Published:Updated:

`இயற்கையுடன் கலந்த விதை காவலர்...!’- விவசாய வரலாற்றில் தவிர்க்கமுடியாத வெங்கடாச்சலம்

பொறியாளர், இயற்கை விவசாயியென அறியப்பட்டாலும், சிந்துவெளி அளவை முறைகள், தமிழ் கணிதம், பழந்தமிழர் இலக்கியம் எனப் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டவர். 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

வெங்கடாச்சலம்
வெங்கடாச்சலம்

பாரம்பர்ய விதைகளைச் சேமித்து, விவசாயிகளிடம் பரப்பும் அரிய செயலைச் செய்தவர் சமீபத்தில் மறைந்த நெல் ஜெயராமன். அவருக்கும் முன்பிருந்தே பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேமித்து, அதன் முக்கியத்துவத்தைப் பரப்பி வந்தவர் வெங்கடாச்சலம். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த வளையாம்பட்டைச் சேர்ந்த வெங்கடாச்சலம், அடிப்படையில் பொறியாளர். பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1960-ம் ஆண்டு பாரம்பர்ய விதை வங்கியைத் தொடங்கியவர். நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாயம், பாரம்பர்ய விதைகள் சேகரிப்பு எனக் களமாடியவர். களர் பாலை, மடுவு முழுங்கி, கருடன் சம்பா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை இவர் மீட்டெடுத்தார். ஒரு கட்டத்தில் இவர் செயல்படுத்திய விதை வங்கியைப் பராமரிக்கும் பொறுப்பை எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.

நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாயம், பாரம்பர்ய விதைகள் சேகரிப்பு எனக் களமாடியவர்.

பொறியாளர், இயற்கை விவசாயியென அறியப்பட்டாலும், சிந்துவெளி அளவை முறைகள், தமிழ் கணிதம், பழந்தமிழர் இலக்கியம் எனப் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டவர். 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். நிலக்கடலையில் ஒரே கொடியில் 200 கடலைகள் விளைய வைத்துச் சாதனை படைத்தவர். குஜராத், கர்நாடக விவசாயிகளுக்கு மானாவாரி சாகுபடி தொடர்பான பயிற்சி அளித்தார். இருசால் உழவு முறையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் 34 வகையான சிறுதானியங்களை விளைய வைத்தார். ஒரு ஹெக்டருக்கு 52,000 ரூபாய் வருமானத்தை ஈட்டித் தந்தது இவரது சாதனை.

ஒரு கட்டத்தில் விவசாயப் பணிக்கு ஆள்கள் கிடைக்காத சூழலில், அதற்கேற்ப தனது பண்ணையை வடிவமைத்தார் வெங்கடாச்சலம். வார வருமானம், மாத வருமானம், ஆண்டு வருமானம், அரிய வகை வருமானம் என வருமானத்தை வகைப்படுத்தி, அதற்கேற்ப பயிர்களை நடவு செய்தார். இந்தப் பண்ணை, விவசாயிகளுக்கு ஒரு மாதிரி பண்ணையாக இருந்தது. பல்வேறு பயிற்சிகளை இங்கு நடத்தினார் வெங்கடாச்சலம்.

மானங்குலம்
மானங்குலம்

இவரின் மூத்த மகன் பெருவழுதி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கிறார். இளைய மகன் அறிவுடைநம்பி பல்லுயிர் பெருக்க விஞ்ஞானி. இயற்கை விவசாயத்துக்காக வெங்கடாச்சலம் செய்த சேவைகள் பாராட்டத்தக்கது. தமிழக இயற்கை விவசாய வரலாற்றில் முக்கிய நபரான வெங்கடாச்சலம், தனது 94-ம் வயதில் கடந்த 10-ம் தேதி அதிகாலை இயற்கையுடன் கலந்துவிட்டார். இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் இயற்கை வேளாண் அறிஞர்கள் பலருக்கும் முன்னோடியான வெங்கடாச்சலம் நினைவுகள் பாரம்பர்ய விதைகளில் கலந்தே இருக்கின்றன.