Published:Updated:

1,500 சதுர அடியில் அழகான தோட்டம்! - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம்!

பசுமை சூழ்ந்த மாடித்தோட்டச் செடிகளுக்கு மத்தியில் நடிகை சீதா
பிரீமியம் ஸ்டோரி
பசுமை சூழ்ந்த மாடித்தோட்டச் செடிகளுக்கு மத்தியில் நடிகை சீதா

வீட்டுத்தோட்டம்

1,500 சதுர அடியில் அழகான தோட்டம்! - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம்!

வீட்டுத்தோட்டம்

Published:Updated:
பசுமை சூழ்ந்த மாடித்தோட்டச் செடிகளுக்கு மத்தியில் நடிகை சீதா
பிரீமியம் ஸ்டோரி
பசுமை சூழ்ந்த மாடித்தோட்டச் செடிகளுக்கு மத்தியில் நடிகை சீதா

விவசாயம் செய்ய ஆர்வம் இருக்கிறது. ஆனால், விளைநிலம் இல்லையே எனக் கவலைப்படுபவர்களுக்கு கைகொடுப்பதுதான் வீட்டுத்தோட்டம். அந்தவகையில் வீட்டில் தோட்டம் அமைத்து இயற்கை வழியில் விவசாயம் மேற்கொண்டு, நஞ்சில்லாத உணவை உண்டு வருகின்றனர். அத்தகையோரில் ஒருவராக இணைந்திருக்கிறார் நடிகை சீதா.

தொட்டிகள் மற்றும் பைகளில் வளரும் செடிகள்
தொட்டிகள் மற்றும் பைகளில் வளரும் செடிகள்

மனசுகேத்த மகராசா, ஆண்பாவம், புதிய பாதை, உன்னால் முடியும் தம்பி என 80களின் இறுதியில் வெளிவந்த படங்களின் மூலமாகப் பிரபலமானவர். தற்போது திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காய்கறி அறுவடையில்
காய்கறி அறுவடையில்

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் சீதாவை ஓர் அதிகாலை நேரத்தில் இதமான சூழ்நிலையில், அவரது வீட்டில் சந்தித்தோம். மாடித் தோட்டப் பராமரிப்பி லிருந்தவர், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “சின்ன வயசிலிருந்தே விவசாயத்துல ரொம்ப ஈடுபாடு. விவசாயம் செய்யணும்ங்கிற ஆர்வம் இருந்தது. சினிமாவுல பிஸியாகிட்டதால அப்பச் செயல்படுத்த முடியலை. இப்ப அதிகப் படங்கள்ல நடிக்கிறதில்லை. தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள்ல மட்டும் நடிக்கிறேன். அதனால, ஓய்வு நேரம் கிடைக்குது. அந்த நேரத்துல இணையதளத்துல இயற்கை விவசாயம், மாடித்தோட்ட பராமரிப்புத் தொடர்பா பார்த்து, நிறைய தெரிஞ்சுக்குவேன். கூடவே, ரசாயன விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களால ஏற்படுற பாதிப்புகளையும் தெரிஞ்சிக்கிட்டேன். இயற்கை விவசாயம் செஞ்சு, வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நானே உற்பத்தி செய்யணும்னு ஆசைப் பட்டேன். ஆனா, அதுக்கு நிலமில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பசுமை சூழ்ந்த மாடித்தோட்டச் செடிகளுக்கு மத்தியில் நடிகை சீதா
பசுமை சூழ்ந்த மாடித்தோட்டச் செடிகளுக்கு மத்தியில் நடிகை சீதா

எனக்குத் தெரிஞ்ச வேளாண்துறை அதிகாரி, வீட்டு மொட்டைமாடியில தோட்டம் அமைக்கலாம். அதன்மூலம், ஐந்து வீடு களுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும்னு சொன்னார். அதோட, அதுக்கான ஆலோசனைகளையும் கொடுத்தார். உடனே களத்துல இறங்கிட்டேன்” என்று மாடித்தோட்டம் அமைத்த முன்கதை சொன்ன சீதா, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபடியே தொடர்ந்தார். ‘‘ஒவ்வொருத்தரும் பயன்படுத்துற யுக்திகள், மண், பருவநிலை, தண்ணியைப் பொறுத்துதான் பயிரோட வளர்ச்சி இருக்கும். அதனால, யார்கிட்டயும் நான் பயிற்சி எடுத்துக்கலை. எந்தத் தோட்டத்துக்கும் நேர்ல போய்ப் பார்க்கலை. எல்லாம் அனுபவ பயிற்சிதான். மாடித்தோட்ட விவசாயத்தை முறையா செய்யணும்னு, போன வருஷம் நிழல்வலை, வடிகால் வசதிக்காகச் சிமென்ட் கல்லுல திட்டுகளை அமைச்சேன். பிறகு, கீரைகள், சில காய்கறிகளை மட்டும் நடவு செஞ்சேன். அதுல இருக்கிற சாதக, பாதக அம்சங்களைக் கத்துக்கிட்டேன். பிறகு படிப்படியா செடிகளோட எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். இப்போ 1,500 சதுர அடியில் வீட்டு மொட்டை மாடி முழுக்கவே செடிகள் வெச்சிருக்கேன்” என்றவர் அந்தப் பயிர்களையும் பட்டியலிட்டர்.

1,500 சதுர அடியில் அழகான தோட்டம்! - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம்!

‘‘தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, புடலை, பாகற்காய், பிரண்டை, பீர்க்கங்காய், கேரட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வெள்ளரி, நெல்லி, காராமணி, தர்பூசணி, பச்சைமிளகாய், அத்தி, மா, சாத்துக்குடி, திராட்சை, கொய்யா, வாழை, பப்பாளி, வாட்டார் ஆப்பிள், டிராகன் ஃப்ரூட், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட காய்கறி, பழவகை மரங்கள் இருக்கு. இதோடு பல வகையான கீரைகளும், பூச்செடிகளும் இருக்கு. இயற்கை வளர்ச்சியூக்கி, பூச்சிவிரட்டி களை நானே தயாரிச்சுப் பயன்படுத்தறேன். மாவுப்பூச்சி தாக்குதல் இருந்தால் தண்ணியில சுத்தம் செஞ்சிடுவேன். அப்படியும் போகலைன்னா வேப்பெண்ணெய், சோப்புகரைசலைத் தண்ணியில கலந்து தெளிப்பேன். மண்புழு உரம், பஞ்சகவ்யாவை இயற்கை அங்காடியிலிருந்து வாங்கிக்குவேன். ஏதாச்சும் சந்தேகம்னா, வேளாண் அதிகாரி ஜெயபாண்டேகிட்ட ஆலோசனை கேட்பேன். தேவையான அளவுக்குத்தான் செடிகளுக்குத் தண்ணி ஊத்துவேன். இதுவரைக்கும் தண்ணி தட்டுப்பாடு ஏற்படலை. சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கிற எண்ணமும் இருக்கு” என்றவர், அறுவடை செய்த காய்கறிகளை நம்மிடம் காட்டினார். மாடித்தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபடியே மீண்டும் பேசத் தொடங்கிய சீதா, ‘‘என் தோட்டத்துல அதிகமா விளையுற புளிச்சக்கீரை, சிவப்பு மிளகாயைப் பயன்படுத்தி அடிக்கடி கோங்குரா பச்சடி செய்வோம். நாங்களே விளைய வெச்ச இயற்கைக் காய்கறிகளைத்தான் சாப்பிடுறதுனால, மனசுக்குத் திருப்தியாவும் சந்தோஷமாவும் இருக்கு. வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் முழுக்க இங்கேயே கிடைச்சிடுது. இன்னும் கொஞ்ச நாள்ல காய்கறி விளைச்சல் அதிகமாகிடும்.

தண்ணீர் ஊற்றும் பணியில்
தண்ணீர் ஊற்றும் பணியில்

செடிகளுக்குத் தண்ணி பாய்ச்சுறது, உரம் வைக்கிறது, பூச்சிவிரட்டித் தெளிக்குறதுன்னு தினமும் மூணு மணி நேரம் செலவழிக்கிறேன். இதனால உடற்பயிற்சி செஞ்ச பலன் கிடைக்குது. சீக்கிரமா ரெண்டு ஏக்கர் நிலமாவது வாங்கி, இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சுடுவேன். அதுக்கான பயிற்சிதான் இந்த மாடித்தோட்டம்” என்றபடியே புன்னகையுடன் விடைகொடுத்தார் சீதா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism