Published:Updated:

கொள்முதல் நிறுத்தப்பட்டதால் முளைக்கத் துவங்கிய நெல்மணிகள்; உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்!

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட துரித நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதனுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்போது வரை 99 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், இங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வார காலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை நிறுத்திவிட்டு, ஏற்கெனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகளைக் குடோன்களுக்கு ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்த நெல் மூட்டைகளிலிருந்து நெல்மணிகள் முளைக்கத் துவங்கிவிட்டது.

முளைத்த நெல்மணிகள்
முளைத்த நெல்மணிகள்
குறுவை நெல் சாகுபடி சிறப்பு திட்டம்: `இந்தக் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றவேண்டும்!' - விவசாயிகள்

விவசாயிகள் இதற்காக போராட்டக்களத்தில் இறங்க முடிவு செய்தனர். இந்த நிலையில்தான், இதுபற்றி தகவலறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உடனடியாக, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தார். அதில், மாவட்டத்தின் பல இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி விளைபொருட்களுக்கு உரிய நேரத்தில் உரிய விலை கிடைக்கவும், விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்கவும், அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, உணவுத் துறை அமைச்சரும் உடனடியாக நெல்கொள்முதல் நிலையங்களைத் திறக்க உத்தரவிட்டார். அதன்பேரில், ஒருவாரத்திற்குப் பிறகு ஜூலை 22-ம் தேதி முதல் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட துரித நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதனுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, ``மாவட்டத்தில் குறுவை சாகுபடியாக 6,198.92 ஹெக்டேர் பரப்பளவில் 37,194 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்திட வேளாண்மைத்துறையால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக புதுக்கோட்டை மண்டலம் மூலமாக 01.06.21 முதல் தற்போது வரையிலும் 34,698 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரின் கடிதம்
அமைச்சரின் கடிதம்
`நெல் போல வாழை, தேங்காயையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!' - விவசாயிகள் கோரிக்கை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மழை உள்ளிட்ட சேதங்களில் பாதிக்காத வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து சேமிப்பு கிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 31,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய தொடர்புடைய அலுவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு