Published:Updated:

மணல் குவாரி... கெயில் குழாய்... பரிதவிக்கும் வேளாண் மண்டலம்!

மணல் குவாரி
பிரீமியம் ஸ்டோரி
News
மணல் குவாரி

பிரச்னை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதும் நிம்மதிப் பெருமூச்சடைந்தார்கள் காவிரி டெல்டா விவசாயிகள். விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய திட்டங்கள் இனி ஓரளவுக்காவது தடுக்கப்படும் என நம்பினார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பு, ஏமாற்றமாகி வருகிறது.
மணல் குவாரி... கெயில் குழாய்... பரிதவிக்கும் வேளாண் மண்டலம்!

கல்லணைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத மணல் குவாரிகள், ஊரடங்கு காலத்திலும் நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரியிலிருந்து பழைய பாளையம் வரை விளைநிலங்களின் வழியாக நடைபெறும் எரிவாயுக் குழாய் அமைக்கும் பணிகள் டெல்டா விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மணல் குவாரி... கெயில் குழாய்... பரிதவிக்கும் வேளாண் மண்டலம்!

2,000 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது, கல்லணை. நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையிலும் பொறியியல் நுட்பங்களிலும் சிறந்து விளங்கியதற்கு இதுவே சான்று. பாரம்பர்ய பொக்கிஷம் மட்டுமல்ல... காவிரி டெல்டாவின் நீர் நிர்வாகி. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம். ஆனால், தற்போது மணல் குவாரிகளால் இதற்கு மிகப்பெரும் ஆபத்து நெருங்கிக்கொண்டிருப்பதாக அபயக்குரல்கள் ஒலிக்கின்றன. ‘இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதால், இதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என இப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகியாகவும் வழக்கறிஞராகவும் இருக்கிறார். அவரிடம் பேசினோம், “விவசாய உற்பத்தியைப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் முதன்மை நோக்கம். மணல் குவாரிகளால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர், கரியமாணிக்கம் பகுதிகளில் அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால்தான், முக்கொம்பு அணையின் ஒன்பது மதகுகள் உடைந்தன. கல்லணையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருசென்னம்பூண்டி, கோயிலடி உள்பட இன்னும் பத்து இடங்களில் ராட்சத மணல் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அணைக்கட்டுகள் பாதிக்கப்படும் என்பதால்தான் மணல் குவாரிகளுக்குத் தடை கோரினேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விசாரணையின்போது, ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை’யெனத் தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் சொன்ன தகவல் எங்களை அதிர்ச்சி அடைய வைத்தது. வேளாண் மண்டல சட்ட முன்வடிவு அரசாணையில் வெளியிடப்பட்டுப் பல மாதங்கள் ஆன நிலையில், இன்னும் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இன்னும் இச்சட்டம் கருவுற்ற நிலையில்தான் இருக்கிறது. குழந்தைப் பிறப்பதற்கு முன்பே, பிரமாண்டமாகப் பிறந்தநாள் விழா கொண்டாடிவிட்டார்கள். எந்த ஒரு சட்டமும் விதிமுறைகள் வகுக்கப்பட்டால்தான் நடைமுறைக்கு வரும்.

மணல் குவாரி... கெயில் குழாய்... பரிதவிக்கும் வேளாண் மண்டலம்!

ஆனால், இதுவரை விதிமுறைகள் வகுக்கப்படாததால், மணல் குவாரிகள் மற்றும் கெயில் குழாய் அமைக்கும் பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதே நிலை நீடித்தால், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற ஆபத்துகள் மீண்டும் முளைக்கும். அதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாராட்டு விழா நடத்திய விவசாயச் சங்க நிர்வாகிகளில் ஒருவரான பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம். “எங்களது கோரிக்கை நிறைவேறியதால் முதலமைச்சருக்குப் பாராட்டு விழா நடத்தினோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் குறித்து இரண்டு முறை அரசாணை வெளியிடப்பட்டது. விவசாய உற்பத்தியைப் பாதிக்கக்கூடிய மாற்றுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது என வேளாண்மைத் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற ஆபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. மணல் கொள்ளையால் விவசாயம் பாதிக்கப்படுவது உண்மைதான். இது தடுக்கப்பட வேண்டும் என்றால் பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட வேண்டும்’’ என்றார்.

பி.ஆர்.பாண்டியன், கி.வெங்கட்ராமன், துரைக்கண்ணு
பி.ஆர்.பாண்டியன், கி.வெங்கட்ராமன், துரைக்கண்ணு

தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன், “தமிழக அரசு முழு மனதுடன் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை. இதில் நிறைய குறைபாடுகள் இருக்கின்றன. ஆனாலும் கூட இந்தளவுக்காவது ஒரு சட்ட பாதுகாப்பு கிடைக்கிறதேயென ஆறுதல் அடைந்தோம். ஆனால் இதிலும்கூடத் தமிழக அரசு அரைகுறை மனதோடும், உறுதியற்ற நிலைப்பாட்டிலும் இருப்பது வேதனைக்குரியது. எந்தெந்தத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது, எதெல்லாம் அனுமதிக்கப்படும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டால்தான், இச்சட்டம் உயிர் பெறும். காலதாமதத்திற்கு கொரோனாவை காரணம் காட்டக் கூடாது. இச்சூழலிலும் தமிழக அரசின் பல செயல்பாடுகள் நடந்துகொண்டுதானே இருக்கிறது” என்றார்.

மணல் குவாரி
மணல் குவாரி

இது தொடர்பாகத் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். “தமிழக முதல்வர், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததோடு, உடனடியாக இதற்கான சட்டத்தையும் இயற்றினார். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, இதற்கான விதிமுறைகளை, முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்’’ எனத் தெரிவித்தார்.

டாஸ்மாக்கைத் திறக்க, உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்க நேரம் இல்லையா என டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.