Published:Updated:

விவசாயிகளும் விஞ்ஞானியாகலாம்.... வழிகாட்டும் அமைப்பு!

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘விவசாயத்துக்குப் பயன்படும் வகையில் சிறிய அளவில் களையெடுக்கும் கருவியை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். இதற்கு உதவி செய்யும் அமைப்பு இருந்தால் சொல்லுங்கள்?’’

க.பிரபாகரன், செஞ்சிக்கோட்டை.

வேளாண் கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்தி வரும் மதுரை சேவா அமைப்பின் செயலாளர் பெ.விவேகானந்தன் பதில் சொல்கிறார்.

‘‘புதிய கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிக் கூடத்தில்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கழனியில் உள்ள விவசாயி களும் கண்டுபிடிக்கலாம். இதற்குக் கல்வித் தகுதியோ, இருக்கும் இடமோ தடை கிடையாது. இந்திய அளவில் உங்களைப்போல கண்டு பிடிப்பு களில் ஈடுப்பட்டுள்ளவர்களை ஊக்கப்படுத்த தேசிய கண்டுபிடிப்பாளர் நிறுவனம் (National Innovation Foundation) குஜராத்தில் செயல்பட்டு வருகிறது.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் துணையுடன் 2000-ம் ஆண்டு இந்த அமைப்புத் தொடங்கப்பட்டது. இதுவரை, ஏராளமான ஊரகக் கண்டுபிடிப்பாளர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தகுதி யான கண்டுபிடிப்புகளைத் தேர்வு செய்ய, ஆண்டுதோறும் போட்டி நடத்தி வருகிறது. இந்தப் போட்டியில் தேர்வு பெறும் கண்டுபிடிப்புகளை முறை யாகப் பதிவும் செய்யப் படுகிறது. இதனால், யாரும் அந்தத் தொழில்நுட்பத்தைத் திருட முடியாது.

கருவி
கருவி

தமிழ்நாட்டில் உள்ள கண்டுபிடிப்பாளர்களுக்கு வழிகாட்ட 2016-ம் ஆண்டு முதல் அடித்தளக் கண்டுபிடிப்பாளர்கள் சங்கத்தை நடத்தி வருகிறோம். கண்டுபிடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளலாம். அவ்வப்போது, கருத்தரங்குகள் நடத்திவருகிறோம். இதில் ஆரம்ப நிலையில் உள்ள கண்டுபிடிப்புகளை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல வல்லுநர்கள் ஆலோசனை வழங்குவார்கள். கண்டுபிடிப்பானது பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டால், தேசிய கண்டுபிடிப்பாளர் நிறுவனத்தில் பதிவு செய்ய வழிகாட்டி வருகிறோம். நபார்டு வங்கி உள்ளிட்ட சில அரசு அமைப்புகள் இது போன்ற கண்டு பிடிப்புகளுக்கு நிதியுதவி செய்கின்றன. அதைப் பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்கிறோம்.

உங்களைப் போலத்தான் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கட் என்பவர் தென்னை மரம் ஏறும் கருவியை முதல் கட்டமாக உருவாக்கியிருந்தார். அந்தக் கண்டுபிடிப்பை செழுமைப்படுத்தி, முறையாகப் பதிவு செய்து, விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளோம். இதுபோல பல உதாரணங்கள் உள்ளன. உங்களின் கண்டுபிடிப்பு குறித்த விவரங்களுடன் எங்கள் சங்கத்தைத் தொடர்புகொள்ளுங்கள். முன்னோடி கண்டுபிடிப்பாளர்களும் வல்லுநர்களும் நிச்சயம் வழிகாட்டுவார்கள்.’’

 பெ.விவேகானந்தன்
பெ.விவேகானந்தன்

தொடர்புக்கு,

அடித்தளக் கண்டுபிடிப்பாளர்கள் சங்கம்,

சேவா, 45, டி.பி.எம் நகர், விராட்டிபத்து, மதுரை - 625016.

தொலைபேசி: 0452 2380082, செல்போன்: 7708852334.


‘‘தென்னையில் மரநாய் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது எப்படி?’’

சி.மணிவண்ணன், ஒரத்தநாடு.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயி நாகராஜ் பதில் சொல்கிறார்.

‘‘எங்கள் தென்னந்தோப்பிலும் மரநாய் தொந்தரவு இருந்தது. இதற்கு, பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள முன்னாள் வேளாண் வளர்ச்சி அலுவலர் வீரப்பன் கொடுத்த தீர்வை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இளநீரில் வழுக்கை உருவாகும் சமயத்தில் தனது கூரிய பற்களால் வட்டமாகத் துவாரமிட்டுக் கடைசி சொட்டு இளநீர் வரை பாளையிலேயே குடித்துவிடும். நாயைப் போல் இவற்றுக்கும் மோப்ப சக்தி இருப்பதால் சரியான பக்குவத்தில் உள்ள இளநீர்க் குலைகளையும், ருசியான சுவையுடன்கூடிய இளநீரையும் எளிதாகக் கண்டுகொள்ளும். கோகோ ஊடுபயிராகச் சாகுபடி செய்யப் படும் இடங்களில் தென்னையில் தாக்குதல் குறைந்து, கோகோ பழங்களில் மரநாய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

தென்னை மரங்கள்
தென்னை மரங்கள்

இவை பொதுவாக மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவை. மனிதர்களைக் கண்டால் அறவே அவற்றுக்குப் பிடிக்காது. மோப்ப நாய்களால்கூட இவற்றின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலாது. பகலில் இவை மரத்தின் உச்சிப் பகுதிக்குள் படுத்து உறங்கிவிடும்; இரவில் நடமாடும்போது தவறுதலாகக் கூட சத்தத்தை எழுப்பாது.

மரநாய்கள் தென்னையின் இளநீர்க்குலைகளைக் கடித்துச் சேதப்படுத்தும். அதற்காகத் தென்னையில் ஏற்படும் எல்லாத் தாக்குதல்களும் மரநாய்களால் ஏற்பட்டவை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. சில இடங்களில் பழந்தின்னி வௌவால்கள், மர எலிகள், அணில்கள்கூட இவ்வகைத் தாக்குதலைச் செய்திருக்கும். காடுகளில் வளரும் மரங்களில் ஆண்டு தோறும் கிடைக்கும் பழ வகைகள் எவையெவை யென மரநாய்களுக்கு மிகவும் அத்துப்படியாகத் தெரியும். எந்த வகை மரம், எங்கு, எந்த மாதங்களில் பழம் கொடுக்கும் என்பதும் மனப்பாடமாகத் தெரியும். ஆரம்பக் காலங்களில் காட்டுப்பகுதிகளில்தான் மரநாய்கள் வாழ்ந்தன. காலப்போக்கில், காடுகளின் பரப்பளவு குறைந்தபடியால், தென்னந்தோப்புகளில் வாழத் தொடங்கிவிட்டன.

மரநாய்
மரநாய்

மரநாய்களின் தாக்குதலைச் சமாளிக்க நஞ்சுணவு வைக்கின்றனர் சில விவசாயிகள். அதை, அவை உண்பதில்லை. மாறாக, அணில், எலி, மயில், பருந்து போன்ற உயிரினங்கள் தவறுதலாக உண்டு இறந்து விடுகின்றன. சில நேரங்களில் மரத்திலிருந்து விழும் நஞ்சுணவைச் சாப்பிட்டு நாட்டுக்கோழிகள், கால்நடைகள் கூட இறந்துவிடுகின்றன. சிவப்புக் கூன்வண்டு. காண்டா மிருக வண்டும் மரங்களுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும். நோய்களைப் பொறுத்தவரையில், ‘சாறு வடிதல் நோய்’, ‘தஞ்சை வாடல் நோய்’ ஆகியன மரத்தையே காலி செய்து விடுகின்றன. இவற்றையெல்லாம் மனதில் கொண்டால் மரநாய்களால் உண்டாகும் சேதாரம் பெரிய நஷ்டத்தைக் கொடுக்காது.

மரநாய், ‘அரியவகை விலங்கு’ என்று பட்டியலிடப்பட்டு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆகையால், இந்த மரநாய் களைக் கொல்வது தண்டனைகுரிய குற்றம். எனவே, தென்னந்தோப்புகளில் வரப்புப் பயிராகப் பல வகையான பழ மரங்களையும் வளர்த்தால், மரநாய்கள் அவற்றை உண்டு வாழும். இப்படிச் செய்வது மட்டுமே, தென்னைந்தோப்புகளில் மரநாய் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும்.’’

புறாபாண்டி
புறாபாண்டி


‘‘பாலூர் ரகக் கத்திரி விதைகள் எங்கு கிடைக்கும்?’’

ஆர்.சிவகாமி, குளித்தலை.

‘‘கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள பாலூரில் காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கத்திரியில் பி.எல்.ஆர்-1 மற்றும் பி.எல்.ஆர்-2 என இரண்டு ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு இதன் விதைகள் கிடைக்கும். இந்த ரகங்கள் அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றவை. கத்திரி விளையும் பகுதிகளில் சாகுபடி செய்யலாம். இவற்றின் வயது 150 முதல் 180 நாள்கள். இவை, நல்ல சுவை மற்றும் பூச்சி, நோய் எதிர்ப்புத் திறன் கொண்டவை. ஒரு ஹெக்டேருக்கு 25 டன் முதல் 40 டன் வரை மகசூல் கொடுக்கக்கூடியவை என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.’’

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

காய்கறி ஆராய்ச்சி நிலையம்,

பாலூர், கடலூர் மாவட்டம்.

தொலைபேசி: 0414 - 2212538.