Published:Updated:

ஆண்டுக்கு, ரூ.3 லட்சம் - நெல், தென்னை, வாழை, பால்... 83 வயது இளைஞரின் இயற்கை விவசாயம்!

பண்ணையில் டி.எஸ்.கோபாலன்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் டி.எஸ்.கோபாலன்

பண்ணை

ஆண்டுக்கு, ரூ.3 லட்சம் - நெல், தென்னை, வாழை, பால்... 83 வயது இளைஞரின் இயற்கை விவசாயம்!

பண்ணை

Published:Updated:
பண்ணையில் டி.எஸ்.கோபாலன்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் டி.எஸ்.கோபாலன்

சுமை விகடனின் தூண்டுதலால் பல்வேறு பணிகளில் இருப்பவர்களும் விவசாயத்தை ஒரு துணை தொழிலாகச் செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான டி.எஸ்.கோபாலன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். சிவில் வழக்குகளைக் கையாளும் இவரின் அலுவலகமும் வீடும் தியாகராய நகரில் உள்ளது. வாசலில் பலர் காத்திருக்க, நம் வருகைக்காக அந்த வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு பண்ணைக்கு அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்தார். “வாங்கோ... வாங்கோ” என்று வரவேற்றவர் தன்னுடைய பண்ணை பற்றிய தகவல்கள் அடங்கிய ப்ரவுச்சரைக் கொடுத்தார். அதில் என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன, பண்ணையின் பரப்பளவு, புகைப்படங்கள், பண்ணை அமைந்திருக்கும் இடம், பண்ணைக்கு வந்தால் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க முடியும் என்று பல விஷயங்கள் அடங்கியிருந்தன. அதைப் பார்த்தவுடனே இது ஒரு மாதிரி பண்ணை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேயுள்ள திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள அவருடைய ‘அகஸ்தியர் வனம்’ பண்ணைக்கு அழைத்துச் சென்றார். ஒரு பக்கம் தேங்காயிலிருந்து எண்ணெய் எடுக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்க, சுறுசுறுப்பாகப் பண்ணையைச் சுற்றிக் காண்பித்தார் 83 வயது இளைஞரான டி.எஸ்.கோபாலன். அப்போது பேசிய அவர்,

பண்ணையின் முகப்பு
பண்ணையின் முகப்பு
பண்ணையில் டி.எஸ்.கோபாலன்
பண்ணையில் டி.எஸ்.கோபாலன்


“எனக்குப் பூர்வீகம் திருவாரூர் மாவட்டம், புலிவலம். என்னுடைய தொழில் வழக்கறிஞர் பணி. அதுலதான் என்னோட ஈடுபாடு இருந்து வந்தது. 80-களில் என்னிடம் ஒரு வழக்குக்காக அறிமுகமான ஆனந்தகிருஷ்ண செட்டியார் என்பவர் தீவிரமா விவசாயம் செஞ்சிட்டு வந்தார். அவர்தான் நான் விவசாயத்துல நுழையறதுக்கான தூண்டுதல். அவர் சென்னையிலிருந்து பெரியபாளையம் போற சாலையில 120 ஏக்கர் நிலத்த வாங்கி விவசாயம் செஞ்சிட்டு இருந்தார். அவரோட தூண்டுதலால 2006-ம் வருஷம் அவர் பண்ணையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்த இந்த 5 ஏக்கர் நிலத்த வாங்கினேன். அப்போ இது தரிசு நிலமாத்தான் இருந்துச்சு. பசுமை விகடன் வருகைக்குப் பிறகு பண்ணையை ஒரு மாதிரிப் பண்ணையா மாத்தணுங்கற யோசனை வந்துச்சு. அதன்படி செயல்படுத்திட்டு வர்றேன்” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

“ஒரு முன்னோடி பண்ணையில் இருக்க வேண்டிய அனைத்து விஷயங்களும் இந்தப் பண்ணையில் இருக்கும் வகையில் நெல், வாழை, தென்னை, மா, பலா, சப்போட்டா சாகுபடி, மீன் குளம், மதிப்புக்கூட்டிய தேங்காய், மாடு வளர்ப்பு, பண்ணைச் சுற்றுலா வருபவர்களுக்கென்று தங்கும் அறைகள், செயற்கை அருவி அமைப்பு என அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைச்சு செஞ்சிருக்கேன். ஒரு பண்ணை என்றால் சில அம்சங்கள் அடிப்படையா இருக்கணும்னு நினைச்சு இந்த விஷயங்களைச் செஞ்சிருக்கேன். என்னைமாதிரி புதுசா விவசாயத்துல நுழையறவங்களுக்கு எல்லாமே எக்ஸ்ப்ரிமென்ட்தான். அந்த வகையில நான் கற்ற விவசாய அறிவியல் தொழில்நுட்பங்கள செயல்படுத்திப் பார்க்கிறதுக்கான சோதனைக்களமாத்தான் இந்தப் பண்ணையைப் பார்க்கிறேனே ஒழிய வருமானம் கொடுக்குற பண்ணையா இதைப் பார்க்கல. இன்னொண்ணு இந்த இயற்கை விவசாயம் மூலமா மக்களுக்கு விழிப்புணர்வு வரணுங்கறதுதான் என்னோட நோக்கம். அதுக்காக என்னோட அலுவலகத்துல இயற்கை விவசாயத்துல விளைஞ்ச நெல்லை அரிசியாக்கி வழக்கு விஷயமா வர்றவங்ககிட்ட இயற்கை விவசாயத்தோட அவசியத்தைச் சொல்லி விற்பனை செய்வேன்” என்றவர் பண்ணையைப் பராமரித்து வரும் வெங்கடேசனை அறிமுகப்படுத்தினார். அவர் பண்ணை பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்


நெல்

“மொத்தமுள்ள 5 ஏக்கர்ல மூன்றரை ஏக்கர்ல நெல் விவசாயம் நடக்குது. வழக்கமான நெல் நடவு முறையில இருந்த நாங்க, ஐயாவோடு யோசனையில இந்தமுறை நேரடி நெல் விதைப்பு முறையில விதைச்சிருக்கோம். பசுமை விகடனைப் படிச்சிட்டு அதுல வர்ற தொழில்நுட்பங்கள உடனடியா எங்களுக்குத் தெரியபடுத்திடுவார். ஒவ்வொரு வாரமும் ஞாயித்துக்கிழமை தவறாம பண்ணைக்கு வந்திடுவார். அந்த வாரம் பசுமைவிகடன் வெளியாகியிருந்தா, அதையும் கையோடு கொண்டு வந்துவிடுவார். இந்த நேரடி நெல் விதைப்புக்கு ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதைநெல்லே போதுமானது. வழக்கமான நெல் நடவுக்கு 30 கிலோ விதைநெல் தேவைப்படும். இந்த முற விதைச்சு நல்லா வளர்ந்துட்டு வருது. பொன்னி, கோ.51, தூயமல்லி ரகங்களதான் அதிகம் சாகுபடி செஞ்சிட்டு வர்றோம். நெல்லை அரிசியாக்கிதான் விக்கிறோம். பஞ்சகவ்யா, மீன் அமிலம், வேப்பெண்ணெய், பத்திலைக் கரைசல் இவைதான் முக்கிய இடுபொருள். நெல்லுக்கும் மட்டுமில்ல. அனைத்துப் பயிர்களுக்கும் இததான் கொடுக்கிறோம்.

பண்ணையின் வெளிப்புறத் தோற்றம்
பண்ணையின் வெளிப்புறத் தோற்றம்


வாழை

40 சென்ட்ல மீன் குளம் அமைச்சிருக்கோம். மீன் குளத்தைச் சுற்றி 10 சென்ட் அளவு இடத்துல 100 மொந்தன் வாழை ரகத்தைச் சாகுபடி செஞ்சிட்டு வர்றோம். வழக்கமா குளத்தைச் சுத்தி தென்னைதான் சாகுபடி செய்வாங்க. நாங்க வாழையைச் சாகுபடி செய்றோம். இது நட்டு 3 வருஷம் ஆகுது. இப்போ குளத்தைச் சுத்தி இருக்கிறது எல்லாமே மறுதாம்பு வாழைதான். மீன் குளத்துல முதல்ல மீன் அறுவடை நடந்துட்டு இருந்துச்சு. இப்போ கொஞ்ச நாளா நிறுத்தி வெச்சிருக்கோம்.

மீன்குளத்தைச் சுற்றி வாழைச் சாகுபடி
மீன்குளத்தைச் சுற்றி வாழைச் சாகுபடி


மா, சப்போட்டா

அரை ஏக்கர்ல மா, சப்போட்டோ, பலா, முருங்கை, வாட்டர் ஆப்பிள்னு இருக்கு. இந்த அரை ஏக்கர்லயே பட்டாம்பூச்சி பூங்காவையும் அமைச்சிருக்கோம். இன்னோர் அரை ஏக்கர்ல பண்ணை வீடு, மாட்டுக் கொட்டகை, பண்ணைச் சுற்றுலா வர்றவங்களுக்குனு செயற்கை அருவி இருக்கு. வீட்டுக்குப் பின்புறமே சாண எரிவாயு (கோபர் கேஸ்) அமைப்பை செட் பண்ணியிருக்கோம். அதை ஒட்டியே இரண்டு பெருநெல்லி மரங்கள், சின்ன இடத்துல கீரைச் சாகுபடியும் நடக்குது. இதிலிருந்து கேஸ் எடுத்து வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்திட்டு இருக்கோம். வரப்புகள்ல இருக்கிற 100 தென்னை மரங்கள்ல 60 தென்னை மரங்கள்ல இருந்து மகசூல் எடுத்துட்டு இருக்கோம். முன்ன நேரடி விற்பனை மூலமா, ஒரு தேங்காய் 20 ரூபாய்க்கு கொடுத்துட்டு இருந்தோம். இப்போ பரிசோதனை முயற்சியா அதிலிருந்து எண்ணெயாக்கி விற்பனை செஞ்சிட்டு வர்றோம். தென்னை மரங்கள்ல ஏறுறதுக்குத் தென்னை மரம் ஏறும் கருவியைப் பயன்படுத்திட்டு இருக்கோம்.

மாடுகளுடன்
மாடுகளுடன்


மாடுகள், கன்னுக்குட்டிகள்னு 15 இருக்கு. இப்போ 3 மாடுகள் கறவையில இருக்கு. இந்தப் பண்ணையில் விளையுறதுல பாதிக்கும் மேல் வீட்டுத்தேவைக்கும், பண்ணையில வேல செய்றவங்களுக்கும் கூலியா கொடுத்திடுறோம். மீதிதான் வருமானம். அதன்படி நெல், தென்னை, மா, வாழை, பால் மூலமா வரும் வருமானத்தைக் கணக்கு போட்டா, வருஷத்துக்கு ஏறத்தாழ 3 லட்சம் ரூபாய் கிடைக்கும்” என்றார் வெங்கடேசன்.

பசுமை விகடன் புத்தகங்களுடன்
பசுமை விகடன் புத்தகங்களுடன்


நிறைவாகப் பேசிய டி.எஸ்.கோபாலன், “விளையுறதுல பாதிக்கும் மேல பண்ணையில வேல செய்றவங்களுக்கு கூலியாகவும், வீட்டுத்தேவைக்காகவும் பயன்படுத்திக்கிறோம். மீதியை நண்பர்கள், உறவினர்களுக்கும் கொடுக்கிறோம். இதைத்தாண்டி மீதியாவதைதான் விற்பனை செய்றோம். அது பண்ணையோட ஆரம்பக்கட்ட செலவுகளுக்கும், தற்போது பண்ணைக்குச் செய்து கொண்டிருக்கும் செலவுகளுக்கும் சரியா போயிடுது. ஆனா, இந்தப் பண்ணையில பல பரிசோதனை முயற்சிகள செயல்படுத்தி பார்த்திருக்கேன். ஃபார்ம் டூரிஸம்னு சொல்லப்படுற விஷயங்களையும் பண்ணைக்குள் செஞ்சு வெச்சிருக்கேன். இவ்வளவு முயற்சிகளுக்கும் பின்னணியில பசுமை விகடன்தான் இருக்கு. அதுல வர்ற தொழில்நுட்பங்களைச் செஞ்சு பார்க்கணும்னு ஆர்வம். அந்த ஆர்வத்துக்கு இந்தப் பண்ணை களமா இருந்துட்டு இருக்கு” என்று விடைகொடுத்தார்.தொடர்புக்கு,

டி.எஸ்.கோபாலன், செல்போன்: 75502 41296

வெங்கடேசன், செல்போன்: 86753 54303

அரசுக்குக் கோரிக்கை

விவசாய வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்தில் எங்கெங்கே விவசாய வேலைகள் இருக்கிறதோ அங்கே அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் இல்லை என்ற பிரச்னை தீரும். மேலும் விவசாயம் செய்பவர்களுக்கும் எங்கே ஆட்கள் கிடைப்பார்கள், எவ்வளவு கூலி என்ற விவரங்களும் தெரிந்துவிடும். கிராமங்களை விட்டு விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வெளியேறாமல் இருப்பார்கள். விவசயக் கூலித் தொழிலாளர்களுக்கான இந்த அமைப்பு மூலம் பென்ஷன், வருமான பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய முடியும் என்றவொரு கோரிக்கையை அரசுக்கு வைக்கிறார் டி.எஸ்.கோபாலன்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தயாரிப்பு
தேங்காய் எண்ணெய் தயாரிப்பு
தேங்காய் எண்ணெய் தயாரிப்பு
தேங்காய் எண்ணெய் தயாரிப்பு


“வழக்கமா தேங்காயா விற்பனை செய்வோம். கோபாலன் ஐயா, சொல்லி இப்போது புதிய முறையில எண்ணெய் தயாரிக்கிறோம். முத்துன 15 தேங்காயை துருவி அதைத் தலா 5 லிட்டர் தண்ணியுள்ள மூணு பாத்திரத்துல தனித்தனியா பிழிஞ்சு எடுத்துக்கணும். மூணு பாத்திரத்துலயும் உள்ள தேங்காய்ப்பாலை ஒரே பாத்திரத்துல ஊத்திக்கணும். அத 24 மணி நேரம் அப்படியே வெச்சிடணும். பிறகு பாத்திரத்தோட மேலே தேங்கியிருக்கும் தேங்காய்ப்பாலை மட்டும் எடுத்து வாணலியில் ஊத்தி 15 நிமிஷம் சூடு செய்து வடிகட்டினா சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்கும். 10 தேங்காய் போட்டா 1 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்னு சொல்றாங்க. எங்ககிட்ட நடுத்தரமான தேங்காய்தான் இருக்கு. அதுல 15 தேங்காய் போட்டால்தான் 1 லிட்டர் எண்ணெய் கிடைக்குது. இப்போ ரெண்டு மாசமா இந்த முறையில எண்ணெய் உற்பத்தி செஞ்சுட்டு வர்றோம். 200 மி.லி எண்ணெய் 70 ரூபாய்னு விக்கிறோம். 15 தேங்காயை வித்தா 300 ரூபாய் கிடைக்குது. இப்படி எண்ணெய் ஆக்குறதுல 350 ரூபாய் கிடைக்குது. இத பரிசோதனை முயற்சியாத்தான் செஞ்சிட்டு இருக்கோம். கட்டுப்படியான இதைத் தொடர்வோம். இல்லைனா பழையபடியே தேங்காயா விற்பனை செய்வோம்” என்கிறார் வெங்கடேசன்.

சாண எரிவாயு தயாரிப்பு

சாண எரிவாயு தயாரிப்பு
சாண எரிவாயு தயாரிப்பு


பண்ணைக்குள் சாணம் மூலம் எரிவாயு தயாரித்துப் பயன்படுத்தி வருகின்றனர். அதுகுறித்துப் பேசிய வெங்கடேசன், “தினமும் 15 கிலோ பசுஞ்சாணத்தைத் தண்ணியில கரைச்சு, அதற்கென இருக்கும் பிரத்யேக பிளாஸ்டிக் தொட்டிக்குள்ள ஊத்தணும். சாணக்கரைசல் பிளாஸ்டிக் தொட்டிக்குள் போய் கேஸாக வெளியேறும். அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழாய் வழியாக கேஸ் வெளியேறி சமையலறைக்குள் இணைக்கப்பட்டிருக்கும் குழாய் வழியாகச் சென்றுவிடும். 15 கிலோ சாணம் மூலம் 1 மணி நேரம் அடுப்பெரிக்கிறதுக்கான கேஸ் கிடைக்குது. கேஸ் வெளியேறிய பிறகு, அடியில் தங்கும் சிலரி வெளியேறுவதற்கென்று ஒரு குழாயை அமைச்சிருக்கோம். அதிலிருந்து வெளியேறி நேரடியாக நிலத்துக்குச் சென்றுவிடும். இந்த அமைப்பை உருவாக்குவதற்கு 4 வருஷத்துக்கு முன்ன 50,000 ரூபாய் செலவானது” என்றார்.