Published:Updated:

தென்னை, அத்தி, டிராகன் ஃப்ரூட்ஸ்; தோட்டக்கலை விவசாயத்தில் கலக்கும் வழக்கறிஞர்!

65 வயதான வழக்கறிஞர் ஒருவர் மரக்காணம் அருகே தோட்டக்கலை சார்ந்த விவசாயத்தை இயற்கை முறையில் செய்து அசத்தி வருகிறார். தென்னை, அத்தி, டிராகன் ஃப்ரூட்ஸ் உள்ளிட்ட பயிர்களை வெற்றிகரமாக சாகுபடி செய்து வருகிறார். அந்த அனுபவங்களை இங்கே விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார்.

முதியோர் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் தற்போது விவசாய ஆர்வம் அதிகரித்துள்ளது. அதிலும் சந்தைகளில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தோட்டக்கலை பயிர்களை விவசாயம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் பலர். அந்த வரிசையில், புதுவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். ஒருநாள் காலைப் பொழுதில் அவரை சந்திக்க அவரது தோட்டத்துக்குச் சென்றோம். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த ஆலப்பாக்கம் ஈ.சி.ஆர் (ECR) சாலையில் ஓரமாக இருந்தது அவரின் விளைநிலம்.

நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், அடர்நடவு முறையில் நடப்பட்டிருந்த மாங்கன்றுகள் தென்பட்டன. அவற்றையும் கடந்து உள்ளே சென்றதும், தென்னை மரத்தோட்டம் அழகாய் காணப்பட்டது. அந்த மரங்களுக்கு இடையே காணப்பட்ட இளஞ்சிவப்பு நிறத்திலான பழம் கண்களைக் கவரும் வகையில் இருந்தது. அது டிராகன் ஃப்ரூட்தான்.

தோட்டம்
தோட்டம்

அங்கு அமைக்கப்பட்டிருந்த பசுமைக்குடில் அருகே நர்சரி செடிகளைப் பார்த்துக்கொண்டிருந்த சரவணமுத்துவை சந்தித்தோம். தென்னை மரத்தடி நிழலில் காற்றாட அமர்ந்து பேசத் தொடங்கினோம்.

``என்னுடைய பெயர் சரவணமுத்து. எனக்கு இப்போ 65 வயதாகிறது. நான் புதுமையைச் சேர்ந்தவன். என்னுடைய குடும்பம் விவசாயக் குடும்பம்தான். எங்களுக்கு இருந்த நிலத்தில அப்பா, அம்மா விவசாயம் பண்ணிக்கிட்டு வந்தாங்க. விவசாயத்தைப் பார்த்து வளர்ந்ததால் எனக்கு சிறு வயதிலிருந்தே விவசாயம் மீது ஆர்வம் அதிகம். நான் வழக்கறிஞராகப் புதுவையில் பணியாற்றி வந்தேன். பணியின் மீது இருந்த ஈடுபாட்டால் அப்போ என்னால விவசாயம் செய்ய முடியல. அப்பா, அம்மா மறைவைத் தொடர்ந்து என்னுடைய இடத்தை வித்துட்டு இங்கு நிலத்தை வாங்கினேன். ஒரு கட்டத்துல எனக்கும் வயது 60 கடந்தது. என்னுடைய வேலை மீது இருந்த 75% கவனத்தை விவசாயம் மீது திருப்பினேன். விவசாயம் பண்ணலாம் என்று என்னுடைய உள்ளுணர்வு மூலமாகத்தான் எனக்குத் தோன்றியது. என் பிள்ளைகளும் அதைத்தான் விரும்பினார்கள். அதன்படி கடந்த மூன்று வருடமாக முழு ஈடுபாட்டுடன் விவசாயம் செய்துவரேன்.

முதன் முறையாக சுமார் 9 ஏக்கரில் தென்னை (பொள்ளாச்சி இளநீர்) நடவு பண்ணினேன். ஒவ்வொரு ஏக்கருக்கும் 70 கன்றுகள் வீதத்தில் நடவு செய்தேன். அதில், ஆரம்பத்தில ஊடுபயிராக கிர்ணி, தர்பூசணி பண்ணினேன். அப்புறமா 1 ஏக்கர் அளவுக்கு 25-க்கு 8 அடி என்ற விதத்தில் ஊடுபயிராக டிராகன் ஃப்ரூட்ஸ் நடவு பண்ணினேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அது அதிகரித்து இப்போ 3 ஏக்கர் வரை டிராகன் ஃப்ரூட்ஸ் நடவு பண்ணியிருக்கிறேன். அதற்காக, ஒரு ஏக்கருக்கு 200 சிமென்ட் போஸ்ட் வரை நடவு செய்தேன். ஒவ்வொரு போஸ்ட்க்கும் நான்கு டிராகன் பழக் கன்றுகள் வீதம் மொத்தம் 800 கன்றுகளை நடவு செய்துள்ளேன்.

இவை மட்டுமல்லாமல், ஒன்றரை ஏக்கரில் அடர் நடவு முறையில் மாமரம் வைத்துள்ளேன். அரை ஏக்கரில் அத்தி பயிரிட்டுள்ளேன். அப்புறம் 4 ஏக்கரில் அவ்வப்போது தர்பூசணி, கிர்ணி போன்ற பயிர்களை விவசாயம் செய்வேன். இதுமட்டுமல்லாமல் டிராகன் ஃப்ரூட்ஸ், அத்தி போன்றவற்றை நர்சரி செடிகளாகவும் பண்ணுகிறேன்.

சரவணமுத்து
சரவணமுத்து

இப்போ தென்னை, அத்தி, டிராகன் ஃபுட்ஸ் கொஞ்சம் கொஞ்சமாகப் பலன் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தொடக்கம்தான் என்பதால், அரை ஏக்கரில் 30 கிலோ வரை அத்திப்பழம் கிடைக்கிறது. ஒரு கிலோ 100 ரூபாய் வரை மார்க்கெட்டில் விலை போகுது. இப்போ செடிகளை வெட்டிவிட்டு இருக்கிறேன். தென்னையைப் பொறுத்தவரை இப்போ 3-வது வருடம். இரண்டரை வருடம் ஆனதிலிருந்தே 150 மரங்கள் காய்க்கத் தொடங்கிவிட்டன. வியாபாரிகளே நேரில் வந்து காய்களை வாங்கிப்பாங்க. ஒரு காய் 16 - 25 ரூபாய் வரை விலை போகும். இந்த இளநீர் நல்ல பெரிய சைசில் இருக்கும். தமிழகத்தில், ஒரு தென்னை மரத்தில் ஒரு கொலைக்கு 6 காய்கள்தான் கணக்கு. ஆனா, நாம அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனிச்சுகிட்டா 20 காய்கள் வரை எடுக்க முடியும். இதுவும் தொடக்கம்தான் என்பதால், சென்ற மாதம் 150 மரங்களில் 1,500 காய்கள் எனக்கு கிடைத்தது. ஒரு காயை 16 ரூபாய் என்று வியாபாரிகள் எடுத்துக்கிட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிராகன் ஃப்ரூட்ஸ் பொறுத்தவரை ஒரு ஏக்கர்லதான் 1.5 வருட கன்றுகள் இருக்கு. டிராகன் ஃப்ரூட்ஸ், 3 வருடம் கழித்துதான் லாபகரமான மகசூலைக் கொடுக்கும். இப்போது தொடக்கம் என்பதால், 20 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை பண்ணுற மாதிரி தொடர்ச்சியாக செடிக்கு 4 பழம் வரும். சரியாகச் சொல்லணும் அப்படினா, இரண்டு மாதத்தில் 3 முறை அறுவடை பண்ணுகிறேன். ஏக்கருக்கு 70 கிலோ வரை பழம் கிடைக்கும். ஒவ்வொரு பழமும் சராசரியாக 400 - 500 கிராம் வரை எடை இருக்கும். என்னிடம் மூன்று விதமான டிராகன் ஃப்ரூட்ஸ் இப்போது உள்ளன. வெளியில் இளஞ்சிவப்பு உள்ளே வெள்ளை; உள்ளும் வெளியும் இளஞ்சிவப்பு; மற்றொன்றில், வெளியில் மஞ்சள் உள்ளே வெண்ணிறம் இருக்கும்.

இளநீர்
இளநீர்

இப்போ சில நாள்களுக்கு முன் அறுவடை பண்ணியபோது, ஒரு ஏக்கருக்கு 70 கிலோ வரை டிராகன் ஃப்ரூட்ஸ் கிடைத்தது. ஒரு கிலோ 120 ரூபாய் வரை விலை போகுது. விற்பனையில் எந்தப் பிரச்னையும் இதில் இல்லை. தொடக்கத்தில் தோட்டக்கலை சார்ந்த பயிர்களைப் பண்ணணும் என்று தோன்றியதால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன். அவர்களும் சில முக்கிய தகவல்களை எடுத்துக் கூறினார்கள். முதன்முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் டிராகன் ஃப்ரூட்ஸ் பயிர் பண்ணதால எனக்கு மானியம் கொடுத்து உதவினார்கள். உங்களுக்கும் இது போன்ற தோட்டக்கலை சார்ந்த விவசாயம் பண்ணணும் என்று ஆர்வம் இருந்தால் தோட்டக்கலைத் துறையை அணுகுவது சிறப்பாக அமையும். அதன் தொடர்ச்சியாக யூடியூப் பார்த்துதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தோட்டத்தை டெவலப் பண்ணினேன்.

தோட்டம் முழுவதுமே சொட்டு நீர் பாசனம் மட்டும்தான். இது மணல் சார்ந்த பூமி என்பதால் இங்கு போர்வெல் மட்டும்தான். என்னிடம் இரண்டு போர்வெல் உள்ளது. அதன் மூலம் கிடைக்கும் நீர் போதுமானதாகவும் இருக்கிறது. கிர், சாகிவால், ரெட் சிந்தி வகைகளில் 24 நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறேன். அவற்றின் சாணத்தை எருவாகச் சேமித்து பயிர்களுக்கு கொடுப்போம். மாடு கட்டும் இடத்தைக் கழுவும் நீர் மற்றும் கோமியத்தைச் சேமித்து ஜீவாமிர்தம் தயாரிப்போம். 15 தினங்களுக்கு ஒருமுறை அதை சொட்டு நீரில் கலந்து பயிர்களுக்கு விட்டுவிடுவோம். இதுமட்டுமன்றி இடுபொருளாக கோழி, மாட்டு எரு ஆகியவற்றை வருடத்துக்கு 4 முறை தருவோம். ஒவ்வொரு தென்னைக்கும் 30 கிலோ வரையிலும், டிராகன் பழக் கன்றுகளுக்கு 15 கிலோ வரையிலும் எரு கொடுப்போம். இவை தவிர, உயிரி உரங்கள் மற்றும் உயிரி பாக்டீரியாவை வாரம் ஒருமுறை வேர் வழியாகவும், தெளிப்பு முறையிலும் கொடுக்கின்றோம். உயிரி உரங்களை நாங்களே உற்பத்தி செய்கிறோம். எருவை பயன்படுத்துவது மண்ணை வளமாக வைத்திருக்க உதவும்.

நர்சரிக் கன்றுகள்
நர்சரிக் கன்றுகள்
ஒரு முறை நடவு... 30 ஆண்டுகள் அறுவடை! - ஒரு ஏக்கரில் 90 டன் மகசூல்...  ரூ.5,60,000 வருமானம்...

தென்னை மரத்தின் மட்டை போன்றவற்றை மரத்துக்கும், டிராகன் பழக் கன்றுகளுக்கும் வேர் மூடியாகப் பயன்படுத்துகிறேன். அப்படிப் பயன்படுத்துவதால் களை வளராது. ஈரப்பதம் நிலைத்திருக்கும். காலப்போக்கில் அவையும் மக்கி எருவாக மாறும். சுருக்கமாகச் சொன்னால் தாவரங்களுக்கு அது ஒரு வீடாக அமையும். ஒரு ஏக்கரில் தென்னை மற்றும் டிராகன் பழ கன்றுகளை இணைத்து நடவு செய்வதற்கு எனக்கு 3.75 லட்சம் வரை செலவாகிறது. ஒருமுறை செலவு செய்தால் போதும், தொடர்ந்து பலன் தரக்கூடியவை. இவை இரண்டும் எனக்கு இப்போதுதான் பலன் தரத் துவங்கியுள்ளன. வரும் காலங்களில் நல்ல மகசூலைக் கொடுக்கும் என நம்புகிறேன். நம் உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இயற்கை முறையிலான உணவு முக்கியமானது. அதுவும் நான் விவசாயத்தில் ஈடுபட முக்கிய காரணம். எனக்கு பின்னர் என் பிள்ளைகள் இந்தத் தோட்டத்தை நல்லா பார்த்துக்கணும்" என்றார் புன்னகை பொங்க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு