Published:Updated:

“இப்போதான் இயற்கையான காய்கறிகளை சாப்பிடுறேன்!” - நடிகை ஸ்ரீரெட்டி

தோட்டத்தில் ஸ்ரீரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
தோட்டத்தில் ஸ்ரீரெட்டி

மாடித்தோட்டம்

“மாடித்தோட்டத்தைப் பார்த்துக்கிறது ரொம்பவே கஷ்டம். நேரம் கிடைக்காது. மண், அழுக்கு... இப்படிப் பலபேர் என்கிட்ட சொன்னாங்க. ஆனா, நம்பிக்கையோடு மாடித்தோட்டம் அமைச்சேன். சரியா கவனிச்சுக்கிட்டதால காய்கறிகள், பூக்கள்னு நல்ல முறையில் வளர்ந்துச்சு. அதைச் சமையலுக்குப் பயன்படுத்துனப்போ அவ்ளோ சுவையா இருந்துச்சு. பூஜைக்கு வைக்கிற மலர்களும் நல்ல மணமா இருக்கு” என்று மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சென்னை, வளசரவாக்கத்தில் வசிக்கும் ஸ்ரீரெட்டி மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார். அதில் விளையும் காய்கறிகளைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துத் தனது இன்ஸ்ட்ராகிராம், முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவரின் மாடித்தோட்ட அனுபவம்குறித்து பேசினோம்.

தோட்டத்தில் ஸ்ரீரெட்டி
தோட்டத்தில் ஸ்ரீரெட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“எனக்கு 8 வயசுல இருந்தே செடிகள் வளர்க்குறதுல ஆர்வம். நானும் ஒரு விவசாயக் குடும்பப் பின்னணியில இருந்துதான் வந்துருக்கேன். இப்போ வசிக்கிறது தனி வாடகை வீடுதான். வீட்டோட மேல் தளத்துல கொஞ்சம் இடம் இருந்துச்சு. இந்தப் பகுதியில சூழ்நிலை ரொம்பவே நல்லா இருக்கு. அதனால தண்ணீர் செலவும் அதிகம் இருக்காதுனு தோட்டத்துல சில செடிகளை வளர்த்தேன். முதல்ல பூக்கள், கீரை, காய்கறிகள்னு வளர்த்தேன். எல்லாச் செடிகளோட வளர்ச்சியும் நல்லாவே இருந்துச்சு. குறிப்பா, காய்கறிகளோட வளர்ச்சி அபாரமா இருந்துச்சு. கத்திரி, தக்காளி, அவரை மாதிரியான காய்கறிகள் நல்லாவே காய்ச்சது. தண்ணீர் தவிர, வேற எந்த உரங்களையும் நான் பயன்படுத்தல. ஆனா, ஆச்சர்யப்படுற அளவுக்கு விளைச்சல் கிடைச்சது. அதுவும், தக்காளியோட நிறம் கண்ணைப் பறிக்கிற மாதிரி செக்கச் சிவப்பா இருந்துச்சு. அதைப் போட்டோ எடுத்து என் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்துல ஷேர் செய்தேன்” என்று முன்னுரை கொடுத்தவர், தொடர்ந்து பேசினார்.

ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி

“அப்புறமாத்தான் கற்றாழை, முடக்கத்தான், துளசி உள்ளிட்ட மூலிகைகளைப் பயிரிடலாம்னு தோணிச்சு. அதைச் செயல்படுத்தினேன். இப்போ என்கிட்ட கற்றாழைத் தோட்டமே இருக்கு. மாடித்தோட்டத்துல பூச்சித் தாக்குதல் வர்ற நேரத்துல வேப்ப எண்ணெய் தெளிப்பேன். அது கிடைக்காத நேரத்துல கற்றாழை சாற்றைத்தைத்தான் கலந்து தெளிச்சுட்டு வர்றேன். கற்றாழை நமக்கு மட்டுமல்ல, பயிர்களுக்கும் நன்மை தருது. மாடித்தோட்டத்தைச் சரியாக் கவனிச்சுக் கிட்டதால செடிகள் நல்ல முறையில் வளர்ந்துச்சு. காய்கறி, கீரைகளை அறுவடை செஞ்சு சமைச்சு சாப்பிட்டப்போ நல்லா சுவையா இருந்தது. அப்போதான் கடைக் காய்கறிகளுக்கும், இயற்கைக் காய்கறிகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சது. இவ்ளோ நாள் நாம இயற்கையான காய்கறி களைச் சாப்பிடலைனு அப்போதான் தெரிஞ்சுகிட்டேன்.

பழ மரங்களைப் பயிர் செய்யலாம்னு ஒரு எண்ணம் வந்தது. அதுக்காக அத்தி, கொய்யா, நாவல்னு வாங்கி வெச்சிருக்கேன். இது எல்லாமே போன்சாய் வகைகள்தான். பெரிய அளவுல வைக்கிறதுக்கு மாடியில இடம் இல்ல. இப்போ வீட்டுத்தோட்டம் செஞ்சிட்டு வர்றதால, ஒரு விவசாயியோட கஷ்டம் எப்படி இருக்கும்னு உணர முடிஞ்சது.

மண் தொட்டி அமைச்சா மொட்டைமாடியில் தண்ணீர் தேங்கும்னு, பைகள்லதான் செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ 300 சதுர அடியில மாடித்தோட்டம் இருக்கு. தொடர்ந்து விளைச்சல் நல்லா இருக்கு. சில செடிகள்ல எதிர்பார்த்த மகசூல் கிடைக்கல. அதுல நான் கத்துக்கிட்ட பாடங்களும் இருக்கு. பூச்சித் தாக்குதல்களைச் சமாளிக்கத்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். பூச்சித் தாக்குதல் வராம தடுக்க வேப்ப எண்ணெய் கரைசல், இஞ்சி-பூண்டு கரைசல்னு இயற்கையான வழிமுறை களைக் கடைப்பிடிச்சேன். இதனால பூச்சிகளோட தாக்குதல் கட்டுக்குள் வருது. சமையல் செய்றப்போ வீணாகுற உணவுப் பொருள்களை மட்க வெச்சு செடிகளுக்கு உரமா பயன்படுத்துறேன்.

மாடித்தோட்டத்துல தனியா ஒரு பந்தல் அமைச்சிருக்கேன். அதுல திராட்சை, கோவக்காய் கொடிகளை ஓட விட்டிருக்கேன். சீஸன் நேரத்துல கத்திரிக்காய், பாலக்கீரை, பீட்ரூட், கொத்தமல்லினு பல பயிர்கள் பலன்களைத் தருது. எந்த ரசாயனமும் சேர்க்காம, காய்கறிகளை விளைவிக்கிறேன். எல்லோரும் மாடித்தோட்டத்துக்குத் தொட்டி தயார் செய்யுறப்போ மண், தென்னை நார், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு எல்லாத்தையும் கலந்து உடனடியா செடியை நடவு பண்றாங்க. ஆனால், நான் அந்தக் கலவையைக் காய வெச்சு, 7 நாளுக்குப் பின்னாலதான் தொட்டியில் போட்டு விதைகளையோ செடிகளையோ நடுறேன்” என்று விரிவாக விளக்கம் கொடுத்தவர்,

“என் மாடித்தோட்டத்தை நான்தான் கவனிச்சுக்குறேன். என் விவசாய ஆசையை இன்னொருத்தர் மீது திணிக்கிறது வருத்தமா இருக்கு. மாடித்தோட்டம் அமைச்சு சுமார் ரெண்டு வருஷத்துல நிறைய அனுபவங்கள் கிடைச்சிருக்கு. 100 சதுர அடியில் இருக்கிற மாடித்தோட்டத்தை விரிவுபடுத்தி 300 சதுர அடியா மாற்றியிருக்கேன். இப்போ செடிகளை வைக்குறதுக்கு இடம் பத்தல.

காலை, மாலைனு ரெண்டு வேலைகள்லயும் செடிகளுக்குத் தண்ணீர் கொடுத்துட்டு வர்றேன். காலையில செடிகளைப் பராமரிக்கிறது, உடலுக்கும் மனசுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்குது. ஒவ்வொரு நாளும் இங்க இருக்குற காய்கறியோ, கீரையோ, மூலிகையோ நிச்சயம் என்னோட சாப்பாட்டுல இடம் பிடிக்கும்” என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் ஸ்ரீரெட்டி.

“இப்போதான் இயற்கையான காய்கறிகளை சாப்பிடுறேன்!” - நடிகை ஸ்ரீரெட்டி

மாடித்தோட்டம் குறித்த வீடியோவைக் காண க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.