துரித உணவுகள் உட்பட எதையாவது சாப்பிடுறதும் சரியில்லை. அப்படிச் சாப்பிடுறதால மெல்லக் கொள்ளும் நோய்களுடன் எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதும் ஆரோக்கியமானதல்ல.

மாடித்தோட்டத்தில் சீதா
மாடித்தோட்டத்தில் சீதா

வசதியானவங்க, ஏழை, பிரபலங்கள்னு பாகுபாடு இல்லாம எல்லோரும் அடிப்படையில் மனிதர்கள்தாம்னு இப்போ கொரோனா சூழல் நமக்கு மற்றொருமுறை புரிய வெச்சிருக்கு. நிரந்தரமில்லாத விஷயத்தையெல்லாம் பெரிசா நினைக்கிறோம். அதையெல்லாம் தவிர்த்துட்டு, ஆரோக்கியமான உணவு, மனதுக்கு மகிழ்ச்சித் தரும் கிராமத்துச் சூழல் இருப்பிடம், எளிமையா வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரம்... இதைவிட மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னங்க வேணும்? இந்த வாழ்க்கை முறைதான் சிறந்ததுனு அதற்கான தேடல்ல முன்பே இறங்கினேன். இப்போ அந்த எண்ணம் அதிகமாகிடுச்சு. நிச்சயம் இந்த வாழ்க்கை முறைக்கு சில ஆண்டுகளில் மாறிடுவேன்” என்று கூறுகிறார் மகிழ்ச்சியுடன்.

``மாடித்தோட்டம் ஆரம்பிச்சப்போ, `இதெல்லாம் சிரமமான விஷயம். சென்னை வெயிலுக்குக் காய்கறிகள் சரியா வராது. வீண் செலவு’ன்னு என் தோழிகள் மற்றும் உறவினர்கள் சிலர் சொன்னாங்க. `என்னால முடியும். வெற்றிகரமா அமைச்சுக்காட்டுறேன். இல்லைனா நல்ல அனுபவமா இருக்கும்’னு சொல்லித்தான் நம்பிக்கையுடன் மாடித்தோட்டத்தை அமைச்சேன்.

மாடித்தோட்டத்தில் சீதா
மாடித்தோட்டத்தில் சீதா

குழந்தைகளைப்போலத் தினமும் சரியா பராமரிக்கிறதால, நான் எதிர்பார்த்ததைவிடவும் நல்ல மகசூல் கிடைக்குது. இப்போ கொரோனா பிரச்னையால் காய்கறிகள் வாங்க சிரமப்படும் என் தோழிகள், `உனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நீ சொன்னப்போவே நாங்களும் மாடித்தோட்டம் அமைச்சிருக்கணும்’னு சொல்றாங்க.

மாடித்தோட்டப் பராமரிப்புக்குத் தினமும் குறைந்தபட்சம் மூன்று மணிநேரம் செலவிடுகிறார் சீதா. மண் தொட்டிகள், இயற்கை இடுபொருள்கள், மணல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சில மாதத் தேவைக்கு எப்போதும் இருப்பு வைத்திருக்கிறார்.

சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா இருக்கணும். அந்த உறுதி மாடித்தோட்டக் காய்கறிகள் மூலம் எனக்குக் கிடைக்குது. சாப்பிடும் காய்கறிகளைச் சொந்தமா விளைவிச்சு சாப்பிடுறதால விவரிக்க முடியாத திருப்தி கிடைக்குது.

இப்போ மாடித்தோட்டத்துல 50 சதவிகிதம் நிழல்வலை அமைச்சிருக்கேன். அதனால இந்த வெயில் காலத்துல செடிகளை அதிக வெப்பத்துல இருந்து பராமரிக்க முடியுது. கொரோனா பிரச்னை முடிஞ்சதும் கூடுதலான பரப்புக்கு நிழல்வலை அமைக்கணும். வீண் செய்யாம தண்ணீர் விடுறதால இப்போதைக்குத் தண்ணீர் பிரச்னை வரலை. ஆனா, சீக்கிரமே சொட்டுநீர்ப்பாசனம் முறைக்கு மாறணும்.

பஞ்சக்கவ்யா, சாணம், வேப்பெண்ணெய் கரைசல், கிச்சன் கழிவுகள் உட்பட இயற்கை இடுபொருள்களை மட்டும்தான் பயன்படுத்தறேன். விரைவில் நிலம் வாங்கி இயற்கை விவசாயியா மாறணும்னு திட்டமிட்டிருக்கேன்” என்று புன்னகைத்தவர், அன்றைய சமையலுக்கான காய்கறிகளைப் பறிக்க ஆயத்தமானார்.

அடுத்த கட்டுரைக்கு