Published:Updated:

`திருச்சி மாநகராட்சியோடு இணையமாட்டோம்!' - தீர்மானம் நிறைவேற்றிய அதவத்தூர் கிராம மக்கள்; என்ன காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிராம மக்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றம்.
கிராம மக்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றம்.

``மக்கள் வேண்டாம் என்று சொல்லும் திட்டத்தை அரசு நிறைவேற்ற துடிப்பதே முதல் தவறு. அதவத்தூரைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 80 சதவிகித நிலங்கள் விளைநிலங்கள்தான்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``மாநகராட்சியோடு எங்க ஊராட்சியை இணைக்கலாமா வேண்டாமானு எங்ககிட்ட எந்தக் கருத்தும் கேக்காம அதிகாரிகளே முடிவெடுத்துட்டா பொதுமக்களாகிய நாங்க எதுக்கு? அரசியல் லாபத்திற்காக எங்ளோட வாழ்க்கையில விளையாடுவது சரியா?” என திருச்சி மாநகரட்சியுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் அதவத்தூர் கிராம மக்கள்.

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை
`எங்க ஊரை நகராட்சியாக தரம் உயர்த்தாதீங்க!' - அரசின் முடிவை எதிர்க்கும் பொன்னேரி மக்கள்; ஏன்?

திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய, நிலவரப்படி, திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதனால், சுற்றுவட்டாரத்திலுள்ள வார்டுகளை இணைப்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டதுடன் குண்டூர், நவல்பட்டு, அதவத்தூர் உள்ளிட்ட சில ஊராட்சிமன்றத் தலைவர்களை அழைத்து ஆட்சியர் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தியிருக்கிறார். அப்போது அந்தந்த கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வாய்மொழி உத்தரவாக, ``திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளின் எண்ணிக்கையாக உயர்த்த உள்ளோம். அந்தப் பட்டியலில் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதால், தாங்களாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

ஆட்சியரின் உத்தரவை மறுக்கமுடியாமல் தீர்மானம் நிறைவேற்றச் சென்ற அதவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்களிடம், `ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது, இணைக்க நினைத்தால் விடமாட்டோம்’ என ஊர்ப் பொதுமக்கள் கொடுத்த நெருக்கடியால் காந்தி ஜெயந்தியான கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் அதவத்தூர் கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

கிராம மக்கள்
கிராம மக்கள்

அதுமட்டுமில்லாமல் அல்லித்துறை, தாயனூர், சோமரசம்பேட்டை மற்றும் வயலூர் ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், ஊர் தலைவர்கள் மற்றும் நாட்டாமைகள் திருச்சி மாநகராட்சியுடன் தங்கள் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதவத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் பேசிய செந்தில், ``அதவத்தூர் ஊராட்சி உட்பட 25 முதல் 30 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவெடுத்துள்ளது. மாநகராட்சியோடு இணைக்கலாமா வேண்டாமா என்று மக்களிடம் கருத்துக்கேட்காமல் அதிகாரிகளே முடிவெடுத்துவிட்டால் பொதுமக்களாகிய நாங்கள் எதற்கு.

செந்தில்
செந்தில்

இவர்கள் அரசியல் லாபத்திற்காக எங்களது வாழ்க்கையில் விளையாடுவது சரியா? இந்தக் கிராமத்தில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நூறு நாள் வேலைத் திட்டத்தையும், விவசாயத்தையும் நம்பிதான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். தற்போது ஊராட்சியிலிருந்து மாநகராட்சிக்கு எங்களை மாற்றினால் எங்களது வாழ்வாதாராம் முன்னேறிவிடுமா? இது விவசாய பூமி. இந்த பூமியை நம்பித்தான் இந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

எங்கள் பகுதியை மாநகராட்சியாக மாற்றினால் 100 நாள் வேலைத்திட்டம் முற்றிலுமாக பறிபோகும். மாநகராட்சிக்கு அதிக வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எங்களது வாழ்வாதாரத்துக்கு ஆட்சியரால் உத்தரவாதம் கொடுக்க சொல்லுங்கள்; அதன் பிறகு எங்களது ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்க சம்மதிக்கிறோம். அதுவரையிலும் இணைப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று” என்றார் ஆவேசமாக.

மக்கள் எதிர்ப்பிற்கான காரணம் குறித்து, தன்னாட்சி அமைப்பைச்சேர்ந்த நந்தகுமார்சிவாவிடம் பேசியபோது, ``மக்கள் வேண்டாம் என்று சொல்லும் திட்டத்தை அரசு நிறைவேற்ற துடிப்பதே முதல் தவறு. அதவத்தூரைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 80 சதவிகித நிலங்கள் விளைநிலங்கள்தான். பலரும் விவசாய வேலைகள், விவசாய கூலிகளாக வேலைசெய்பவர்கள்.

தன்னாட்சி அமைப்பைச் சேர்ந்த நந்தகுமார்சிவா
தன்னாட்சி அமைப்பைச் சேர்ந்த நந்தகுமார்சிவா

மாநகராட்சியுடன் இணைப்பதால் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இப்பகுதி மாநகராட்சியோடு இணைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களின் கையில் சிக்கும். அதன் பிறகு என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஊராட்சி தலைவரை பொறுத்தவரை இங்குள்ள அனைத்து மக்களை பற்றியும், அவர்களின் பிரச்சனை குறித்தும் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் மாநகரட்சியாக மாறிய பிறகு மாநகராட்சி வார்டு உறுப்பினரால் இதனை செய்ய முடியுமா? மிக சுலபமாக ஊராட்சி மன்ற தலைவரை அணுகுவதைபோல மாநகராட்சி வார்டு மெம்பரை அணுக முடியுமா?

ஊராட்சியாக இருக்கும்போது கிடைக்கும் மக்களுக்கான பல அதிகாரங்கள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக அரசியல் சாயம் அதிகமாக படியக்கூடிய வாய்ப்புள்ளது. மேலும் அதவத்தூரை பொறுத்தவரை மக்களில் பலருக்கு ஊராட்சியாக இருக்கக்கூடிய நேரத்தில் கிடைக்கும் சலுகைகள் தெரிந்துள்ளதால் இளைஞர்கள் பலரும் எதிர்க்கின்றனர்.

கிராம மக்கள்
கிராம மக்கள்
காந்தி சிலையிடம் மனு அளித்த விவசாயிகள்; வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நூதன போராட்டம்!

மேலும் பொதுமக்கள் சொல்வதைத்தான் ஊராட்சி தலைவரும் விரும்புகிறார். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் பேசுகையில் கூட எழுத்து பூர்வமாக எந்த அறிக்கையும் தராமல் வாய்மொழி உத்தரவாக சொல்லியிருப்பதே மிகத்தவறு. மக்கள் விவகாரம் அரசியலாக மாறாமல் இருந்தால் சரி” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு