Published:Updated:

கொள்முதல் இலக்கு 25 லட்சம் டன்... கொள்ளை இலக்கு 500 கோடி ரூபாய்!

கதறும் நெல் விவசாயிகள்

பிரீமியம் ஸ்டோரி

``எங்களிடமிருந்து குறைந்த விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதைத் தடுப்பதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவைதான், நேரடி கொள்முதல் நிலையங்கள். ஆனால், அவை இப்போது ‘கொள்ளை’ நிலையங்களாக மாறிவிட்டன. தனியார் வியாபாரிகளுக்குச் சாதகமாக கொள்முதல் நிலையங்களைத் தாமதமாகத் திறப்பதில் ஆரம்பித்து, எடைபோடுவது, ஈரப்பதம் சோதனை செய்வது, பணப்பட்டுவாடா செய்வது... என ஒவ்வொரு கட்டத்திலும் ஊழல் நடக்கிறது” என்று புலம்பித் தவிக்கின்றனர் விவசாயிகள்.

சுந்தர விமலநாதன் - காமராஜ்
சுந்தர விமலநாதன் - காமராஜ்

நம்மிடம் இதுகுறித்துப் பேசிய, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுந்தர விமலநாதன், ‘‘நெல் கொள்முதலில் நடக்கும் கொள்ளைகளைத் தடுப்பதற்கு பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால், ஒவ்வொரு வருஷமும் கொள்ளை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. 40 கிலோ கொண்ட ஒரு சிப்பத்துக்கு, 30 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை லஞ்சமாக வாங்குகின்றனர். இது மட்டுமல்லாமல் ஒரு சிப்பத்துக்கு இரண்டு கிலோ வரை கூடுதலாக நெல்லை எடுத்துக் கொள்கிறார்கள். அந்தவகையில் ஒரு சிப்பத்துக்கு 40 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆக மொத்தம் ஒரு சிப்பம் விற்பனை செய்வதில் 80 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அந்த வகையில், 100 கிலோ (இரண்டரை சிப்பம்) எடை கொண்ட நெல்லை விற்பனை செய்வதற்கு, கிட்டத்தட்ட 200 ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த வருடம் சம்பா பட்டத்தில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. 25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்கு. ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) 200 ரூபாய் லஞ்சம் என வைத்துக்கொண்டால், 25 லட்சம் டன்னுக்கு சுமார் 500 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருக்கும். கொள்முதல் நிலைய ஊழியர்கள் மட்டும் இந்தக் கொள்ளையில் ஈடுபடுவதில்லை. உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என எல்லா நிலைகளிலும் பங்கு செல்வதால்தான் இதைத் தடுக்க முடியவில்லை. ‘விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கச் சொல்லி, உயரதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்’ என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்கள் சங்கத்தினர் நோட்டீஸே அச்சடித்து விநியோகம் செய்திருக்கின்றனர்.

நெல் விவசாயிகள்
நெல் விவசாயிகள்

ஜனவரி 21-ம் தேதி தஞ்சாவூரில் நடந்த முத்தரப்புக் கூட்டத்தில், உணவுத்துறை அமைச்சர், உணவுத்துறை முதன்மை செயலாளர், மூன்று மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர், முதுநிலை மண்டல மேலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது, இந்தக் கொள்ளையைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொன்னோம். ‘முறைகேடுகள் நிச்சயம் தடுக்கப் படும்’ என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவாதம் கொடுத்தார். ஆனால், இதுவரை ஒரு கொள்முதல் நிலையத்தில்கூட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில்லை. விவசாயிகளுக்குக் கிடைக்கும் சொற்ப லாபத்தையும் இதுபோன்ற ஊழல்வாதிகள் சுருட்டிக்கொண்டால் நாங்கள் என்ன செய்வது?” என்றார் விரக்தியுடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ‘‘முன்னாடியெல்லாம் நெல்லுக்கான பணத்தை நேரடியாவே பட்டுவாடா செய்வாங்க. அப்போ லஞ்சப் பணத்தைப் பிடிச்சுக்கிட்டுத்தான் கொடுப்பாங்க. அதைத் தடுக்கத்தான் எங்க வங்கிக்கணக்குலேயே தொகையை வரவுவைக்கும் நடைமுறையைக் கொண்டுவந்தாங்க. ஆனா, இப்போ முதல்லயே பணத்தை வாங்கிக்கிட்டுத்தான் கொள்முதலே செய்றாங்க. `பணம் தர முடியாது’னு சொன்னா, ‘உங்க நெல்லோட தரம் சரியில்லை’னு சொல்லி திருப்பி அனுப்பிடுவாங்க. எங்க நிலைமையைப் பாத்தீங்களா... கஷ்டப்பட்டு விதைச்சு அறுத்துக்கொண்டு வர்ற நெல்லை லஞ்சம் கொடுத்துதான், விற்பனை செய்ய வேண்டியதாயிருக்கு’’ என்றனர் ஆதங்கத்துடன்.

கொள்முதல் இலக்கு 25 லட்சம் டன்... கொள்ளை இலக்கு 500 கோடி ரூபாய்!

இந்தக் குற்றச்சாட்டு குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் பேசினோம்.

‘‘ `விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்வது ஈனத்தனமான செயல்’ என்று முத்தரப்புக் கூட்டத்திலேயே எச்சரித்தேன். அதுமட்டுமல்லாமல், இதற்காக 14 ஆய்வுக் குழுக்கள் அமைத்து அதிரடி சோதனைகள் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகையால், இந்த முறை தவறு நடக்க வாய்ப்பே இல்லை” என்றார்.

கொள்முதல் இலக்கு 25 லட்சம் டன்... கொள்ளை இலக்கு 500 கோடி ரூபாய்!

ஜூ.வி தகவல்... அமைச்சர் ஆக்‌ஷன்!

நாம் அமைச்சரிடம் பேசியதற்குப் பிறகு, நெல் கொள்முதல் முறைகேட்டில் ஈடுபட்டதாக 70-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் சந்திரகுமார், ‘‘விவசாயிகளிடம் பணம் வசூலிக்கச் சொல்லி கொள்முதல் பணியாளர்களை அதிகாரிகள்தான் கட்டாயப்படுத்து கின்றனர். அப்படிச் செய்யவில்லை யென்றால், ஏதாவதொரு பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி கடும் நடவடிக்கை எடுப்பார்கள். லாரி கான்ட்ராக்டர்களுக்கு ஒரு லோடுக்கு 3,000 ரூபாய் வரை நாங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுப்பதில்லை. இப்படி ஏராளமான நிர்வாகச் சீர்கேடுகள் இருக்கின்றன. பணியாளர்களை மட்டும் தண்டிக்காமல் தவறு செய்யக் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு