Published:Updated:

கிச்சிலிச் சம்பா, தங்கச் சம்பா பாரம்பர்ய நெல் சாகுபடியில் கலக்கும் அக்குபஞ்சர் மருத்துவர்கள்!

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா வயலில் அன்பழகன் - மணிமேகலை தம்பதி.
பிரீமியம் ஸ்டோரி
News
ஆத்தூர் கிச்சிலிச் சம்பா வயலில் அன்பழகன் - மணிமேகலை தம்பதி. ( ம.அரவிந்த் )

இயற்கை

பாரம்பர்ய நெல் விதைகள் நம் மண்ணின் சாட்சியாகவும், ஆரோக்கியத்தின் குறியீடாக வும் இருந்து வருகின்றன. அந்த வகையில் இயற்கை விவசாயத்தில் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர்களான அன்பழகன் - மணிமேகலை தம்பதி. அவர்களுக்கு உதவியாக அவர்களின் மகன் அமர்சன் இருக்கிறார்.

ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாட்டி லிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேடயக்கொல்லை கிராமம். கருமேகம் திரண்டு மழை வரக் காத்திருந்த ஒரு காலைவேளையில் அன்பழகன்-மணிமேகலை தம்பதியைச் சந்திக்க அந்தக் கிராமத்துக்குச் சென்றோம்.

கம்பீரமாக மார்பு வரை வளர்ந்துள்ள நெல் வயலில், பயிர்களுக்கு நடுவே நின்று குழந்தையைப்போல் கவனித்துக் கொண்டிருந்த தம்பதி நம்மை அன்புடன் வரவேற்றனர்.

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா வயலில் அன்பழகன் - மணிமேகலை தம்பதி.
ஆத்தூர் கிச்சிலிச் சம்பா வயலில் அன்பழகன் - மணிமேகலை தம்பதி.

வயலைச் சுற்றிக்காட்டியபடியே நம்மிடம் பேசிய அன்பழகன், ‘‘இது, களி மற்றும் மணல் கலந்த மண். இந்தப் பகுதியில ஆற்றுப் பாசனம், ஆழ்த்துளைக்குழாய் மூலமா ரெண்டு போகம் விவசாயம் செய்றாங்க. நெல், உளுந்து, எள், கடலை, மரவள்ளிக்கிழங்கு சாகுபடிதான் பெரும்பாலும் நடக்கும்.

வழிகாட்டிய நம்மாழ்வார்

25 வருஷமா விவசாயம் செய்யாம சீமைக்கருவேல் மரங்கள் மண்டிக் கிடந்த இடம். இன்னைக்கு இப்படி நெஞ்சளவுக்கு நெல் பயிர் வளர்ந்து நிற்குது. நான், என் மனைவி மணிமேகலை, மகன் அமர்சன், மகள் நாலு பேருமே அக்குபஞ்சர் மருத்துவர்கள். ஐயா நம்மாழ்வார் கூட்டங்கள்ல சொன்னது எல்லாம் பசுமரத் தாணி போல என் மனசுல அப்படியே இருக்கு. நாங்க அக்குபஞ்சர் மருத்துவர்கள் என்பதால் உடலுக்கு ரசாயனம் கலந்த மாத்திரை பயன்படுத்தாம சிகிச்சை கொடுப்போம். அதனால, இயற்கை விவசாயத்து மேல எப்பவும் ஈடுபாடு இருக்கும். அதுக்கு முக்கியக் காரணம் நம்மாழ்வார்’’ என்றவர், தாங்கள் விவசாயத்துக்கு வந்த விதத்தை விளக்கினார்.

கருவேலம் மரம் அடர்ந்த பழைய வயல்
கருவேலம் மரம் அடர்ந்த பழைய வயல்

25 வருஷம் விவசாயம் செய்யாத நிலம்

‘‘விவசாயத்து மேல பெரிய ஆர்வம் இருந்தாலும் குழந்தைகள் படிப்பு, தொழில் காரணமா தஞ்சாவூர்ல ‘செட்’டிலாகிட்டோம். அதனால எங்களால விவசாயம் செய்ய முடியல. சொந்தமா ஒரு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல சுமார் 25 வருஷமா விவசாயம் செய்யாததால சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடா இருந்துச்சு. இந்த நிலையில, கொரோனா முதல் ஊரடங்கு வந்துச்சு. அந்த நேரத்துலதான் விவசாயத்தோட தேவை புரிஞ்சது. உடனே, ஒரு ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்ய முடிவெடுத்து ஊருக்கு வந்தோம். அந்த இடத்தில இருந்த சீமைக்கருவேல மரங்களை வெட்டிச் சுத்தம் பண்ணினோம். 10 டன் விறகு கிடைச்சது.

விவசாயம் செய்ய முடிவெடுத்ததைப் பலரும் வரவேற்றாங்க. ஆனா, இயற்கை விவசாயம் செய்யப்போறோம்னு சொன்னதும் அவங்களே கிண்டலாகச் சிரிச்சாங்க. அதைக் கண்டுக்காம நாங்க வேலையில இறங்குனோம். நிலத்தைச் சமன்படுத்தினோம். பிறகு, தண்ணீர் விட்டு ஓர் அடி ஆழத்துக்குக் குழி எடுத்து, அந்த மண்ணுல வரப்பு அமைச்சோம். ‘மேல் பகுதி மண்ணை எடுத்துட்டீங்க... இனி உங்க வயல் விளையாது’னு எல்லோரும் சொன்னாங்க. நாங்க எதையுமே காதுல வாங்கிக்கல. ஒரு ஏக்கர்ல தண்ணி பாய்ச்சி இலைதழைகளைப் போட்டு உழவு ஓட்டினோம். பிறகு, சி.ஆர் ரக நாற்றுகளை வாங்கி நடவு நட்டோம். 20 நாள்கள் கழிச்சு அமுதக்கரைசல் தெளிச்சோம்.

மகன் அமர்சன்
மகன் அமர்சன்


பயிரை நேசிச்சா பலன் கிடைக்கும்

அடிக்கடிப் போய் வயலைப் பார்த்துட்டு வர்றதோடு சரி. வேற எதுவும் செய்யல. களை கூட எடுக்கல. ‘ஒரு செடியை நேசிச்சு அரவணைச்சா அது காய்க்கும்.’ ‘ஒவ்வொரு பயிரும் மனிதர்களைப் போலதான்... பயிரை நேசியுங்கள். அவை நமக்குப் பலன் தரும்’னு நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அதன்படி நாங்க பயிரை நேசிச்சோம். அப்ப பெய்ஞ்ச மழையில எங்க வயலைச் சுற்றி ரசாயன விவசாயம் பண்ணுன நிலங்கள்ல இருந்த நெற்பயிர்கள் சாய்ஞ்சிடுச்சு. ஆனா, எங்க பயிர் சாயாம மழையை எதிர்கொண்டு நிமிர்ந்து நின்னுச்சு.

150 நாள்களுக்குப் பிறகு, இயந்திரம் மூலம் அறுவடை பண்ணினோம். 20 மூட்டை (60 கிலோ) நெல் கிடைச்சது. சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடந்த பகுதியில விவசாயம் பண்ணி, 20 மூட்டை மகசூல் எடுத்தோம். கிண்டல் பண்ணுன ஊர் மக்கள் எங்களை ஆச்சர்யமாப் பார்த்தாங்க’’ என்றவரைத் தொடர்ந்து பேசிய மணிமேகலை,

‘‘மண்ணுக்கும் சரி... மனித உடலுக்கும் சரி ரசாயன மருந்து தேவையில்லாதது. அக்குபஞ்சர் மருத்துவத்தில இருக்கிறதால இதை அனுபவபூர்வமாக உணர்ந்ததாலும், ஐயா நம்மாழ்வாரை மனசுல ஏந்தி, இப்போ ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, தங்கச்சம்பா நெல் ரகங்களைப் பயிரிட்டிருக்கிறோம்’’ என்றவர், வருமானம் பற்றிப் பேசினார்.

நெல் வயல்
நெல் வயல்

‘‘கடந்த முறை போட்ட நெல்லுக்கு, நாங்க பெருசா செலவு செய்யல. நாற்றுக்கட்டுக்கு 1,000 ரூபாய், உழவு ஓட்ட 1,200 ரூபாய், நடவு கூலி 2,700 ரூபாய், அறுவடை இயந்திரம் 2,500 ரூபாய்னு மொத்தம் 7,400 ரூபாய் செலவாச்சு. ஒரு மூட்டை 1,200 ரூபாய் வீதம் 20 மூட்டை நெல்லுக்கு 24,000 ரூபாய் கிடைச்சது. வைக்கோல் மூலம் 5,000 ரூபாய். மொத்தம் 29,000 ரூபாய் வருமானம் கிடைச்சது அதுல செலவு போக 21,600 ரூபாய் லாபமாக் கிடைச்சது’’ என்றவர் நிறைவாக,

‘‘விவசாயத்துல லாபம் கிடைச்சதுன்னு சொல்றதைவிட வறண்டு கிடந்த விளைநிலத்தை மறுபடியும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கோம். அது பலன் கொடுத்ததே பெரிய லாபமா நினைக்குறோம். அதுதான் மனசுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குது. எங்களைப் பார்த்துட்டு, பலரும் சும்மா போட்டு வெச்சுருந்த நிலத்துல சீமைக் கருவேல மரங்களை வெட்டிட்டு விவசாயம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க’’ என்று பெருமிதம் பொங்க விடைகொடுத்தனர்.

தொடர்புக்கு, அன்பழகன்,

செல்போன்: 97868 78295

3 ஏக்கரில் சம்பா சாகுபடி

‘‘ஒரு ஏக்கர் நிலத்தோட சேர்த்து கூடுதலா 2 ஏக்கர் ஒத்திக்கு (குத்தகை) எடுத்தோம். மொத்தம் 3 ஏக்கர்ல இப்ப ஆத்தூர் கிச்சலிச் சம்பா, தங்கச்சம்பா நெல் பயிர்கள் இருக்கு. விதைநெல் வாங்கி, நாற்றங்கால் அமைச்சு, ஒரு நெல்லுக்கூட இன்னொரு நெல் சேராத வகையில தனித் தனியாகத் தூவினோம். 10-ம் நாள் அமுதக்கரைசல் தெளிச்சோம். 23-ம் நாள் நாற்றுகளைப் பறிச்சு, ஒற்றை நாற்று முறையில நடவு பண்ணுனோம்.

தங்கச் சம்பா வயலில்
தங்கச் சம்பா வயலில்


நடவு வயல்ல 3 ஏக்கர்ல மாட்டு எருவைப் போட்டு உழவு ஓட்டினோம். பிறகு, தண்ணீரைப் பாய்ச்சி அதுல புங்கன், கிளரிசீடியா, வாகை மரங்களோட இலைதழைகளைப் போட்டு மறுபடியும் உழவு ஓட்டினோம். நாற்று நடவுக்குப் பிறகு, 15-ம் நாள் அமுதக்கரைசல் தெளிச்சோம். 20-ம் நாள் கோனோவீடர் மூலம் களை எடுத்தோம். பிறகு, தூர் வெடிச்சு நல்லா வளர ஆரம்பிச்சது. ஒவ்வொரு பயிரிலும் 40 முதல் 60 தூர்கள் வரைக்கும் வளர்ந்திருக்கு. தங்க சம்பா, ஆத்தூர் கிச்சலிச் சம்பா ரெண்டு பயிரும் நாலரை அடியிலிருந்து அஞ்சரை அடி உயரம் வளர்ந்திருக்குது. நடவு பண்ணி 98 நாள்களுக்கு மேல ஆச்சு. பொங்கலுக்குப் பிறகுதான் அறுவடை செய்யப்போறோம்.

‘ஒவ்வொரு பயிரும் மனிதர்களைப் போலதான்... பயிரை நேசியுங்கள். அவை நமக்குப் பலன் தரும்’னு நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார்.


3 ஏக்கர்... 99,700 லாபம்

விதையிலிருந்து இதுவரைக்கும் 3 ஏக்கருக்கும் சேர்த்து மொத்தம் 22,300 செலவாயிருக்கு. அறுவடை நேரத்தில 11,500 ரூபாய் செலவாகும். அதையும் சேர்த்து 33,800 ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கருக்கு 25 மூட்டையிலிருந்து 30 மூட்டை வரை மகசூல் எதிர்பாக்குறோம். ஒரு மூட்டை 1,500 ரூபாய் விற்பனையாகுது. குறைந்தபட்சம் 25 மூட்டைக் கிடைச்சாலே ஒரு ஏக்கருக்கு 37,500 ரூபாய் வீதம் 3 ஏக்கருக்கும் 1,12,500 ரூபாய் கிடைக்கும். பயிர் உயரமா இருக்கு. அதனால கூடுதலா வைக்கோல் கிடைக்கும். அது மூலமா 21,000 ரூபாய் கிடைக்கும். அதையும் சேர்த்து 1,33,500 ரூபாய் கிடைக்கும். இதுல செலவு போக 99,700 ரூபாய் லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறோம்’’ என்றார் அன்பழகன்.

நெல் வயல்
நெல் வயல்

தரமான விதை சோதனை

‘‘பெரிய பாத்திரத்தில தண்ணியை நிரப்பி அதுல உப்பு கொட்டி கரைச்சோம். தண்ணியில உப்பு எந்த அளவுக்கு இருக்கும்னு தெரிஞ்சுக்க அதுல கோழி முட்டையைப் போட்டோம். உப்பு அதிகமா இருந்தா முட்டை தண்ணியில மிதக்கும். அதைத் தெரிஞ்சுக்க இந்த முறையைப் பயன்படுத்தினோம். பிறகு, விதை நெல்லை அதுல கொட்டினோம். தண்ணியில உப்பு கலந்திருந்ததால விதை நெல்லுல கலந்திருக்கும் அரை நெல், கருக்கா நெல் எல்லாம் மிதந்து மேலே வந்துடுச்சு. அதையெல்லாம் எடுத்துட்டு, மீதமுள்ள விதை நெல்களை உடனடியாக நல்ல தண்ணியிலக் கொட்டி 3 தடவை அலசி, விதை நெல்ல படிந்திருக்கக்கூடிய உப்பை நீக்கினோம். இதன் மூலம் தரமான விதைநெல் கிடைச்சது’’ என்கிறார் அன்பழகன்.