Published:Updated:

`எழுத்தில் மட்டுமல்ல; களத்திலும் போராடியது பசுமை விகடன்!' - நினைவுகள் பகிரும் `பசுமை' பத்திரிகையாளர்

பசுமை விகடன்
பசுமை விகடன்

இயற்கை வேளாண்மை முறைகளை கடைக்கோடி விவசாயிகளுக்கும் கொண்டு சேர்த்தது மட்டுமல்ல, களத்தில் நின்று கடுமையாகப் போராடி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டதும் பசுமை விகடனின் பெருமை.

தமிழகத்தின் இயற்கை விவசாய மறுமலர்ச்சியில் பசுமை விகடனின் பங்கு மகத்தானது. அந்தப் பயணத்தில் பசுமை விகடனோடு பயணித்த பலரும் பசுமை விகடன் குறித்து தங்கள் நினைவுகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றனர். அப்படி தன் நினைவுகளைப் பதிவு செய்கிறார் பத்திரிகையாளர் ஜி.பழனிச்சாமி. #15YearsOfPasumaiVikatan

``எந்த ஊர் சென்றாலும் அங்கு பழைய புத்தகக்கடை தென்பட்டால் அதற்குள் நுழைந்து அடுக்கி வைத்திருக்கும் பழைய புத்தகங்களை ஒரு பார்வை பார்க்கும் பழக்கம் என்னிடம் உண்டு. நாம் தேடிக்கொண்டிருக்கும் புத்தகங்கள் அங்கு இருப்பின் சிக்கனம் பார்க்காமல் வாங்கிவிடுவது என் வழக்கம். அதேபோல்
அங்கு வரிசை கட்டி இருக்கும் பழைய வார மாத பருவ இதழ்களில் சிலவற்றைப் புரட்டிப்பார்த்து கையிருப்பைப் பொறுத்து கொள்முதல் செய்வதுண்டு. அந்த வகையில் ஒருநாள் உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பழைய புத்தகக்கடை ஒன்றில் நுழைந்தேன். கட்டுக்கட்டாக சுவர்போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய புத்தகக்கட்டு ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து அந்தக்கடை உரிமையாளர் பசுமை விகடன் இதழ் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார். `பழைய பசுமை விகடன் இதழ்கள் இருந்தால்
கொடுங்கள்' என்பதாக வாசகர் பலரும் நம்மிடம் கேட்டுக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்து பழைய பசுமை விகடன் இதழ்கள் இருந்தால் கொடுங்கள் என்றேன் அவரிடம்...

பசுமை விகடன்
பசுமை விகடன்

வாசித்துக்கொண்டிருந்த பசுமை விகடனில் இருந்து பார்வையை எடுத்தவர், ``பெரும்பாலான நாளிதழ்கள், வார இதழ்கள், மாதமிருமுறை, மாத இதழ்கள் உட்பட பல இதழ்கள் வியாபாரிகள் சிலர் மூலம் சேகரிக்கப்பட்டு விற்பனைக்காக இங்கு வரும். நான் அவற்றில் சிலவற்றை எடுத்து வாசிப்பது வழக்கம். ஆனால், இதுவரை பசுமை விகடன் இதழ் ஒன்றுகூட பழைய புத்தக விற்பனைக்கு என்னிடம் வரவில்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொன்னவரிடம், ``உங்க கையில் இருப்பது பசுமை விகடன்தானே?‘‘ அது எப்படிக் கிடைத்து என்பதாக என் கேள்வியைப் போட்டேன். முகத்தில் அடித்தாற்போல் அந்த பழைய புத்தக வியாபாரி சொன்ன பதில் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

``நான் காசு கொடுத்து வாங்கும் ஒரே புத்தகம் பசுமை விகடன் மட்டும்தான். எனக்கு விவசாயம் செய்ய ஆசை. ஆனால், நிலம் இல்லை. பசுமை விகடனில் வெளியாகும் கட்டுரைகளை வாசிக்கும்போது விவசாயம் செய்யும் மனநிறைவு ஏற்படுகிறது. முதல் இதழில் இருந்து வாங்கிப் படித்து சேகரித்து வருகிறேன்" என்ற அவரின் பதில் எனக்கு நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. உடுமலைப்பேட்டை பழைய புத்தக வியாபாரி ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், பசுமை விகடனின் பயன்மிகு கட்டுரைகளுக்கு சாட்சியாக இருக்கிறார் அவர்.

அவரைப்போல் ஆயிரம் ஆயிரம் பேர் நாட்டில் உண்டு. விவசாயிகள் மட்டுமல்ல; மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள்,
தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவகத் தொழிலாளர்கள் என்று நகரம் சார்ந்து வாழும் ஆயிரக் கணக்கானோர் பசுமை விகடனின் வாசகர்களாக இருக்கிறார்கள் என்பது பெருமிதம் கொள்ளத்தக்க செய்தி.
இயற்கை வேளாண்மை முறைகளை கடைக்கோடி விவசாயிகளுக்கும் கொண்டு சேர்த்தது மட்டுமல்ல, களத்தில் நின்று கடுமையாகப் போராடி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டதும் பசுமை விகடனின் பெருமை.

பசுமை விகடன்
பசுமை விகடன்

``நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாரச்சந்தையின் ஒரு பகுதியில் ஒரு கும்பல் ஆட்டுத்தோல் சுத்திகரிப்பு செய்து அதில் வெளியேறும் ரசாயனக் கழிவுகளை அருகில் உள்ள ஓடையில் கலந்துவிடுகிறார்கள். அந்த ஓடை வழியாகச் செல்லும் கழிவு நீரால் சாணார்பட்டி, கொல்லபட்டி, கூட்டப்பள்ளி உள்ளிட்ட
கிராமங்களில் உள்ள பாசனக் கிணறுகள் மாசுபட்டு தண்ணீர் கெட்டு அதனால் 5,000 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாயம் பாழ்பட்டு வருகிறது" என்பதாக பாலு நடேசன் என்கிற விவசாயி பசுமை விகடனுக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் தோல் சுத்திகரிப்பு நிலைய பிரச்னையை அதிரடியாகக் கையில் எடுத்தது பசுமை விகடன்.

சம்பந்தப்பட்டவர்களிடம் போய் முதலில் பேசியபோது, ``நாங்க 30 வருஷமா இந்தச் சந்தையில் தோல் சுத்திகரிப்பு செய்து வர்றோம். எங்களை யாரும் தடுக்க முடியாது. பேட்டி அது இதுனு போட்டோ கீட்டோ எடுத்தீங்கனா விபரீதம் ஆகிவிடும் என்று வியாபாரிகள் மிரட்ட, அதெற்கெல்லாம் பயப்படுமா பசுமை விகடன். அடுத்தகட்டமாக, பாதிக்கப்படும் விவசாயிகளை ஒன்று திரட்டி அன்றைய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் முன்னால் கொண்டுபோய் நிறுத்தியது.

பிரச்னையை முழுமையாகக் கேட்டுக்கொண்ட சகாயம், சில மணி நேரத்தில் நம்மை அழைத்துக்கொண்டு திருச்செங்கோடு சந்தைக்குள் நுழைந்தார். விவசாயிகள் புகாரில் நியாயம் இருப்பதை நேரில் கண்டு உணர்ந்தார். இதற்கிடையில்
வியாபாரிகள் தரப்பு அதிகாரம் மிக்க அரசியல்வாதிகள் சிலரை அழைத்து வந்து 30 வருட உரிமை குறித்துப் பேசி மிரட்டல் உருட்டல் விட 15 நாள் போராட்டத்துக்குப் பிறகு, 30 ஆண்டுக்காலம் மாசு ஏற்படுத்தி வந்த தோல் சுத்திகரிப்பு நிறுத்தப்பட்டது.
இந்தப் போராட்ட வெற்றி குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுதிய `சகாயம் செய்த சகாயம்' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், தோல் சுத்திகரிப்பு நிறுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, `அவர் எழுதி அனுப்பிய நீண்ட வாசகர் கடிதம் ஒன்றும்' அடுத்த இதழ் பசுமை விகடனில் வெளியானது.

சங்கரன்கோயில் அடுத்துள்ள பெருங்கோட்டூர் கிராம விவசாயி சுப்பிரமணியன் என்பவர் உதவி கேட்டு கடிதம் அனுபிருந்தார். தன் மைத்துனர் வாங்கிய கடன் தொகைக்கு, அவரின் சகோதரியான என் மனைவியின் அடமானம் வைத்த தங்க நகைகளை உரிய தொகை செலுத்தியும் தர மறுக்கும் வங்கி மேலாளரிடம் பேசி நகைகளை மீட்டுக் கொடுக்க கேட்டிருந்தார்.

பசுமை விகடன்
பசுமை விகடன்

350 கிலோமீட்டர் பயணித்து சங்கரன் கோயில் சென்றது பசுமை விகடன். உரிய முறையில் பேசி, 3 நிமிடங்களில் பிரச்னைக்கு தீர்வு கண்டது. அடமானம் வைக்கப்பட்ட நகைகள் சுப்பிரமணியன் வசம் கொடுக்கப்பட்டன. அதேபோல் விவசாய சங்கத்தலைவர் மறைந்த என்.எஸ்.பழனிசாமி அலைபேசியில் அழைத்து ஒரு புகாரை கூறினார். அந்த அடிப்படையில் சௌந்தரராஜன் என்கிற விவசாயி வங்கியில் அடமானம் வைத்த தங்க நகைகளைத் திருப்பித் தர மறுக்கும் பொங்கலூர் பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் பேசி நகைகளை மீட்டுக்கொடுத்தது.

ஈமுக்கோழி மோசடி குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றை கோபிசெட்டிப்பாளையத்தில் நடத்தியது. சந்தன மர நாற்று மோசடி, காட்டாமணக்கு ஒப்பந்தப்பண்ணை முறைகேடு, துணிச்சலுடன் புகைப்படக்காரர் விஜய் துணையுடன் கோவை ஈஷா மையத்துக்குள் சென்று வனப்பகுதியில் நாள் முழுக்க சுற்றித்திரிந்து யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களைக் கண்டறிந்து வெளியிட்டது.

உடுமலை லிங்கம நாயக்கன் புதூர், பல்லடம் குள்ளம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலர் தரமற்ற விதைகளால் மகசூல் பதிப்புக்கு உள்ளானார்கள். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் என்.எஸ்.பழனிசாமி, உடுமலை வேலாயுதம் ஆகியோர் தலைமையில் விவசாயிகளை ஒன்று திரட்டி போராடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வாங்கிக் கொடுத்த பெருமையும் பசுமை விகடனுக்கு உண்டு. கர்நாடக மாநிலம் உடையார்பாளையம் திபெத் அகதிகள் முகாம்களுக்குச் சென்று அவர்களின் வெற்றிகர விவசாய முறைகளையும் அவர்களின் செழிப்பான வாழ்க்கை வசதிகளையும் படம் பிடித்துக் காட்டியது பசுமை விகடன்தான். அதேபோல் கேரளா மாநில விவசாயிகள் பலரையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது பசுமை விகடன்.

ஜி.பழனிச்சாமி
ஜி.பழனிச்சாமி
`ஜீரோ பட்ஜெட் விவசாயம் மத்திய பட்ஜெட் வரை செல்ல காரணமே பசுமை விகடன்தான்!' - #15YearsOfPasumaiVikatan

மோகனூர் முத்துசாமி, ஆனைமலை சுரேந்திரன், க்ரூர் மனோகரன் போன்று நூற்றுக்கணக்கான விவசாயிகள் பசுமை விகடன் இதழ்களைப் படித்து, பொக்கிஷம்போல் பாதுகாத்தும் வருகிறார்கள். 15 ஆண்டுகள் மட்டுமல்ல. 150 ஆண்டுகள் வரும் தலைமுறைக்கும் இயற்கை வேளாண்மை குறித்து பசுமை விகடன் தனது குரலை ஓங்கி ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.

பசுமை விகடன் எனது வாழ்வின் 14 ஆண்டுகளை மிக மிக அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது. ஆயிரக்கணக்கான விவசாய இதயங்களை நட்பாகக் கொடுத்துள்ளது. நான் பல்வேறு விவசாயிகளை பேட்டிகண்டு எழுதிய, பஞ்சகவ்யா, வெற்றிபெற்ற பெண் விவசாயிகள் ஆகிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டு விகடன் என்னைப் பெருமை படுத்தியுள்ளது. பசுமை விகடனுக்கு நன்றிகள்!"

அடுத்த கட்டுரைக்கு