Published:Updated:

வெற்றிலைச் சிறப்பு மையம்! - அரசின் அறிவிப்பும்... விவசாயிகளின் எதிர்பார்ப்பும்!

அறிவிப்பு

பிரீமியம் ஸ்டோரி
‘வெற்றிலை விவசாயிகளின் நலன் கருதி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் வெற்றிலைச் சிறப்பு மையம் அமைக்கப்படும்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

இது வெற்றிலை விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தங்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியிலி ருக்கிறார்கள் விவசாயிகள். மற்ற பயிர்களைவிட, வெற்றிலைக்கு முதலீடும் உழைப்பும் பல மடங்கு அதிகம். இயற்கை இடர்ப்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம். இந்த நிலையில், ‘தற்போது தமிழக அரசு அமைக்கவிருக்கும் வெற்றிலைச் சிறப்பு மையம், பெயரளவுக்கு மட்டும் செயல்படாமல், எங்களது அத்தியாவசியத் தேவைகளையும் நியாயமான எதிர் பார்ப்புகளையும் பூர்த்திச் செய்யக்கூடியதாக அமைய வேண்டும்’ என வேண்டுகோள் விடுக்கிறார்கள் விவசாயிகள்.

வெற்றிலை
வெற்றிலை

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தஞ்சாவூர் மாவட்டம், திருப்பந்துருத்தியைச் சேர்ந்த முன்னோடி வெற்றிலை விவசாயி சுகுமாறன், “வெற்றிலைச் சிறப்பு மையம் அமைக்க கும்பகோணத்தைத் தேர்வு செஞ்சிருக்கறது நல்ல முடிவு. இதற்குத் தமிழக அரசுக்கு நன்றி. தமிழ்நாட்ல பல மாவட்டங்கள்ல வெற்றிலைச் சாகுபடி நடந்தாலும் திருவையாறு, கும்பகோணம் சுற்றுவட்டார கிராமங்கள்லதான் அதிக அளவுக்கு வெற்றிலைச் சாகுபடி நடக்குது. காவிரிக் கரையில இருக்குற திருக்காட்டுப்பள்ளி, மணத்திடல், அந்தலி, கண்டியூர், நடுக்காவேரி, பாபநாசம், பண்டாரவாடை உட்பட இன்னும் பல கிராமங்கள்ல வெற்றிலைச் சாகுபடி நடந்துக்கிட்டு இருக்கு. இங்க விளையுற வெற்றிலை இந்திய அளவுல பேர் வாங்கினது.

வெற்றிலை
வெற்றிலை

ஒரு காலத்துல இங்கிருந்துதான் வட மாநிலங்களுக்கு அதிகமா வெற்றிலை போயிருக்கு. தமிழ்நாட்டு மக்களின் தினசரி வாழ்க்கையில வெற்றிலை தவிர்க்க முடியாத ஒண்ணா இருந்துச்சு. அதனால வெற்றிலை விவசாயிகளுக்கும் உழைப்புக்கேத்த லாபம் கிடைச்சுது. ஆனா, காலப்போக்குல வெற்றிலை பயன்படுத்துற பழக்கம் குறைஞ்சிடுச்சு. இடுபொருள்கள் செலவும் அதிகமாகிடுச்சு. இதனால வெற்றிலை விவசாயத்துக்கு ரொம்ப நெருக்கடி ஆகிப்போச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெற்றிலை
வெற்றிலை

விதைச்சதுல இருந்து, ஒரு வருஷம் கழிச்சிதான் வருமானம் கிடைக்கும். அந்த ஒரு வருஷம் வரைக்கும் கால் ஏக்கருக்கே ரெண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல செலவு செஞ்சாகணும். லேசான புயல் அடிச்சாலே கொடி கீழே சாய்ஞ்சிடும். கருந்தாள் நோய், சுருட்டுபூச்சித் தாக்குதல்னு நோய்கள் வரும்போது முதலுக்கே மோசமாகிடுது. இது மாதிரி இன்னும் பல நெருக்கடிகள். இதுல வெற்றிலை விவசாயிகளுக்குப் பயிர்க்கடன், இன்ஷூரன்ஸ், விதை மானியம்னு எந்தச் சலுகையும் கிடையாது. பூச்சி, நோய்த் தாக்குதல்களுக்குத் தீர்வு சொல்லக்கூடிய ஆராய்ச்சி நிலையங்களும் இல்லை. இந்த வெற்றிலைச் சிறப்பு மையம் அமைக்கப்பட்ட பிறகாவது எங்க பிரச்னைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்னு நம்புறோம். `இதை அமைக்கத் தமிழக அரசு 50 லட்சம் ரூபாய்தான் ஒதுக்கீடு செஞ்சிருக்கு’னு சொல்றாங்க. இது குறைவான தொகை. குறைந்தபட்சம் மூணு கோடி ரூபாயாவது நிதி ஒதுக்கணும். இந்தச் சிறப்பு மையம், ஆராய்ச்சி நிலையமாகச் செயல்படணும். தரமான விதைகளை உற்பத்தி செஞ்சு, மானிய விலையில விவசாயிகளுக்குக் கொடுக்கணும்.

பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடிய புதிய வெற்றிலை ரகங்களை அறிமுகப்படுத்தணும். வெற்றிலைங்கிறது மருத்துவகுணம் நிறைஞ்ச மூலிகைப் பயிர். வல்லாரை, தூதுவேளை மூலிகைகள்ல மிட்டாய், லேகியம் தயார் செய்யற மாதிரி வெற்றிலையிலயும் மதிப்புக்கூட்டும் பொருள்கள் தயார் செய்யக்கூடிய தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுக்கணும். வெற்றிலையை அறுவடை செஞ்சவுடனேயே விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்குறதுனாலதான், விலை குறைவான நேரத்துலயும் விற்பனை செய்ய வேண்டியதாயிருக்கு. இடைத்தரகர்கள், வியாபாரிகளின் தலையீட்டிலிருந்து வெற்றிலை விவசாயிகளைக் காப்பாற்ற, தமிழக அரசே வெற்றிலையைக் கொள்முதல் பண்ணி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யணும்.

வெற்றிலைச் சிறப்பு மையம்! - அரசின் அறிவிப்பும்...  விவசாயிகளின் எதிர்பார்ப்பும்!

பயிர்க்கடன், இன்ஷூரன்ஸ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தணும்.

வெற்றிலைங்கிறது தமிழ்நாட்டோட பாரம்பர்யப் பயிர். வெற்றிலைச் சாகுபடியில பல தலைமுறைகளாக ஈடுபட்டுக்கிட்டு இருக்கக்கூடிய விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாக்க வெற்றிலைச் சிறப்பு மையம் உறுதுணையா இருக்கணும்.

இதெல்லாம் நடந்தால்தான், காவிரிக் கரையோர வெற்றிலை விவசாயம் நிலைச்சு நிற்கும்” என்றார் எதிர்ப்பார்ப்புடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு